நான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஆஸ்திரேலியாவில் பல கோடி டாலர் மதிப்புள்ள ஊடக நிறுவனத்தின் மிகப்பெரிய தொழிலதிபர்கள் குழுமத்தின் முக்கியஸ்தனாக இருந்தேன். நான் ஒரு முக்கியமான இலாக்காவை நிர்வகிக்க ஆரம்பித்தேன். அப்பொழுது புதிய மென் பொருளின் ஒரு குறிப்பிட்ட பிழைபாடு எங்களுடைய நுகர்வோர்களுக்கும், வருவாய்த் துறையினருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தொழில்நுட்பத்தில் முக்கிய பொறுப்பு நான் வகித்ததால் அப்பிரச்சனையைத் தீர்ப்பது என்னுடைய பொறுப்பாகிவிட்டது. நாங்கள் வெவ்வேறு நிறுவனங்களில் இருந்து தொழில் நுட்ப வல்லுநர்களை அழைத்தோம். யாராலும் பிரச்சனைக்கான காரணத்தை சுட்டிக் காட்ட முடியவில்லை. பல வாரங்கள் கழிந்துவிட்டன. ஆனால் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை. ஒருநாள் மிகுந்த கவலையுடனும், சுய ஆராய்வுடனும் இரவு 1 மணிக்கு வீட்டை அடைந்தேன். நான் குளிக்க ஆரம்பித்தபோது திடீரென்று ஒரு யோசனை உதித்தது. அந்த பிரச்சனையைத் தீர்க்கும் ரகசியம் விளங்கியது. அலுவலகம் திரும்பும் நேரம்வரை காத்திருக்க முடியாமல் நான் ஒரு சிறிய தூக்கத்திற்குப் பின் மீண்டும் அலுவலகம் சென்றேன்.

அந்த அதிகாலை நேரத்தில் அலுவலகம் முழுவதும் அமைதி சூழ்ந்திருந்தது. நான் என்னுடைய கணினியை இயக்கி பிரச்சனையைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டேன். அது பயன் அளிப்பதாகவும் இருந்தது. மிகுந்த நம்பிக்கையுடன் எங்களுடைய பதிப்புக் கட்டுப்பாட்டு அமைப்பைப் புறந்தள்ளி, அதை நிர்வகிக்கும் உரிமை உள்ளவர் போல் சர்வரின் கட்டமைப்புக்கு உள்ளே நுழைந்தேன். (உலகத்திற்கு வெளியிடும் முன் எங்கள் மென் பொருளை இங்குதான் வணிகசெயற்குழுவின் அனுமதிக்காக பிரதிபலிக்கச் செய்வது வழக்கம்.) புதிய மென்பொருளைப் பதிவு செய்யும் பொருட்டு இருந்த பழைய கோப்பகத்தை அழிக்கும் கட்டளையை இயக்கினேன். காலையில் வேலைக்கு வந்ததும் செயற்குழு இந்த நல்ல செய்தியைக் கேட்டு அதிசயப்படுவார்கள் என்ற கற்பனையின் மகிழ்ச்சியில் இருந்தேன். ஆயிரக்கணக்கான டாலர் செலவழித்து செய்ய முடியாததைச் செய்ய இதோ ஒரு எளிய வழி.

ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டது; சர்வரின் கட்டளையை இடத் தொடங்கியதும் என் தவறை உணர்ந்தேன். நான் இட்ட கட்டளையால் எல்லாக் கோப்புகளும் (பதிப்புக் கோப்புகளும் சேர்ந்து) அடியோடு அழிந்துவிட்டன. கொடுத்த கட்டளைக்கு ஏற்ப சர்வர் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டு விட்டது. உங்கள் அறையின் விளக்கை அணைக்க முற்படுகையில், அது நகரின் எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டால் எப்படி இருக்கும் என்று சற்றே கற்பனைப் பண்ணிப் பாருங்கள். நான் அதைவிட மோசமான செயலைச் செய்திருந்தேன். நான் முழு மின் நிலையத்தையும் எரித்துவிட்டேன்.

சர்வரைச் சரி செய்ய வன்பொருள் குழுமத்திற்கு நான்கு நாட்கள் ஆகியது. ஏனென்றால் பின் உபயோகத்திற்காக இருந்த பதிவு நாடாவிலும் சில பிரச்சனை இருந்தது. எனக்கு மிகுந்த தலைகுனிவாகி விட்டது. என்னுடைய தவறைச் சரிக்கட்ட என்னிடம் பல காரணங்கள் இருந்தன — குறைந்த தூக்கம், வேலைப்பளு, அளவில்லாத அதிக நேர வேலை, பிரச்சனையின் கடினத் தன்மை, வலைக் குழுவின் தகுதியின்மை போன்றவை சாக்குப்போக்குகள் தான். ஆனால் நான் எதையும் கூறவில்லை. நான் அனைத்துப் பங்குதாரரிடம் மன்னிப்பு மட்டும் கேட்டேன். உண்மை என்னவென்றால், என்னுடைய இந்தத் தவறு மிகப் பெரிய பொருட் சேதத்தை ஏற்படுத்திய தவறாகும். அதிஷ்டவசமாக எல்லாமே நல்ல படியாக முடிந்தது. இரண்டுமாதம் கழித்து எனக்குக் கணிசமான அளவு ஊதிய உயர்வு கிடைத்தது. அவர்கள் கொடுத்த காரணங்களில் ஒன்று, நான் துணிச்சலுடன் தவறை ஏற்றுக் கொண்டது, திருத்திக் கொண்டது, அதிலிருந்து கற்றுக்கொண்டது என்பது தான்.

தவறு செய்வது மனிதனின் இயற்கை; நாம் எல்லோரும் தவறு செய்கிறோம். இருந்தபோதிலும், மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்ய இதை ஒரு சாக்காக சொல்லிக்கொண்டே இருக்க முடியாது. நாம் நமது தவறுகளை உணர்ந்ததைக் காட்ட இரண்டு விதிகளே உள்ளன: ஒன்று மீண்டும் தவறு செய்யாமல் இருப்பது, மற்றொன்று மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்பது. இன்று நான் தேர்ந்தெடுத்துள்ளது இரண்டாவது விதியைப் பற்றியது, அதாவது, எப்படி மன்னிப்புக் கேட்பது? சரியான முறையில் மன்னிப்புக் கோரல் என்பது ஒரு சிறப்பான கலையோ அல்லது கைவண்ணமோ கிடையாது. சாதாரணமாக இயற்கையாகவும், உண்மையாகவும் இருத்தலே ஆகும். நாம் உண்மையிலேயே நம் செயலுக்கு வருத்தப்படும் போது, சரியான வார்த்தைகள் தானாகவே வெளி வருகின்றன மேலும் மன்னிப்புக் கேட்பது எளிதாகிறது.

மன்னிப்புக் கேட்பது என்பது மீண்டும் நம்பிக்கையை நிலைநாட்டுவதாகும். நான் ஒரு முறை உங்கள் நம்பிக்கையை முறித்திருக்கிறேன், ஆனால் மறுபடியும் இதைச் செய்யமாட்டேன் என்பதை நீங்கள் நம்பலாம் என்று இதன் மூலம் தெரிவிப்பதாகும். நாம் தவறு செய்யும் போது அது மற்றவருடைய நம்பிக்கையை அதிர்வடையச் செய்கிறது. பெரும்பாலும் நேர்மறை உணர்வுகள் நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாகும். உதாரணத்திற்காக, நீங்கள் ஒருவர் மேல் அன்பு செலுத்தும் போது, நீங்கள் அவர்களை எவ்வாறு புரிந்து கொள்கிறீர்களோ அதன்படி அவர்களை நம்புகிறீர்கள் அல்லது அவர்கள் எவ்வாறு அவர்களைக் காட்டிக் கொள்கிறார்களோ அதன்படி அவர்களை நம்புகிறீர்கள். ஆனால் அவர்கள் அதற்கு மாறாக நடந்து கொள்ளும் போது, அது உங்கள் நம்பிக்கைக்குத் துரோகம் ஆகிறது. இந்த நம்பிக்கை துரோகம் துயரத்தையும், மனக் கஷ்டத்தையும், அன்பில் பாதிப்பையும், அடுத்தவரிடம் கொண்ட உணர்வுகளில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

ஒரே தவறை திரும்பச் செய்ய நினைத்தால் எந்த மன்னிப்பும் நம்பகத் தன்மை வாய்ந்தது அல்ல. ஒரு உடைந்த பானையை நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கவனமாகவும், பொறுமையாகவும் இருந்தால் ஒரு முறை அந்த உடைந்த பானையை ஒட்ட வைக்க முடியும். ஆனால் மீண்டும் உடைந்தால் இப்பொழுது ஒட்டவைப்பது மிகவும் கடினமாகும். ஒட்டவைக்கவே முடியாமல் போகலாம். அவ்வாறே ஒருவரது நம்பிக்கையை உடைத்தால் ஒரு முறை அவர்கள் உங்களை மன்னிக்கலாம். ஆனால் மீண்டும் அதே தவறைச் செய்தால், உங்கள் தவறைப் புறந்தள்ளி, அதை மறந்து மன்னிப்பார்கள் என்று நீங்கள் எதிர் பார்க்க முடியாது. ஆகையால் பொய்யான மன்னிப்புக்கோரல் வீணானதாகும். அப்படியானால் உண்மையான மன்னிப்புக் கோரல் என்பது என்னவென்று நீங்கள் கேட்கலாம்.

ஒரு மன்னிப்புக் கோரல், செய்த தவறை மீண்டும் செய்யமாட்டோம் என்ற உறுதியுடன் இருந்தாலும், எந்தச் சாக்குப்போக்கும் சொல்லாமல் இருக்கும் போதும், உங்களின் செயலுக்கான முழுப்பொறுப்பையும் நீங்களே ஏற்றுக்கொள்ளும் போதும், நீங்கள் இவற்றை உணர்ந்து மிகுந்த வருத்தத்துடன் மன்னிப்புக் கோரும்போதும் தான், நம்பகத்தன்மை உடையதாகிறது. ஆழ்மன வருத்தமில்லாமல் கேட்கப்படும் மன்னிப்பு அர்த்தமில்லாத செயலே ஆகும். பார்க்கப் போனால் அது மற்றவருக்கு இன்னும் அதிகமாகக் கஷ்டத்தை ஏற்படுத்தும். நான் இப்படி நினைத்து இந்த வேலையைச் செய்தேன்; மன்னித்து விடுங்கள். நான் இந்த, இந்தக் காரணங்களால் இப்படிச் செய்தேன், என்னை மன்னித்து விடுங்கள். என்னால் உங்களுக்குக் காயம் ஏற்பட்டிருந்தால் மன்னித்து விடுங்கள் என்றெல்லாம்தான் பெரும்பாலும் பலரும் சொல்கின்றனர். இவை எல்லாம் மன்னிப்புக் கோரல் கிடையாது, வெறும் சாக்குப்போக்குகள் தான்.

உண்மையான மன்னிப்புக் கேட்டலில் இப்படி இருந்தால், ஆனால் போன்ற இடைச் சொற்களுக்கே இடம் கிடையாது. நீங்கள் ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று சொல்வதும் சரியானதல்ல. நமது செயல் அடுத்தவரின் மனதைப் புண் படுத்தி உள்ளது என்பதைப் புரிந்து கொண்டு, உணர்ந்து, முழுவதும் ஏற்றுக்கொண்டு, எந்தவித நிபந்தனையும் இல்லாமல் கேட்பதே உயர்ந்த மன்னிப்பாகும். ஒரு காரணத்தையோ அல்லது தகுந்தாற்போல் எதையோ சொல்லி உங்களது மன்னிப்புக் கோரலை மாசு படுத்தாதீர்கள். உண்மையாக உணராமல் மன்னிப்பைக் கேட்டு அதை நாசப்படுத்தாதீர்கள். இது மற்றவர்களுக்கு இன்னும் அதிகக் கஷ்டத்தைக் கொடுக்கும். மன்னிப்புக் கேட்டல் அல்லது சாக்குப்போக்கு கூறல் இந்த இரண்டில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும், இரண்டையும் அல்ல.

சிறந்த மன்னிப்புக் கேட்டல் என்பது தன் தவறை முழுமையாக வெளிப்படுத்துவதும், தவறை முற்றிலுமாக ஏற்றுக்கொள்வதும் ஆகும். உங்களது மன்னிப்பை மற்றவர் ஏற்காவிட்டால் என்னவாகும்? இதைப்பற்றியும் இன்னொரு முறை பார்க்கலாம்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email