மிக முக்கியமான நபர் யார்? மிக முக்கியமான நேரம் எது? மிக முக்கியமான கர்மா எது? முன்னொரு காலத்தில் ஒரு அரசர் தன் மனதில் இந்த மூன்று கேள்விகளுடன் காலையில் கண் விழித்தார். அவர் அரசவையில் தனது அமைச்சர்களிடமும், சபையினர்களிடமும் இந்தக் கேள்விகளைக் கேட்டார். சிலர், ராஜா மிக முக்கிய நபர் என்றும், இறக்கும் தருவாய் மிக முக்கியமான நேரம் என்றும், மதத்திற்குச் செய்யும் சேவையே மிகவும் பயனுள்ள கர்மா என்றும் கூறினர். ஒருவருடைய குழந்தை அல்லது ஒருவருடைய பெற்றோர் முக்கியமானவர், பிறந்த நேரம் மிக முக்கியமான நேரம், தானம் மிக முக்கியமான கர்மா என்று பலரும் வெவ்வேறு பதில்களைக் கூறினார்கள். சிலர் கடவுள் மிக முக்கியமான நபர் என்றும், பலர் விவசாயி என்றும், சிலர் சிப்பாய் என்றும் இப்படியாகப் பலரும் பல விதமாகப் பதில் அளித்தனர்.

இந்தப் பதில்களால் அரசர் திருப்தி அடையவில்லை. இந்த மூன்று கேள்விகளை அவருடைய பிரஜைகளிடமும் கேட்டார். அவர்களாலும் திருப்தியான பதிலைக் கொடுக்க முடியவில்லை. இறுதியாக அவரது முதலமைச்சர், ஒரு குறிப்பிட்ட மலை மேல் வாழும் ஒரு முனிவரை அரசர் சந்திக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். உடனடியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு அரசர் தனது பரிவாரங்களுடன் புறப்பட்டார். அது செங்குத்தான பாதையாக இருந்தது. ஒரு சில மணி நேரம் கழித்து அரசர் அந்த யோகியின் குகை வாயிலை அடைந்தார். வழக்கத்தின்படி அரசர் அவரது வாளைக் குகையின் வெளியே விட்டு விட்டு முனிவர் முன் நமஸ்கரித்து தனது கேள்விகளைக் கேட்டார். முழு ராஜ்யத்தையும் பார்க்க ஏதுவாக அருகிலிருந்த ஒரு உயரமான குன்றின் விளிம்பிற்கு அரசரை அந்த முனிவர் அழைத்துச் சென்றார். அரசர் தன் பரந்த ராஜ்யத்தைப் பார்த்துக் கொண்டே, தனது வாழ்க்கையைப் பற்றி அருமையாக உணர்ந்து கொண்டிருந்த பொழுது அவருக்குப் பின்னால் இருந்து ஒரு குரல் குறுக்கிட்டது. திரும்பிப் பார் என்றது அது.

அரசர் திரும்பிப் பார்த்த பொழுது ஒரு சில மில்லி மீட்டர் தொலைவில் அரசரின்  இதயத்தை வாளால் குறி வைத்தபடி முனிவர் நின்றிருந்தார். அரசரே, என்று அழைத்த முனிவர் தொடர்ந்து இப்பொழுது புரிகிறதா, மிக முக்கியமான நபர் யார், மிக முக்கியமான நேரம் எது, மற்றும் மிக முக்கியமான கர்மா என்ன என்பது என்றார். அரசர் திடுக்கிட்டார். அவரது இதயத் துடிப்பு ஒரு முறை நின்று, பின் உடல் முழுவதும் அமைதியான உணர்வு ஏற்பட்டு கண்கள் பளிச்சிட்டன. அவர் புரிந்து கொண்டதை உறுதிப்படுத்தும் விதமாக மரியாதையுடன் வணங்கினார். அந்த முனிவர் அரசரிடம் வாளைத் திரும்ப ஒப்படைத்தார். அரசர் தனது நன்றியைத் தெரிவித்து விட்டு மீண்டும் அவரது அரண்மனைக்குச் சென்றார்.

அரசருக்கு திருப்திகரமான பதில் கிடைத்ததா என்று அவரது சபையினர்கள் அடுத்த நாள் அவரைக் கேட்டனர். அவ்வாறாயின் தாங்களும் அதை அறிய மிகவும் ஆர்வமாக இருப்பதாகக் கூறினார்கள். ஆமாம், அந்த முனிவர்  ஒரு நொடியில் மூன்று கேள்விகளுக்கும் பதில் கூறி விட்டார் என்று ராஜா கூறினார். நான் விளிம்பில் நின்று கொண்டு என் மாபெரும் ராஜ்யத்தைப் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த பொழுது எனது மிக முக்கியமான கர்மா என் பிரஜைகளிடம் தொடர்ந்து அன்பு செலுத்துவதும் மற்றும் அவர்களைக்  கவனமாகப் பார்த்துக் கொள்வதும் தான் என்று உணர்ந்தேன். என் பிரஜைகளாலேயே நான் அரசராக இருக்கிறேன் என்பதை உணர்ந்தேன்.

பின்னர் அந்த முனிவர் கையில் என் வாளுடன் தோன்றிய பொழுது நான் மரணத்தின் மிக அருகாமையில் இருந்தேன். நான், மிக முக்கியமான நேரம் ‘இத்தருணமே’ என்பதை உணர்ந்தேன். அந்த நொடியில் என் கடந்த காலம் ஒரு பொருட்டான விஷயமே இல்லை. எனக்கு எதிர்காலம் என்பதும் கிடையாது. அந்த ஒரு தருணம் மட்டுமே இருந்தது. அந்த ஒரு நொடி மட்டும் தான் என்னிடம் இருந்தது. நிகழ் காலம் என்கிற அந்த ஒரு நொடி மட்டும் தான் என்னுடையதாக எப்பொழுதும் இருக்கும். ராஜா அமைதியாக அந்த நிகழ்விற்குச் சென்றுவிட்டார். ஒரு நிமிட நேரம் சென்றது.

மாட்சிமை மிக்கவரே, மிக முக்கியமான நபர் யார் என்று மந்திரி கேட்டார்.
நீங்கள்.
நானா?
ஆமாம் நீங்கள். ஆனால் நீங்கள் இல்லை.
பெருமைக்குரியவரே உங்கள் ஞானம் எனக்குப் புரிபடவில்லை.
நாம் யாருடன் இருக்கிறோமோ அவர்களே மிக முக்கியமான நபர் என்று ராஜா தெளிவுபடுத்தினார். எனவே, நீங்கள் தான் இப்பொழுது மிக முக்கியமான நபர்.

லியோ டால்ஸ்டாயின் இந்தக் கதையை முதன்முதலில் நான் கேட்ட பொழுது, இந்தப் பதில்களை ஒருவர் நினைவில் இருத்திக் கொள்ள முடிந்தால், அவர்களின் வாழ்க்கையின் பிரதான நோக்கங்கள் தானாகவே உருமாற்றமடையும் என்று நினைத்தேன். நாம் ‘இப்பொழுது’ யாருடன் இருக்கிறோமோ அவர்களே மிக முக்கியமான நபர். ஒரு மனிதருடன் செயல்படும் பொழுது, உங்கள் முழு கவனத்தையும் அவரிடம் அளிக்கும் பொழுது, அவர்களின் சுய மதிப்பை உயர்த்துகிறீர்கள். அவரை முக்கியமானவராக உணர வைக்கிறீர்கள், அவர்களை அக்கறையுடன் கவனிப்பதாக உணர வைக்கிறீர்கள், மரியாதைக்குரியவராக உணர வைக்கிறீர்கள். அனைத்து நேர்மறை உணர்ச்சிகளும் இயற்கையாகவே முளைவிடத் தொடங்குகின்றன. சந்தேகத்திற்கு இடமின்றி ‘இப்பொழுது’ என்பதே மிக முக்கியமான நேரம், மிக முக்கியமான தருணம். இந்த ஒரு தருணத்தில் தான், நாம் செயலாற்ற முடியும். இதன் சாராம்சம் என்னவென்றால், இதுவே மனத் தெளிவின் தத்துவமாகும் — நிகழ்காலமாகிய இந்தத் தருணத்தில் உங்கள் கவனத்தை வைப்பதாகும். அன்பு செலுத்த முடிவதும், கவனித்துக் கொள்ள முடிவதும் மிக முக்கியமான கர்மா ஆகும். இது நீங்கள் உங்களுடனும், மற்றவர்களுடனும், உங்கள் நேரத்துடனும், உங்கள் வாழ்க்கையுடனும் செய்யும் மிகவும் பயனுள்ள விஷயம் ஆகும். நீங்கள் உங்களுடன் இருக்கும் பொழுது, உங்களுடன் மட்டும் இருங்கள், உங்களை நேசியுங்கள். நீங்கள் மற்றவர்களுடன் இருக்கும் பொழுது உங்கள் கவனத்தை சிதறவிடாமல் அவர்கள் பால் செலுத்துங்கள். அப்பொழுது மிகக் குறைந்த நேரத்தில் மிக அதிகமாகச் சாதிப்பீர்கள்.

மேலும், எது மிக முக்கியமான உணர்வு? வெற்றியா? கட்டுப்பாட்டுடன் இருக்கும் உணர்வா? அன்பாக இருப்பதா? விரும்பப்படுபவராக இருப்பதா? முக்கியமானவராக உணர்வதா? என்னுடைய உலகில் இதெல்லாம் இல்லை. என் பார்வையில் மிக முக்கியமான உணர்வு திருப்தி ஆகும். திருப்தியுடன் இருப்பதே மிக முக்கியமான உணர்வாகும். நீங்கள் திருப்தி அடையும் பொழுது, நீங்கள் உறுதியானவராக, அமைதியானவராக, அன்பும் கருணையும் ததும்பியவராக, அமைதியான தூக்கத்தை உடையவராக, சந்தோஷமாக எழுபவராக, அனைத்துப் போராட்டங்களும் மறைந்து, அதுஅது உரிய இடத்தில் இருப்பது போல் தோன்றுகிறது. ஷேக்ஸ்பியரின் ஒரு மேற்கோள்:

இந்த நமது வாழ்க்கையை, பொது சஞ்சாரத்திலிருந்து விலக்கிவை,
மரங்களில் நாவன்மையையும், ஓடும் ஓடைகளில் புத்தகங்களையும்,
கற்களில் புத்திமதிகளையும், மற்றும் எல்லாவற்றிலும் நல்லவைகளைக் காணுங்கள்.

நீங்கள் உங்களுடன் இருக்கும் பொழுது, நீங்கள் தான் மிக முக்கியமான நபர். உங்களின் எண்ணங்களையும், ஆற்றலையும் கடந்தகால அர்த்தமற்ற மனஸ்தாபங்களில் செலவிடாதீர்கள். எதிர்மறை எண்ணங்கள் எவரையும் நேர்வழியின்பால் உந்திச் செல்வதில்லை. இப்பொழுதே செல்! இப்பொழுது யாருடன் இருக்கிறாயோ, அவர்களுடனேயே இருந்து முக்கியமான கர்மாவை செய்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email