ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு அழகான கதை உள்ளது. ராஜா யதூ, அறிவொளி பெற்ற ஒரு அவதூதாவின் அறிவால் ஈர்க்கப்பட்டு அவரது குருவைப் பற்றி விசாரிக்க, அந்த அவதூதா தனக்கு ஒரு விபச்சாரி உட்படப் பல குருக்கள் இருப்பதைப் பற்றிக் கூறினார்.
“ஒரு வேசி?” என்று மன்னர் வெறுப்பாகக் கேட்டார்.
“ஆமாம், ஏன் இருக்கக் கூடாதா? அவளிடமிருந்து நான் என்ன கற்றுக் கொண்டேன் என்பதைக் கேளுங்கள்,” என்று அந்த அவதூதா சொன்னார். அவர் பிங்கலாவின் கதையை விவரிக்கத் தொடங்கினார்.

பண்டைய நகரமான விதேஹத்தில், பிங்கலா ஒரு கவர்ச்சியான விலை மகள். புதிதாக வெட்டப்பட்ட ஸ்ட்ராபெர்ரி போன்ற, அழகான உதடுகள் மற்றும் எழுச்சியுள்ள கவர்ச்சியும் கொண்டவள். அவள் கவர்ச்சியான பூக்களின் மணத்துடன் இருந்தாள். அவளைப் பார்ப்பதுவே ஆசைகளைத் தூண்டுவதற்குப் போதுமானது. உண்மையில், அவளது அதிசயமான அழகினால் தான் அவள் அரசர்கள் மத்தியில் இருந்தாள். இல்லாவிடில், அரசர்களும் சக்திவாய்ந்த வணிகர்களும் அவளுக்காகச் சண்டையிட்டிருப்பார்கள். நாட்டில் வேறு எந்த விலை மகளும் அனுபவிக்காத அரசகுல ஆதரவைப் பிங்கலா அனுபவித்தாள்.

ஒரு மருத்துவர் நோயாளியிடம் காட்டும் பற்றற்ற தன்மையைப் போலவே, பல வருடங்களாக, இவளும் பற்றற்ற அன்பைக் கடைப்பிடிக்கக் கற்றுக் கொண்டிருந்தாள். இருந்தாலும் இந்த அன்பின் வழியானது, மர்மமானது மற்றும் நியாயமற்றது போல, அவள் ஒரு இளவரசரிடம் தனது இதயத்தைப் பறிகொடுத்தாள். அந்த இளவரசர் ஒரு குறிப்பிட்ட நாளில் அவளைச் சந்திப்பதாக உறுதியளித்தார்.

பிங்கலா அனைத்து வாடிக்கையாளர்களையும் ஏதோ ஒரு காரணம் கூறி அன்று திருப்பி அனுப்பிவிட்டாள். அவர் ஒரு நீண்ட அழகுக் குளியல் செய்து, தன் மேல் பல்வேறு நறுமணத் தைலங்களை மற்றும் மூலிகைகளைப் பூசிக் கொண்டாள். கவனமாக, அவள் மோக்ரா, மல்லிகை மற்றும் பிற பூ மொட்டுகளைக் கொண்டு அவளது முடியைப் பின்னிக் கொண்டாள். சிறந்த பட்டு நூலால் நெய்யப்பட்டிருந்த சிவப்புப் புடவையை அவள் அணிந்து கொண்டாள். அவளது நெற்றி, காதுகள், கழுத்து, மணிகட்டு, கணுக்கால் ஆகியவை தங்கம், ரூபி, மரகதம் மற்றும் வைரங்களின் விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டன. அவளைப் பட்டத்து ராணி என்று ஒருவர் எளிதில் தவறாக நினைக்கும்படி அவள் இருந்தாள்.

அனைத்து அலங்காரமும் முடிந்து தயாராக, அவளது இளவரசனுடைய அன்பான தழுவலில் இருக்கவும், நெருக்கமாக இருந்து அவரைப் பார்க்கவும் அவள் ஆவலுடன் காத்திருந்தாள். மதியம் முடிந்து சாயங்காலமும் ஆகிவிட்டது, ஆனால் இளவரசர் வரவில்லை. இதற்கிடையில், அவளுடைய ஆதரவைத் தேடி வந்த பல ஆண்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள். அவள் பார்க்க விரும்பியது ஒரே ஒரு நபரைத் தான். விசுவாசம் மற்றும் அன்பின் உணர்வுகள் அவளது இதயத்தின் மற்ற எல்லா ஆசைகளையும் விலக்கி விட்டன, அவள் இளவரசருக்குச் சொந்தமானவளாகவே இருக்க விரும்பினாள்.

சில நிமிடங்களுக்கு ஒருமுறை, இளவரசர் வந்திருப்பாரோ அல்லது தற்செயலாகக் காவலாளர்கள் அவரை நுழையவிடாது தடை செய்திருப்பார்களோ என்று கண்டுபிடிக்க அவள் வாயில்களுக்கு ஓடிய போது, அவளது கொலுசு, சலங்கை மணிகள் சப்தம் எழுப்பின மற்றும் அவளது விலை உயர்ந்த ஆபரணங்கள் மணி ஓசை எழுப்பின. இன்னும் அதிகக் கவனத்துடன் இருக்க அவர்களைக் கண்டித்தாள். ஒவ்வொரு பல்லக்கையும், ஒவ்வொரு ரதத்தையும் மிகுந்த எதிர்பார்ப்புடன் எட்டி எட்டிப் பார்த்து, இது ஒருவேளை இளவரசராக இருக்குமோ என்று அவள் நினைத்தாள். அவளது பணிப்பெண்களுக்குக் கூட அவர்களது எஜமானி மிகவும் ஆர்வத்தோடு இருப்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. அவளது வாய் சுத்தமாகவும், சிவப்பாகவும் இருக்க, அவள் நாள் முழுவதும் சாப்பிடவில்லை மற்றும் வெற்றிலையை மட்டுமே மென்றாள்.

சந்தியா காலம் இருட்டாகி இரவாக மாறியது. பிங்கலா தனது பசியை இழந்து, இளவரசரைச் சந்தித்தே ஆக வேண்டும் என்ற ஒரு பதட்டமான மனநிலையை அடைந்தாள். நட்சத்திரங்கள் வானில் இங்கும் அங்கும் மின்னத் தொடங்கின. இன்னும் சில மணிநேரங்கள் கழிந்தன, முழு நிலவு இன்னும் சில நட்சத்திரங்களுடன் தோன்றியது. சுவர்க் கோழிகள் உரத்த ஒலி எழுப்பின, சக்கோரா பறவை தனது துணைக்கான அழைப்பாக அவ்வப்போது பாடிக் கொண்டிருந்தது. பிங்கலாவினுடைய இதயத்தில் காத்திருத்தலும், அன்பும் அப்படியே இருந்தது, ஆனால் இளவரசரின் வரவுக்கான அறிகுறி எதுவும் இல்லை.

இரவு முழுவதும் அவள் விழித்துக்கொண்டே இருந்தாள், அவளுடைய கண்கள் சோர்வடைந்தன, எண்ணற்ற நேரங்களில் பிங்கலா தன் ஆடை மற்றும் அலங்காரங்களைச் சரிசெய்து கொண்டாள். பல முறை அவள் கண்ணாடியில் தன்னைப் பார்த்து, மறுபடியும் ஒப்பனைச் செய்து கொண்டாள். பல முறை, அவள் தன் மீது வாசனைத் திரவியங்களைத் தெளித்துக் கொண்டாள். இளவரசர் வரும்போது அனைத்தும் சரியாக இருப்பதற்காக இவை அனைத்தையும் செய்தாள். ஆனால் அவர் வரவில்லை. அவளது தலையில் இருந்த பூ மொட்டுகள் வாடத் தொடங்கின, பழுப்பு நிறச் சாயல் மல்லிகை மலர்களில் தோன்றியது.

காலை நேரம் விடிவதற்குச் சற்று முன்னர், மக்கள் இரவுத் தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்து கொண்டிருந்தபோது, பிங்கலாவும் அவளது அறியாமையிலிருந்து எழும்பி ஒரு ஆழமான உணர்தலைப் பெற்றாள்.

அந்த அவதூதா ராஜாவிடம் சொல்கிறார்:

na hy aṅgājāta-nirvedo
deha-bandhaṁ jihāsati
yathā vijñāna-rahito
manujo mamatāṁ nṛpa
(Srimad Bhagavatam, 11.8.29)
ன ஹ்ய அங்காஜாத-னிர்வெடொ
தேஹ-பன்தம் ஜிஹாஸதி
யதா விக்யான-ரஹிதோ
மனுஜொ மமதாம் ன்ருப
(ஸ்ரீமத் பாகவதம், 11.8.29)

அரசே, எப்படி ஆன்மீக அறிவு இல்லாத ஒரு மனிதன் பல பொருட்களின் மேலான தனது முன்னுரிமைத் தன்மையை விட்டுக்கொடுக்க விரும்புவதில்லையோ, அதேபோல் பற்றற்ற நிலையை வளர்த்துக் கொள்ளாத ஒருவர் இந்த உடலின் மீதான பற்றுதலை விட்டுக்கொடுக்க விரும்புவதில்லை.

எனினும், பிங்கலா தன்னிடம் இருந்த தவறான உணர்விலிருந்து அன்று மேலே உயர்ந்தாள். அவள் பெரிய பற்றின்மை (வைராக்கியா) மற்றும் பேரின்பத்தை அனுபவித்தாள். அவள் ஏற்கனவே முழுமையாய் உணர்ந்தாள், அவளை முழுமைப்படுத்த அவளுக்கு இன்னொருவர் தேவையில்லை என்று அவள் உணர்ந்தாள். அவள் அன்பு செலுத்தி இருக்க வேண்டிய ஒருவர், இரவும் பகலும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாத ஒருவர், அவளை ஒருபோதும் கைவிட்டுவிடாத அந்த ஒருவர், அவள் உள்ளே ஏற்கனவே இருக்கிறார் – கடவுள்.

பிங்காலாவின் கதை ஸ்ரீமத் பாகவதத்தில் பின்வருமாறு தொடர்கிறது:

piṅgalovāca
aho me moha-vitatiṁ
paśyatāvijitātmanaḥ
yā kāntād asataḥ kāmaṁ
kāmaye yena bāliśā ॥30॥
பின்கலோவாச
அஹொ மெ மொஹ-விடதிம்
பஷ்யதாவிஜிதாத்மனஹ்
யா கான்தாத் அஸடஹ் காமம்
காமயெ யென பாலிஷா ॥30॥

santaṁ samīpe ramaṇaṁ rati-pradaṁ
vitta-pradaṁ nityam imaṁ vihāya
akāma-daṁ duḥkha-bhayādhi-śoka-
moha-pradaṁ tuccham ahaṁ bhaje ’jñā ॥31॥
ஸன்டம் ஸமீபெ ரமணம் ரதி-ப்ரதம்
விட்ட-ப்ரதம் னித்யம் இமம் விஹாய
அகாம-தம் துக்க-பயாதி-ஷொக-
மொஹ-ப்ரதம் துக்சம் அஹம் பஜெ ’க்யானா ॥31॥

aho mayātmā paritāpito vṛthā
sāṅketya-vṛttyāti-vigarhya-vārtayā
straiṇān narād yārtha-tṛṣo ’nuśocyāt
krītena vittaṁ ratim ātmanecchatī ॥32॥
அஹொ மயாத்மா பரிதாபிதொ வ்ருதா
ஸாண்கெத்ய-வ்றுத்தய்தி-விகர்ஹ்ய-வார்தயா
ஸ்த்ரைணான் னராத் யார்த-த்றுஸொ ’னுஷொச்யாத்
க்ரீதென வித்தம் ரதிம் ஆத்மனெச்சதீ ॥32॥

yad asthibhir nirmita-vaṁśa-vaṁsya- sthūṇaṁ
tvacā roma-nakhaiḥ pinaddham
kṣaran-nava-dvāram agāram etad
viṇ-mūtra-pūrṇaṁ mad upaiti kānyā ॥33॥
யத் அஸ்திபிர் னிர்மித-வம்ஷ-வம்ஸ்ய- ஸ்தூணம்
த்வசா ரொம-னகைஹ் பினத்தம்
க்ஷரன்-னவ-த்வாரம் அகாரம் எதத்
விண்-மூத்ர-பூர்ணம் மத் உபைதி கான்யா ॥33॥

videhānāṁ pure hy asminn
aham ekaiva mūḍha-dhīḥ
yānyam icchanty asaty asmād
ātma-dāt kāmam acyutāt ॥34॥
விதெஹானாம் புரெ ஹ்ய் அஸ்மின்ன்
அஹம் எகைவ மூத த-தீஹி
யான்யம் இச்சன்த்ய் அஸத்ய் அஸ்மாத்
ஆத்ம-தாத் காமம் அச்யுதாத் ॥34॥

நான் எவ்வளவு பெரிய மாயத் தோற்றத்தில் இருக்கிறேன் பாருங்கள் என்று பிங்காலா கூறினாள்! ஏனென்றால் என் மனதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை, ஒரு முட்டாளைப் போலவே ஒரு சிறப்பற்ற மனிதனிடமிருந்து அற்பமான இன்பத்தை விரும்புகிறேன். ॥30॥

என் இதயத்தில் நித்தியமாக அமர்ந்து இருக்கும், உண்மையில் எனக்கு மிகவும் பிடித்த ஒருவரின் சேவையை நான் விட்டுவிட்டேன் என்பதை நான் அறியாமல் இருக்கிறேன். அந்த மிகவும் பிரியமான ஒருவர் பிரபஞ்சத்தின் இறைவனே ஆவார். அவரே உண்மையான அன்பு மற்றும் மகிழ்ச்சியை அளிப்பவர் மற்றும் அனைத்துச் செழிப்பின் ஆதாரமும் அவரே ஆவார். அவர் என் சொந்த இருதயத்தில் இருந்த போதிலும், அவரை முற்றிலும் புறக்கணித்துவிட்டேன். மாறாக, என் உண்மையான ஆசைகளைத் திருப்தி செய்ய முடியாதவர்கள் மற்றும் எனக்குத் துயரம், அச்சம், கவலை, புலம்பல் மற்றும் மாயை ஆகியவற்றைக் கொண்டு வரும் அற்பமானவர்களுக்கு, என் அறியாமல் சேவை செய்து இருக்கிறேன். ॥31॥

ஓ, நான் என் சொந்த ஆத்மாவைப் பயனற்ற முறையில் எப்படிச் சித்திரவதை செய்து இருக்கிறேன்! நான் என் உடலை, அனுதாபத்திற்கு உகந்தவர்களான பேராசைக்காரர்களுக்கு விற்றுவிட்டேன். என் தொழிலில் இருந்து பணம் மற்றும் பாலியல் இன்பம் பெறுவேன் என்று நம்பியிருந்த நான் எவ்வளவு விவேகமற்றவளாக இருந்து இருக்கிறேன். ॥32॥

இந்த உடல், என் ஆத்மா வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு வீட்டிற்கு ஒப்பானதாகும். என் முதுகெலும்பு, விலா எலும்புகள், கைகள் மற்றும் கால்கள் ஆகியவற்றை உருவாக்கிய எலும்புகள் வீட்டின் விட்டம், உத்திரக் கட்டைகள் மற்றும் தூண்களைப் போன்றவை. மற்றும் மலம், சிறுநீரால் நிறைந்த அந்த முழுக் கட்டமைப்பும் தோல், முடி மற்றும் நகங்கள் ஆகியவற்றால் மூடப்பட்டுள்ளது. இந்த உடலில் உள்ள ஒன்பது கதவுகள் வழியாக நாற்றமடிக்கும் பொருட்கள் தொடர்ந்து வெளியேற்றப்படுகின்றன. இந்த விசித்திரமான கட்டமைப்பில், இன்பம் மற்றும் அன்பு கிடைக்கும் என்று நினைத்து, இந்த உடலுக்காகத் தன்னையே அர்ப்பணிக்கும் முட்டாள்தனமான பெண் என்னைத் தவிர வேறு யார் இருக்க முடியும்? ॥33॥

நிச்சயமாக இந்த விதேஹ நகரத்தில், நான் மட்டுமே முழு முட்டாளாக இருக்கிறேன். நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கின்ற, நமது அசல் ஆன்மீக வடிவத்தையும் கொடுக்கின்ற, அந்தக் கடவுளின் உச்ச ஆளுமைகளை நான் புறக்கணித்தேன். ஆனால் அதற்குப் பதிலாக உணர்வுகளின் நிறைவிற்காகப் பல மனிதர்களுடன் அனுபவிக்க விரும்பினேன். ॥34॥

(ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீல பிரபுபாதாவின் மொழிபெயர்ப்பு 11.08.30-34)

இதற்கு மேலும் சொல்ல எதுவும் இருப்பதாக எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை; பிங்கலாவின் கதையே ஒரு செய்திதான்.

இது அவளது கதை மட்டுமல்ல, யாரோ ஒருவரை எப்போதாவது நேசித்த மற்றும் திரும்ப நேசிக்கப்படுவதை விரும்பிய ஒவ்வொருவருடைய கதையும் ஆகும். ஆயிரக்கணக்கான மக்களைச் சந்தித்த பிறகு, துயரத்திற்கான மிகவும் பொதுவான காரணம் அவர்களின் உறவுகளிலிருந்து மக்கள் எதிர்பார்க்கும் எதிர்பார்ப்புகளால் அல்ல, பொதுவாக உறவே தான் காரணம் என்பதை நான் கவனித்திருக்கிறேன். உலகத்தின் அனைத்து உறவுகளும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றன, முக்கியமாக மற்றவர்கள் நம்மை நிறைவு படுத்த வேண்டும் என்று நாம் விரும்புகிறோம் (மற்றவர்களும் நம்மைப் போலவே விரும்புகிறார்கள்). இவ்வாறு கூறுகையில், உறவுகள் கெட்டவை என்றோ, அல்லது நீங்கள் ஒன்றில் இருக்கக்கூடாது என்றோ நான் கூறவில்லை. நமது மகிழ்ச்சியின் ஒரு பெரிய பகுதி, நமது தனிப்பட்ட மற்றும் சமூகத் தொடர்புகளின் தரத்தைப் பொறுத்துள்ளது. உண்மை என்னவென்றால், நம்மை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள நமக்குத் தெரியாவிட்டால், வேறு யாராலும் அதை நமக்காகச் செய்ய முடியாது.

மற்றவர்களால் நமக்கு மிகச் சிறிய அளவு மட்டுமே கொடுக்க முடியும். இறுதியாக உங்கள் மகிழ்ச்சி, உங்களது தன்னலமற்ற கர்மாவையும், நீங்கள் உங்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதையும் சார்ந்திருக்கிறது. நீங்கள் விரும்பும் ஒருவருக்கு நீங்கள் செய்வது எப்போதும் தன்னலமற்றது அல்ல. நீங்கள் உங்களுக்கு ஒரு கை கடிகாரம் வாங்குவதற்குப் பதிலாக, உங்கள் மனைவிக்கு ஒரு வளையல் வாங்கினால், அதில் நிச்சயமாக ஒரு சிந்தனையும் அக்கறையும் இருக்கிறது, ஆனால் அது தன்னலமற்றதாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை, நான் சொல்ல நினைப்பதைப் புரிந்து கொண்டு இருப்பீர்கள். இத்தகைய உறவில் நீங்கள் மிகுந்த உணர்வுப் பூர்வமான முதலீட்டைப் பெற்று இருக்கிறீர்கள். நீங்கள் எந்தவொரு கர்மாவையும் மிகச் சிறிய அல்லது திரும்ப எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யும் போது, எந்தவொரு உணர்ச்சியையோ அல்லது வேறு எந்தவொரு சொந்த விருப்பத்தையோ முதலீடு செய்யவில்லை என்றால் அது மிகச் சிறந்த சுயநலமற்ற செயல் ஆகும்.

எப்படியாயினும், என் வாழ்க்கையில் நிறைவு என்பது, என்னுடைய தனிப்பட்ட பொறுப்பாகும். மற்றொருவரை அண்டி மகிழ்ச்சியின் ஒரு பெருங்கடலைக் கண்டுபிடித்தவர் யாராவது இருந்திருக்கிறார்களா? நமது பாத்திரத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தொடர்ந்து மற்றவரை எதிர்பார்ப்பதற்குப் பதிலாக, திருப்தியுடனும் நன்றியுணர்வுடனும் தர்மத்தின் பாதையில் நடக்கத் தைரியம் மற்றும் ஞானம் நம்மிடம் இருக்க வேண்டும்.

பிங்கலாவின் மகிழ்ச்சி, அவளுடைய இளவரசனின் வருகையை, அவர் அவளை எவ்வளவு நன்றாக நடத்துவார், ஏற்றுக் கொள்வார் மற்றும் நேசிப்பார் என்பதை நம்பியிருந்தால், அவள் எப்போதுமே நிரந்தர மகிழ்ச்சியைக் கண்டறியப் போவதில்லை. அன்பிற்காக ஏங்கும் உணர்ச்சிகளின் தீவிரத்தன்மை நிலையற்றதாகும். அதுமட்டுமல்ல, முதலில் நம்மை முழுமையாக நேசிக்காமல் யாரையும் நேசிக்க முடியாது. மேலும் பூரணத்துவ உணர்வு ஓர் உள் அனுபவம் ஆகும். மற்றவர்கள் அதன் ஒரு சிறு அனுபவத்தைத் தான் நமக்குக் கொடுக்க முடியும், ஆனால் இறுதியில், உங்களுடைய ஆழமான குணம் மற்றும் இருப்பே நீங்கள் எவ்வளவு திருப்தி அடைகிறீர்கள் என்பதை நிர்ணயிக்கிறது.

மற்றவர்களிடமிருந்து நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ, அதை முதலில் உங்களுக்கே கொடுக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பு தன்னலமற்றதாக இருக்க வேண்டுமானால், மற்ற நபரை அவர் நேசிக்க விரும்பும் வழியில் நேசிக்க வேண்டும். உங்களிடமிருந்து தொடங்குங்கள். பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். உங்கள் இதயத்தின் கதவை யாராவது தட்ட வேண்டும் என்று நீங்கள் காத்திருக்கமாட்டீர்கள். அதற்குப் பதிலாக, உங்கள் இதயம் வானத்தைப் போல் பெரியது என்றும், அதற்குக் கதவுகளே கிடையாது என்றும், அது பரந்து விரிந்திருக்கிறது, அதில் அனைவருக்கும் நிறைய இடம் உள்ளது என்றும் கண்டுபிடிப்பீர்கள்.

பிங்கலாவின் உணர்தல் உங்களுக்கு வரும்வரை, நீங்கள் ஒரு உறவில் இருந்தால், உங்களுடைய உறவை எவ்வாறு நன்றாக வைத்திருப்பது என்பதே கேள்வியாகும். அதைப்பற்றி அடுத்த இடுகையில் பார்க்கலாம்.

மற்றும், ஒரு கடைசி வார்த்தை: நீங்கள் எப்போதும், உங்கள் வாழ்க்கையில் யார் மையமாக இருக்கிறார்களோ, அவர்களிடமிருந்து ஆற்றல் மற்றும் உத்வேகத்தை ஈர்க்கிறீர்கள். அன்பில் நீங்கள் விரும்பும் நபராகவே, நீங்கள் ஆகிறீர்கள். அது ஒரு பொருள்சார்ந்த நபராக இருந்தால், நீங்கள் அதிகமாகப் பொருள்சார்ந்தவராக ஆவதைக் காண்பீர்கள். அவர் ஒரு ஆன்மீக நபர் என்றால், நீங்களும் ஒரு அமைதியான நபராக உருவாகிறீர்கள். அமைதியற்ற அல்லது தற்புகழ்ச்சி (narcissist) வகை என்றால், நீங்களும் அமைதியற்ற நிலையையும், கவலையையும் உணர்வீர்கள். உங்கள் வாழ்க்கையின் மையம் அழகு, கடவுள், தெய்வீகம், கருணை அல்லது இதில் எதுவாக இருந்தாலும், நீங்கள் அதன் ஒரு உருவகமாகவே மாறிவிடுவீர்கள்.

கவனமாகத் தேர்ந்தெடுங்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email