“லெப்டினன்ட், நீங்கள் அங்கே திரும்பப் போகக் கூடாது” என்று மேஜர் எச்சரித்தார்.
“மன்னிக்க வேண்டும் ஐயா, நான் போய்த் தான் ஆக வேண்டும்,” என்று லெப்டினென்ட் கூறினார்.
“நீங்கள் என் கட்டளையை மீறுகிறீர்கள். அத்துடன் அவர் இந்நேரம் இறந்து போயிருக்கக் கூடும்.”
“நான் வருந்துகிறேன் ஐயா, ஆனால் என் நண்பனைக் காப்பாற்ற நான் திரும்பிப் போக வேண்டும்.”

இது உண்மையாக நடந்தது என்று சரித்திரத்தில் உள்ளது. வியட்நாம் போரில், அமெரிக்க வீரர்களின் ஒரு கூட்டம் எதிரிப் பகுதியிலேயே இருக்கும்படியாக ஆனது. மேலும் கடுமையான குண்டு வீச்சு அங்கு ஏற்பட்டது. மோசமாகக் காயமடைந்த ஒரு சிப்பாய் தவிர மற்ற அனைவரும் எந்தக் காயமுமின்றித் தப்பினர். ஜான் என்ற ஒரு லெப்டினன்ட் திரும்பிச் சென்று தனது நண்பனைக் காப்பாற்ற வேண்டுமென்பதில் குறியாய் இருந்தார். மேஜர், அவர் அவ்வாறு செய்யத் தடைசெய்தார், ஆனால் ஜான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

“உங்களுக்கு நெறிமுறைகளைப் பற்றித் தெரியும் அல்லவா. நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டாம் என்று நான் கட்டளையிடுகிறேன். இல்லையேல், இராணுவத்தில் இன்றே உங்களது கடைசி நாளாக இருக்கும்,” என்று மேஜர் கத்தினார்.
“நீங்கள் என்னை வேலையில் இருந்து நீக்கலாம் மேஜர். ஆனால், நான் திரும்பிச் சென்றே ஆக வேண்டும்.”
“நீங்கள் வாழ்நாளில் இதற்காக வருத்தப்படுவீர்கள், லெப்டினென்ட்.”

மற்றொரு வார்த்தை பேசாமல், விதிகளை மீறிக் கொண்டு, நெறிமுறைகளை மற்றும் மேலதிகாரியின் உத்தரவுகளைப் புறக்கணித்துக் கொண்டு, அந்த இளம் லெப்டினண்ட் முற்றுகையிடப்பட்ட பிராந்தியத்திற்கு விரைந்தார். முழங்கைகளால் நகர்ந்தே, மூச்சுத் திணறிக் கொண்டிருந்த அவரது நண்பர் இருந்த இடத்தை அடைந்தார். தொடர்ந்த குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு ஒலியின் கீழ் அவர்கள் மிகக் குறைவான ஒலியுடன் ஒரு சில வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டார்கள். அனைத்துப் பிரச்சனைகளுக்கும் எதிராக, ஜான் தன்னுடைய முதுகுக்குப் பின்னால் தன் நண்பனை ஒரு மூட்டையைப் போல் தூக்கிக் கொண்டு, கவனமாக அந்தக் கடினமான நிலப்பரப்பைத் தாண்டி வந்தார். அவர்கள் முகாமிற்குத் திரும்பி வருவதற்குள், அவரது நண்பர் இறந்துவிட்டார்.

“நான் என்ன சொன்னேன்? ஒரு இறந்த மனிதனைக் காப்பாற்ற உங்கள் வாழ்க்கையை ஆபத்துக்கு உள்ளாக்குவது நல்லதா?” என்று அந்த மேஜர் கத்தினார்.
“சார், அவன் ஒரு இறந்த மனிதன் அல்ல, அவன் ஒரு தியாகி,” என்று லெப்டினன்ட் மெதுவாகப் பதிலளித்தார்.
“நான் திரும்பச் சென்றதற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால், இறந்து கொண்டிருந்த என் நண்பர் மற்றும் சக-சிப்பாய் என் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, ஒரே விஷயத்தைத் திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.”

அங்கு ஒரு சிறிய மௌனம் நிலவியது, மேஜரும் சில நொடிகள் மென்மையாகி விட்டார்.

“சார்,” என்று லெப்டினன்ட் தொடர்ந்து, “அவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘நீ எனக்காகத் திரும்பி வருவாய் என்று எனக்குத் தெரியும்’. சார், அவ்வளவு தான் அவர் சொன்னார். அது எனக்கு, எல்லாவற்றையும் விட அதிக மதிப்பு வாய்ந்தது.”

பெரும்பாலானோர் நாம் செய்த, அல்லது நமக்குச் செய்யப்பட்ட வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டே, நமது வாழ்க்கையையும், உறவுகளையும் ஒன்றாகப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறோம். வாக்குறுதி என்பது நம்பிக்கைக்கான இன்னொரு வார்த்தையாக இருக்கிறது, ஏனென்றால் நம் அன்புக்குரியவர்கள் நாம் கொடுக்கும் வார்த்தைகள் மீது தான் நம்பிக்கை வைக்கிறார்கள். ஒரு புதிய ஆண்டு தீர்மானமோ அல்லது மண மேடையில் நீங்கள் எடுக்கும் திருமண சபதமோ, என்னவாக இருந்தாலும் ஒப்பந்தத்தைச் செய்வது என்பது எளிதான பகுதியாகும், எது கடினமானது என்றால், அதைக் கடைப்பிடிப்பதே ஆகும். ஆனால், அதற்கான மரியாதையைக் கொடுத்தே ஆக வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு முறை நாம் நமது வார்த்தையைக் காப்பாற்றும் போதும், நாம் ஓர் அளவு வளர்கிறோம். இது நம் மன உறுதிக்கு மிகப்பெரிய ஊக்கமளிக்கிறது. அது மட்டுமல்லாமல் ஆன்மீகத்திலும் நம்மை முன்னேற்றுகிறது.

ஒரு வார்த்தையைக் காப்பாற்றுவது, நம்மைக் களைப்படையச் செய்வதாக இருக்கலாம். குறிப்பாக உங்கள் மனம் ஒரு விஷயத்தைச் செய்ய விரும்புகின்றபோது, உங்கள் இதயம் வேறு ஒரு இடத்தில் நிலைத்திருந்தால் ஏற்படும் உள்மனப் போராட்டத்தின் போது, உணர்வுகள் நியாயமான காரணங்களைத் தோற்கடிக்கும்போது. அப்படிப் பார்த்தால், ஒரு மணி நேரம் உடற்பயிற்சி மையத்திலோ அல்லது சமையலறையிலோ செலவழிப்பது கூட களைப்படையச் செய்யக்கூடும். இருந்தாலும் நமக்கு நல்ல சுகாதாரம் மற்றும் புதிய உணவு வேண்டும் என்று விரும்பினால், நாம் செய்ய வேண்டியதைச் செய்து தான் ஆக வேண்டும். ஒரு வார்த்தையைக் காப்பாற்ற நினைப்பது வித்தியாசமானது அல்ல; அது மகிழ்ச்சி அற்றதாகவோ, விரும்பத் தகாததாகவோ இருக்கலாம். ஆனால் இறுதியில், அது பெருமை மற்றும் பூர்த்தி நிறைந்த ஒரு அற்புதமான உணர்வை நம்மிடம் விட்டுச் செல்கிறது.

உங்கள் கையை உங்கள் இதயத்தில் வைத்து, “என்னால் முடிந்ததைச் செய்தேன்; நான் என் வாக்குறுதிக்குத் தகுந்தாற் போல் வாழ்ந்தேன்,” என்று சொல்ல முடிந்தால், அது உங்கள் சுயமரியாதையை மட்டுமல்லாமல், மனவுறுதியையும் அதிகரிக்கிறது. மேலும், அதிக அளவு சிரமங்கள் இல்லாமல், வாழ்க்கையின் பெரிய சவால்களை எடுத்துக்கொள்வதற்கு இது உங்களைத் தயார்படுத்துகிறது.

தவிர, நமது வாக்கைக் காப்பாற்றுவதற்கு ஒரு நல்ல ஆன்மீகக் காரணமும் இருக்கிறது: நாம் நமக்குள் உள்ள தெய்வீகத் தன்மைக்கு நெருக்கமாகப் போகிறோம். நாம் செய்யும் எந்த வாக்குறுதியும் நமக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஆன ஒரு ஒப்பந்தமாக இருக்க வேண்டிய அவசியம் அல்ல, அது நமக்கும் தெய்வீகத்திற்கும் இடையில் உள்ளது (இதைக் கடவுள், பிரபஞ்சம் அல்லது நீங்கள் விரும்புகின்றபடி வேறு எப்படியும் அழைக்கலாம்). இறுதி ஆய்வின்படி அது நமக்கும் அவர்களுக்கும் இடையே ஆனதல்ல. அதற்குப் பதிலாக, அது நமக்கும், நமக்கும் மட்டுமானதாகவே இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் கீத் எம்.கென்ட்டின் (இங்கே) ஒரு அழகான கவிதையை மேற்கோளாகக் கூறியிருந்தேன். மற்றவர்கள் நமக்கு என்ன செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து, நாம் ஏன்-எப்படி-என்ன செய்கிறோம், மற்றும் பேசுகிறோம் என்பதை மாற்றக்கூடாது என்பதே அந்தக் கவிதையில் ஆழமாகக் கூறப்பட்டுள்ளது. எல்லா நேரங்களிலும், எது நமக்குத் தகுந்த முறையோ அதன்படியே செயல்பட வேண்டும்.

இறக்கும் தருவாயில் இருந்த முல்லா நஸூருதீனின் தந்தை, அடுத்த உலகிற்குத் தன் செல்வத்தை எடுத்துச் செல்லத் தீர்மானித்திருந்தார். அவர் இமாமைப் பார்த்து, 100,000 டாலர் பணத்தைக் கொடுத்து, “இந்தப் பணத்தை என் சடலத்துடன் சவப்பெட்டியில் போடுவேன் என்று எனக்குச் சத்தியம் செய்யுங்கள்,” என்று கூறினார்.

அவர் தனது மருத்துவரிடம் மற்றொரு $100,000 யும், முல்லாவிடம் $100,000 யும், முன்பு கூறிய நிபந்தனையைக் கூறிக் கொடுத்தார். அவர்கள் ஒவ்வொருவரும் அவசியம் அப்படியே செய்வதாக அவருக்கு உறுதியளித்தனர். அவர் இறந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் ஒன்றாகக் கூடிய போது, தவிர்க்க முடியாத இந்த விஷயத்தைப்பற்றிய பேச்சு வந்தது.

“இதைச் சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கிறது, மசூதியை மறுசீரமைக்கப் பணம் தேவைப்பட்டதால், நான் வெறும் $60,000 யை மட்டுமே அந்தச் சவப் பெட்டிக்குள் வைத்தேன்,” என்று இமாம் உண்மையைக் கூறினார்.
“நீ என்னை விட நல்லவனாக இருக்கிறாய், நான் என் சொந்த தேவைகளுக்கு $75,000 எடுத்துக் கொண்டு, $25,000 மட்டுமே அதில் வைத்தேன்,” என்று மருத்துவர் கூறினார்.
ஒரு வெறுப்பூட்டும் முகத் தோற்றத்துடன், தாங்கள் வெளிப்படுத்தியதைக் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்த முல்லாவிடம் அவர்கள், “நீங்கள் என்ன செய்தீர்கள், முல்லா?” என்று கேட்டனர்.
“நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான் என் வாக்குறுதியைக் காப்பாற்றும்படியாக, சவப்பெட்டியில் மொத்த தொகையையும் வைத்துவிட்டேன்,” என்று முல்லா அவர்களைத் திட்டுவது போல் கூறினார்.
“முழு $100,000 ஐயுமா?” என்று மற்ற இரண்டு பேரும் ஆச்சரியப்பட்டனர்.
“உண்மையில், அவர் அந்தப் பணத்தைத் தூக்கிக் கொண்டு அலைய வேண்டியதைத் தவிர்ப்பதற்காக, நான் அவருக்கு ஒரு காசோலையை எழுதிக் கொடுத்துவிட்டேன். அவர் விரும்பும் போது அதைப் பணமாக எடுத்துக் கொள்ள முடியும்.”

சில சமயங்களில் முல்லாவின் தந்தையைப் போலவே நாம், யாருக்கும், எந்த வகையிலும் பயன் இல்லாத, நமக்குப் போலியான நிம்மதியைத் தரும் அபத்தமான வாக்குறுதிகளை எதிர் பார்க்கிறோம். மற்ற நேரங்களில் முல்லாவைப் போலவே, நமக்குச் சாத்தியமாக நம் சத்தியத்தில் நாமே ஓட்டைகளைக் கண்டுபிடிக்கிறோம். எப்படி இருந்தாலும், ஆன்மீகத்தில் அது நம்மைப் பலவீனப்படுத்துகிறது. உங்கள் வாக்குறுதியைக் காப்பாற்றும் எளிய வழியாக, முதலில் நீங்கள் சொல்லும் வார்த்தைகளில் மிகக் கவனத்தைச் செலுத்தி, படிப்படியாக அதைக் கடைப்பிடித்துக் கொண்டே வாருங்கள். நான் செய்ய வேண்டியது எல்லாம், இந்த நாள், இந்த மணி, இந்த நிமிடத்தில் என் வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும். ஒரு நொடியில் இருந்து அடுத்த நொடியில், ஒரு மூச்சிலிருந்து அடுத்த மூச்சில் நான் அதைக் காப்பாற்ற வேண்டும். இத்தகைய விழிப்புணர்வுடன் நாம் வாழ்ந்தால், நம் வாழ்நாள் முழுவதும் நம் வாக்குறுதிகளைக் காப்பாற்றியபடியே அற்புதமாக வாழலாம். இதுவே ஆன்மீகத்தின் வலிமை மற்றும் ஆன்மீகத்தை முற்றிலும் அடைவதற்கான இரகசியம் ஆகும்.

இயற்கையைப் போன்றே நாமும் நம் வாக்குறுதிகளைக் கடைப்பிடித்தால் என்னவாகும்? நம் வாழ்வில் ஒரு இயல்பான ஒழுங்கு தானாக வெளிப்படும். அரியச் சந்தர்ப்பங்களில், இயற்கையும் பொய்த்து விடுகிறது (எதிர்பாராத ஒரு மழை அல்லது குளிர்காலத்தில் வெப்ப அலை போன்றவை). ஆனால் பெரும்பாலும் இயற்கை, தன் பருவங்களை மதிக்கிறது. நாம் ஒவ்வொருவரும் நம் வாக்குறுதிகளைக் கடைப்பிடிக்க உண்மையாக முயற்சி செய்தால், நம் உலகம் அதிக அளவில் அழகாகவும், மன்னிக்கக் கூடியதாகவும் ஆகும். தவறுதல் வெறும் மனித இயல்பு, ஆனால் மன்னித்தல் தெய்வீகமானது. மறுபடியும் தவறுவது பொறுப்பற்றது. மீண்டும் மன்னிப்பது… சார்பு நிலையானது அல்லது உயர்ந்த கருணையாக இருக்கக்கூடும்.

அனைத்துக் கவனச்சிதறல்கள் மற்றும் தூண்டுதல்களுக்கு இடையே கவனத்துடன் பேசுவதும், நேர்மையுடன் செயல்படுவதும் நமது கடமையாக உள்ளது.

ஒரு வாக்குறுதியை மதிப்பது, ஒரு மதிக்கத்தக்க உலகத்தை உருவாக்குவதாகும்.

அமைதி.
சுவாமி
பி.கு. – நான் என் நீண்ட தனிமையிலிருந்து வந்துவிட்டேன். நான் வாக்குறுதி அளித்தபடி ஒவ்வொரு 2 வது மற்றும் 4 வது சனிக்கிழமைகளில் சரியாக இந்திய நேரம் மாலை 6 மணிக்கு (மே மாதம் ஒரு சனிக்கிழமை தவிர, நான் இதைப் பற்றி மறந்துவிட்டேன்) கருப்பத் தாமரை உலகத் தியானத்தில் (Black Lotus Global meditation) பங்கேற்றுத் தியானம் செய்தேன். எனக்கு அங்கு இன்டர்நெட் வசதி கிடையாது. இருந்தும் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில், வலைத்தளத்தில் இருந்தவர்களுடன் தியானிக்க நானும் அமர்ந்தேன். அது அருமையாக இருந்தது.

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email