வாழ்க்கை சுழன்று வரும் நான்கு பருவங்களைப் போன்றதாகும். மனித மனத்தில் ஓய்வில்லாமல் ஒரு எண்ணம் தோன்றி மறைவதற்குள் அடுத்த எண்ணம் துளிர்க்கிறது. அதுபோல ஒவ்வொரு பருவமும் அதற்கான காலத்தில் தோன்றி பின்பு அடுத்ததற்கான சமயத்தில் யாருடைய விருப்பத்தையும் பொருட்படுத்தாமல் வழிவிடுகிறது. குளிர் காலத்தில் இயற்கையானவள் சுருங்கி; கார் காலத்தில் இலையுதிர்ந்து; கோடைக் காலத்தில் விரிவடைந்து; வசந்த காலத்தில் அவள் பூத்துக் குலுங்குகிறாள். நாம் விரும்பாத பருவங்கள் அதிக நாட்கள் நீடிப்பது போல் தோன்றுகின்றன. மலர்கள் வசந்த காலத்தில் பூக்கின்றன. பருவகாலங்களில் மழை பெய்கின்றது. உங்களின் சுவாசத்தில் உள்ள பிராண நிலையால் உங்களின் உணர்வுநிலை பாதிக்கப்படுவதைப் போல் தட்பவெப்பநிலையும் குளிர் காலத்தில் குறைந்தும், கோடைக் காலத்தில் உயர்ந்தும் காணப்படுகிறது. இவை அனைத்தும் நிலைப்படுத்தப்பட்ட அழகான தொகுப்பாகும்.

இதேபோல் நாம் அனைவரும் வாழ்க்கையின் பல்வேறு வண்ணங்களை அனுபவிக்கிறோம். நீங்கள் வருடத்தின் எந்தப் பருவத்தில் பிறந்தீர்களோ அதைப் பொறுத்து, கார் காலத்திற்கு முன்னால் அல்லது பின்னால் வசந்த காலத்தை உணரலாம். மேலும் நீங்கள் எங்கே பிறந்தீர்கள் என்பதைப் பொறுத்து ஆண்டு முழுவதும் கடுமையான குளிருக்குப் பதிலாக வருடத்தின் பெரும்பாலான சமயம் இனிமையான சூரிய ஒளியை அனுபவிக்கக் கூடும். நீங்கள் வானிலை நிலவரங்களை சமாளிக்கக் கற்றுக் கொள்கிறீர்கள். குளிரில் அடுக்கடுக்காக ஆடைகளையும், கோடையில் அதற்கு மாறாகவும் பயன் படுத்துகிறீர்கள். மழைக்காலத்தில் ஒரு குடையைப் பயன் படுத்துகிறீர்கள். சில சமயங்களில் கையில் இருப்பதை விட்டு வேறு ஒன்றிற்காக ஓடுவது போலவே இருக்கிறது. நாம் எப்போதும் நம்மை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறோம். இயற்கையுடன் ஒட்ட ஒழுகுவது என்பது இயற்கை நமக்கு அளிக்கும் அனைத்தையும் முழுமையாக உணர்வதும், அனுபவிப்பதும் ஆகும். நீங்கள் மழைக் காலத்திற்காகச் சேமிக்க வேண்டும்; ஆனால் நீங்கள் என்ன ஒரு அணிலுக்குச் சமமானவரா? சென்று மழையில் நனையுங்கள். அது உங்கள் மேல் பொழிவது கருணையாகக் கூட இருக்கலாம். குளிரை அனுபவியுங்கள் – அது உங்களை வலுவானவராக ஆக்கும்.

வாழ்க்கையின் இதமான நேரம் திரும்பி, சூரியன் உங்கள் மேல் துன்புறுத்தும் வகையில் அதிக சூடாகப் பிரகாசிக்கும் போது, அதைத் தாங்க முடியாமல் நீங்கள் ஒரு குளிர்ச்சியான இடத்திற்குப் போவதைப் பற்றி ஆலோசிக்கலாம். இலையுதிர் கால முடிவில் இருக்கும் மொட்டை மரங்களைப் போல அக்கறையற்ற வாழ்க்கையில் சலிப்படையும் போது, நீங்கள் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். வசந்த காலத்தின் படங்களை பார்த்துக் கொண்டோ அல்லது வசந்த காலமாக இருக்கும் உலகின் அந்தப் பகுதிக்குச் சென்றோ காத்திருக்கும் இந்தச் சமயத்தை கழியுங்கள். மாற்றம் நிலையானது; மிகக் கனமழைகூட சிறிய நீர்த்துளிகளால் உருவாவதைப் போல் மாற்றமும் அளவிடமுடியாத சிறிய அலகுகளில் வருகிறது. எனினும் அது நீங்கள் விரும்பும் மாற்றமாக இல்லாமலும் இருக்கலாம். நீங்கள் விரும்பும் மாற்றத்தை அடைய, அதற்கு ஏற்றவாறு முடிவுகளை எடுக்க வேண்டும். உண்மையில், நீங்களே மாற்றமாக ஆக வேண்டும். ஒரு அதிரடி முடிவு என்பது ஒரு தாவும் மாற்றமாகும். மேலும் பழமைவாதம் ஒரு பாதுகாப்பான மாற்றத்தைக் கொண்டு வருகிறது.

அல்லது, அடுத்த தேர்வு என்னவென்றால் சாதாரணமாக உள்நோக்கித் திரும்புங்கள். அனைத்து வெளி நிகழ்வுகளும் உடலின் ஒரு குறுகிய அனுபவமே என்பதை உணருங்கள். நித்திய ஆனந்தம், உங்களுக்குள் சொட்டு சொட்டாக ஊறியது, இப்பொழுது ஒரு கடல் போல் காணப்படுகிறது. நீங்கள் உள்ளே பாதுகாப்பாக, சந்தோஷமாக மற்றும் பேரின்பமாக, அனைத்து வெப்பம் மற்றும் குளிரிலிருந்து முற்றிலுமாக பாதுகாக்கப்பட்டு இருக்கிறீர்கள். இலையுதிர் காலத்தின் அழகான நிறங்களைப் பார்க்கும் போது, உள்ளத்தினுள் எப்போதும் வசந்தகாலத்தின் எண்ணற்ற வகையான அழகான பூக்கள் பேரின்பம் என்ற புயலின் தேன் போன்ற இனிமையான ஸ்வரத்திற்குத் (அனாகத நாதம்) தகுந்தபடி பெருமை மிக்க நடனத்தைச் சரியான வெப்பநிலையில் ஆடிக் கொண்டிருக்கிறது; உள்ளே புழுக்கம் இல்லை; கடுமையான குளிர் இல்லை; விவரிக்க முடியாத அழகு மட்டுமே உள்ளது.

ஒரு விடுமுறையை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் பேரின்பம் என்ற அமைதியான கடலோரப் பயணம் ஒன்றை மேற்கொள்ளுங்கள். என்னால் உங்களின் ஒரு வழிப் பயணத்திற்கு உதவ முடியும். நீங்கள் ஒரு முறை அங்குச் சென்றுவிட்டால், பின்பு திரும்ப வேண்டும் என்ற தேவையையும் ஆர்வத்தையும் உணரமாட்டீர்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email