சுய முன்னேற்றம் என்பது ஒரு முடிவற்ற முயற்சியா என்றும் நாம் வாழ் நாள் முழுவதும் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டுமா என்றும் யாரோ ஒருவர் எனக்குக் கடிதம் எழுதிக் கேட்டிருந்தார். நாம் நமது தவறுகளைக் கண்டுபிடிப்பதையே நம் வாழ் நாள் முழுவதும் செய்து கொண்டிருந்தால் உண்மையில் எப்பொழுது வாழ்க்கையை அனுபவிப்பது என்பதை மறைமுகமாகக் கேட்டிருந்தார். வாழ்க்கை என்பது இழுபறியானதா? நாம் எப்படி நம்மை முன்னேற்றிக் கொள்வது என்று தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டே இருக்க வேண்டுமா? யோசித்துப் பார்த்தால்,  இது ஒரு அழகான கேள்வி.

மற்றவர்கள் பூரணத்துவத்துவமானது என்று எண்ணும் எல்லைக்குள் உங்களை நீங்கள் பொருத்திக் கொள்ள வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் நம்பிக்கை கொள்ளவில்லை. ஆனால் பூரணத்துவத்திற்கான இலக்கை எட்ட முயற்சிப்பது என்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பம் மற்றும் அவரவரின் தனிப்பட்ட உரிமை ஆகும். பூரணத்துவத்துவம் என்பது அவரவர்களின் தனிப்பட்ட முடிவாகும். உங்களின் பூரணத்துவத்துவம் என்பது அடுத்தவர்களுக்குப் பாதி அளவிற்குக் கூட ஏற்புடையதாக இருக்காது. நமது நோக்கம் உலகம் நிர்ணயித்துள்ள இலக்கைப் பூர்த்தி செய்வதல்ல. நமது வாழ்க்கையைக் கருணை, பேரின்பம், இரக்கம் கொண்டு பூர்த்தி செய்வதாகும். இவையே சரியான நற்பண்புள்ள வாழ்க்கைக்குத் தேவையான நிபந்தனைகள் ஆகும்.

முன்னொரு நாள் ஒரு ஏழை மனிதன் இருந்தான். அவன் பெருந்தன்மையானவன். அவனது வீட்டிற்கு அருகில் நீர் நிலை எதுவும் இல்லை. எனவே இரண்டு பெரிய பானைகளை ஒரு குச்சியின் இரு பக்கமும் கட்டித் தன் தோளில் சுமந்து கொண்டு ஆற்றுப் படுகை வரை தினமும் செல்வான். இந்தப் பானைகள் உலோகத்தால் ஆனவை. அவற்றில் ஒன்று தேய்ந்துபோய் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விரிசல் ஏற்பட்டுக் கிட்டத்தட்ட ஒரு துளை உருவாகி இருந்தது. இதனால் அந்தப் பானையிலிருந்து நீர் சொட்டு சொட்டாக வடிகட்டியிலிருந்து வடிவது போல் தொடர்ந்து கசிந்து கொண்டிருந்தது. மற்றொன்று சரியான நிலையில் இருந்தது. ஒவ்வொரு நாளும் இரண்டு பானைகளிலும் விளிம்பு வரை நீர் நிரப்பிக் கொண்டு வருவான். ஆனால் வீட்டிற்கு வந்து சேரும் பொழுது விரிசல் ஏற்பட்டுள்ள பானையில் அரைப் பானை மட்டுமே நீர் இருக்கும். வீட்டிற்கு வந்ததும் உடனடியாக மட்பாண்டங்களில் தண்ணீரை மாற்றி விடுவான்.

விரிசல் பானைக்கு குற்ற உணர்வு மேலிட்டது. அது தனது எஜமானனுக்குக் சேவை செய்ய ஆசைப்பட்டது. துளையை அடைக்கும் வழி அறியாது தவித்தது. தனது மேன்மையை அறிந்த நல்ல பானை விரிசல் பானையை இளக்காரமாகப் பார்த்தது. சில சமயங்களில் விரிசல் பானை நல்ல பானையைப் பொறாமையுடன் பார்த்ததுண்டு. ஆனால் பெரும்பாலும் அது ஆதரவற்று மனம் உடைந்திருந்தது. அது எவ்வளவு கடினமாக முயற்சித்தாலும் வீடு வந்து சேரும் பொழுது பாதி பானை காலியாகவே இருந்தது.

ஒரு நாள் விரிசல் பானையின் எஜமானன் ஆற்றின் அருகில் இருந்த பொழுது அது பின் வருமாறு கூறத்தொடங்கியது. நான் என் வேலையைச் சரிவர செய்ய முடியாததால் மிகவும் வருந்துகிறேன். பரிதாபகரமாக உணர்கிறேன். நீங்கள் தினமும் என்னை முழுவதுமாக நிரப்பி வீட்டிற்குச் சுமந்து வருகிறீர்கள். ஆனால் நல்ல பானை போல் ஒரு நாளும் நான் வந்து சேருவதில்லை. எனக்கே வெட்கமாக உள்ளது . என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் ஒரு நல்ல பானைக்குத் தகுதியானவர். என்னைப் போன்ற விரிசல் பானைக்கல்ல. தயவு செய்து என்னை ஒரு கொல்லரிடம் விற்று விடுங்கள். துக்க கரமானதும், பயனற்றதுமான என் வாழ்க்கையை அவன் முடித்து விடட்டும். உங்களுக்கும் நிம்மதியாக இருக்கும்.

பயனற்றதா? அவன் ஆதரவாகக் கேட்டான். உன்னைப் பற்றி நான் எவ்வளவு பெருமைப் படுகிறேன் என்று நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். யாரிடம் குறையில்லை. என்னிடமும் உள்ளது. என்னால் முடிந்திருந்தால் எப்பொழுதோ உன்னைச் சரி செய்திருப்பேன். நீ இன்று இப்படி உணரத் தேவையிருந்திருக்காது. ஆனால் நம்முடைய குறையில் நமது இறைத்தன்மை உள்ளது. குறை என்ற உணர்வு ஒரு கண்ணோட்டமே. பெரும்பாலும் ஆணவமே ஆகும். இந்த இடத்தை அழகுபடுத்த நீ எவ்வளவு உதவியிருக்கிறாய் என்று உனக்குத் தெரியுமா? நான் அழகுபடுத்த உதவினேனா என்று விரிசல் பானை ஆச்சர்யப் பட்டது. இன்று நாம் வீட்டிற்குப் போகும் பொழுது உன்னுடைய பக்கத்து பாதையை நீ கண்காணிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

அவன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். பாதையின் ஒரு பக்கத்தில் அதுவும் குறிப்பாக துளை இருந்த பக்கத்தில் வழி முழுவதும்  அழகான பூக்கள் மலர்ந்திருந்ததைப்  பார்த்தது. பட்டாம்பூச்சிகள் வட்டமிட்டுக் கொண்டும், தேனீக்கள் ரீங்காரம் செய்து கொண்டும் இருந்தன. காற்று சுகந்தமாக இருந்தது.

சிறிது நாட்களுக்கு முன் புது வகையான பூக்களின் விதைகளை நான் விதைத்திருந்தேன். உன்னிடமிருந்து சொட்டும் தண்ணீர் மூலம் விதைகளுக்கு எளிதாக ஊட்டம் கிடைக்கும் என்று உணர்ந்தேன். இப்பொழுது பார், அழகான பூக்கள் மட்டுமல்லாமல் தேனீக்கள் மகரந்தத்தை வெகு துரத்திற்கு எடுத்துச் செல்வதால் எல்லா இடங்களிலும் இந்த மலர்கள் நிறையப் பூத்திருக்கின்றன. இந்த மலர்கள் தேனீக்களை அதிகமாக ஈர்ப்பதால் இயற்கைத் தேன்கூடுகள் நமது கிராமத்தில் முன்பை விட இப்பொழுது அதிகமாக உள்ளன. குறைபாடாகத் தோன்றும் உன்னுடைய இந்த விரிசல் இல்லை என்றால் இந்த அழகு, இந்தச் சுகந்தம், இதன் பயன் அனைத்தும் சாத்தியம் இல்லை.

நான் முதலில் இந்த கதையைக் கேட்ட பொழுது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது போல் உங்களுக்கும் இந்தக் கதை மிகவும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். நமது குறைகளில் ஏற்கனவே பூரணத்துவம் என்ற விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. வேறு யாரோ ஒருவரைப் போல் இருக்க எண்ணுவதை விட, சரியான பானையாக இருக்க விரும்புவதற்குப் பதிலாக, நமது பலத்தையும் அதன் அளவையும் அறிந்து கொண்டு அதை முறையாகப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமாகும். நீ இந்த விரிசல் பற்றி நேர்மையாகச் சிந்தித்து, சொந்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக பார்க்கத் தயாராக இருந்தால், சாத்தியக் கூறுகளுடன் புதிய உலகம் திறக்கிறது.

முழுமையான பலவீனம் அல்லது வலிமை என்று எதுவும் இல்லை. அவை சூழ்நிலையையும், தேவையையும் அடிப்படையாகக் கொண்டு மாறுகின்றன. ஒரு வலுவான குச்சி நடப்பதற்கு நல்ல ஆதாரமாக இருக்கலாம். ஆனால் வில் செய்ய, எளிதில் வளையக் கூடிய குச்சி வேண்டும். ஒரு கண்ணோட்டத்தில் வலிமையாக உள்ளது மற்றொரு கண்ணோட்டத்தில் பலவீனமாக உள்ளது. எவ்வளவு விரிசலாக இருந்தாலும் அதற்கும் பங்களிக்க ஒரு வாய்ப்பு உள்ளது .

நீங்களாகவே இருங்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email