முன்னொரு காலத்தில் ஒரு ஏரியின் மேலே  நூற்றுக்கணக்கான அடி உயரத்தில் நீல வானத்தில் ஒரு இளங்கழுகு உணவு தேடி அதன் பரந்த இறக்கைகளை விரித்துப் பறந்து கொண்டிருந்தது. அந்த  ஏரியின் தெளிவான தண்ணீரில் ஒரு மீன் நீந்திக் கொண்டிருந்ததைக் கண்டது. ஒரு கணமும் தாமதிக்காமல், வேகமாகக் கீழ் நோக்கிப் பறந்து அந்த மீனைத் தன் கூர்மையான நகங்களால்  பற்றி இரையாகக் கொண்டது. அது பறந்து சென்று மிகவும் உயரமான இடத்தில் அமர்ந்து அமைதியாகத் தான் பிடித்ததைச்  சாப்பிட வேண்டும் என்று எண்ணியது.

அது இரையுடன் பறக்கத் தொடங்கியதுமே ஒரு கழுகுக் கூட்டம் அதைத் துரத்திக்கொண்டு வரத் தொடங்கியது. அவை வேட்டையில் அனுபவம் வாய்ந்த பெரிய பறவைகள். அந்த இளங்கழுகு மகிழ்ச்சி அற்ற நிலையில் சங்கடத்துடன் தன் சிறகை அடித்துக் கொண்டு, தன் இரையையும் விடாமல் பிடித்துக் கொண்டு வெகு தொலைவாகச் சென்றுவிட முயற்சித்தது. ஆனால் மற்ற கழுகுகள் விடாமல் துன்புறுத்திக் கொண்டே துரத்திக் கொண்டு வந்தன. பசியினால் உந்தப்பட்டு அந்தக் கழுகுகள் இந்த இளங்கழுகைக் கொல்லவும் தயாராக இருந்தன. அந்த இளங்கழுகிற்கு இறகுகள் பிடுங்கப்பட்டு பல இடங்களில் ரத்தக் காயத்துடன் மிக மோசமாக அடிபட்டது. இந்தப் போராட்டத்தின் இடையில் அந்த இளங்கழுகு சோர்ந்து போய்த் தன் இரையின் பிடியையும் இழந்தது.

வெகு வேகமாக அந்த மீன் தரையை நோக்கிக் கீழே விழுந்தது. மற்ற எல்லாப் பறவைகளும் அந்த இளங்கழுகைத் தனியே விட்டு விட்டு அந்த மீனை  நோக்கிப் பறந்தன. இனி எந்தப் பறவையும் தன்னைத் துன்புறுத்தவும், கொல்லவும் போவதில்லை என்பதை அறிந்து வியப்படைந்தது. அது அருகில் இருந்த ஒரு மரத்திற்குப் பறந்து சென்றது. ஒரு கிளையில் அமர்ந்து தன் காயங்களை ஆராய்ந்து கொண்டிருந்த பொழுது அதற்கு  ஒரு உண்மை  புலப்பட்டது.

அவை என்னை வெறுத்ததால் என்னைத் தாக்கின என்று நினைத்தேன். உண்மையாகவே என்னை வெறுத்ததால் தான் என்னைக் காயப்படுத்தின என்று நம்பினேன். உண்மை என்னவென்றால் அவற்றுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது என்னைப் பற்றியது இல்லை. அந்த மீனைப் பற்றியதாகும். அனைத்தும் என்னைப் பற்றி இல்லை, என்னிடம் இருந்ததைப் பற்றியதாகும்.

மக்கள் உங்களை விரும்பவுமில்லை, வெறுக்கவுமில்லை.  அது உண்மையில் உங்களைப் பற்றியதில்லை. அவர்கள் யாரை நேசிக்கிறார்கள் என்பதில்லை, எதை நேசிக்கிறார்கள் என்பதாகும். யாரை விரும்புகிறார்கள் என்பதில்லை, எதை விரும்புகிறார்கள் என்பதாகும். அவர்கள்  உங்கள் பின்னால் வருவதில்லை. உங்களுக்குள் என்ன உள்ளதோ அதன் பின்னால் வருகிறார்கள்.

அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை உங்களால் அளிக்க முடியாமல் போகும் பொழுது அல்லது உங்களிடம்  உள்ளது அவர்களுக்குத் தேவையில்லாமல் போகும் பொழுது அன்பு குறையத் துவங்குகிறது. இதனால் தான் உறவுகள் வளர முடியாமல் போகின்றன. வாசகர்கள், அவர்களின் துணைவருடன் உறவு நன்றாக உள்ளது என்றும், இந்த உறவில் நிலைத்து இருக்க விரும்புவதாகவும் ஆனால் ஆர்வம் இல்லாமல் இருப்பதாகவும் பல முறை  எனக்கு எழுதுகிறார்கள். அப்படியானால் அவர்களின் முக்கியமான விருப்பம் மாறி விட்டது என்று அர்த்தம். வருந்த வேண்டிய விஷயம் ஆனால் உண்மை.

தேவைகளின் அடிப்படையில் இயற்கை பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. உறவுகள் நிலைத்திருப்பது பெரும்பாலும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள என்ன உள்ளதோ அதைச் சார்ந்தே இருக்கும். எல்லா இனமும் பிழைத்திருப்பது அவை தங்களைக் கவனித்துக் கொள்வதால் தான். இது நம்முள் ஆழமாகப் பதிந்திருந்திருக்கிறது. நம்பினாலும், நம்பாவிட்டாலும் உங்கள் மேல் தொடர்ந்து ஒருவர் அன்பு செலுத்த வேண்டுமானால் அவர்கள் விரும்புவதை நீங்கள் அளித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர்களின் தேவைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். நான் பராமரிப்பு, சொந்த பந்தம் பற்றிப் பேசவில்லை. நான் அன்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன். குறிப்பாக தங்கள் ஆசைகள் அல்லது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அவர்கள் அன்பினைச் சார்ந்திருந்தால் அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் திறன் உங்களிடம் உள்ள வரை அவர்கள் அன்பு தொடரும்.

அவர்களுக்கு விருப்பமில்லாததை நீங்கள் அளிக்கும் பொழுது அவர்களுக்கு உங்கள் மேல் ஆர்வம் குறைகிறது. தங்கக் குவியல் மேல் அமர்ந்து தங்கத்தை ஒரு குரங்குக்குக் கொடுப்பதாகவும், புல்லுக்கட்டைச் சிங்கத்திற்கு கொடுப்பதாகவும் கற்பனை செய்து பாருங்கள். அவற்றுக்கு அதன் மேல் ஆர்வம் இருக்காது. அவற்றுக்கு உங்களிடம் உள்ள பொருள் மேல் ஆர்வம் இல்லாமல் போகும் பொழுது அவை அங்கிருந்து நகர்ந்து சென்று விடுகின்றன. அவற்றின் ஆர்வம் தேவையின் அடிப்படையில் மாறுகிறது. முழு வயிறு சாப்பிட்ட ஒருவனுக்குத் திரும்பவும் உணவு அளித்தால் அதில் அவனுக்கு நாட்டம் இருக்காது. தன்னலமற்ற அன்பு உண்டா என்றால், ஆம், அது அரிதானதாகும். தன்னலமற்ற பராமரிப்பு பொதுவாக அதிகமாகக் காணப்படுகிறது. நீங்கள் ஒருவரிடம் அன்பு செலுத்தும் போது அதே அளவு அன்பை அவரிடமிருந்து நீங்கள் எதிர் பார்த்தால், நீங்கள் கொஞ்சம் அதிகமாக எதிர் பார்க்கிறீர்கள் என்று அர்த்தம். ஏனென்றால், நீங்கள் அன்பு செலுத்துவது போல் அவர்களும் உங்களிடம் அதே அளவு அன்பைச் செலுத்த வேண்டுமானால், அவர்கள் உங்களின் அச்சாக இருக்க வேண்டும். அவர்களும் நீங்கள் விரும்புவதை விரும்ப வேண்டி இருக்கும். அவர்கள் தங்கள் அடையாளத்தை இழக்க வேண்டி இருக்கும்.

ஒரு இளமையான பணக்கார விதவை எப்போதும் நீங்கள் என்னிடம் இதே அளவு அன்பு செலுத்துவீர்களா என்று முல்லாவிடம் கேட்டாள். சூரியன் மேற்கிலிருந்து உதித்தாலும் உதிக்கலாம், ஆனால் உன் மேல் நான் வைத்துள்ள அன்பு சிறிதளவு கூடக் குறையாது என்று முல்லா கூறினார். என் கணவரின் உறவினர்கள் எனக்கு எதிராக ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளனர். நான் எனது சொத்தையெல்லாம் இழக்க வாய்ப்பு இருக்கிறது. அது பற்றி எனக்குக் கவலை இல்லை, நான் உன்னை மீண்டும் பார்க்காமல் போனாலும் போகலாம். ஆனால் உன் மேல் அன்பு செலுத்துவதை நான் நிறுத்த மாட்டேன் என்று முல்லா உறுதியாகக் கூறினார்.

சொல்வது எளிதாக இருக்கும். ஓரளவிலான சுயநல  நாட்டம் தான் உண்மையில் உலகத்தில் உள்ள பெரும்பாலான உறவுகளைச் சேர்ந்து வைத்திருக்கிறது. இத்தகைய சுயநல நாட்டம் எப்போதும் பொருளைப் பற்றியதாக இருக்க வேண்டியதில்லை. அது உணர்ச்சி மற்றும் தார்மீக ஆதரவு போல் ஏதாவது அருவ விஷயத்தின் வடிவத்திலும் இருக்கலாம். எது நல்லது அல்லது கெட்டது, சரியானது அல்லது தவறானது என்ற முத்திரை குத்தாமல் உண்மையைக் கூறி இருக்கிறேன் யாரோ ஒருவர் உன்னை வெறுக்கும் பொழுது, அவர்கள் உன்னிடம் என்ன புரிந்து கொள்ள முடியவில்லையோ அதை வெறுக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்.  மற்றொரு நபர், ஒரு மதம், ஒரு சித்தாந்தம், ஒரு கோட்பாடு எதுவாக இருந்தாலும், எதை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையோ, அதை மட்டும்  தான் உங்களால் வெறுக்க முடியும். நீங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்ட பின் அதன்பால் அன்பு அல்லது இரக்கத்தைத் தான் வளர்த்துக் கொள்ள முடியும். ஒரு குழந்தை ஏன் பச்சைக் காய்கறிகளை வெறுக்கிறது. அதே குழந்தை வளர்ந்த பின் கோதுமைப் புல்லின் சாற்றினை விரும்பிக் குடிக்கிறது. தானே முன்வந்து சுவையில்லாத பச்சைக் காய்கறிகளை அசை போடுகிறது. எதனால்? ஆர்வமா,தேவையா,புரிந்து கொண்டதாலா. நான் இன்னும் சொல்ல வேண்டுமா?

எனவே, உங்களுக்குத் தேர்வு செய்ய இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, நீங்கள் நீங்களாகவே இருந்துகொண்டு எப்பொழுதும் நல்ல காரியங்களைச் செய்து கொண்டு  வேறுபட்ட அளவிலான அன்பைப் பெற்று இன்பமாக இருங்கள். இரண்டு, ஏற்றுக் கொண்டு, அதன்படி நடந்து கொண்டு, மேலும் மேலும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருங்கள். முதலாவது ஒருவர் உள்நோக்கித் திரும்ப ஒத்ததாக இருக்கிறது. மற்றும் இரண்டாவது மன நிறைவு உண்டாக்க முடியாத,  ஆழம் தெரியாத பள்ளம், முடிவில்லாத செயல் ஆகும்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email