ஒரு சில வாசகர்கள் இதைப்பற்றிய கேள்விகளுடன் எனக்குக் கடிதம் எழுதியிருந்தனர். அவர்கள் பேரழிவு, பூகம்பங்கள், சுனாமி, சூறாவளி போன்ற இயற்கைச் சீற்றங்கள், போர், இனப்படுகொலை, விமான விபத்துகள், படுகொலைகள் போன்றவற்றில் கர்மாவின் இடம் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புவதாக எழுதியிருந்தனர். இதைப் பற்றிய என் பார்வையை நான் பகிர்ந்து கொள்கிறேன்.

நான் முன்பு எழுதியது போல், ஒவ்வொரு நிகழ்விற்கும் மற்றும் எல்லாவற்றிற்கும் கர்மாவின் சட்டமே பதிலாக இருக்கும் என்று நான் நம்பவில்லை. கோட்பாடுகளை மறுசீரமைக்க முடியும். ஒரு சதுரக் கட்டையை, ஒரு வட்டத் துளைக்குள் கட்டாயமாக அழுத்தி, சுற்றியுள்ள இடைவெளியைப் பிசின் கொண்டு அடைத்து, சரியாகப் பொருந்தி உள்ளதாக மாயையை உருவாக்க முடியும், என்றாலும் அது தற்காலிக ஆறுதலையே கொடுக்கும், ஒரு குறுகிய ஆறுதல் தான்.

நான் உங்கள் கேள்விக்குப் பதில் கொடுக்கும் முன், இந்தக் கேள்விகள் வடிவமைக்கப்பட்ட மனதால் மட்டுமே கேட்கப்படும் கேள்விகளாகும் என்பதை நினைவில் கொள்வது முக்கியமானதாகும். வடிவமைப்பால் மூடப்பட்ட உணர்வுமனம், கணக்கீடுகள், ஆய்வு, கண்டுபிடிப்பு ஆகியவற்றால் மகிழ்ச்சி அடைகிறது. அது ஆர்வத்தால் செழித்தோங்குகிறது, அறிந்து கொள்ளும் ஆர்வத்திற்கு உணவளிக்கிறது. இதனால் எந்தத் தவறும் இல்லை, உண்மையில், இந்த மனிதப் பண்பு தான், நாம் ஆச்சரியப்படும்படியாக, நாம் சந்தோஷப்படும்படியாக, மற்ற இனங்களை ஆட்சி செய்யும்படியாக, நம் இனத்திற்கு உதவியது. அது நல்லதோ, கெட்டதோ அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விளக்கவுரை ஆகும். பின்வருவதைக் கருத்தில் கொள்க:

1. கேள்வி கேட்கும் மனம்

முடிவில்லாமல் கேள்விகளைக் கேட்கும் மனம் ஒரு புறம் என்றும், அதைப் பற்றி உரையாற்றுவதும், களத்தில் எதிர் கொள்வதும், ஏமாற்றுவதும், பதில் அளிப்பதும் அதே மனம் தான் என்றும் கற்பனை செய்து பாருங்கள். இப்படித்தான் பல ஆயிரம் ஆண்டுகளாக மனித அறிவு உருவாகியிருக்கலாம். இது ஒரு குழந்தையின் கையில் களிமண்ணை வழங்குவது போன்றதாகும். குழந்தை ஆசை உள்ளவரைப் பலவித சிலைகளை வடிவமைத்து விட்டு, பின்னர் அவை அனைத்தையும் ஒன்றாக்கி ஒரு பந்து போல் செய்து மூலையில் போட்டு விடுகிறது. களிமண் சிலைச் செய்யும் ஆசை தீரும்வரை, அந்த எண்ணத்திலிருந்து வெளியே வரும் வரை அல்லது மற்றொரு பொம்மையைப் பெறுகிறவரை அந்தக் குழந்தை அதே செயல்முறையை மீண்டும் மீண்டும் செய்யலாம். அதைப்போலவே, உங்கள் உணர்வுமனம் உங்களைச் சுருசுருப்பாகவும், ஆர்வமுடனும், ஈடுபாட்டுடனும் வைத்திருக்கிறது. பின்னர் அது சோர்வடைகிறது. பௌதீக விஷயங்களைப் போல், மனம் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது, அதை எப்போதும் மாற்ற மட்டுமே முடியும். இன்று அறிவு பூர்வமாகத் திருப்தி அடைந்த ஒரு தத்துவம் நாளை மற்றொரு தத்துவத்திற்கு வழி கொடுக்கக் கூடும். “நீங்கள் ஒருவித மனக் கண்ணோட்டத்தில் உருவாக்கிய ஒரு பிரச்சினையை, அதே மனக் கண்ணோட்டத்தில் தீர்க்க முடியாது”, என்று ஐன்ஸ்டீன் பொருத்தமாகக் கூறியுள்ளார்.

2. அமைதியான மனம்

இப்போது, முந்தையதற்கு மாறாக, எல்லையில்லாத கடல் போன்ற பேரின்பத்தில் மூழ்கிய, அமைதி அடைந்த ஒரு மனதினைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அது எச்சரிக்கையாகவும், உணர்வுடனும், உண்மையில் ஆதீத உணர்வுடனும் இருக்கிறது. ஆனால் அது, சில தத்துவங்கள், புலனாகாத கோட்பாடுகளைத் தெளிவாகத் தெரியக்கூடிய ஆய்வுக் கட்டுரைகளாக ஆக்குதல் போன்றவற்றைப் பற்றி எண்ணற்ற கேள்விகளால் உங்களை மூழ்கடிப்பதில்லை; மாறாக, அது உங்களை ஒருமுகப்பட்ட கவனத்துடன், உங்கள் சக்திகளை ஒழுங்காகத் திசைதிருப்பி, ஒருமுகமாக உங்களது விழிப்புணர்வை அதிகரித்து, முற்றிலும் புதிய நிலையில் உங்களை வைத்திருக்கிறது. உங்களுடைய மிக ஆழமான பதில்கள் அமைதியான ஒரு மனநிலையின் போது தான் வெளி வருகிறது. அமைதியான மனநிலையில் தான் முக்கியமாக அறிய வேண்டியது என்ன, அல்லது மிகவும் பொருத்தமானது எது என்று நீங்கள் புரிந்து கொள்ளத் தொடங்குகிறீர்கள். உங்களுக்குக் கிடைக்கும் பதில்கள் இனி, மேலும் மேலும் கேள்விகளையும், பதில்களையும் உற்பத்தி செய்யாது. இது ஒரு முற்றுப்புள்ளிக்கு வந்துவிடும். நான் சொல்வதைப் புரிந்து கொள்ள நீங்களும் அந்த நிலையை அனுபவிக்க வேண்டும். நான் உங்களுக்குப் பாதையை மட்டும் தான் காட்ட முடியும். உங்களுடைய விடுதலையைக் கைப்பற்றிக் கொள்ளுதல் முற்றிலும் உங்களைப் பொறுத்தே உள்ளது. இது அடுத்தவரிடமிருந்து கிடைத்த இரவல் அறிவில் இருந்து வருவதில்லை, உள்ளிருந்து உதிக்கும் ஞானத்திலிருந்து வருகிறது. இது உங்கள் மனதை அமைதிப் படுத்தியதின் விளைவு ஆகும், எனவே நீங்கள் உண்மையான உங்களைப் பார்க்கலாம். தெளிவான நீரின் கீழே என்ன உள்ளது என்பதை நீர் அசையாமல் இருக்கும் போது பார்ப்பது எளிதாக இருக்கும்.

தொடர்ந்து பேரின்பத்தை அனுபவிக்க, மனம் அமைதி அடையும் பாதையில் ஒரு சீரான ஓட்டத்தில் செல்ல நான் உங்களை ஊக்குவிக்கிறேன். உங்களுக்கு அனைத்துப் பதில்களும் கிடைக்கும். மேலும் முக்கியமாக, உங்களுக்கு அனைத்துச் சரியான கேள்விகளும் கிடைக்கும்.

இப்போது உங்கள் கேள்விக்கு வருவோம்; அதை இரண்டு பகுதிகளாக நான் பிரித்துக் கொள்கிறேன்:

1. இயற்கை இடர்பாடுகள்

நமது கிரகம் சொந்தமாகத் தானே சமாளிக்கும் ஒரு வழிமுறையை வளரச் செய்துள்ளது. படிப்படியாக உருமாறும் ஒரு சுற்றுச்சூழல், அதன் வாழ்வாதாரத்திற்கான ஒரு பொறுக்கும்படியான சுழற்சியை உருவாக்கியுள்ளது, அதன் ஜீவனத்திற்கு அது மனித இனத்தைச் சார்ந்து இல்லை, மற்றும் அது நம்மை ஒரு எறும்பை விட முக்கியமானதாகப் பார்ப்பதில்லை. நம்மைப் போன்ற நியாயம் அதற்கு இல்லை. அது அவ்வாறு பார்த்தால் நாம் எப்போதோ அழிந்திருப்போம். இயற்கையின் நடவடிக்கைகள் அதன் இருப்பைத் தக்கவைப்பதற்கான சாதாரணமான ஒரு திருத்த செயலாகும். எரிமலை வெடித்துத் தீப்பிழம்பு வெளிப்படுவதோ, பூமியதிர்வடைந்து முரண்பாடுகள் ஏற்படுவதோ, எதுவாக இருந்தாலும் அது பகுத்தறிந்து செய்வதில்லை. எப்படி நாயானது நீராடிவிட்டு அதன் மேலே உள்ள நீரை உதறித் தள்ளுகிறதோ, பாம்பானது தனது பழைய தோலை உரித்து விடுகிறதோ, அப்படியே இயற்கையானது, தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது, மாற்றி அமைத்துக் கொள்கிறது, புத்துணர்ச்சி அடைகிறது.

வெண்ணெய்யை வெப்பத்திடம் எடுத்து வரும் போது அது உருகுகிறது அதுபோல் பெரும்பாலான விஷயங்கள் இயற்கையின் ஒரு ஒழுங்கு முறையில் அற்புதமாக நடக்கிறது. அது நிச்சயமாகக் கிருபையோ, அல்லது வருத்தத்தைத் தரும் ஒரு செயலோ அல்ல. உதாரணமாக, ஒரு சூறாவளி ஒரு கைவிடப்பட்ட தீவில் நிகழும் போது, எந்த இழப்பிற்குமான உணர்வு இல்லை, எவரும் பாதிக்கப்படமாட்டார்கள், ஏனெனில் அங்கு எவருமே வாழவில்லை, ஆகையால் ஊடகங்களும் அதைக் காண்பிப்பதில்லை. ஆய்வாளர்கள் இதற்கான தீர்வுகளை, காரணங்களைச் சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் கண்ணோட்டத்தில் தேடுவார்கள்; சில ஆச்சரியத்திற்குரிய ரகசியமான தத்துவம், மதம் மற்றும் யாருக்கும் விளங்காத பழங்காலச் சட்டங்கள் மூலம் இதைக் கண்டுபிடிக்க முனைவது மிகவும் அரிதான செயலாகும். ஏனென்றால் முக்கியமாக, ஒரு பற்றுதல் உணர்வு இங்குக் காணப்படுவதில்லை. ஆனால், அதே சம்பவம் அடர்த்தியான ஜனத்தொகை உள்ள ஒரு கரையோரப் பகுதியில் நடைபெற்று அதிக இறப்புக்களை ஏற்படுத்தியிருந்தால், நாம் ஒரு பதிலைத் தேடி மதம், தத்துவம், குறிகேட்டல், கடவுள்பக்தி இதே போல் பலவற்றை ஆராயத் தொடங்குவோம். நீங்கள் இதை ஏற்றுக்கொள்வதற்கு ஒத்துக்கொள்ளாமலும் இருக்கலாம், ஆனால் ஒன்றுவிடாமல் எல்லா மதங்களும், வெறும் தத்துவங்களாகவே உள்ளன; எடுக்கப்படும் நடவடிக்கைகள் சடங்குகள் என அழைக்கப்படுகின்றன. பெரிய ஆன்மீகத் தலைவர்கள் தங்கள் ஞானத்தை அவர்களைப் பின்பற்றுபவர்களுக்கு அளிக்க, அவர்கள் அதை மதங்களாக வடிவமைத்து விட்டனர்.

2. நம்மால் உருவாகும் பேரழிவுகள்

எனக்குக் கிடைத்துள்ள தகவல்கள் உண்மையாக இருக்குமானால், ஒவ்வொரு நிமிடமும், இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட மக்கள் பூமியில் இறக்கின்றனர். அது இயல்பானது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது, அது நிலையான இறப்பு விகிதம் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். எனினும், ஒரு விமான விபத்தில் இருநூறு பேர் இறந்தால் அல்லது போரில் நிறையப் பேர் இறந்தால், அதை மனிதக்குலத்திற்கு எதிரான குற்றமாக, அசாதாரணமானதாக முத்திரை இடுகிறோம்; கண்டிப்பாக அது அசாதாரணமானது தான். இருந்தாலும், அளவில் பெரியதாக இருப்பதாலோ, அல்லது வீரிய சக்தி அதிகமாக உள்ளதாலோ திருப்தியான விளக்கம் அளிக்க, ஓர் அறிவார்ந்த கருத்தைக் கொடுக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. ஒரு மதக் கோட்பாடு அல்லது உலகத்தின் பொதுவான தத்துவத்தின் அடிப்படையில் பதில்களைத் தேடுவது அசாதாரணமானது தான்.

போர்களின் பின்னால், பெரும்பாலான குற்றங்களின் பின்னால், தவறாக வழிநடத்தப்பட்ட மனிதனின் போட்டி மனப்பான்மை, தவறான உணர்வுகள், தவறான ஆற்றல் ஆகிய கொடூரமான நடவடிக்கைகள் எப்பொழுதுமே மறைந்துள்ளன. அதிகாரத்தின் மேல் உள்ள பேராசை, தவறான வழியில் வரும் ஆதாயம், பதவி இவற்றால் உந்தப்பட்டு, அவர்களது அகங்காரம், காமம் இவற்றைப் பூர்த்தி செய்ய அவர்கள் போற்றிவரும் அறியாமையின் இருண்ட செயல்கள், ஒரு காட்டுமிராண்டி மனத்தின் தெளிவான அறிகுறிகள் ஆகும்.

நம்மிடம் ஒரு பரிணாமமடைந்த அறிவாற்றல் உள்ளதால் (ஆஹா! என்ன புகழ்ச்சி), நமக்கு நாமே முக்கியத்துவம் கொடுத்துக் கொள்ள விரும்புகிறோம். எப்படியோ நாம் இயற்கை, கடவுள், மற்றவர்கள், இந்த உலகம், நமக்கு ஏதாவது தரவேண்டும் என்று நினைக்கிறோம். நம் வாழ்க்கை, நம் மரணம், ஒவ்வொரு சம்பவம், ஒவ்வொரு கட்டம், ஒவ்வொரு நிகழ்விலும். ஒரு பொருள் இருக்க வேண்டும் என்றும், தணியாத ஆர்வத்துடனான வடிவமைக்கப்பட்ட மனதைச் சமாதானப்படுத்த, அதற்கு ஆதரவு தரும்படியான சில அறிவார்ந்த பதிலைத் தரவேண்டும் என்றும் நம்புகிறோம். சில கோட்பாடுகள், அறிவியல் அடிப்படை, காரணம் மற்றும் விளைவு ஆகியவை இருக்கலாம். இவை உங்களிடம் இருப்பதால் ஒரு முழுமையான காரணம் உள்ளது என்று அர்த்தம் இல்லை. விரும்பத்தகாத ஏதாவது நடக்கும் போது, பிரார்த்தனை செய்தால், கடவுள் வழிபாடு செய்தால், கெட்டவை எதுவும் நடக்காது என்று நம்ப நம்மில் பெரும்பாலோர் பழக்கப் படுத்தப்பட்டுள்ளதால், நமக்கு ஒரு விடை தேவைப்படுகிறது; அதில் இருந்து நீங்கள் உங்கள் சொந்த உண்மையைப் பெறுகிறீர்கள்.

எனவே பிரார்த்தனை, தெய்வீக அருள் மற்றும் கடவுள் இவை நம்மை எங்கு இட்டுச் செல்கின்றன? அவற்றுக்கு ஏதாவது அர்த்தம் உள்ளதா? நிச்சயமாக, அவற்றுக்கு அர்த்தம் உள்ளது. அவற்றால் உங்களுக்கு உதவ முடியுமா? பந்தயம் வையுங்கள். அடுத்த இடுகையில் இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் இதைப்பற்றி எழுதுவேன்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email