நான் ஒவ்வொரு மாதமும் இரண்டு முதல் மூன்று ஆயிரம் வரை மின்னஞ்சல்களைப் பார்க்கிறேன். அதில் தொண்ணூறு சதவிகிதம் ஒன்று அல்லது அதற்கு மேலும் பிரச்சனைகளுடன் போராடி வரும் மக்களுடையதாகும். அதில் சிலர் வாழ்க்கையில் போராடியும், எதிர்த்தும் என்ன செய்ய வேண்டும் என்பதறியாது தளர்ந்து முச்சந்தியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னும் சிலர் இயற்கை அவர்கள் மேல் இரக்கமற்றதாக இருப்பதாகக் கூறுகின்றார்கள். நினைவு தெரிந்த நாள் முதல் வாழ்க்கையே ஒரு போராட்டமாக உள்ளதாக நினைக்கின்றார்கள்.

ஆம், வாழ்க்கை என்பது கடினமானதாகவும், போராட்டமானதாகவும் இருக்கலாம். ஆனால் உண்மையில் அது வேறு எவருக்காவது மாறுபட்டதாக உள்ளதா? பணம் இல்லாதவர்கள் பணம் உள்ளவர்களுடைய வாழ்க்கை மிகவும் சுலபமானதாக எண்ணுகின்றார்கள். செல்வமுள்ளவர்களும், மன அழுத்தம் தரும் வணிகத்தைச் செய்பவர்களும், ஒன்பது முதல் ஐந்து மணி வரை வேலை பார்ப்பவர்களின் வாழ்க்கை நிம்மதியானது என்று நினைக்கின்றார்கள். ஆரோக்கியமானவர்கள் பணக்காரராக வாழ்வதே உத்தமம் என்றும், செல்வந்தர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதே உத்தமம் என்றும் நினைக்கின்றார்கள். ஆனாலும், ஆரோக்கியத்துடனும் செல்வத்துடனும் உங்கள் கற்பனைக்கு எட்டும் அனைத்தும் உள்ளவர்களும் கூட மன அழுத்தத்துடன் வாழ்க்கையில் போராடுவதாகச் சொல்கின்றார்கள்.

உண்மை என்னவென்றால் வாழ்க்கை என்பதே அப்படித்தான். நாம் ஏதாவது ஒன்றை அடையும் நோக்கத்துடன் செயல் படும் பொழுது தடைகள் வந்து கொண்டே இருக்கும். சிலர் இந்தத் தடைகளை சவால்களாகப் பார்க்கின்றனர். மற்றும் சிலர் போராட்டமாகக் காண்கின்றனர். மக்களும் அவர்களின் நிலைமையும் மாறலாம். சூழ்நிலைகள் மிகவும் இனிமையாகவும் சாதகமாகவும் இருக்கலாம். இதனால் வந்த சவால்கள் குறையத்துவங்கி விடும் என்று அர்த்தம் இல்லை. எப்பொழுதும் தடைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். மக்கள் போராட்டம் என்று எண்ணுவது பெரும்பாலும் அவர்கள் எதிர் கொள்ளும் சவால்களையே என்று நான் உணர்ந்தேன். அவரவர்களின் கண்ணோட்டமோ, தனிப்பட்ட விருப்பமோ, அல்லது மனப்பாங்கோ தான் பிரச்சனையை வாய்ப்பாகவோ அல்லது தடையாகவோ பார்க்கின்றது. இங்கே ஒரு சுவாரஸ்யமான கதை உங்களுக்கு:

ஒரு மனிதன் தனது வீட்டின் பின் புறம் உள்ள மரத்தில் ஒரு பட்டாம்பூச்சியின் கூட்டைப் பார்த்தான். அனுதினமும் அதை ஆராயத் துவங்கினான். ஒரு நாள், உள்ளே இருந்த பிரகாசமான ஒரு புழு சிறிய துவாரத்தின் மூலம் வெளியே வரப் போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்தான். ஒவ்வொரு நாளும் போராடிப் போராடிக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பித்தது. இப்பொழுது இறக்கைகளும் முளைக்கத் துவங்கி இருந்தன. வளரும் பூச்சிக்கு கூட்டில் இடம் போதுமானதாக இல்லை.

பட்டாம்பூச்சியின் போராட்டத்தைப் பார்த்த அவன் அதற்கு உதவி செய்ய முடிவு செய்தான். அவன் கூட்டை மெதுவாக உடைத்து விட அது சிரமமின்றி வெளியே வந்தது. ஆனால் அது தரையில் நேராக விழுந்தது. அதன் உடல் வீங்கியும் இறக்கைகள் சுருங்கியும் இருந்தன. பட்டாம்பூச்சி பறப்பதைப் பார்க்க அவன் ஆவலாகக் காத்திருந்தான். ஆனால் அது பறக்கவில்லை. இறக்கைகள் முழுமையாக வளராததால் அதன் குமிழ் வடிவான உடலுடன் பறக்க வழியறியாது சுற்றிச் சுற்றி வந்து முடிவில் உயிரிழந்தது. போராட்டமாக மனிதன் எதைப் பார்த்தானோ அது பட்டாம்பூச்சி உயிர் வாழ இயற்கை அதற்கு அளித்த பயிற்சியாகும்.

நமது போராட்டங்களே நம்மை வடிவமைக்கின்றன. நம்மைப்பற்றித் தெளிவாகவும் விவரிக்கின்றன. அனைத்துப் போராட்டமும் நன்மைக்கே என்று நான் சொல்லவில்லை. ஆனால் உண்மையில் அது போராட்டமா என்றே நான் கேட்கிறேன். எப்படி ஒருவர் கட்டான உடல் அமைப்பை உருவாக்க முடியும்? வலுவான தசைகளைப் பெற அவர் மிகக் கடினமான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஒருவரின் நோக்கத்தைப் பொறுத்தே அவரின் மனம் பளு தூக்கும் பணியை போராட்டமாகவோ அல்லது பலனளிக்கும் செயலாகவோ பார்க்கத் துவங்கும். முக்கியமாக அவரவரது மனநிலையைப் பொறுத்தே இறுதி முடிவு அமையும்.

சவால்களால் இயற்கை மேம்பட்டுள்ளது. அது நமது திறனின் அடிப்படையில் நம்மை இயக்கத் தொடங்கும். நம்மால் சவால்களின் அளவைக் குறைக்க முடியாது. நம்மிடம் வழங்க ஏதாவது இருந்தால் அதை இயற்கை நம்மிடமிருந்து பிரித்தெடுக்கும். நாம் இந்த அண்டத்தின் மையமில்லை ஆனால் இயற்கையின் பெரும் திட்டத்தில் ஒரு சிறிய கலைப் படைப்பாகும். ஆம், இந்தச் சவால்களின் தீவிரம், அதிர்வெண் மற்றும் எண்ணிக்கையை நம்மால் குறைக்க முடியும். எப்படியென்றால், நாம் நமது வாழ்க்கையை எளிமையாகவும் ஆரவாரமற்றதாகவும் அமைத்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் எளிமையைப் பின்பற்றத் துவங்கினால் வரும் இன்னல்களைப் போராட்டமானதாகப் பார்க்க மாட்டோம். அதற்காக வரும் சவால்கள் அனைத்துமே நல்ல வாய்ப்பாக அமையும் என்பதில்லை. ஆனால், நாம் அச்சத்தால் ஒடுங்கி நிற்க மாட்டோம்.

வாழ்க்கை ஒரு நேரான சாலையாக இருக்கலாம். ஆனால் அது இலகுவானதாக அமைவது அரிது. வாழ்க்கையின் சில பகுதிகள் பட்டுத் துணி போல் மென்மையானதாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் தலைகீழாக அமைவது நம்மை விழிப்புடனும் உயிர்த்துடிப்புடனும் இருக்க வைக்கத் தான். அந்த ஓட்டத்தை அனுபவிக்க வேண்டும். நீங்கள் சாலையோரம் நின்று கொண்டு வாழ்வின் தருணங்களை நம்மைக் கடந்து செல்லும் போக்குவரத்தைப் போல் கற்பனை செய்து பாருங்கள். வாழ்க்கை எவருக்காகவும் நிற்கப் போவதில்லை. அது புகார்களையோ அல்லது பாராட்டுதல்களையோ கேட்கவும் நிற்கப் போவதில்லை. நமது பூமியோ அல்லது மற்ற கிரகங்களோ அதனதன் சுழற்சியை ஒரு கணம் கூட நிறுத்தப் போவதில்லை. அப்படி நிறுத்தினால் அதன் இருப்பை இழக்க நேரிடும். இயற்கையின் இந்தச் சிக்கலான ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த கண்கவர் நாடகம் ஒரு போதும் நிற்கப் போவதில்லை. வாழ்க்கையும் அது போலத்தான். நீங்கள் அதை அனுபவிக்க வேண்டும் என்றால், அதனுடன் ஒட்டி ஒழுகக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த வாழ்க்கை என்பது உண்மையில் நீர்க் குமிழியைப் போன்றது. அது உடையும் முன் விரும்பி அனுபவித்து வாழ்ந்து விடுங்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email