ஸ்வாமிஜி, ஒருவர் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தனியாகத் தான் பயணிக்க வேண்டும் என்று வாழ்க்கை எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளது, என்று என் தந்தை ஒருநாள் என்னிடம் கூறினார்.

என் தந்தை சமீபத்தில் அவருடைய வங்கி அட்டை தடுக்கப்பட்டுவிட்டதாகக் கூறிய, ஒரு மோசடித் தொலைப்பேசி அழைப்புக்கு இரையாகிவிட்டதால், கொஞ்சம் தடுமாற்றத்துடனும், கலக்கத்துடனும் இருந்தார். தொடர்ந்து தவறாக அவரை வழிநடத்தி, அந்த அழைப்பாளர் சரியான விவரங்களை வாங்கிக் கொண்டு, என் பெற்றோரின் முழுநேர ஓய்வூதியத்தை இரண்டு நிமிடங்களுக்குள் செலவிட்டுவிட்டார். அவரது வங்கியின் பரிவர்த்தனைக்கான சங்கேத வார்த்தையைப் (transaction password) பகிர்ந்துகொண்ட எனது அப்பாவின் அலட்சியத்தால் இவ்வாறு நிகழ்ந்துள்ளது என்று வங்கி முடிவு செய்தது. அந்த அழைப்பு இந்தியாவின் வேறொரு மாநிலத்திலிருந்து வந்ததால், போலீசாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

நீங்கள் நாற்பதுக்கும் அதிகமான வருடங்களாக சம்பாதித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு மாத ஓய்வூதியத்தை இழப்பது ஒன்றும் மிகப் பெரிய இழப்பு இல்லை. ஆனால் இழப்பின் முழுமையான தன்மை அல்லது அதன் அளவு நம்மைப் பாதிப்பதைவிட, நாம் அதற்கு இரையாகிவிட்டோமே என்ற உணர்வே அதிக பாதிப்பை அளிக்கிறது. ஒரு எதிர்பாராத, விரும்பத்தகாத சம்பவம் ஒரு புத்திசாலியைக் கூட முற்றிலுமாகத் தற்காப்பை இழக்க வைக்கும். அவர் ஏமாற்றப்பட்டார் என்ற உண்மையை ஜீரணிக்க அவருக்கு இரண்டு வாரங்களுக்கு மேல் ஆனது. மறுபுறத்தில் என் அம்மா, இந்தப் பண இழப்பால் பாதிக்கப்படாமல் குளிர் காலக் காற்றைப் போல் இதமாக, அமைதியாக இருந்தார். ஒரே இழப்பைக் கொண்ட, ஒரே கூரையின் கீழ் உள்ள இரண்டு நபர்கள், வித்தியாசமாகப் பாதிக்கப்படுகின்றனர். என்ன ஒரு அழகான மற்றும் புதிரான உலகில் நாம் வாழ்கிறோம்.

தந்தை தன் கடினமான குழந்தைப்பருவத்தை நினைவுபடுத்திக் கொண்டே, “நான் பார்த்திருக்கிறேன், நாம் துன்பப்படுகிற போது ஒருவரும் நம்முடன் இருப்பதில்லை. உங்கள் மனோதிடம் மற்றும் கடவுளின் கிருபை மட்டுமே ஒருவர் கரை ஏற உதவுகிறது, வேறு யாரும் உதவ முடியாது,” என்று கூறினார்.

அவர் ஏன் இப்படி கூறினார் என்பது எனக்குத் தெரியும், ஏனெனில் நான் சந்திக்கும் பலர் அவர்கள் வாட்டத்துடன் இருக்கும்போது முற்றிலும் தனிமையாக உணர்கிறார்கள். அவர்கள் பொதுவாக தனியாக இருப்பது இல்லை. ஆனால் அவர்களைச் சுற்றி எல்லா உதவியுடன் இருந்தும், விரிசல்களின் நடுவில் நீர் கசிவதைப் போல் அவர்களைத் தனிமை பீடிக்கிறது. நமது உணர்வில், நம்மைப்பற்றிய நமது புரிதலில் மற்றும் வாழ்வைப் பற்றிய நமது பார்வையில் விரிசல் உள்ளது. அதனால்தான் புத்தர், சம்யக த்ருஷ்டியை (வாழ்க்கையைப் பற்றிய சரியான கண்ணோட்டம்), சுயபுரிதலின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகக் கருதினார். கிருஷ்ணாவும் எல்லாவற்றின் அநித்தியத் தன்மையைப் பற்றித் திரும்பத் திரும்ப அர்ஜுனனுக்கு நினைவூட்டினார் மற்றும் ஒருவர் வாழ்க்கையின் இரட்டைத் தன்மையின் நடுவே தைரியத்துடன் ஊடுருவிச் செல்ல வேண்டும் என்றும் கூறினார். (மாத்ரா-ஸ்பர்ஶாஸ்து கௌந்தேய ஶீதோஷ்ண-ஸுக-து:க-தா: … ப.க. 2.14) அவர் மேலும் எல்லாவற்றையும் மறந்துவிடு, நீ விரும்புகிற அல்லது வெறுக்கிற எல்லா மக்களும் ஒரு நாள் உன் வாழ்க்கையில் இருக்கமாட்டார்கள் அல்லது நீ அவர்களது வாழ்க்கையில் இருக்கமாட்டாய் என்று கூறினார். (அவ்யக்தாதீநி பூதாநி வ்யக்த-மத்யாநி பாரத … ப.க. 2.28) அப்படி இருக்கும் போது நீ எதற்காக வருந்திக் கொண்டிருக்கிறாய்?

வாழ்க்கையில் (மற்றும் வாழ்க்கை) இழப்பு இருக்குமா என்பதை விட எப்பொழுது இருக்கும் என்பதுதான் கேள்வி.

நம் இதயத்தை நாம் எதனுடனாவது இணைப்பாகவோ அல்லது அன்பாகவோ வைத்திருந்தால், அதைக் காலப்போக்கில் இழந்திடுவோம். அது தவிர்க்க முடியாதது.

“நிச்சயமாக, எவரும் நம் துன்பத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் ஒப்புக்கொள்கிறேன். இது ஒரு தனிப்பட்ட விஷயம். நீங்கள் ஒரு இதயபூர்வமான உணவைச் சாப்பிட்டிருந்தால் அல்லது இழந்திருந்தால், வேறு யாரும் முழுமையாகவோ அல்லது பசியாகவோ உணர மாட்டார்கள்,” என்று நான் அவரிடம் சொன்னேன்.
அவர் என்னை குருவாக மதிக்கிறார். ஆகையால் அவர் கூறிய கருத்தை நான் உறுதிப்படுத்தியதால், அவர் நிம்மதி அடைந்தார்.

“எனினும், அவர்கள் உங்கள் இழப்பைப் பகிர்ந்து கொள்ளலாம், அவர்கள் உங்கள் வலியைப் பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் ஒரு நல்ல உணவினால் பெற்ற நிறைவைப் பகிர்ந்து கொள்ள முடியாவிட்டாலும், உங்கள் உணவை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அதன்பிறகு அவர்கள் நிறைவாக உணர்வதோ அல்லது வெறுப்பாக உணர்வதோ அவர்களைப் பொறுத்ததாகும். மேலும் அது தான் துன்பம் என்பதாகும்: நமக்கு என்ன நடக்கிறது என்பது அல்ல, நமக்கு என்ன நடக்கிறது என்பதை நாம் எப்படிக் காண்கிறோம் என்பதாகும். உண்மையான சூழ்நிலை அல்ல, ஆனால் பின்னால் நமது உணர்ச்சிகளை நிர்வகிக்கும் நம்முடைய பொருள் விளக்கம். விளக்கத்தை மாற்றுங்கள், உணர்ச்சிகள் தானாகவே மாறிவிடும்,” என்று நான் தொடர்ந்து கூறினேன்.

நீங்கள் விரும்புவதால் மட்டுமே, எவ்வளவு தான் வெறியான அல்லது வலுவான விருப்பம் உங்களுக்கு இருந்த போதிலும், உங்கள் உணர்வுகளை நீங்கள் மாற்ற முடியாது. உங்களுக்குள் எது இந்த உணர்ச்சிகளைத் தூண்டுகிறது என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். மூலத்திற்குச் செல்லுங்கள். இது ஒரு சம்பவம் அல்லது சில சம்பவங்கள், சில நபர்கள் மற்றும் இப்படிப் பலவகையில் இருக்கலாம். நீங்கள் வித்தியாசமாக உணர விரும்புகிறீர்களா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். அப்படியானால், எதுவும் அல்லது வேறு யாரும் மாறப்போவதில்லை என்ற அனுமானத்துடன் தொடங்குங்கள். அவர்கள் எப்பொழுதும் எங்கே இருந்தார்களோ அங்கேயே இருக்கிறார்கள், அவர்கள் எங்கே இருந்திருக்க வேண்டுமோ அங்கே சரியாக இருக்கிறார்கள். ஒரு பரந்த பார்வையை வளர்த்துக் கொள்ளுங்கள், நேர்மறையாக உங்களை திசைதிருப்பிக் கொள்ளுங்கள், பிரகாசமான பக்கத்தைக் கவனியுங்கள், உங்களிடமும், மற்றவர்களிடமும் அன்புடன்-கருணையுடன் பழகுங்கள், மற்றும் படிப்படியாக, உங்கள் கண்ணோட்டம் மாறத் தொடங்கும். அப்போது, அத்துடன் மற்றவை எல்லாம் மாறும்.

புத்தர் ஒரு முறை சுசிலோமா (Suciloma) என்ற கோர உருவினை எதிர் கொண்டார். சுசிலோமா என்றால் ஊசி-முடி (Needle-hair) என்று பொருள். அதற்கு முடிக்குப் பதிலாக ஊசிகள் இருந்தன! புத்தர் உண்மையில் ஒரு ஞானியா என்று அது கண்டுபிடிக்க விரும்பியது. எனவே அது புத்தரின் அருகே அமர்ந்து, அவரைக் குத்துவது போல் அவரை நோக்கிச் சாய்ந்தது, ஆனால் புத்தர் அப்பால் சாய்ந்தார்.
“ஆஹா! நீங்கள் வலியை விரும்பவில்லை. நீங்கள் உண்மையிலேயே ஞானி இல்லை. ஒரு ஞானி எந்த விஷயத்திலும் நடுநிலையைக் கடை பிடிப்பார். அவர் எந்த விருப்பு, வெறுப்பையும் கொண்டிருக்க மாட்டார்,” என்று அந்த ஊசி-முடி கூறியது.
“முட்டாளாக இருக்காதே. என் உடலுக்குப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் சில விஷயங்கள் உள்ளன. அதைக் காயப்படுத்தி, ஆரோக்கியம் அற்றதாக ஆக்கி விடும்,” என்று புத்தர் கூறினார். (SN 10:53).

இது ஒரு பொது அறிவு. நீங்கள் பாம்புகள் மீது அடி எடுத்து வைக்க மாட்டீர்கள், நீங்கள் நெருப்பிற்குள் ஓட மாட்டீர்கள், ஊசிகள் உங்களைக் குத்தவும் அனுமதிக்க மாட்டீர்கள். நீங்கள் விலகிச் செல்கிறீர்கள். இது பொது அறிவு, பற்றுதல் இல்லை. இது உங்கள் உடல் மீது உள்ள அன்பான-கருணை: அதை ஆரோக்கியமாக வைத்திருத்தல், பாதுகாப்பாக வைத்திருத்தல்.
(அஜான் பிரம்மின் விழிப்புணர்வைப் பெற்றிரு [Bear Awareness])

நம் அனுபவங்கள், சீரமைப்பு மற்றும் பழக்கவழக்க முறை ஆகியவற்றால் குருட்டுத்தனமாக நாம் அதையே செய்கிறோம்: பாம்புகள் மீது அடியெடுத்து வைக்கிறோம், நெருப்பிற்குள் ஓடுகிறோம் மற்றும் ஊசிகள் குத்தவும் அனுமதிக்கிறோம். பிணைப்புகள் என்ற பாம்புகள், ஆசைகளின் தீ, பொறாமை மற்றும் பேராசை என்ற ஊசிகள். அவை கடிக்கின்றன, எரிக்கின்றன மற்றும் காயப்படுத்துகின்றன. நாம் அதைத் துன்பம் என அழைக்கிறோம், இதுதான் வாழ்வின் வழி என்று நினைக்கிறோம். நாம் நமது வலியை, நம் வேதனை என்று தவறாகக் கொள்கிறோம். முதலில் உள்ளதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் பிந்தையது முற்றிலும் நம் கைகளில் உள்ளது. நாம் விஷயங்களைப் படிப்பினையாக எடுத்துக்கொள்ளலாம் அல்லது அலைகளில் தூக்கி எறியப்படலாம். இந்தத் தேர்வு, எல்லா நேரங்களிலும், நம் கைகளில் உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒரு மனிதன் ஒரு பீட்ஸா விற்கும் இடத்திற்குச் சென்று ஒரு பெரிய முழு-கோதுமை பீட்ஸா மற்றும் கோக் (Coke) கொண்டு வரும்படிக் கேட்டார்.
“நான் அதை ஆறு துண்டுகளாகவா அல்லது பத்து துண்டுகளாகவா வெட்ட வேண்டும்?” என்று உரிமையாளர் கேட்டார்.
“பத்து! பத்து!” என்று அந்த மனிதன் பதைபதைத்தார். “யாரோ ஒருவர் இங்கே எடை குறைக்க முயற்சிக்கிறார்! ஆறு துண்டுகளாகவே அதை வெட்டுங்கள்!”

இதுவும் வாழ்க்கையைப் போலத் தான், நீங்கள் அனைத்தும் உங்களுக்கே என்று விரும்பினால் அதை ஆறாக அல்லது பத்தாகப் பிரிப்பது தேவையற்ற ஒன்றாகும். நான் மைன்ட் ஃபுல் டு மைன்ட்ஃபுல் (Mind Full to Mindful) என்ற என் புத்தகத்தில் எழுதியுள்ளது போல: இறுதியில், எதுவும் ஒரு பொருட்டே இல்லை. என்று எவ்வளவு விரைவில் நாம் உணர்ந்துகொள்கிறோமோ அவ்வளவு விரைவில் மோதல் அல்லது சவால்கள் உங்களைத் தொந்தரவு செய்வதை நிறுத்தும்.

வலி தவிர்க்க முடியாதது, துன்பம் தேர்ந்தெடுக்கக் கூடியது. இழப்பு தவிர்க்க முடியாதது, துக்கம் அப்படி அல்ல. மரணம் நிச்சயம். வாழ்க்கை நிச்சயம் அற்றது. அதன் நிச்சயமற்ற தன்மை, கணிக்க முடியாத தன்மை, பகுத்தறிவற்ற தன்மை ஆகியவை, அது எவ்வாறு உள்ளதோ அவ்வாறு அமைக்கிறது: பயனுள்ளதாக, ஒரு ஆசீர்வாதமாக. நீங்கள் அதன் பண்புகளை பயங்கரமானதாக, சலிப்பாக மற்றும் தந்திரமானதாக அல்லது துணிச்சலான, அழகான மற்றும் கவர்ச்சிகரமானதாகப் பார்க்க முடியும். உங்கள் விருப்பம். அது தான் வாழ்க்கையின் அடிப்படை ஆகும்.

ஸ்கிராப்பிள் (scrabble) விளையாட்டில் உள்ளதைப் போல், எந்த எழுத்துக்கள் உங்களுக்கு வரும் என்பது உங்கள் கைகளில் இல்லை, ஆனால் என்ன வார்த்தையை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள் மற்றும் அதை நீங்கள் எங்கே வைக்கிறீர்கள் என்பது உங்கள் திறன் மற்றும் அறிவைப் பொறுத்ததாகும். உங்களுக்கு எவ்வளவு அதிகமாக வார்த்தைகள் தெரியுமோ அவ்வளவு அதிக மதிப்பெண்களைப் பெற வாய்ப்புள்ளது. நீங்கள் எவ்வளவு வேகமாக உங்கள் எழுத்துக்களைக் காலி செய்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக வேறு பல எழுத்துக்களையும், அதிக வார்த்தைகளைத் தெரிந்தெடுக்கவும் வாய்ப்புள்ளது. உங்களிடம் உள்ள எழுத்துக்களைக் கைவிடப் போவதில்லை அல்லது நீங்கள் எவ்வளவு துரதிருஷ்டவசமாக இருக்கிறீர்கள் என்று புலம்பிக் கொண்டிருந்தால், நீங்கள் மதிப்பெண்களைப் பெறும் உங்கள் வாய்ப்பை இழக்க நேரிடும். வாழ்க்கையும் இதற்கு மாறானது அல்ல.

எழுத்துக்கள் அதே தான், உள்ள எழுத்துக்களைக் கொண்டு நீங்கள் என்ன வார்த்தைகளை உருவாக்குகிறீர்கள் என்பதுதான், நீங்கள் எல்லாவற்றையும் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதை வேறுபடுத்துகிறது. ஆம், முற்றிலும் எல்லாம்.

உங்கள் இதயத்தை அன்பு-கருணையால், உங்கள் நேரத்தை உன்னதமான செயல்களால், உங்கள் மனதை நல்ல எண்ணங்களால் நிரப்புங்கள். நிறைந்த மனதிலிருந்து வருத்தம் மறைவதைப் போல், உங்கள் வாழ்க்கையில் இருந்து வேதனைகள் விலகிவிடும். உங்கள் ஆன்மாவை நீங்களே உணருவீர்கள். உங்கள் ஆன்மாவை ஊசிகள் குத்த முடியாது அல்லது நெருப்பால் எரிக்க முடியாது. நீரால் அதை அழுக வைக்க முடியாது, வெப்பத்தால் உலர்த்த முடியாது. (அச்சேத்யோஹ்யம் அதாஹ்யோஹ்யம் அக்லேத்யோஹ்ஶோஷ்ய ஏவ ச ப.க. 2.24) மற்றும் பாம்புகள் என்று கேட்கிறீர்கள், பிணைப்புகளாகிய பாம்புகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? ஒரு யோகி அதை அவர் கழுத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார், ஆனாலும் அதனால் அவருக்கு எந்தத் தீங்கும் இல்லை.

இது நீடித்த அமைதிக்கான பாதை. என்னுடன் நடங்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email