முன் ஒரு காலத்தில் சில குழந்தைகள் ஒரு கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மணலில் அரண்மனைகள் மற்றும் மற்ற அமைப்புகளை மும்முரமாகக் கட்டிக் கொண்டிருந்தார்கள். சிலரிடம் மற்றவர்களை விடச் சிறப்பான கரண்டிகள், வாளிகள், குவளைகள் மற்றும் பிற கருவிகள் இருந்தன. அவர்கள் தங்களது அரண்மனைகளைக் கட்ட பல மணி நேரம் செலவிட்டனர்.

அவர்களில் ஒருவன் இந்தக் கட்டிடங்கள் கட்டுவதில் ஆர்வம் இல்லாமல், கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். பின்னர் அன்று மதியம், மற்றவர்கள் தங்களது அரண்மனைகளைக் கட்டி முடிக்கும் நிலையில், அவற்றை மிதித்து, ஒரே உதையில் அவற்றைத் தகர்க்கும் ஆசையை அவனால் அடக்கமுடியவில்லை. அந்த அரண்மனைகளில் ஒன்றை அவன் உதைத்துச் சிதைத்தான்.

மற்ற குழந்தைகள் ஒன்றாகச் சேர்ந்து அவனைப் பலமாக அடித்து, குத்தி, பிளாஸ்டிக் மண்வெட்டி கொண்டு அடித்து, அவன் மேல் மணலை வீசினார்கள். அது அவனது உடலில் காயங்களையும், அவனது முகத்தில் ஒரு வடுவையும் ஏற்படுத்தியது. அவன் அங்கிருந்து அகன்று அழத் தொடங்கினான். மற்ற குழந்தைகள் அவன் மேல் இரக்கப்பட முடியாத அளவிற்குக் கோபமாக இருந்தனர். அவர்கள் தங்கள் அரண்மனைகளை மீண்டும் கட்டத் தொடங்கினர். ஒரு மணி நேரம் கழித்து இருட்டத் தொடங்கிய போது மக்கள் வீடு திரும்பத் தொடங்கினர். குழந்தைகள் அன்றைய தினத்தை அத்துடன் முடித்துக் கொள்வதாக முடிவு செய்தனர்.

செல்வதற்கு முன், அவர்கள் களிப்புடன் ஒருவர் மற்றவரின் அரண்மனைகளை(யை) மிதித்துச் சிதைத்தனர். அவர்கள் தங்களது முழு நாளுக்கான உழைப்பை ஒரு சில நிமிடங்கள் சிதைத்து தரை மட்டமாக்கிய பின் அவர்களது வீட்டிற்குச் சென்றனர்.

தனியாக இருந்த அந்த அடிபட்டக் குழந்தை தூரத்தில் அமர்ந்து, அவனுடைய செயல் தவறானதா, சிதைத்த நேரம் தவறானதா அல்லது அவன் கட்டாத எதையும் அழிக்க அவனுக்கு உரிமை இல்லை என்பதால் அடிக்கப்பட்டானா என்று சிந்தித்துக் கொண்டிருந்தான். எப்படி ஒரு செயல், அவன் செய்த போது மற்றவர்களுக்குக் கோபத்தைத் தூண்டியது, ஆனால் அவர்களே அதைச் செய்த போது மகிழ்ச்சியில் மூழ்கடித்தது என்று அவன் சிந்தித்தான்.

மேலே உள்ள கதையில் ஒரு கணம் எவருடைய செயலுக்கும் சரி-தவறு என்ற தீர்வை எடுக்க வேண்டாம். அந்தக் கதையில் கூறப்பட்டுள்ள விஷயத்தை மட்டும் கவனிப்போம். நீங்கள் பாதுகாக்கும் எந்த விஷயமானாலும், அது மணல் கோட்டையைப் போலத்தான், நிரந்தரமற்றது. ஒழுக்கம் அவசியமானதாக இருந்தாலும், சாக்குப் போக்கு மட்டும் தான் எப்போதும் கோபத்தை ஆதரிக்க முடியும், நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அதை நியாயப்படுத்தலாம், உண்மை என்னவென்றால் அது செய்பவரையும், பெறுபவரையும் காயப்படுத்துகிறது.

நான் எனது முந்தைய இடுகையில் குறிப்பிட்டது போல பல்வேறு வகையான, கோபப்படும் மக்களைப் பற்றிப் புரிந்து கொள்ள உதவுகிறேன். அவர்கள் பிரதானமாகப் பின்வரும் மூன்று பிரிவுகளில் இருக்கிறார்கள்:

1. கல் சிற்பி

ஒரு உளியைக் கொண்டு கல்லின் மேல் ஒரு வரியைப் போன்ற வேலைப்பாடு செய்வதைப் போல் யோசித்துக் கொள்ளுங்கள். அப்படிச் செய்தால் அது அங்கு நிரந்தரமாகத் தங்கிவிடும். சிலருக்குள் உள்ள கோபம் அந்தக் கல்லின் மேல் உள்ள வரியைப் போன்றதாகும். சூழ்நிலைகள், நிகழ்வுகள் மற்றும் அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்கள், மற்றும் இது போன்ற தருணங்களைப் பற்றியதான அவர்களது சொந்த நோக்கு அவர்களைக் கோபப்பட வைக்கிறது. அவர்கள் என்ன அனுபவித்தார்களோ அதை அவர்களால் மறக்க முடியவில்லை, அவர்களுக்கு அநீதி இழைத்தவர்களையும் அவர்களால் மன்னிக்க முடியவில்லை, இதன் காரணமாக அவர்கள் தங்கள் இதயங்களில் கோபம் மற்றும் எதிர்மறை உணர்வுகளைத் தேக்கி வைத்திருக்கிறார்கள். ஒரு செதுக்கப்பட்ட அம்சத்தைப் போல், கோபம் அவர்களது மனதில் ஒரு நிரந்தர அடையாளத்தை ஏற்படுத்தி விடுகிறது. இவர்களைக் குணப்படுத்துவது மிகவும் கடினமானதாகும். அந்தக் கல்லை நினைத்துப் பாருங்கள், சரி செய்யப்பட முடியாத சேதம் அதற்குச் செய்யப்பட்டுள்ளது. கல்லை அதன் அசல் நிலைக்குக் கொண்டு வருவதற்கு எந்த வழியும் இல்லை. இது கோபத்தின் மிக மோசமான வகை ஆகும். யார் தங்கள் இருதயத்தில் திரும்பத்திரும்ப எதிர்மறை உணர்வுகள் அதிகமாக எழும்ப அனுமதிக்கிறார்களோ அவர்கள் அந்தக் கல் சிற்பியுடன் ஒப்பிடப்பட வேண்டியவர்கள். அவர்கள் பெரும்பாலும் அவநம்பிக்கையுடனும், எதிர்மறையாகவும், பதைபதைப்புடனும், சந்தேகத்துடனுமே இருக்கிறார்கள். ஒவ்வொரு இக்கட்டான சூழ்நிலையிலும், ஒவ்வொரு எதிர்மறை உணர்விலும் அவர்களின் ஒரே பதில் கோபம் தான். ஒவ்வொரு நிகழ்விலும் அவர்களது வெறுப்பு மட்டுமே வளர்ந்து, கோபத்தின் வடு இன்னும் ஆழமாகவும், தடிமனாகவும், பதிந்து விடுகிறது.

2. மணல் சிற்பி

இந்த வகை கோபக்காரர்கள் தான், நமது உலகில் மிகவும் அதிகமாக உள்ளனர். மணலில் கிழித்த ஒரு கோட்டை எடுத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு ஆழமாகவோ அல்லது தடிமனாகவோ அந்தக் கோட்டை வரைந்தாலும் அது நிரந்தரமானது அல்ல. ஒரு மணல் கோட்டையின் சுவர் எவ்வளவு உறுதியாக இருந்தாலும் ஒரு அலை அதைத் தகர்த்து விடும். இதேபோல், நிறைய மனிதர்கள் கோபமடைந்தாலும் அதைத் தங்கள் இருதயத்தில் தேக்கி வைத்துக் கொள்வதில்லை, அதைப் பிடித்துக் கொண்டிராமல் கைவிட்டு விடுகிறார்கள். சீற்றங் கொண்ட போது, அவர்கள், எண்ணங்களால், எடுக்கும் முடிவுகளால் கோட்டைகளைக் கட்டலாம். ஆனால் பேரின்பத்தின் ஒரு அலை, நல்ல நேரம் என்ற ஒரு அலை, மன்னிப்பின் ஒரு செயல், குற்றவாளி வருந்துவதைக் காட்டும் ஒரு நிகழ்ச்சி இவை நிகழ்ந்தால், அவர்கள் உடனடியாக தங்களது சுவர்களை வீழ்த்தி மீண்டும் தங்களது வழக்கமான மகிழ்ச்சி நிலைக்குச் சென்று விடுவார்கள். புத்திசாலிகள் தங்களது அன்பான இதயங்களைக் கல் சிற்பிகளைப் போல் ஆக விடாமல் தூய்மையாக வைத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்குக் கோபம் தோன்றலாம் ஆனால் அவர்கள் அதைப் பிடித்துக் கொண்டிராமல் கைவிட்டு விடுகிறார்கள். இறுதியில், அது மணலுக்கு எந்த பாதிப்பையும் அளிப்பதில்லை. கோடுகள் அழிக்கப்பட்டு, கட்டமைப்புக்கள் இடிக்கப்பட்டு விடுகின்றன.

3. அலைமேல் ஊர்பவர்

விவேகமுள்ள வகை, இதுவே! நீங்கள் ஒரு அலைமேல் ஊர்பவரைக் கவனித்தால், அவர்களும் கோடுகள் வரைகிறார்கள் என்பதையும், ஆனால் நீரின் மேல் அதைச் செய்கிறார்கள் என்பதையும் காணலாம். அவர்களால் வரையப்பட்ட உடனேயே அந்தக் கோடுகள் மறைந்து விடுகின்றன. அவர்களின் கோபம் தற்காலிகமானது, அது வெகுவிரைவிலேயே உயர்ந்து, அதே வேகத்தில் தணிகிறது. அவர்கள் வருத்தமோ, காயமோ பட்டதற்கான எந்த வார்த்தைகளையும் கூறுமுன் சாந்தமாகிறார்கள். அவர்கள் தங்கள் இருதயத்தில் கோபத்தை வைத்துக் கொள்வதில்லை, தற்காலிகமாகக்கூட எந்த விதமான கட்டமைப்புகளையும் உருவாக்குவதில்லை, அவர்கள் சாதாரணமாக அலை மேல் சவாரி செய்து கொண்டே செல்கிறார்கள்.

உள்நோக்கித் திரும்பும் செயல், ஒருவரை ஒரு குளம் போன்று மாற்றுகிறது என்றாலும், அது ஒரு சலனமற்ற, அமைதியான, தெளிவான நீரைக் கொண்ட நீர்த்தேக்கத்தைப் போன்று ஆகிறது.

உங்களது கோபத்திலிருந்து மீள, உங்களது இயற்கை குணத்தைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சிற்பியா அல்லது அலைமேல் ஊர்பவரா என்பதையும், உங்களது கோபத்தின் தன்மையையும் அறிந்துகொள்ளவும். அதாவது, அது ஒரு எரிமலையா அல்லது அதையே நினைத்துநினைத்துப் குமுறுபவரா என்பதைத் தெரிந்துகொள்ளவும். அதன் பிறகு, உங்களது கோபத்தை விட வலுவானவராக ஆக நடவடிக்கை எடுங்கள். ஏனெனில், நீங்கள் வலிமையானவராக இருந்தால் தான் கோபத்தைக் கடக்க முடியும். இல்லையெனில், அது உங்களை அடக்கி ஆட்கொண்டு விடும்.

கோப-உணர்ச்சியின் சாராம்சத்தை இங்குக் கூறியுள்ளேன், எனது அடுத்த இடுகையில் அதைக் கடக்கச் செய்ய வேண்டிய உண்மையான நடவடிக்கைகளைப் பற்றி எழுதுவேன். அதுவரையிலும், உங்களது இயல்பு மற்றும் உங்களது கோபத்தின் தன்மை பற்றிச் சிந்திப்பதில் சில நிமிடங்கள் செலவு செய்யவும். உங்களைப் பற்றி நிறையத் தெரிந்து கொண்டால், நீங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவ்வாறு ஆக முடியும்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email