ராய் பாமியெஸ்டரின், ‘வில்பவர்’ (Willpower) என்ற புத்தகத்தில் இருந்து ஒரு பத்தி என் நினைவிற்கு வந்தது: “உணர்வு ரீதியாகக் கட்டுப்படுத்துதல் ஒரு விதத்தில் கடினமானதாகும், ஏனென்றால் கட்டுப்பாடு என்ற செயல் மூலம், உங்கள் மனநிலையை மாற்றியமைக்க முடியாது. நீங்கள் எதைப்பற்றி நினைக்கிறீர்கள் அல்லது எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம், ஆனால் உங்களை மகிழ்ச்சியாக இருக்கக் கட்டாயப்படுத்த முடியாது. நீங்கள் உங்கள் மாமியார், மாமனாரை மரியாதையுடன் நடத்தலாம், ஆனால் அவர்களது ஒரு மாத வருகையை நீங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாது.”

ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து இருப்பதற்கும், உண்மையில் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதற்கும் நடுவே உள்ள இடைவெளியில் பாலம் அமைக்கப் போராடிக் கொண்டிருந்த யாரோ ஒருவரைச் சந்தித்த போது இது நடந்தது. சிறிய தீர்மானங்களை எடுக்கவும், அவற்றை மதிக்கவும் நான் அவரிடம் சொன்னேன்.

“என் தீர்மானங்கள் அனைத்திற்கும் அர்த்தமே இல்லை,” என்று அவர் மறுத்துக் கூறினார். “நான் புகைபிடிக்கவோ அல்லது கோபமடையவோ அல்லது எதையும் தள்ளிப் போடவோ விரும்பவில்லை, ஆனால் இவை அனைத்தையும் செய்து முடிக்கிறேன். நான் தியானிக்கவும், உடற்பயிற்சி செய்யவும், சீக்கிரம் எழுந்திருக்கவும் விரும்புகிறேன் ஆனால் நான் என்ன செய்தாலும் அதை நிறைவேற்றும் மன உறுதி என்னிடம் இல்லை.”

நான் அவரை அமைதியாகப் பார்த்தேன், ஏனென்றால் இந்தப் பிரச்சினை எவ்வளவு பொதுவானது என்றும், மன உறுதி இல்லாத காரணத்தினால் ஒவ்வொருவரும் எவ்வளவு பாதிப்புக்கு உள்ளாகிறோம் என்றும் நான் சொல்லக்கூட ஆரம்பிக்கவில்லை.

“நான் தோற்பதற்காகவே பிறந்திருப்பதாகவும், சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாதவனாகவும் உணர்கிறேன், என்று அவர் முடிவு செய்துவிட்டார். “இப்பொழுது யாரும் என்னை நம்புவதில்லை. ஏன், நானே என்னை நம்புவதில்லை!”

இது தினசரி நம்மில் பலருக்கு நடக்கிறது. நாம் ஒரு காரியத்தை செய்ய முடிவு செய்கிறோம், ஆனால் அதை நம்மால் செயல்படுத்த முடிவதில்லை. ஒரு குறிப்பிட்ட வழியில் உணரக்கூடாது அல்லது சில விஷயங்களைப் பற்றி யோசிக்கக் கூடாது என்று நமக்குள் உறுதி எடுக்கிறோம், இருந்தும் நச்சரிக்கும் தூண்டுதல்கள் மற்றும் உணர்ச்சிகள் நம்மைக் கட்டுப்படுத்துகின்றன, நாம் முற்றிலும் உதவியற்று இருப்பதாக உணர்கிறோம். இதிலிருந்து வெளியே வர ஏதேனும் ஒரு வழி இருக்கிறதா? ஆமாம், உள்ளது.

உண்மையில், நம்மை மாற்றிக் கொள்ளுதல், அது முதலில் தோன்றுவதைப் போல் அவ்வளவு கடினமானது இல்லை. உங்கள் கனவின் படி, உங்கள் வாழ்க்கையை வாழ்வதும், எல்லா விஷயங்களையும் செய்து கொள்ளவும் முடியும். கடந்த காலத்தை விட்டுவிட்டு, இருளிலிருந்து வெளியேறி, வெளிச்சத்திற்கு வர உங்களால் முடியும். எப்படி என்று கேட்கிறீர்களா?

தத்துவம், மறைஞானம் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றிலிருந்து விலகி, ஒரு நல்ல செய்தியாக, நடைமுறைக்குத் தேவையான குறிப்புகள் என்னிடம் உள்ளன. ஆனால், 1960 களில் செய்த ஒரு பிரபல உளவியல் ஆய்வை முதலில் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். ‘மார்ஷ்மெல்லோ பரிசோதனை’ என அழைக்கப்படும் இது, ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் உளவியலாளர்கள் வால்டர் மிசெல் மற்றும் ஈபே பி. எப்சென் ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட தொடர்ச்சியான பரிசோதனையை உள்ளடக்கியது.

ஒரு குழந்தை உடனடியாக திருப்தி அடைவதை எதிர்த்து நிற்க எப்படிக் கற்றுக்கொள்கிறது என்பதை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். நான்கு வயதுக் குழந்தைகளில் இந்தச் செயல்முறையை கடைப்பிடிக்க ஒரு புதிய வழியை அவர்கள் கண்டுபிடித்தனர். அவர்கள் குழந்தைகளை ஒரு தடவைக்கு ஒருவர் என ஒரு அறைக்குக் கூட்டிக் கொண்டு வந்து, ஒரு மார்ஷ்மெல்லோவை காண்பிப்பார்கள், மேலும் அறையில் தனியாக அவர்களை விட்டுவிடுவதற்கு முன்பு அவர்களுக்கு ஒரு ஒப்பந்தத்தை வழங்குவார்கள். குழந்தைகள் விரும்பும் போது மார்ஷ்மெல்லோவைச் சாப்பிடலாம், ஆனால் பரிசோதனையாளர் திரும்பி வரும் வரையில் அவர்கள் சாப்பிடாமல் இருந்தால், அதனுடன் சேர்ந்து சாப்பிட இரண்டாவது மார்ஷ்மெல்லோவைப் பெறுவார்கள். சில பிள்ளைகள் உடனடியாக மார்ஷ்மெல்லோவைத் தின்றனர்; மற்றவர்கள் எதிர்த்துப் போராடினர் ஆனால் அவர்களால் ஆசையை அடக்க முடியவில்லை; சிலர் பதினைந்து நிமிடங்கள் பெரிய வெகுமதிக்காகக் காத்திருந்தனர். காத்திருந்தவர்கள் தங்கள் கவனத்தைத் திசைதிருப்பிக் கொண்டதால் வெற்றி பெற்றனர் என்பது 1960 களில் சோதனைகள் நடந்தபோது சுவாரசியமான கண்டுபிடிப்பாகத் தோன்றியது.

நல்ல அதிர்ஷ்டத்தின் காரணமாகப் பின் நாளில் மிஷெல் வேறு ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்தார். ஸ்டான்ஃபோர்ட் யுனிவெர்சிட்டி வளாகத்தில் மார்ஷ்மெல்லோ சோதனைகள் நடத்தப்பட்ட அதே பள்ளியில் அவரது பெண்கள் படித்து வந்தனர். அவர் சோதனைகள் முடித்து, மற்ற விஷயங்களுக்குச் சென்ற நீண்ட காலத்திற்குப் பிறகும், தனது மகள்களிடமிருந்து அவர்களது வகுப்பு தோழர்களைப் பற்றி மிஷெல் தொடர்ந்து கேள்விப்பட்டு வந்தார். கூடுதல் மார்ஷ்மெல்லோவுக்குக் காத்திருக்கத் தவறிய குழந்தைகள் பள்ளியின் உள்ளேயும், வெளியேயும் மற்றவர்களை விட அதிக சிரமங்களைக் கண்டது போல் அவருக்குத் தெரிந்தது. இதில் ஏதாவது ஒரே மாதிரி அமைவு இருக்கிறதா எனப் பார்க்க, மிஷெல் மற்றும் அவரது சக ஊழியர்கள் பரிசோதனையில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானவர்களைத் தேடிக் கண்டு பிடித்தனர். நான்கு வயதில் மிகுந்த மனக்கட்டுப்பாட்டைக் காட்டியவர்கள் சிறந்த தரம் மற்றும் பரீட்சைகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருந்ததை அவர்கள் கண்டனர். பதினைந்து நிமிடங்களும் கட்டுப்பாட்டுடன் இருந்த சிறுவர்கள், அரை நிமிடம் கூடக் கட்டுப்படுத்த முடியாத சிறுவர்களை விட SAT இல் 210 புள்ளிகள் அதிகமாக எடுத்திருந்தனர். மனக்கட்டுப்பாட்டுடன் இருந்த குழந்தைகள் தங்களுக்கு இணையானவர்கள் மற்றும் அவர்களது ஆசிரியர்களிடம் மிகவும் பிரபலமடைந்து இருந்தனர். அவர்கள் அதிக ஊதியம் பெற்றனர். நடுத்தர வயது வந்த போது அவர்கள் அதிக எடை பெற குறைந்த வாய்ப்பே உள்ளது என்று கூறும்படியாக, அவர்களுக்குக் குறைந்த உடல் நிறை குறியீட்டெண் இருந்தது.

நல்ல மனக்கட்டுப்பாட்டுடன் இருந்தவர்கள், மற்றவர்களிடம் பாதுகாப்பான, திருப்திகரமான இணைப்புகளை உருவாக்கிக் கொண்டதாகவும், பராமரித்ததாகவும் தெரிந்தது. மற்றவர்களிடம் இரக்கம் காட்டுவதிலும், மற்றவர்களுடைய பார்வையில் இருந்து விஷயங்களைப் பரிசீலிப்பதிலும் அவர்கள் சிறந்தவர்களாக இருந்தனர். அவர்கள் உணர்ச்சிப்பூர்வமாக மிகவும் திடமாக இருந்தனர், மற்றும் அவர்களுக்கு மன அழுத்தம், மனச்சோர்வு, சித்தப்பிரமை, உளப்பிணி, ஆட்டிப்படைக்கின்ற-கட்டாய நடத்தை, உணவு சீர்குலைவுகள், குடிப் பிரச்சினைகள் மற்றும் பிற நோய்களுக்குக் குறைவான வாய்ப்புக்களே இருந்தன. அவர்கள் மிகக் குறைவாகவே கோபமடைந்தார்கள், மற்றும் அவர்கள் கோபமடைந்தபோது, வாய்மொழியாகவும், உடல் ரீதியாகவும் தீவிரமாவது மிகக் குறைவே.
(மனக்கட்டுப்பாடு: ராய் எஃப் ப்யூமெஸ்டர் மற்றும் ஜான் டியர்னி ஆகியோரால் எழுதப்பட்ட – ரீடிஸ்கவரிங் அவர் கிரேட்டஸ்ட் ஸ்ட்ரெங்க்த்.)

கடந்த தசாப்தத்தில், பல்வேறு நூல்களில் மார்ஷ்மெல்லோ பரிசோதனை பற்றி குறைந்தபட்சம் ஒரு டஜன் குறிப்புகளை நான் கண்டேன், மேலும் சுய-மாற்றத்தின் பாதையில் நீங்கள் அதனால் பயன் அடைவீர்கள் என்று நினைத்தேன். சுருக்கமாக, அது சுய கட்டுப்பாடு அல்லது தாமதமான திருப்தியின் முக்கியத்துவம் பற்றி உயர்த்திக் காட்டுகிறது. யோக சூத்திரங்களில் பதஞ்சலி, யமா (தார்மீக கட்டுப்பாடுகள்) மற்றும் நியமாவை (சுய கட்டுப்பாடு) மற்ற வேறு எதற்கும் முன் வைத்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. சுயக் கட்டுப்பாடு இல்லாமல், உணர்வு நிலையில் எந்த மாற்றமும் சாத்தியமில்லை. இங்கே உங்கள் சுயக் கட்டுப்பாட்டை அதிகரிக்க மூன்று எளிமையான உதவிக்குறிப்புகள் உள்ளன, அவை உங்களை சுய ஒழுங்குபடுத்துவதில் வியக்கத்தக்க வகையில் உதவும்.

தியானம், பத்து கட்டளைகள் அல்லது ஹதா யோகாவின் நல்லொழுக்க நெறியுரைகள் போலல்லாமல், இவை மிகவும் எளிமையானவை மற்றும் மிகவும் பயனுள்ளவை.

1. நன்றாகச் சாப்பிடுங்கள்

சுயக் கட்டுப்பாட்டின் போது உங்கள் உடல் குளுக்கோஸ்ஸைப் (glucose) பயன்படுத்துகிறது. ஏதாவது ஒரு தூண்டுதலை எதிர்க்க முயற்சி செய்கின்ற போது, அல்லது அவர்களது “தடைகள் அற்ற” சுயத்துடன் போரிடும் போது, ஏன் பலர் இனிப்பு சாப்பிட ஏங்குகிறார்கள் என்று இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்கும். அதிக க்ளைஸெமிக் குறியீடுகள் (glycemic index) உள்ள உரனுகளான, அதிக மாவுச்சத்துள்ள மற்றும் பதப்படுத்தப்பட்டுள்ள உணவு வகைகள், வெள்ளை ரொட்டி போன்ற உணவுகளைச் சாப்பிட்டால், உங்கள் உடலுக்குக் குறைந்த நேரத்திற்கு ஒரு விரைவான சக்தி கிடைக்கும், ஆனால் ஒட்டுமொத்தமாக ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு நிலைமை விரைவில் மிக மோசமாகிவிடும். ஆகையால், விரைவில் சாப்பிட ஏதுவாகத் தயாரிக்கப்படும் உணவு வகைகளைச் சாப்பிடத் தூண்டும் ஆசையை எதிர்த்து, அதற்குப் பதிலாக ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்வதில் கவனம் செலுத்துங்கள். புதிய காய்கறிகள், பருப்புகள் (nuts) மற்றும் புதிய பழங்கள், பாலாடைக்கட்டி மற்றும் பிற முழு தானிய உணவுகள் ஆகியவை இதில் அடங்கும். உங்கள் வைட்டமின்களை மறக்காதீர்கள்! தேவைப்படாவிட்டாலும், உங்கள் திட்ட உணவுடன் உடற்பயிற்சியையும் சேர்த்துக் கொள்ளுதல் இன்னும் சிறப்பாக இருக்கும். உங்கள் இரத்தத்தில் குளுக்கோஸின் சரியான அளவைக் கொண்டு, உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதை எளிதாக உணர்வீர்கள். இதை முயற்சித்துப் பார்த்து, நம்புங்கள்.

2. சிறிய இலக்குகளை அமைக்கவும்

சிறிய குறிக்கோளாக இருந்தால், அதை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். ஒவ்வொரு குறிக்கோளை நீங்கள் அடையும் போதும், உங்கள் சுயமதிப்பீடு உயர்கிறது, அதனால் உங்கள் மன உறுதி இன்னும் வலுவடைகிறது. (சரியான உணவுகளைச் சாப்பிடுவதும் கூட மூளையில் சரியான நரம்பியல் கடத்திகளை ஊக்குவிக்கிறது. இது ஒருவர் நேர்மறையாகவும், தன்னம்பிக்கையுடனும் உணர உதவுகிறது.) அடையக்கூடிய ஒரு சிறிய குறிக்கோளை வரையறுக்காமல், நீங்களே மிகப்பெரிய ஒரு பணியை உங்களுக்குக் கொடுத்தால், அதைத் தீவிரமாகத் தொடங்கும் முன்னரே, நீங்கள் அதைக் கைவிடக் கூடும். ஒரு நேரத்திற்கு ஒரு நாள் என்று எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நேரத்தில் பல வேலைகளைச் செய்தல் என்பது உற்பத்தித்திறனின் மிகப் பெரிய எதிரி ஆகும். என் தனிப்பட்ட பார்வையில், ஒரு நேரத்தில் ஒரு காரியத்தை செய்வது மிகச் சிறப்பானது மற்றும் வெற்றியடைய வாய்ப்புள்ளது ஆகும். எதையாவது ஒன்றை எடுத்து, முதலில் அதை முடித்து விட்டுப் பின் அடுத்த ஒன்றிற்குச் செல்லுங்கள்.

3. உங்கள் மன உறுதியைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

மனம் ஒரு விற்பனையாளராக இருந்தால் மூளை மற்றும் வயிறு ஆகியவை மன உறுதியின் விநியோகஸ்தர்கள் ஆவர். உடல் மட்டுமே ஒரே பங்குதாரர் மற்றும் உணர்வு மட்டுமே ஒரே சப்ளையர் (supplier). வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மன உறுதியை உபயோகப்படுத்த உங்களிடம் ஒரே ஒரு மூல ஆதாரம் மட்டுமே உள்ளது. நீங்கள் தேவையற்ற விஷயங்களில் உங்கள் மனவலிமையை செலவழிக்கப் போகிறீர்கள் என்றால், நீங்கள் செய்ய வேண்டிய காரியங்களில் பயன்படுத்துவதற்கு அது மிகக் கொஞ்சமே மீதம் இருக்கும். நீங்கள் குற்ற உணர்வு, சீற்றம், பொறாமை, கோபம், இது போன்ற இன்னும் பலவற்றை உணராமல் இருக்க முயற்சி செய்யும்போதும், நீங்கள் தூண்டுதல்களை எதிர்த்துப் போராடும் போதும், நீங்கள் மன உறுதியைப் பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் நன்றாகச் சாப்பிடுதல், சிறிய இலக்குகளை அடைதல் மற்றும் நேர்மறைகளில் கவனத்தைச் திசைதிருப்புதல், போன்ற சுய-கட்டுப்பாடுகளில் கவனம் செலுத்தினால், எதிர்மறைகளை வெல்ல உங்கள் ஆற்றலை நீங்கள் பயன்படுத்த வேண்டியதில்லை. உங்கள் உணர்வுகளை மாற்ற உங்கள் மனநிலையைப் பயன்படுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை (நான் ஆரம்பத்தில் உள்ள மேற்கோளில் எழுதியுள்ளதைப் போல). அதற்குப் பதிலாக, உங்கள் ஆற்றலைக் கையாள நேர்மறை திசைதிருப்பலைக் கற்றுக்கொள்ளுங்கள்.

மைக்கேல் க்ராஸ்னியின், லெட் தர் பீ லாஃப்டர் (Let There Be Laughter) இலிருந்து நான் படித்ததில் கொஞ்சம் (தொகுக்கப்பட்டது): ஒரு இளம் பெண் அவளது எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள முல்லா நஸ்ருதீனைப் பார்க்கச் சென்றார். ஹுசைன் மற்றும் ஆமிர் என இருவர் அவள் வாழ்வில் இருந்தனர் என்றும் இருவரும் அவளை மிகவும் நேசித்தார்கள் என்றும் அவர் சொன்னார். யாரைத் திருமணம் செய்து கொள்வது என்று தெரியவில்லை என்றும் அவர் சொன்னார்.

“யார் என்னைத் திருமணம் செய்து கொள்வார்கள்? யார் அதிர்ஷ்டசாலி?, என்று தயவுசெய்து என்னிடம் சொல்லுங்கள் முல்லா,” என அவர் கேட்டார்.
“ஹம்ம் …” முல்லா தனது தாடியைத் தடவிக் கொண்டே, “ஆமிர் உன்னைத் திருமணம் செய்துகொள்வார், ஹுசைன் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்,” என்றார்.

கவனமே உங்கள் தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வுடன் இருக்கும் கலை, மற்றும் மனக்கட்டுப்பாடு, என்ன நேர்ந்தாலும் அதை ஒட்டி இருப்பதற்கான திறன் ஆகும். நீங்கள் மனக்கட்டுப்பாட்டை வளர்த்து, சாணைதீட்டி, பலப்படுத்தவும், கூர்மைப்படுத்தவும் முடியும். நீங்கள் ஒரு தேர்வு செய்தால் (ஏதாவது செய்ய முடிவு செய்தால்), அதை அப்படியே செய்யுங்கள். அதைத் தொடர்ந்து, நிதானமாகப் பொறுமையுடன் செய்யுங்கள். இவ்வளவுதான், இதைப் பற்றி சொல்ல வேறு ஒன்றும் இல்லை!

உங்களுடைய மனக்கட்டுப்பாடே உங்களுடைய மிகப்பெரிய சொத்து ஆகும். எண்ணங்கள், உணர்ச்சிகள், துன்பங்கள் அல்லது அடிமையாதல் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துதல், இதன் மூலம் அனைவருக்கும் சாத்தியமாகும். புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தவும். அதை விடாமுயற்சியுடன் படிப்படியாக உருவாக்குங்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email