நம்மில் பெரும்பாலோர் ஈர்ப்புச் சட்டத்தைப் பற்றிப் படித்திருக்கிறோம், அது உண்மையில் வேலை செய்யுமா என்று நம்மில் பலரும் ஆச்சரியப்பட்டிருப்பீர்கள். செல்வம், அன்பு, அமைதி முதலியவற்றை, அவற்றைப் பற்றிச் சிந்திப்பதாலேயே, ஈர்ப்பது உண்மையிலேயே சாத்தியமா? அநேகமாக இல்லை. எல்லாமே ஒரு சிந்தனையில் இருந்து தான் தொடங்குகின்றன என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் நம் கனவுகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானதாகும். எனினும், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வை மாற்றி அமைப்பதைப் பற்றி சிந்தித்துக் கொண்டும், பிரார்த்தனை செய்து கொண்டும் இருக்கிறார்கள், அவர்கள் மிகவும் கடினமாகவும் உழைக்கிறார்கள், இருந்தும் அவர்களின் வாழ்க்கை முன்போலவே தான் தொடர்கிறது. ஏன் நீங்கள் சிறப்பாகச் செய்தாலும் கூட, உங்கள் சூழ்நிலைகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன?

முன்னதாக, உங்களுக்காக ஒரு பெரிய இரகசியத்தை வெளிக் கொண்டு வருவேன் என்று, இந்த ஆண்டு ஜனவரி மாதம் நான் (இங்கே) எழுதி இருந்தேன். நான் இயற்கையுடன் ஒன்றாவதைப் பற்றிக் குறிப்பிட்டு இருந்தேன், அதன் மூலம் நீங்கள் உங்கள் விழிப்புணர்வை ஒரு அசாதாரண அளவிற்கு விரிவாக்கிக் கொள்ளலாம். ஆகையால், நம்மில் ஒவ்வொருவரும், கடலில் சேரும் ஒரு துளி கடல் போலவே பரந்த மற்றும் சக்தி வாய்ந்ததாக மாறுவதைப் போல், ஆகலாம். ஒரு துளி கடல் ஆவது இல்லை, ஆனால் ஒவ்வொரு துளியும் தேவைப்படுகிறது, இல்லையேல் அது கடலும் இல்லை. இதேபோல், பிரபஞ்சத்தை ஈர்ப்பதற்கு மிகப் பெரிய அளவிலான சக்தி அவசியம், நாம் கூட்டு உணர்வைத் தட்டி எழுப்ப வேண்டும். நான் கூறுவதைச் சிக்கலானதாக நீங்கள் உணர்வதற்கு முன், என் அடிப்படைக் கோட்பாட்டினை மூன்று பகுதிகளாக விளக்குவதற்கு என்னை அனுமதியுங்கள்:

பகுதி 1 – மனித உடல்

மனித உடல் எதனால் ஆனது? சதை, எலும்புகள் மற்றும் தசைநார்களைத் தாண்டி ஒரு படி மேலே போனால் என்ன உள்ளது? நமது உடல்கள் லட்சக்கணக்கான சிறு செல்களால் உருவாக்கப்படுகின்றன. கனஅளவுக் கணக்கின்படி, மனித உடலில் 37 டிரில்லியன் செல்கள் உள்ளன என்று ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். கணக்கிடப் பயன்படுத்தப்படும் செல்களின் இயல்பைப் பொறுத்து இந்த எண்ணிக்கை (35 பில்லியன் முதல் 724 டிரில்லியன் வரை) மாறுபடும். உதாரணமாக, சிறிதளவே இருக்கும் தோல் செல்கள் சுமார் 35 பில்லியன் ஆகும்.

வாதத்தின் பொருட்டு, நமது உடலில் 37 டிரில்லியன் செல்கள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் அதற்கான ஒரு சொந்த அறிவு உள்ளது. ஒவ்வொரு செல்லும் சில வழிகளில், அதன் சொந்த உரிமையில் ஒரு சுயாதீனமான அமைப்பு ஆகும். அதனிடம் உள்ள ஒரு சவ்வு, நம் மூளையைப் போல் செயல்படக் கூடியது. நாம் ஓரளவு சுதந்திரத்தை அனுபவித்த போதிலும், ஒரு சட்டம் அல்லது ஒரு சமூக கட்டமைப்பினுள் இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறோம். அதைப் போலவே, நமது செல்கள் சுயாதீனமாக இருந்தாலும், இயற்கையின் விதிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. மனித செல்கள் சுதந்திரமாக இருத்தல், அதே சமயம் ‘நமது உடல்’ எனும் உயிரியல் முறையைக் கடைப்பிடித்தல், இவற்றின் இடையே ஒரு சமநிலையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

அணுக்கள் செல்களை, செல்கள் மூலக்கூறுகளை மற்றும் மூலக்கூறுகள் திசுக்களை உருவாக்குகின்றன. திசுக்கள் உறுப்புக்களை, உறுப்புக்கள் உறுப்பு அமைப்புக்களை உருவாக்குகின்றன மற்றும் உறுப்பு அமைப்புக்கள் ஒரு உயிரினத்தை உருவாக்குகின்றன.

பாகம் 2 – பிரபஞ்சத்தின் உடல் மற்றும் நாம்

நம்மைச் சுற்றி என்ன உள்ளதோ, அதன் ஒரு சரியான பிரதிபலிப்பே நாம் ஆகும். பூமியில் சுமார் 70% நீர் உள்ளது நம் உடலிலும் 70% நீர் உள்ளது. பிரபஞ்சத்தில் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் உள்ளன, நம் தோல் மீதும் எண்ணற்ற துவாரங்கள் உள்ளன. இந்தக் கிரகத்தில் நாம் சாப்பிடும் ஒவ்வொன்றும் இயற்கையிலிருந்து உருவானது. நாம் இயற்கை வளங்களைச் சார்ந்து இல்லை, நாம் இயற்கையின் வளமாகவே இருக்கிறோம். நாமே இயற்கை. நாம் அனைவரும், மற்ற உயிர் இனங்களுடன் (விலங்குகள், தாவரங்கள் மற்றும் பாசிகள்) இணைந்து, இயற்கை ஆகிறோம்.

நமது விண்மீனில் 100 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன மற்றும் பிரபஞ்சத்தில் பல்லாயிரக்கணக்கான விண்மீன் திரள்கள் (galaxy) உள்ளன. கிரகங்கள் மற்றும் பல்வேறு விண்மீன் திரள்களுக்கு இடையிலான இடைவெளி, நமது திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு இடையிலான இடைவெளியுடன் ஒப்பிடத்தக்கது. செல்கள் நமது உடலுக்கு எப்படியோ, அப்படித்தான் நாம் (வாழும் அனைத்து உயிரினங்களும்) இந்தப் பிரபஞ்சத்திற்கு – ஒரு அடிப்படைக் கட்டமைப்புத் தொகுதி ஆகும்.

நாம் ஒவ்வொருவரும் பிரபஞ்சத்தின் உடலில் ஒரு செல் ஆவோம். தனியாகப் பார்த்தால், ஒருவர் எவ்வளவு சக்திவாய்ந்தவராக இருந்த போதிலும் நமது இருப்பு, நாம் கருத்தில் கொள்ளமுடியாத மிகச்சிறிய எண்ணிக்கையை விட மிகச் சிறியதாகும். இருப்பினும் ஒரு கூட்டமாகப் பார்த்தால், பிரபஞ்சத்தின் இருப்புக்கு ஒவ்வொரு நபரும் மிகவும் முக்கியமானவராவர். நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் கைவிட்டுவிட்டால், முழு உடலும் உடனடியாகச் சரிந்துவிடும். இதேபோல், அனைத்து உயிரினங்களும் கைவிட்டுவிட்டால், அது படைப்பு முழுவதிலும் ஒரு கற்பனை செய்ய முடியாத விளைவை ஏற்படுத்தும்.

பாகம் 3 – பிரபஞ்சத்தை ஈர்த்தல்

ஈர்ப்புச் சட்டம், உலகளாவிய உடலின் கவனத்தைப் பெறுவதை அடிப்படையாகக் கொண்டது. அது நமது அளவை விடக் கணக்கிடமுடியாத அளவு மிகப்பெரியது – ஒரு எறும்பு, யானையை வழித்தடத்தில் தடுத்து நிறுத்த முயற்சிப்பதைப் போன்றது. ஒரு சராசரி மனிதனின் வாழ்நாள் போராட்டம் என்பது, உலகளாவிய உணர்வுக்கான ஒரு சுருக்கமான முயற்சியின் அளவே ஆகும். ஒரு தனிநபரின் முயற்சிகள் அல்லது எண்ணங்கள் உலகளாவிய மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. அத்தகைய மாற்றம் ஒரு நபரால் தூண்டப்பட்டதாக இருக்கலாம், ஆனால் ஒரு நிலையான அல்லது ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த, கூட்டு உணர்வு தேவைப்படுகிறது. இது எனது கருத்தின் மிக முக்கியமான பகுதிக்கு என்னைக் கொண்டு செல்கின்றது.

நீங்கள் எந்த விஷயத்தில் ஆழ்ந்து மூழ்கி இருந்தாலும் சரி, ஒரு சிறிய கொசு கடித்தால் கூட, எளிதாக உங்களைத் திசை திருப்ப முடியும் என்பதை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? நமது உடலில் ஒரு ஊசியால் எங்குக் குத்தினாலும், நமது கவனத்தை ஈர்ப்பதற்கு அதுவே போதுமானது ஆகும். இதே முறையில், உலகளாவிய உடலின் கவனத்தை ஈர்க்க, நாம் அதனை (மெதுவாகக்) குத்த வேண்டும். ஒரு மனிதன் அதைத் தனி ஒரு ஆளாகச் செய்ய முடியாது, அது ஒரு கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும். போதுமான மனிதர்கள் ஒரே சமயத்தில், ஒரே விஷயத்தின் மேல் தியானம் செய்தால், கற்பனைக்கு அப்பாற்பட்ட மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு, உலகளாவிய உணர்வை நம்மால் ஈர்க்க முடியும். 

இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது: உலகளாவிய உடலில் ஒரு முள் குத்தும் விளைவை ஏற்படுத்த எத்தனைத் தியானிப்பவர்கள் தேவைப்படுகின்றனர்? உலகளாவிய உணர்வில் ஒரு சிற்றலையை ஏற்படுத்த மிகக் குறைந்தபட்சமாக 8,000 ல் இருந்து கணிசமாக 9,000,000 மக்கள் வரைத் தேவைப்படுகிறார்கள். அதிகமாக இருந்தால் கண்டிப்பாக மிக்கச் சந்தோஷம். இப்படித் தான் நான் இந்த எண்ணிக்கைக்கு வந்திருக்கிறேன் (எண் கணக்கு உங்களுக்குத் தேவையில்லை என்றால் அடுத்த பத்தியைப் படிப்பதை நீங்கள் தவிர்க்கலாம்):

ஒரு சிறிய முள் குத்தினால் கூடப் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நமது கவனம் திருப்பப்படுகிறது என்ற முன்மொழிவுடன் தொடங்குகிறேன். மற்ற விஷயங்கள் சமமாக இருக்கும் நிலையில், மனித உடலில் 37 டிரில்லியன் செல்கள் இருந்தால், ஒருமுள் குத்தலின் விட்டம் .127 மி.மீட்டரும், ஆழம் 1 மி.மீட்டரும் இருந்தால், அதன் மூலம் கிட்டத்தட்ட 9 மில்லியன் செல்கள் பாதிப்படையும். தோல் செல்களை (35 பில்லியன்) மட்டுமே நான் என் கணக்கில் எடுத்துக் கொண்டால், 1 மி.மீட்டர் ஆழக் குத்துதல் கிட்டத்தட்ட 8,000 செல்களைப் பாதிக்கும். நான் ஒரு தத்துவார்த்த இயற்பியலாளர் (theoretical physicist) இல்லை என்பதால், நான் இந்தக் கேள்வியை ஒரு மன்றத்தில் முன்வைத்தேன், ஒரு விஞ்ஞானி இந்தக் கேள்விக்குப் போதுமான விரிவான பதிலை அன்புடன் அளித்துள்ளார். இந்த எண்கள் அவரது பதிலின் அடிப்படையில் பெறப்பட்டதாகும்.

எனவே, குறைந்தபட்சம் 8,000 பேர் உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து, வசதியாகத் தங்கள் சொந்த வீடுகளில் இருந்தே ஒன்றாக இணைந்து, ஒரே நேரத்தில், ஒரே சிந்தனையில் ஐந்து நிமிடங்களுக்குத் தியானம் செய்தால், நாம் உலகளாவிய உடலின் கவனத்தை நம் பக்கம் ஈர்க்க முடியும். இருப்பினும் ஒரே சிந்தனையில் ஒரே நேரத்தில் 4.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தியானம் செய்யாத வரை, உலகளாவிய உடலின் கவனத்தைத் தேவையான அளவு நம் பக்கம் ஈர்க்க முடியாது. ஏன் 4.5 மில்லியன்? இதுவே 8,000 மற்றும் 9 மில்லியனின் சராசரி (அல்லது மையம்) ஆகும். இருப்பினும் 8,000 பேருடன் நாம் நிச்சயமாக ஆரம்பிக்கலாம்.

இந்த ஞானத்தை இன்னும் தனிப்பட்ட காரணங்களுக்கும் நாம் பயன்படுத்தலாம் (ஆனால் அப்படியும் செய்யலாம்) என்று நான் கூறவில்லை. மாறாக, நாம் உலக சமாதானம், செழிப்பு மற்றும் சமத்துவம் பற்றித் தியானிக்கலாம் என்று முன்மொழிகிறேன். இன்றைய தொழில்நுட்பத்தால் (இணையதளம் என்று படிக்கவும்) லட்சக்கணக்கான மக்கள் எளிதில் ஒருங்கிணையவும், ஒரு பொதுவான காரணத்திற்காகத் தியானிக்கச் சரியாக ஒரே நேரத்தில் அமரவும் முடியும்.

ஒரு தெளிவற்ற வீடியோ கூட 100 மில்லியன் பார்வையாளர்களைச் சில மணிநேரங்களில் பெறக்கூடிய ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். நமது கிரகத்தில், மற்றவர்களுக்கு ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த விரும்பும் நல்லவர்களுக்குப் பஞ்சமில்லை என்று நான் நம்புகிறேன். உலக மகிழ்ச்சியை நாம் உயர்த்தும்போது, தனிப்பட்ட அமைதி மற்றும் செழிப்பு தானாகவே உயரும். அதிக எண்ணிக்கையில் மகிழ்ச்சியான மக்கள் இருந்தால், நம் உலகம் இயற்கையாகவே சிறந்த இடமாக மாறும்.

இந்த யோசனையை நீங்கள் விரும்பினால், தொடர்ந்து படித்து இந்தப் புனிதமான மற்றும் உலகளாவிய காரணத்தில் என்னுடன் கைகோர்த்து நில்லுங்கள். இந்த வழியில் நம்மால் முடிந்த அளவு இந்த உலகிற்கு நமது பங்காகத் திருப்பித்தரலாம், மற்றும் இவ்வாறு செய்யும் போது நமது வாழ்வையும் வளமானதாக்கிக் கொள்ளலாம்.

பின் ப்ரிக் விளைவு (The Pin Prick Effect)

இந்த யோசனை மிகவும் எளிதானது. ஒரு வாரத்திற்கு ஒரு முறை ஐந்து நிமிடங்கள் தியானம் செய்வதற்கு உறுதி செய்துகொண்டுள்ள 8,000 பேராவது இதற்குத் தேவை. எங்கிருந்து வேண்டுமானாலும் இதைச் செய்யலாம் – வீடு, அலுவலகம், பூங்கா, ஒரு காரில் உட்கார்ந்திருக்கும்போது – உண்மையில் எந்த இடத்தில் இருந்தும். இதற்கு எந்தச் செலவும் இல்லை. நாம் அனைவரும் ஒரே நேரத்தில் ஆரம்பித்து, நம் தியானத்தை ஒரே நேரத்தில் முடிவுக்குக் கொண்டுவருவோம், உலகில் எந்தப் பகுதியில் இருந்தாலும் சரி, அது ஒரு பொருட்டே இல்லை. நீங்கள் பணம் எதுவும் செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை, பயணத்திற்குக்கூடச் செலவழிக்க வேண்டாம். ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து, ஒரு நியமிக்கப்பட்ட சமயத்தில், ஐந்து நிமிடங்களுக்குத் தியானிக்கலாம். எப்படித் தியானிப்பது என்ற ஒரு அறிமுக வீடியோவை நான் மகிழ்ச்சியுடன் அளிப்பேன். மற்றும் 12 வாரங்களுக்கு ஒரு முறை வழிகாட்டுதல் கூடிய தியானத்தையும் நாம் மாற்றி அமைக்க முடியும்.

சுமார் 4.5 மில்லியன் மக்கள் சேர்ந்து ஒன்றாகத் தியானம் செய்யும் நாளே, ஒரு அமைதியான ஆன்மீக மறுமலர்ச்சியின் ஆரம்பத்தைக் குறிக்கும் என்பது என்னுடைய பார்வையாகும். இதில் பங்கேற்று தியானிப்பவர்களின் வாழ்வில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் இது குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவரும். எதிர்காலத்தில் ஒரு நாள் 9 மில்லியன் தியானிப்பவர்களுடன், உலகளாவிய அளவில் ஈர்க்கும் சட்டத்தின் நடவடிக்கைகளை நாம் காண முடியும்.

இந்த இயக்கத்தில் சேர, பேஸ்புக் பக்கத்தில் இந்த நோக்கத்திற்காகவே தனியாக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் (இங்கே). நீங்கள் உங்களுடைய விருப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். நான் ஒரு எளிய வலைத்தளத்தையும் உங்களுக்காக pinprick.org, blacklotusapp.org அமைத்துள்ளேன்.

உங்கள் அமைதிக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் 9 மில்லியன் மக்கள் தியானம் செய்தால், உங்கள் வாழ்க்கையில் வித்தியாசத்தை நீங்கள் காண்பீர்கள். மற்றவர்களுடைய நல்வாழ்விற்காகத் தியானிக்கும் 9 மில்லியனில் நீங்கள் இருந்தால், அது நிச்சயமாக உங்களுக்கும் உதவும்.

நாம் ஒருவரை ஒருவர் சார்ந்தும், ஒருவரோடு ஒருவர் இணைந்தும் இருக்கிறோம். நமது எண்ணங்களும், செயல்களும் நம்மைச் சுற்றி உள்ள எல்லோரையும் பாதிக்கின்றன. நாம் இந்த நுண்ணறிவையும், கூட்டுத் தியானத்தின் சக்தியையும், ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தப் பயன்படுத்தலாம்.

அமைதி.
சுவாமி

P.S. மேலும் விவரங்களுக்கு blacklotusapp.org க்குச் செல்லவும்.

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook0Tweet about this on TwitterShare on LinkedIn0Google+0Email to someone