பொதுவான வாதம் என்னவென்றால், கடவுள் மேல் ஒருவருக்கு நம்பிக்கை வேண்டும், அவர் நமக்குத் தேவையானதை அவசியம் செய்வார், எப்பொழுது விதிக்கப் பட்டுள்ளதோ அப்பொழுது தான் எந்த விஷயமும் நடக்கும் போன்றவையாகும். அப்படியானால், எல்லாமே முன் விதிக்கப்பட்டவை, முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை என்று அர்த்தமா? அவ்வாறாயின், எந்தக் கர்மாவும் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? உண்மை என்ன: விதியா அல்லது சொந்த விருப்பமா? நான் பார்க்கும் இடத்திலிருந்து விதி ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதைப்பற்றி ஆழமாகப் பார்ப்பதற்கு முன், உங்களுக்கு ஒரு கதையைக் கூற அனுமதியுங்கள்:

முன்னொரு காலத்தில், ஒரு மனிதன், பிழைப்பிற்காக, மற்றொரு நகரத்திற்குச் சென்றார். அவர் தனது வழியில் ஒரு காட்டைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. அந்தக் கானகத்தில் தனது வழியைத் தவற விட்டு விட்டார். எந்த உதவியும் இல்லாமல் அலைந்து திரிந்து, பரந்து குடைபோல் விரிந்திருந்த, விழுதுகள் தாழத் தொங்கிக் கொண்டிருந்த, ஒரு பழைய ஆலமரத்தைப் பார்த்தார். அந்த மரத்தின் கீழ் ஒரு நரி உட்கார்ந்திருந்ததைக் கண்டார். முதலில் அதைக் கண்டு அவர் பயந்தார். பின்னர் அது முடமான, வயதான, வேட்டையாட முடியாத நரி என்பதை அறிந்து பயத்திலிருந்து விடுபட்டார்.

அவர் நிழலாக இருந்த ஒரு மூலையில் அமர்ந்தார். எப்போதாவது அந்த மரத்தில் வந்து அமர்ந்த பறவைகள் இறைச்சித் துண்டுகளைக் கீழே போட, நரி அவற்றை உணவாக்கிக் கொண்டதைப் பார்த்து அவர் மிகவும் வியப்படைந்தார். இப்படித்தான் அது உயிருடன் இருந்தது. தானும் இப்படிச் சுற்றி இயங்கத் தேவை இல்லை, அந்த நரியைப் போல் அவரும் எங்கோ ஒரு மூலையில் அமர்ந்தால், அவருக்கும் கடவுள் வழங்கி விடுவார் என்று அந்த மனிதருக்குள் ஓர் எண்ணம் உதயமானது.

பின்னர், அவர் காட்டை விட்டு வெளியேறத் தனது வழியைக் கண்டு பிடித்து, காட்டிற்கு வெளியே இருந்த முதல் கிராமத்திற்கு வந்து ஒரு மரத்தின் கீழ் தங்கினார். அவர் கடவுளிடம் சரணடைந்து, அவருக்கு என்ன வழங்கப்படுகிறதோ அந்த உணவைக் கொண்டு மட்டுமே வாழப் போவதாகச் சூளுரைத்தார். நாட்கள் மட்டுமே சென்றன. எவரும் அவருக்கு எதையும் வழங்கவில்லை. அவர் பட்டினி இருந்ததால் மயங்கிவிடும் நிலையில் இருந்தார். அவரது நம்பிக்கை சிதைந்து, சுக்குநூறாகும் நிலைக்கு வந்தது. கடவுள் எப்படி பாரபட்சமாக இருக்க முடியும், அவர் எப்படி அந்த நரிக்கு வழங்கினார், ஏன் தனக்கு வழங்கவில்லை என்று ஆச்சரியப்பட்டார்.

அவர் தனது சொந்த உலகத்தில் மூழ்கி இருந்த போது, ஒரு சன்யாசி, ஞானி அவரைக் கடந்து செல்வதைப் பார்த்தார். அவர் தனது க்ஷீனமான நிலையில் அந்த ஞானியைக் கூப்பிட்டு, தன்னுடைய கதையை, தனது சூளுரையைக் கூறி, தன்னை உறுத்திக் கொண்டிருந்த கேள்வியைக் கேட்டார். அந்தத் துறவி உள்ளூரச் சிரித்துக் கொண்டே, “உன்னை யார் நரியின் வேடத்தை எடுக்கச் சொன்னது? நீ என்ன முடவனா? அங்கஹீனமானவனா? நீ அந்தப் பறவையைப் போல் உனக்காகவும், உன்னைச் சார்ந்திருப்பவருக்கு வழங்கவும் வேலை செய்திருக்க வேண்டும் என்றார்.”

இந்தக் கதையில் இரண்டு ஒழுக்கங்கள் உள்ளன. முதலாவது, நமது சொந்த வசதிக்கு ஏற்பப் பாத்திரங்களைத் தேர்வு செய்யக் கூடாது, நாம் நம்மிடமே நேர்மையாக, நடைமுறைக்கேற்ப யதார்த்தமாக இருக்க வேண்டும். இரண்டாவது, கடவுளிடம் சரணடைவது அல்லது அவரிடம் நம்பிக்கை வைப்பது என்பதற்கு, நாம் நமது முயற்சியை நிறுத்திவிட வேண்டும் என்று பொருளில்லை.
அப்படியானால், விதி என்ன பங்கை வகிக்கிறது? கர்மயோகத்துடைய உயர்ந்த வேதத்திலிருந்து இரு சாகித்தியங்களை நான் வழங்குகிறேன்:

Pañcaitāni mahābāhō kāraṇāni nibōdha mē
Sāṅkhyē krtāntē prōktāni sid’dhayē sarvakarmaṇām
Adhiṣṭhānaṁ tathā kartā karaṇaṁ ca prthagvidham
Vividhāśca prthakcēṣṭā daivaṁ caivātra pañcamam (Bhagavad Gita, 18.13, 14)

பஞ்சைதானி மஹாபாஹோ காரணானி நிபோத மே
ஸாங்க்யே கிருதாந்தே ப்ரோக்தானி ஸித்தயே ஸர்வகர்மணாம்
அதிஷ்ட்டானம் ததா கர்த்தா கரணம் ச ப்ருதக்விதம்
விவிதாச்ச ப்ருதக்சேஷ்டா தைவஞ் சைவாத்ர பஞ்ச்சமம் (பகவத் கீதை, 18.13, 14)

அதாவது: ஐந்து தொகுதிகளின் சேர்க்கையே ஒரு செயல் ஆகும். ஒரு கர்மாவைச் செய்வது ஏதாவது ஒரு காரணியை மட்டும் சார்ந்தது அல்ல. ஆதரவு (அல்லது அணுகுமுறை அல்லது நோக்கம் அல்லது செல்வாக்கு அல்லது சுற்றுச்சூழல்), செய்பவர், வளங்கள், முயற்சி மற்றும் விதி ஆகிய இவையே அந்த ஐந்து உறுப்புகள் ஆகும்.

சுவாரஸ்யமாக, மேலே உள்ள பகவத் கீதையின் வசனங்களில் தலைவிதி என்பது கடவுளாகவும், தெய்வீக அருளாகவும் கூறப்பட்டுள்ளது. பாக்கியமாகவோ, விதியாகவோ கூறப்படவில்லை. எவர் ஒருவர் ஓர் உண்மையான முயற்சியை எடுக்கிறாரோ, அவர் கருணைக்குத் தகுதி பெற்றவர் ஆகிறார். உங்கள் இலக்குகளை எட்ட முடியவில்லை என்றால் அது எப்போதும் தோல்வி என்று ஆகாது, தம்மால் முடியாது என்பது தோல்வி ஆக இருக்கலாம்.

தலைவிதி ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது என்றாலும், அது ஒரு இருபது சதவிகிதம் தான் ஆகும். நீங்கள் சரியான சூழ்நிலையில் செயல்பட்டால், உங்கள் கர்மாவிற்கு உகந்தபடி, உங்களுடைய திட்டத்தை இயக்கத் தேவையான வளங்களை உபயோகித்தால், உறுதியுடன் இருந்தால், சீக்கிரமே உங்கள் திட்டம் நிறைவேறும். வாங்கியோ அல்லது பரிசாகப் பெற்றோ, எதுவானாலும், முதலில் ஒரு டிக்கெட் இல்லாமல், லாட்டரியை யாரும் வென்றதில்லை. இந்த உலகம், ஏன் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒன்றையொன்று சார்ந்தது என்கிற இயல்பான நிகழ்வால் செயல்படுகிறது. எல்லாமே ஒன்றோடொன்று பிணைந்தே செயல்படுகிறது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் பின்னால் தாக்கங்களை ஏற்படுத்த முடியும். பட்டாம்பூச்சி விளைவைப் போன்ற, கிட்டத்தட்ட ஒரு சிக்கலான அமைப்பில், ஒரு சிறிய மாற்றம், ஒரு சிறிய திருத்தம், இறுதி விளைவை முற்றிலும் மாற்றக் கூடியதாகும்.

நீங்கள் உங்கள் இலக்கை (இலக்குகளை) அடைவதைப் பற்றித் தீவிரமாக இருந்தால், நீங்கள் சரியான சூழலில் செயல்பட வேண்டும்; ஒரு பாலைவனத்தில் நீங்கள் நீச்சல் பயில முடியாது. நீங்கள் ஓர் ஆதரவான சூழலில், ஓர் இடைவிடாத முயற்சியில் ஈடுபடும் போது, சரியான ஆதாரங்களைப் பெறுவதற்கான உங்கள் வாய்ப்புக்கள் தானாக அதிகரிக்கின்றன. அதன் பின்னர் அடைவதற்கு ஒன்றுமில்லை.

ஒரு அற்புதமான இத்தாலிய பக்தர், தொழில்ரீதியாக ஒரு பொறியாளர், “எதனால் இந்தியாவில் ஆன்மீகம் தழைத்தோங்கியது? எப்படி அது உலகின் மிகப் பெரிய ஆன்மீகத் தலைவர்களின் வீடாக உள்ளது?” என்று என்னை ஒரு முறை கேட்டார்.

பதிலாக, நான் அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன். “ஏன் (ஸ்டார்ட்-அப்ஸ்) புதிதாய் தொடங்கப்படும் கம்பெனிகள் சிலிக்கான் வாலியில் (அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஒரு இடம்) செழிப்படைகின்றன? எப்படி அது உலகின் மிகச் சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் வீடாக உள்ளது?”

மேலே உள்ள நான்கு உறுப்புகளிலும் ஒரு வெளிப்படையான முயற்சியை நீங்கள் எடுக்கும் போது ஐந்தாவதான தலைவிதி உங்களுக்கான வழியை ஏற்படுத்துகிறது. சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருப்பதற்கான உங்களுடைய வாய்ப்பு, குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்கிறது.

சிலருக்கு எல்லாமே எளிதாகக் கிடைப்பதைப் போல் தெரிகிறது. அவர்கள் மேலே உள்ள வழிமுறைகளுக்கு விலக்காகத் தோன்றுகிறார்கள். சரி, விதிவிலக்காக இருக்கும் இந்தச் சிறியக் கூட்டத்தில் இருந்து கொண்டு, நல்ல விஷயங்கள் மட்டுமே நடக்கும் என்ற நம்பிக்கையில் உங்கள் அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருக்கப் போகிறீர்களா; அல்லது நெறிகளுடனான பெரிய விளையாட்டு மைதானத்தில் விரும்பியவற்றை ஈர்ப்பதற்கான வேலைகளைச் செய்யப் போகிறீர்களா? அது உங்களது தனிப்பட்டத் தேர்வாகும்; விவேகமாக இருங்கள்.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழும் சக இந்தியர்களுக்கு என்னுடைய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

வந்தே மாதரம், அனைத்துப் புகழும், என்னுடைய வணக்கங்களும், எனது தாய்நாட்டிற்கே.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email