உங்கள் வாழ்க்கையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது என்ன என்று என்னைக் கேட்டால், நிச்சயமாக ஞானமடைவது அல்லது கடவுளிடம் பிரார்த்தனை செய்வது என்று நான் சொல்ல மாட்டேன். மற்றவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று கூட நான் கண்டிப்பாகக் கூற மாட்டேன். உங்களது உடல் நலத்தைப் பார்த்துக் கொள்வதே, முன்னுரிமை அளிக்கப் பட வேண்டிய முதல் விஷயம் என்று நான் சொல்வேன். இது என் பார்வையில் மட்டுமே. நான் “கண்டிப்பாக” என்று பயன்படுத்துவது, நீங்களும் “கண்டிப்பாகச்” செய்ய வேண்டும் என்ற கருத்தில் அல்ல.

நன்றாக உண்பது, உடற்பயிற்சி செய்வது மற்றும் உடல் நல்ல நிலையில் இருப்பது ஆகியவையே மகிழ்ச்சியின் அடித்தளம் ஆகும். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் மற்றவர்களுக்குச் சேவை செய்ய முடியும், தியானம் செய்ய முடியும், பிரார்த்தனை செய்ய முடியும் மற்றும் உங்களுக்குப் பிடித்த பல விஷயங்களைச் செய்ய முடியும். ஆனால் நிறைய மக்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள், இருந்தாலும் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. இது என்னை இன்றைய தலைப்பிற்கு இட்டுச் செல்கிறது — “மிக முக்கியமான பணி’’.

மீண்டும் ஒரு முறை கூறுகிறேன், இன்று நான் உங்களுக்கு எந்தத் தத்துவக் கோணமும் கொடுக்கப் போவதில்லை. மனித இனத்தைக் காப்பாற்ற ஒரு உலகப் பணியைச் செய்யுங்கள் (நீங்களாக விரும்பினாலன்றி) என்று நான் உங்களுக்குப் பரிந்துரைக்கவுமில்லை. நீங்கள் யோசிக்க, உங்களால் நடைமுறை படுத்தக் கூடிய ஒரு விஷயம் என்னிடம் உள்ளது. நீண்ட நாட்களாக இந்த விஷயத்தைப் பற்றி எழுத எண்ணிக் கொண்டிருந்தேன். முதலில் ஒரு சிறிய ஜோக் சொல்கிறேன்.

போலீஸ், மாஃபியா கும்பலைப் பெரிதும் அடக்கத் தொடங்கினர். அதனால் மாஃபியாவின் தலைவன், பேசவும் கேட்கவும் முடியாத ஆபெர்டோ என்ற ஒரு ஆளைப் பணியமர்த்தினான். ஆபெர்டோ பிடிபட்டாலும் போலீஸிடம் எதையும் வெளிப்படுத்த முடியாது என்று அவன் நினைத்தான்.

ஆபெர்டோ கடன் வசூலிக்கும் புதிய நபராக நியமிக்கப்பட்டு, வாராந்திர வசூலை வசூலிக்க அனுப்பப்பட்டான். ஒரு சில வாரங்களுக்கு நேர்மையாகப் பணிபுரிந்த பிறகு, வசூலில் இருந்து ஒரு தொகையைத் தனக்கென்று எடுத்துக் கொள்ளத் தொடங்கினான். குறுகிய காலத்தில் ஆபெர்டோவிடம் $100,000 குவிந்தது. எங்கோ பணத்தைப் பதுக்கி வைக்கிறான் என்று தலைவன் உணர்ந்தான்.

பிரச்சனை என்னவென்றால் மாபியாவினால் ஆபெர்டோவிடம் பேசவோ அல்லது அவன் பேசுவதைப் புரிந்து கொள்ளவோ முடியவில்லை. எனவே அவனுடன் தொடர்பு கொள்ள ஒரு மொழிபெயர்ப்பாளரை ஏற்பாடு செய்தனர். மற்றும் அவர்கள் ஆபெர்டோவைத் தேடிப்பிடித்து தலைவனின் முன்னால் நிறுத்தினர்.
“பணம் எங்கே?” என்று தலைவன் கத்தினான்.
மொழி பெயர்ப்பாளர் ஆபெர்டோவை நோக்கித் திரும்பி, சைகை மொழியைப் பயன்படுத்தி கேள்வியை வெளிப்படுத்தினார்.

“எனக்குத் தெரியாது,” என்று ஆபெர்டோ சைகைக் காட்டினான்.
மொழி பெயர்ப்பாளர் அதை அப்படியே தெரிவித்தார்.
தலைவன் ஆபெர்டோவின் தலையில் துப்பாக்கியை வைத்து அதே கேள்வியை மீண்டும் மொழி பெயர்ப்பாளரைக் கேட்கச் சொன்னான்.
தன் உயிருக்குப் பயந்து, ஆபெர்டோ பணத்தை சென்ட்ரல் பார்க்கில் ஒரு குறிப்பிட்ட மரத்தின் தண்டில் மறைத்து வைத்துள்ளதாக உண்மையைக் கூறினான்.

“ஆபெர்டோ என்ன சொன்னான்?” தலைவன் மொழி பெயர்ப்பாளரைக் கேட்டான்.
“பணம் எங்குள்ளது என்று தெரியாது என்றும், உங்களுக்கு விசையை இழுக்கத் தைரியம் கிடையாது என்றும் கூறினான்,” என்று மொழி பெயர்ப்பாளர் பதிலளித்தார்.

அடுத்து என்ன நடந்தது? அதை நான் உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்.

கடனுடன் உள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வழியில் ஆபெர்டோவைப் போலவே உள்ளனர். ஒரு மனநிலை சம்பந்தமான துப்பாக்கி உங்களுடைய தலையை நோக்கி எப்போதும் உள்ளது. நீங்கள் கடனுடன் வாழ ஒரு வகை சமரசத்தைக் கண்டு கொண்டு இருக்கலாம், ஆனால் இது அமைதியான வழியா என்று நான் சந்தேகம் கொள்கிறேன். பொறுப்பற்ற நுகர்போக்குள்ள இன்றைய நமது உலகில், நம்மில் பெரும்பாலோர் நம் வாழ்வில் முக்கியத்துவம் இல்லாத, பயனற்ற பொருட்களைத் தொடர்ந்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். நான் போதிக்க நினைக்கவில்லை, நான் எடுத்துக் கொண்டுள்ள மிக முக்கியமான பணிக்குச் செல்கிறேன்.

எனது பார்வையில், கடனற்றவராக ஆவதே, வேறு யாரிடமும் ஒரு பைசா கூடக் கொடுக்கவேண்டியதில்லை என்று இருப்பதே மிகவும் முக்கியமான மற்றும் அவசரமான பணியாகும். கடனற்ற ஒரு வாழ்க்கையே ராஜ வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்க்கையில், உங்களை மிகவும் பகட்டாகக் காட்டிக்கொள்ள முடியாமல் இருக்கலாம், ஆனால் எப்போதும் உங்களுக்கு முகத்தில் ஒரு புன்னகையும், இதயத்தில் பேரின்பமும் இருக்கும். கடனற்றவர் அமைதியாகத் தூங்கவும், சந்தோஷமாக எழுந்திருக்கவும் முடியும். ஒரு வீடு வாங்குவது ஆவலைத் தூண்டுவதாக இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை, எனவே அடைமானம் என்பது கிட்டத்தட்ட ஒரு தேவையாக இருக்கிறது. நல்லது. இருப்பினும் ஒரு வெள்ளை மாடு வாங்குவதற்கும், ஒரு வெள்ளை யானை வாங்குவதற்கும் வித்தியாசம் உள்ளது. நீங்களே முடிவு செய்யுங்கள்.

உங்களைச் சுற்றிப் பார்த்தால், நீங்கள் பெரும்பாலான பொருட்களை உங்களது உணர்ச்சிப் பெருக்கின் விளைவால் அல்லது திடீர்த் தூண்டுதலால் வாங்கி இருக்கிறீர்கள் என்று கண்டறிய முடியும். நாம் தொடர்ந்து பொருட்களை வாங்கி, தொடர்ந்து குப்பையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நிறையச் சேமிப்பு இடங்களைக் கொண்டு, புத்திசாலித்தனமாக அவற்றை மறைக்கிறோம். ஆனால் அது, தொடர்ந்து சேகரிக்கப்பட்டு, குவிந்து கொண்டே இருக்கிறது. பெரியதோ சிறியதோ, நாம் வாங்கும் அனைத்திற்கும் விலை கொடுத்தே ஆக வேண்டும். மேலும் கடன் வாங்கிய பணத்தில் எதை வாங்கினாலும், இறுதியில் அது பல மடங்கு விலை கொடுத்து வாங்குவதைப் போன்றதாகும்.

இலட்சியம் மற்றும் ஆசையால் கடனானது உருவாகிறது. இன்னும் அதிகமாகக் கடன் எடுத்து இருக்கும் கடனைத் தீர்த்துக்கொள்ள முடியாது. இது ஒரு தீய சுழற்சி ஆகும். எனக்குத் தெரிந்து, கடனை ஒழிக்க ஒரே ஒரு வழி தான் உள்ளது. அது குப்பைகளை அகற்றுதல் ஆகும். உங்கள் வாழ்க்கைக்குத் தேவையில்லாத எல்லாவற்றையும் அகற்றிவிடுங்கள். மிகச்சிறிய உருப்படியில் இருந்து மிகவும் விலையுயர்ந்த பொருள் வரையிலான உங்களுக்குச் சொந்தமான எல்லாப் பொருட்களையும் பார்த்து, “எனக்கு இது உண்மையில் தேவையா?” என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையில்லாத எல்லாவற்றையும் விற்றுவிடுங்கள். அனைத்தையும் ஒரே சமயத்தில் செய்து விடுங்கள்.

நீங்கள் குப்பை அகற்றுதலைக் காலப்போக்கில் செய்ய முடியாது. ஒன்று நீங்கள் பாலைக் கொதி நிலைக்குக் கொண்டு வர வேண்டும் அல்லது அப்படியே விட்டு விடலாம். ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாகச் செய்கிறேன் என்று நீங்கள் சொல்ல முடியாது. அனைத்தையும் ஒரேயடியாகச் செய்ய வேண்டும் அல்லது ஒன்றும் செய்ய இயலாது. நீங்கள் வாழும் முறையை எளிமையாக்கினால் உங்களது வாழ்க்கையும் தானாகவே எளியதாக ஆகிறது. நீங்கள் எளிய வாழ்க்கையின் சந்தோஷத்தை அனுபவிக்கத் துவங்கிவிட்டால், ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ உண்மையில் எவ்வளவு குறைவான தேவையே உள்ளது என்பதை உணர்வீர்கள். தேவைகளைக் குறைத்துக் கொள்வதால் நீங்கள் அதிக சுதந்திரத்தைப் பெறுகிறீர்கள் — தனிப்பட்ட மற்றும் நிதிநிலை பற்றிய சுதந்திரம்.

ஏற்கெனவே நமக்கு அதிகமாகத் தார்மீக, சமூக மற்றும் உணர்வுப்பூர்வக் கடன்கள் உள்ளன. இவற்றுக்கு மேல் நிதிக் கடனையும் பெருக்குவதில் என்ன புலனறிவு உள்ளது? அந்த விலையுயர்ந்த போன், பெரிய கார், பெரிய வீடு, அந்த நுட்பக் கருவிகள், இத்தனை ஆடைகள், கிளப்பில் உறுப்பினராதல் ஆகியவை உங்களுக்குத் தேவையா? உண்மையில் உங்களுக்குத் தேவையா?

பௌதீக உலகில் உங்களிடம் குப்பை அதிகரித்தால், உங்களுடைய உள் உலகிலும் குப்பை அதிகரித்துவிடும். சுற்றிப் பார்த்து ஒரு விதிவிலக்கையாவது எனக்குக் காட்டுங்கள். தியானம் பற்றிய கவலை இல்லாமல் அமைதியை அனுபவிக்க விரும்பினால், ஞான நிலையை ஒருவர் அடையும் போது எப்படி இருக்கும் என்று உணர விரும்பினால், நீங்கள் குப்பைகளை அகற்றுதலில் இருந்து தொடங்க வேண்டும் என்பது என்னுடைய ஆலோசனையாகும்.

நிர்வாணம் என்று ஒன்று இருந்தால், அது ஆடம்பரமற்ற ஒரு எளிய வாழ்க்கையை வாழ்வதாகும். நிதி நிலையில் நிர்வாணம் என்று ஒன்று இருந்தால், அது கடன் அற்று இருப்பதாகும். இதுவே ஜென் (Zen) என்பதன் சுருக்கமாகும்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email