மனித வாழ்க்கை ஒரு பெண்டுலம் (pendulum) போன்று தொங்கிக்கொண்டிருக்கிறது. நேர்மறை மற்றும் எதிர்மறை, நன்மை மற்றும் தீமை, சரி மற்றும் தவறு, உண்மை மற்றும் பொய், உயர்வு மற்றும் தாழ்வு, தடித்த மற்றும் மெல்லிய ஆகியவற்றைப் போன்ற இன்னும் பல இரட்டைகளின், ஒரு முழுக் குவியலின் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது. எனினும் இவை அனைத்துமே அவரவர்களின் உள் உணர்வைச் சார்ந்தவாறே இருக்கிறது. நீங்கள் அதை அனுமதிக்காத வரை அதால் உங்களைப் பாதிக்க முடியாது. உங்களுக்கு நான் ஒரு சிறிய கதையைக் கூறுகிறேன்:

ஒரு காலத்தில் ஒரு துறவி இருந்தார். பல ஆண்டுகளாக அவர் தியானம், மிகுந்த சிந்தனை மற்றும் பொறுமையுடன் பயிற்சி செய்தார், ஆனாலும் அவரால் ஞானத்தை அடைய முடியவில்லை. குறிப்பாக மக்கள் அவரது புனிதத் தன்மையைப் பார்க்கத் தவறின போதும், அவர் உண்மை என்று நினைத்ததை அவர்கள் ஏற்றுக்கொள்ளாத போதும், அவரைச் சுற்றி உள்ள உலகத்தால் பிரச்சனையை உணர்ந்தார். அவரை மக்கள் நன்றாக நடத்தாத போது மோசமாகவும், நன்றாக நடத்திய போது நன்றாகவும் உணர்ந்தார். உலகத்தின் இத்தகைய காணிக்கைகளின் மேல் பற்றற்றவராக இருந்து அவர் மேலே உயர விரும்பினார். ஆனால் அவரால் அது முடியவில்லை.

ஒரு நாள் அவர் தனது குருவை அணுகி அவரது உள்மனக் கொந்தளிப்பை மற்றும் அமைதியற்ற நிலையைப் பற்றித் தெளிவாகக் கூறினார். குரு பொறுமையுடன் அவர் கூறியதைக் கேட்டு அவரை ஒரு குறிப்பிட்ட அறைக்கான சாவியையும், அங்குப் போவதற்கான வழியையும் கூறி அனுப்பினார்.

“அங்குப் போய் அசையாமல் மூன்று நாட்கள் தியானம் செய். கதவைத் திறந்தபடி விட்டுவிட்டு அமைதி காக்க வேண்டும். உனக்கு உண்மை புலப்படும்,” என்று குரு அறிவுறுத்தினார்.

அவர் தனது குருவிற்குக் கீழ்ப்படிந்து தியானம் செய்ய அந்த இடத்திற்குச் சென்றார். அவர் கலக்கம் கொள்ளும் வகையில், அந்த இடம் ஒரு நெரிசலான நகரின் மையத்தில் ஆரவாரமான கூடத்தினை அடுத்த ஒரு சந்தையாக இருந்தது. உள்மன அமைதிக்கு ஒரு சத்தமான இடத்தில் எப்படி தியானம் செய்வது என்பதைப்பற்றி அவருக்குச் சந்தேகமாக இருந்தது. இருந்தாலும், அவர் வேலையைத் தொடங்கினார். அவர் கதவைத் திறந்தவுடன் ஒரு அருவெறுப்பான துர்நாற்றம் அவரை வரவேற்றது. அந்த அறைக்கு மேலே ஒரு கழிப்பறை இருப்பதை அவர் விரைவில் உணர்ந்தார். ஒரு கணம் அவர் தனது குருவின் மீது கோபமடைந்தார். பின்னர் மீண்டும், குருவிடம் இதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று எண்ணினார்.

அந்த அறை ஜன்னல்கள் இல்லாமல், அசுத்தமாக, கைவிடப்பட்ட ஒரு கடை போல இருந்தது. சுவர்கள் கசிந்து ஒழுகிக் கொண்டு இருந்தன மற்றும் தரை சற்றே ஈரமாக இருந்தது. மேலே இருந்த கழிவுகள் குழாய் ஒழுகிக் கொண்டிருந்தது. அவர் தரையில் அமர்ந்து தியானத்தை ஆரம்பித்தார். அவருக்கு அடிக்கடி கழிப்பறையில் தண்ணீரைத் திறந்துவிடும் ஒலி கேட்டது. ஒரு பொதுக் கழிப்பறையின் நேர் கீழே, தான் தியானம் செய்கிறோம் என்பதை அவர் உணர்ந்து கொண்டனர். அவரது அமைதியற்ற தன்மை இன்னும் அதிகமானது.

ஓர் ஆயிரம் கவலைகள் அவரை ஆக்கிரமித்துக் கொண்டன. மேலே உள்ள குழாய் வெடித்தால் என்னவாகும், அவரைக் கடந்து சென்று கொண்டிருந்த அனைத்து மக்களும் அவரைப் பற்றி என்ன பேசினார்கள், எழுபத்திரண்டு மணி நேரம் கடந்துவிட்டது என்பதை அவர் எப்படி அறிய முடியும், அந்தத் துர்நாற்றத்தால் அவர் மயங்கிவிட்டால் என்னவாகும், யாரோ ஒருவர் வந்து தன்னுடைய தியானத்தின் நடுப்பகுதியில் தடங்கல் ஏற்படுத்தினால் என்னவாகும் என்று இன்னும் பல வழிகளில் கவலைகொண்டார்.

மூன்றாம் நாள், இப்படிப்பட்ட எண்ணங்களில் அவர் மூழ்கி இருந்த போது, அவருக்கு மேலே இருந்த குழாய் வெடித்தது மற்றும் அவரது தலையில் மலப் பொருட்கள் விழுந்தன. அவர் அடுத்த படியாக என்ன செய்வது என்று தீர்மானிக்கும் முன், இரண்டு மனிதர்கள் அவ்வழியே நடந்து சென்றனர்.

“யார் இந்த மனிதர்?” என்று கழிவுப் பொருட்களால் மூடப்பட்டிருந்த அந்தத் துறவியை பார்த்து ஒருவர் அருவெறுப்புடன் கேட்டார்.
“கடவுளுக்குத் தான் தெரியும்! சிலர் அவரை ஒரு புனிதமானவர் என்றும், பலர் அவரை ஒரு புத்தியில்லாதவன் என்றும் கூறுகின்றனர்.”

இதைக் கேட்டவுடன் அந்தத் துறவிக்கு ஒரு தெளிவு பிறந்தது. இந்த முழு உலகமும் அவரைப் பற்றி இரண்டு கருத்துக்களில் ஏதாவது ஒன்றை மட்டுமே கொண்டிருக்க முடியும் என்றும், ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கருத்தின் கட்டுக்கு உட்பட்டு இருக்கிறார்கள் என்றும் புரிந்துகொண்டார். மொத்தத்தில் நீங்கள் அந்தக் கருத்துக்களைப் பொருட்படுத்தாத வரை, உண்மையில் எந்தக் கருத்தும் ஒரு பொருட்டே இல்லை. நீங்கள் ஏற்றுக் கொள்ளாதவரை அவற்றால் உங்களைப் பாதிக்க அல்லது தொந்தரவு செய்ய முடியாது. நீங்கள் அவற்றிற்கு மறுமொழி கொடுக்காத வரையில் அவற்றால் பன்மடங்காகப் பெருக முடியாது. அவற்றிற்கான எதிர் விளைவுகளை நீங்கள் செய்யாதவரை அத்தகைய கருத்துக்கள் நித்தியமானவை இல்லை. நீங்கள் அவற்றைப்பற்றிச் சிந்திக்காத வரையில் அவற்றிற்கென்று எந்த உள்ளார்ந்த அர்த்தமும் இல்லை. நீங்களாகத் திருத்திக் கொள்ளாத வரையில் அவற்றால் உங்களை மாற்ற முடியாது.

உங்களைத் தெரிந்த ஒவ்வொருவருக்கும் உங்களைப்பற்றி ஒரு அபிப்பிராயம் இருக்கப் போகிறது. உங்களைப் பற்றி எதுவுமே தெரியாதவர்கள், உங்களைப்பற்றித் தெரிந்தவர்களை விட வலுவான கருத்தைக் கொண்டிருப்பர். உங்களைச் சந்திப்பவர் அவர்களுடைய அனுபவத்திற்குத் தகுந்தபடி ஒரு கருத்தை உருவாக்குகின்றனர். உங்களைச் சந்தித்தே இராத பலர் மற்றவர்களுடைய கருத்துக்களின் அடிப்படையில் அவர்களது கருத்துக்களை உருவாக்குகின்றனர். இந்த வகையில் தான், இந்தப் பொருள் உலகின் இயல்பு உள்ளது. மிகப்பெரிய ஜனநாயகங்கள், மதங்கள், சமய உட்பிரிவுகள், வழிபாட்டுச் சடங்குகள் ஆகியவை இந்தக் கொள்கையிலேயே இயங்குகின்றன. ஒவ்வொருவரும் ஒரு கருத்தைப் பெற உரிமை பெற்றுள்ளனர். அதை ஏற்றுக்கொள்ள, மறுக்க அல்லது புறக்கணிக்க உங்களுக்கு உரிமை உண்டு. உங்களது தேர்வு தான் உங்களுடைய மகிழ்ச்சியான மனநிலையைப் பாதிக்கிறது.

நீங்கள் உங்களது உள் குரலைக் கவனித்துக் கேட்கத் தொடங்கினால், உங்களுடைய உள் குரலானது உங்களிடத்திலேயே ஒரு பார்வையாளரைக் காணும்போது, புறத்தே உள்ள விஷயங்களைப் பற்றிய கவனம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைகிறது. நீங்கள் பிறரால் எப்படிப் பார்க்கப்படுகிறீர்கள் என்பதைப்பற்றி எப்பொழுது நீங்கள் பாதிக்கப்படாமல் இருக்கிறீர்களோ, அப்போது அமைதியின் போர்வை உங்களைத் திரை இடுகிறது, கிட்டத்தட்ட கவசங்களைப் போல். அமைதியுடன் உள்ள ஒருவர் உண்மையில் மகிழ்ச்சியாகவே இருப்பார். மகிழ்ச்சியானது உங்களது உடல் அல்லது மனத்தின் செயல்களின் விளைவே ஆகும்.

எப்போது, என்ன மற்றும் எங்கு விஷயங்களை வைத்துக்கொள்ள அல்லது கைவிட வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டும். இந்த அறிவு, பயிற்சி மற்றும் விழிப்புணர்வால் வருகிறது. இது அணுகுமுறை மற்றும் கண்ணோட்டத்தைப் பற்றியது. இதுவே உள்நோக்கித் திரும்பும் பயணமாக உள்ளது.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email