நமது உலகம் சில நேரங்களில் சமாளிக்க முடியாத இடமாக இருக்கக்கூடும். நாம் அதைக் கொஞ்சம் சிக்கலானதாகவும், கொஞ்சம் விரைவானதாகவும் ஆக்கி விட்டோம். எல்லாம் நேற்றே செய்யப்பட வேண்டியதாகி விட்டது. நாட்கள், வாரங்கள் மற்றும் மாதங்களில் திறனை அளவிடுவது போதாது என்பதைப் போல், நாம் மணி, நிமிடங்கள், சில நொடிகளில் திறனை அளவிடத் தொடங்கி விட்டோம். இது ஏன் இப்படி இருக்க வேண்டும்? இது நேரடியாக நமது உடல் மற்றும் உணர்வுப்பூர்வமான நலனைப் பாதித்து மன அழுத்தத்தைக் கொடுத்துவிட்டது. இந்த உலகத்தைத் திடீரென்று மாற்ற நம்மிடம் எந்த விசைக்கருவியும் இல்லை. உண்மையில், நம்மை உடனடியாக மாற்றிக் கொள்ள அழுத்தக்கூடிய எந்தப் பொத்தானும் இங்கு இல்லை. ஆனால் உங்கள் வாழ்க்கை, உங்கள் பயணம், உங்கள் முன்னுரிமைகள் இவற்றின் மீதான உங்களுடைய பிரதிபலிப்பினால் உங்களுடைய சொந்த வேகத்தைத் தீர்மானிக்க முடியும். நீங்கள் அமைதியாக மூச்சு விட்டு, வசதியாக இருக்கும் என்று என்னும் வேகத்தைத் தீர்மானிக்கலாம். ஒரு முறை போர்ஸ் கார் நிறுவனத்தின் தலைமை பொறியாளர் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஃபெரி போர்ஸ்ஸை மிக உற்சாகமாக அணுகி உலகின் சிறந்த காரைத் தான் வடிவமைத்து உள்ளதாகக் கூறினார்.

அது எப்படி? என்று டாக்டர் போர்ஸ் கேட்டார்.
ஏனெனில் அது இதுவரை உலகம் அறிந்த வேகத்தைவிட அதிவேகமாக இயங்கக்கூடியது.
இதனால் அது சிறந்த கார் ஆகிவிடாது. உங்களுடைய கார் எவ்வளவு வேகமாகச் செல்ல முடிகிறதோ அவ்வளவு வேகமாக நிறுத்தவும் முடியும் என்னும் போது என்னிடம் வாருங்கள். வேகமாகச் செல்வது நல்லது. வேகமாக நிறுத்துவது அதைவிட நல்லது.

இது ஒருவரது எளிதான வழிகாட்டும் கொள்கையாக இருக்கலாம்: நான் சரியான வேகத்தில் போகிறேனா? எனக்கு வேண்டும் போது என்னால் நிறுத்த முடியுமா? என்னால் இன்னும் வேகமாகப் போக முடியும் ஆனால் நான் அப்படி வேகமாகப் போக விரும்புகிறேனா? உங்களது வேகம் உங்களுக்கு வசதியாக இருக்கும் வரை, உலகம் அதன் சொந்த வேகத்தில் செல்லட்டும், கவலை வேண்டாம். நாம் நமது வேகத்தை மற்றவர்களுடைய வேகத்திற்கு ஏற்றார் போல் பொருத்த முயற்சிக்கும் போது நாம் நமது சொந்த பாதையை இழக்கிறோம். நீங்கள் உலகத்துடன் இணைந்து போகவில்லை என்றால் தனியாகத் தள்ளப்பட மாட்டீர்களா? இல்லை, ஏனெனில், அவர்கள் உங்கள் வேகத்திற்குப் பொருந்த முயல்கிறார்கள். உங்கள் வேகத்தைக் குறைத்துக் கொள்வது என்றால் உங்கள் ஒழுக்கம் அல்லது இலட்சியம் இவற்றைக் கைவிட வேண்டும் அல்லது நீங்கள் ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டு ஒரு உலக சுற்றுப்பயணம் செல்ல வேண்டும் (நீங்கள் விரும்பினாலன்றி) என்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை. உங்கள் கால்களை மேலே வைத்துக் கொண்டு சும்மா இருப்பதும் நீங்கள் வேகத்தைக் குறைப்பதாகாது. அதற்குப் பதிலாக நீங்கள் எதைத் தேடிச் செல்கிறீர்கள் மற்றும் அது ஏன் உங்களுக்கு ஏற்புடைய விஷயமாக உள்ளது என்பதைப்பற்றி விழிப்புடன் இருப்பது பெரும்பாலும் நல்ல தேர்வுகளைச் செய்யத் தேவைப்படுகிறது. இதுவே வேகத்தைக் குறைப்பதாகும். இதுவே நிகழ் காலத்தில் விழிப்புடன் வாழ்வதாகும் — மன அழுத்தத்திற்கு மாற்று மருந்தாகும்.

நீங்கள் விழிப்புடன் வாழும்போது நீங்கள் இயற்கையாகவே நிகழ் காலத்தில் வாழத் தொடங்குகிறீர்கள். நிகழ் காலத்தில் வாழ்வது என்பதே உள்ளத்து அமைதிக்கு ஆதாரம் ஆகும். இது உண்மையாகும். எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது:

ஒரு சிறிய கிராமத்தில் ஒரு மகிழ்ச்சியான வீடு இருந்தது. அந்த வீட்டில் இருந்த மனிதன் ஒரு பணக்கார வணிகரோ அல்லது நிலங்கள் அதிகமாக உள்ள மிராசுதாரோ இல்லை. ஆனால் மற்ற வீட்டுக்காரர்கள் சந்திக்கும் அதே சவால்களை உடைய ஒரு இரும்புத் தொழிலாளி ஆவார். ஒருபோதும் அவரது வீட்டிற்கு உள்ளே இருந்து எந்த விதமான வாக்குவாதமும் கேட்காததே அவரது அண்டை வீட்டினருக்கு மிக ஆவலைத் தூண்டுவதாக இருந்தது. அவர் வீட்டிற்கு வந்ததும் வீட்டிற்கு வெளியே இருந்த ஒரு மரத்தின் கிளைகளில் ஒன்றைப் பிடித்துக் கொண்டு பிரார்த்தனை செய்வார். பின்னர் அவரது குழந்தைகளுடன் விளையாடும் சத்தத்தையும், அவர்கள் சிரிக்கும் சத்தத்தையும் அண்டை வீட்டினர் கேட்பர். அவர் எவ்வளவு மன அழுத்தத்துடன் காணப்பட்டாலும் தனது வீட்டிற்குள் நுழையும் முன் மரக்கிளையைத் தொடும் ஒவ்வொரு முறையும் அவர் வேறு ஒரு புதிய மனிதனைப் போல் ஒளியுடையவராக ஆகிவிடுவார். பல அண்டை வீட்டுக்காரர்கள்கூட தங்களது வீடுகளில் அதே மரத்தை நட்டு அவரைப் போலவே செய்தும் அவர்களின் சூழ்நிலையில் மாற்றம் எதுவும் இல்லை. அவர்களால் இனிமேலும் கேட்காமல் அடக்கிக் கொண்டிருக்க முடியவில்லை.

நீங்கள் எப்போதும் வீட்டில் மகிழ்ச்சியாக எப்படி இருக்கிறீர்கள் என்று அவர்கள் கேட்டனர். நீங்கள் வாக்குவாதம் செய்து நாங்கள் கேட்டதில்லை. உங்களுக்குப் போதுமான அளவு வருமானமும் இல்லை. நீங்கள் அந்த மரத்தைத் தொடும் போது சந்தோஷமாகவும், ஒளியுடையவராகவும் ஆகிறீர்கள். எங்களுக்கு அந்த மரத்தின் இரகசியத்தைத் தயவு செய்து சொல்லுங்கள் என்றனர்.

அவர் இனிமையாக சிரித்துக் கொண்டே அந்த மரத்தில் எந்த இரகசியமும் இல்லை என்றார். என் வீட்டிற்குள் நுழையும் முன், நான் கிளைகளில் ஒன்றைப் பிடித்து அதில் என் தினசரி பிரச்சினைகள் அனைத்தையும் கொண்ட ஒரு கற்பனைப் பையைத் தொங்க விட்டு விடுவேன். நான் என் வீட்டிற்கு உள்ளே இருக்கும் போது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நாள் முழுவதும் நான் வெளியே இருந்ததை மறக்காமல் இருக்கிறேன். என்னுடைய வெளிப் பிரச்சினைகளை வீட்டிற்குள் கொண்டு வராமல் பார்த்துக் கொள்கிறேன். எனவே ஒவ்வொரு நாள் மாலையும் வெளியில் அந்தப் பையை விட்டுவிட்டு உள்ளே இலேசாகவும், சந்தோஷமாகவும் வருகிறேன்.அதுமட்டுமில்லை ஒவ்வொரு நாள் காலையிலும் நான் அந்தப் பையை மீண்டும் என் கடைக்கு எடுத்துச் செல்கிறேன்.

நீங்கள் ஏன் அவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டனர். நான் இன்னும் அந்தப் பிரச்சினைகளை சமாளிக்க வேண்டி உள்ளது. ஆனால் இதில் சுவாரசியமானது என்னவென்றால் எப்போதும் காலையில் என் பை இலேசாக இருப்பதாக உணர்கிறேன். பெரும்பாலான பிரச்சினைகள் எப்படியோ இருண்ட இரவில் மறைந்துவிடுகின்றன.

நீங்கள் ஏன் வெளியில் சென்று வேலை செய்கிறீர்கள்? வீட்டில் அமைதியான மற்றும் வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகத் தானே? சில நேரங்களில் வீட்டின் உள்ளேயும் வாழ்க்கை சிக்கலாக இருக்கலாம். ஆனாலும் நீங்கள் வெளிப் பிரச்சினைகளை வெளியிலேயே விட்டுவிடலாம். இதுதான் நிகழ் காலத்தில் வாழ்வதாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மேலும் அதிகம் அடைவது, இன்னும் அதிகம் உருவாக்குவது, இன்னும் அதிகமாக வேண்டும் என்பது போன்ற நமது ஆசைகள் நாம் வெளியே கவனிப்பவற்றின் நேரடியான தாக்கம் தான் அல்லவா? இத்தகைய குறிக்கோள்கள் மற்றும் ஆசைகள் உங்களுடைய அன்புக்குரியவர்களுடன் நீங்கள் இருக்கும் நேரம், உங்கள் உணவு இவற்றை அனுபவிக்கத் தடையாக இருக்கும். உங்களுடைய துணையுடன் தரமாக நேரத்தைக் கழிக்க விரும்பும் போது நீங்கள் வேலையைப் பற்றியோ அல்லது என்னவெல்லாம் செய்திருக்க வேண்டும் அல்லது செய்திருக்க முடியும் என்றோ சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். வேலை செய்யும் போது வேலையில் திறமைசாலியாக இருந்து உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் அதிக நேரம் செலவிட விரும்புவீர்கள். ஆனால் உங்கள் குடும்பத்துடன் செலவிடும் நேரம் வரும்போது வேலையைப் பற்றிய எண்ணங்கள் வந்து அந்த அழகான தருணங்களை அழித்துவிடுகிறது.

இதிலிருந்து தப்பிக்க முடியுமா? ஆமாம், முடியும். உங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை எவையென்று எழுதிக்கொண்டு அவற்றைத் தொடர்ந்து ஆய்வு செய்யுங்கள். மக்கள் உணர்வுப்பூர்வமாக உங்களை வலுவிழக்கச் செய்வார்கள். வேலையின் அழுத்தம் அதிகமாகவே இருக்கும். தொலைக்காட்சியில் கெட்ட செய்திகளைத் தொடர்ந்து கேட்பீர்கள். இந்த உலகில் சரிவுநிலை நித்தியமாகத் தோன்றும். பணவீக்கம் கீழே வராமலேயே இருக்கும். ஆனால் இவை அனைத்திலும் நீங்கள் அமைதியாக இருக்க விரும்பினால் நீங்கள் உங்கள் மேலும், உங்கள் எண்ணங்கள் மேலும் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் வாழ்க்கை நடத்தும் இடத்தில், உங்கள் வாழ்க்கையில், உங்கள் மனதில் ஒரு மூலை இருக்க வேண்டும். அந்த மூலையில், என்ன நுழையலாம் மற்றும் யார் நுழையலாம் என்பதில் நீங்கள் கண்டிப்பைக் கடைப்பிடிக்க வேண்டும். உங்களைச் சுற்றி காத்துக் கொள்ளுங்கள். இது ஒரு கலையாகும். மன அழுத்தம் ஒரு உணர்வு அல்ல; அது ஒரு பதில் கொடுத்தலாகும். அது எந்தப் பிரச்சினையையும் சமாளிக்க, உங்களால் தேர்வு செய்யப்பட்டதாகும்.

நம்மிடம் ஒன்று உள்ளது என்பதற்காக அதைத் தூக்கிக் கொண்டு சுற்ற வேண்டும் என்று அர்த்தம் இல்லை. உங்களது சுமையை எப்பொழுது இறக்கி வைக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குத் துயரம் தருவதை இறக்கி விடுங்கள். நாம் மன அழுத்தத்தை உணருவதில்லை, நாம் அதைத் தேர்வு செய்கிறோம்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email