மகாமுத்ராவின் ஒன்பது நிலைகள், என் கடந்த இடுகையில் தெளிவுபடுத்தியுள்ள ஒன்பது கவன நிலைகளுக்கு ஒப்பானதாகும். நான் அதிகமாக ஆர்வமுள்ள யோகிகள் அல்லது தீவிரமாகத் தியானிப்பவர்களைச் சந்திக்கச் சந்திக்க, தியானம் பற்றிய எவ்வளவு பெரிய தவறான கருத்துகள் உள்ளன என்பதை நான் உணர்கிறேன். எனக்கு உண்மையில் வலி தருவது என்னவென்றால் பெரும்பாலான நேரங்களில் இது தேடுபவரின் தவற்றால் அல்ல. தவறு செய்பவர் ஆசிரியர் – குருவானவர்.

ஆர்வமுள்ள பெரும்பாலானவர்களை, எதையும் செய்து காட்ட முடியாத ஆசிரியர்களே வழி நடத்துகின்றனர். இந்த ஆசிரியர்கள் அவர்களே தியானத்தின் ஆழம் வரை சென்றதில்லை. ஆனால் சில தத்துவார்த்தங்களை நன்கு தெரிந்து கொண்டு, தனது இரண்டாந்தர அறிவை அடிப்படையாகக் கொண்டு மற்றவர்களுக்கு வழிகாட்டுகின்றனர். இன்று நான் சுருக்கமாக, அமைதிக்கான ஒன்பது நிலைகளைப் பற்றியும், நாம் இரண்டு வாரங்களுக்கு முன்பு எழுப்பிய “இறுதி நிலையை அடைய எவ்வளவு பெரிய முயற்சி தேவைப்படுகிறது?” என்ற கேள்வியின் பதிலையும் கூறுகிறேன்.

நீங்கள் கவனமாக இன்றைய பதிப்பின் படத்தினை ஆய்வு செய்தால், மூன்று முக்கியக் கலைப் படைப்புகளான, ஒரு துறவி, ஒரு யானை மற்றும் ஒரு குரங்கைக் காணலாம். கூடுதலாக, அந்தத் துறவி ஒரு சுருக்குக் கயிறு மற்றும் அங்குசம் வைத்திருக்கிறார். தியானத்தின் கொந்தளிப்பான பாதையில் தியானிப்பவரை அந்தத் துறவி குறிக்கிறார். அந்தப் பாதையை அறிந்து தெளியும் வரை, எந்த இரு நாட்களும் ஒன்றுபோல் இருப்பதில்லை. நீங்கள் நல்ல தியானத்தைச் சில நாட்களும், அதற்கு எதிர் மாறானதை வேறு சில நாட்களிலும் அனுபவிப்பீர்கள். யானை மனச்சோர்வையும், குரங்கு அமைதியின்மையையும் குறிக்கிறது. அங்குசமும், சுருக்குக் கயிறும், விழிப்புணர்வு மற்றும் கவனத்தைக் குறிக்கின்றன.

முதல் கட்டத்தில், தியானிப்பவர் கொந்தளிப்பான கடலில் ஊசலாடும் ஒரு படகு போல் இருக்கிறார். மனதில் எந்தவிதக் கட்டுப்பாடும் இருக்காது. இந்தக் கட்டத்தில் ஒருமுகப்படுத்துதலானது, எங்கெல்லாம் எண்ணங்கள் அலைகின்றனவோ அப்போதே நின்று விடுகிறது. குரங்கும், யானையும் இடைவிடாமல் தியானத்திற்கு இடையூறு செய்கின்றன. மற்றும் தியானிப்பவர் அவற்றை வழிக்குக் கொண்டுவரப் போராடுகிறார்.

இரண்டாவது கட்டத்தில், யானை மற்றும் குரங்கின் மேல் ஒரு சிறிய வெள்ளைப் பூச்சு ஏற்படுகிறது. அது முன்னேற்றத்தைக் காட்டுகிறது. மனம் எண்ணங்கள் அற்று இருக்கும் போது தியானிப்பவர் ஒரு குறுகிய காலத்திற்குத் தரமான தியானம் செய்ய முடியும் என்பதாகும். எப்போதெல்லாம் காற்று வீசுகின்றதோ அப்போதெல்லாம் படபடக்கும் ஒரு கொடியை யோசித்துக் கொள்ளுங்கள். காற்று இல்லையென்றால் படபடப்பும் இல்லை. அதேபோல் இந்தக் கட்டத்தில், எண்ணக் காற்று வீசி, நிலையான உணர்வில் அலைகள் ஏற்படத் தொடங்கும் முன், மனம் ஒரு குறுகிய காலத்திற்கு நிலையாக இருக்கிறது.

பிடிவாதமாகத் தொடர்ந்து தியானிப்பவர் மூன்றாம் நிலையை அடைகிறார். இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும். இப்போது, அவர்களால் தியானத்தின் போது எழும் தங்கள் மந்த நிலையைக் கண்டுபிடிக்க முடியும். இந்த நிலை, படத்தில் யானையின் மேல் ஒரு பெரிய வெள்ளைப் பூச்சாகவும், மற்றும் அது ஒரு சுருக்குக் கயிற்றால் கட்டப்பட்டுள்ளது போலவும் காட்டப்பட்டுள்ளது. அமைதியின்மையும், வழிதவறி அலையும் எண்ணங்களும் இந்தக் கட்டத்தில் இன்னும் ஒரு பெரிய சவாலாக இருக்கும்.

நான்காவது மற்றும் ஐந்தாவது நிலைகளில், தியானிப்பவர் அமைதியின்மை மற்றும் மனச்சோர்வை இன்னும் கூடுதலாக அடக்கி ஒரு மாபெரும் நிலைக்குச் செல்லும் போது, ஒரு புதிய சவால் முளைக்கிறது. இப்போது நீங்கள் ஒரு முயல், யானை மீது சவாரி செய்வதைப் பார்க்கலாம். இது ஒரு அமைதியான மனநிலையைக் குறிக்கிறது. இது தியானிப்பவரை ஒரு மந்தமான, விழிப்பற்ற நிலைக்கு உட்படுத்துகின்றது. மிகச் சிறிய அளவே இந்த அமைதி கிடைக்கப் பெற்ற பெரும்பாலான தியானிப்பவர்கள், இதுவே பேரின்பத்தின் பூரண நிலை என்று தவறாக நினைத்துக் கொள்கிறார்கள்.

ஆறாவது நிலையில், துறவியானவர் குரங்கு மற்றும் யானை ஆகிய இரண்டையும் வழிநடத்தி முன்னால் செல்வதைக் காணலாம். ஆனால் விலங்குகள் இன்னும் முழுமையாக வெள்ளைப் பூச்சில் இல்லை. இதன் அர்த்தம், அந்தத் தியானிப்பவர் பெரும்பாலும் அவற்றை அடக்கி விட்டார் என்றும், அவரால் அவற்றை வழிநடத்த முடியும் என்றும், ஆனாலும் அவரைத் திசை திருப்பக் கூடிய உற்சாகமான அல்லது மதிமயக்க நிலை இன்னும் சில உள்ளன என்பதாகும்.

ஏழாம் நிலையில், யானை முற்றிலும் வெள்ளையாகவும், குரங்கு பயிற்சியாளரின் காலடியில் அமர்ந்தும் காணப்படுகிறது. இது தியானிப்பவர் கிட்டத்தட்டக் கவனிக்கும் கலையில் நிறைவான தேர்ச்சியை அடைந்து விட்டார் என்பதைக் காட்டுகிறது. அவர் தியானத்தின் போது தெளிவான விழிப்புணர்வை அனுபவிக்கிறார். ஆனால் குரங்கின் இருப்பு, உற்சாக உணர்வு அல்லது படபடப்பு இன்னும் இருக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது. தெளிவான ஒரு குளத்தில் மிகச் சிறிய கூழாங்கல்லைப் போட்டால் கூட அது சிற்றலைகளை உருவாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எட்டாவது நிலையில், அங்குக் குரங்கு இல்லை. அமைதியின்மை முற்றிலும் மறைந்து, ஒரு நிலையான பேரின்பம் எப்போதும் அந்தத் தியானிப்பவரை அமைதியில் இருக்க வைக்கிறது. ஆனால், சில நேரங்களில் இந்தப் பேரின்பநிலையில், அவர்களது விழிப்புணர்வில் உள்ள தெளிவு பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஒரு லேசான போதையால் பாதிக்கப்பட்ட ஒருவரை யோசித்துப் பாருங்கள். இந்தக் கட்டத்தில், தியானிப்பவர் பேரின்ப நிலைக்கு மேலே உயர இன்னும் கற்றுக் கொள்ளவில்லை.

ஒன்பதாவது நிலையில், துறவி வெள்ளை யானையுடன் கீழே அமர்ந்திருக்கிறார். பேரின்பம் இப்பொழுது நெருங்கிய தோழனாகி விட்டது மற்றும் அது இனி எந்த ஒரு உலக நடவடிக்கையிலும் தலையிடுவதில்லை. அனைத்து மனம் மற்றும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளும் அடங்கி, எண்ணங்களின் போர்த் தொடுப்பு நின்று, கிட்டத்தட்டத் தியானம் செய்ய எந்த முயற்சியும் இப்போது தேவைப்படுவதில்லை. தியானிப்பவரே இப்பொழுது தியானமாக மாறிவிட்டார்.

இவற்றைத் தாண்டிய நிலை, துறவி, யானைச் சவாரி செய்வதைக் காட்டுகிறது. மற்ற பரிமாணங்களின் இருப்பை இது குறிப்பிடுகின்றது. நிரந்தரமான பேரானந்தத்தால் தியானிப்பவர் எப்போதும் அமைதியில் இருக்கிறார். எந்தவித உள்மனப் போராட்டமும், மன அழுத்தமும் முற்றிலும் மறைந்துவிடுகிறது. தியானிப்பவர், தியானத்தையும் கடந்து சென்றுள்ளார். “ஒரு விஷயத்தின் உண்மையைத் தெரிந்த ஒருவர் எல்லாவற்றின் உண்மையையும் தெரிந்தவராகிறார்”, என்று புத்தர் ஒரு முறைக் கூறினார். இது இந்தத் தியானிப்பவருக்கும் பொருந்தும்.

யாராவது இந்த நிலையை அடைய முடியுமா? முடியும். அதற்கு என்ன தேவைப்படுகிறது? விருப்பம், விடாமுயற்சி, மற்றும் காலம்; தீராத விருப்பம், இடையறா விடாமுயற்சி மற்றும் நிறைய நேரம். உங்களுக்கு ஒரு பரந்த வழிகாட்டுதலைத் தருகிறேன்: ஒவ்வொரு கட்டத்தையும் கடக்க 1500 மணி நேரத் தரமான தியானம் தேவைப்படுகிறது.

ஒழுக்கம் மற்றும் தரமான முயற்சியால், நீங்கள் அதை 1200 மணி நேரமாகக் குறைக்க முடியும். சரியான தீட்சை மற்றும் வழிகாட்டலால் ஒவ்வொரு கட்டத்தையும் 800 மணி நேரத்தில் கடக்க முடியும்.

அப்படியானால், யாரால் தீட்சை கொடுக்க முடியும் மற்றும் யாரால் உங்களுக்கு வழிகாட்ட முடியும்? அதை உங்களுக்கு அளிப்பவர் ஒரு சரளமான பேச்சாளரா, ஒரு பித்தலாட்டக்காரரா அல்லது ஒரு உண்மையான பயிற்சியாளரா என்று எப்படிக் கண்டுபிடிப்பது? மற்றொரு முறை கூறுகிறேன்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email