இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தியான முகாமில், நாம் அனைவருமே ஒன்றாகத் தியானம் செய்யக்கூடிய ஒரு பயன்பாட்டை அபிவிருத்தி செய்யப் போவதாக அறிவித்தேன். நான் அதைப் பின் ப்ரிக் எஃபெக்ட் (Pin Prick Effect) என்று அழைத்தேன் மற்றும் அதைப் பற்றி கொஞ்சம் இங்கே விளக்கினேன். இதைப் பற்றி யோசிக்கையில், இந்தத் திட்டத்தில் என்னுடையது என்று எதுவும் இல்லை, ஏனென்றால் நமது கிரகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மக்கள் முன்பே குழுக்களாகத் தியானம் செய்துள்ளனர். ஏறக்குறையப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், மிகவும் புத்திசாலியான ஜிக்யாசா சாயி என்ற ஒருவர், இதைப் போன்ற ஒன்றை, உலகின் பல பகுதிகளிலிருந்தும் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து ஒரே நேரத்தில் தியானம் செய்ய உட்காருவதைப் பற்றி என்னிடம் குறிப்பிட்டார். 5 நிமிட உரையாடலில் அவ்வளவு தான் கூறினார்.

அந்த நேரத்தில், அதைப்பற்றி நான் அதிகம் சிந்திக்கவில்லை மற்றும் நிச்சயமாக அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் கூறியதையும், அதற்கும் மேலே இன்னும் அதிகமாகச் செய்ய உதவும் ஒரு பயன்பாட்டை நாம் ஆரம்பிக்கப் போகிறோம். ஆகவே முதலில், இந்த யோசனை அல்லது பயன்பாட்டிற்கான எந்தப் புகழையும் நான் எடுத்துக் கொள்ள விருப்பப்படமாட்டேன். இருந்தாலும் உண்மையில், நான் சொந்தமாக இந்த யோசனையைப் பெற்றதாகத்தான் நினைத்தேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு, 12 வருடங்களுக்கு முந்தைய இந்த உரையாடலை நான் நினைவு கூர்ந்த போது, என் முட்டாள்தனத்தை உணர்ந்ததேன். அவர்கள் சொல்வதைப் போல, உங்கள் கருத்து எவ்வளவு தான் புத்திசாலித்தனமாக இருந்தாலும், உலகின் ஐந்து சிறந்த மனிதர்கள் அதே கருத்தில் வேலை செய்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அதற்கு அடுத்த நிலையையும் பற்றி ஏற்கனவே யோசித்து இருப்பார்கள்.

இரண்டாவதாக, இந்தச் சிறிய பயன்பாட்டைப் பார்த்தால், இதற்காக எவ்வளவு முயற்சி எடுக்கப்பட்டது என்று கற்பனை செய்வது கடினம். மற்ற குழு உறுப்பினர்களின் முயற்சியுடன் ஒப்பிடுகையில், என் சொந்த முயற்சி (சுமார் 400 மணி நேரம்) ஒரு சிறிய பின்னமாகும். அவர்களின் பெயர்களையும், அவர்களின் மகத்தான பங்களிப்பையும் பட்டியலிட வேண்டும் என்றால் இந்த இடுகை மிக நீண்டதாகிவிடும். அவர்களில் பெரும்பாலானவர்களின் பெயர்கள் இந்தப் பயன்பாட்டின் “அபௌட் (About)” பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன. தயவுசெய்து பயன்பாட்டில் உள்ள அந்தப் பகுதிக்குச் சென்று பார்க்கவும். சிலர் அவர்களது உள்கட்டமைப்பு மற்றும் பிற ஆதாரங்களை அளித்துள்ளனர், சிலர் நிதி உதவியும், மற்றவர்கள் அவர்களது திறனையும், திறமைகளையும், பங்காக அளித்துள்ளனர். நமது தியானத்தில் பயன்படுத்தப்படும் இசையின் உரிமத்திற்கே பல ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவாகிவிட்டன.

முழுவதுமாக, இது உங்கள் யோசனை, உங்கள் பயன்பாடு. இது உங்களால், உங்களுக்காக உருவாக்கப்பட்டது.

சொல்லப் போனால், அந்த யோசனை, பயன்பாடு அல்லது அதன் கிடைக்கும் தன்மை மட்டுமே, நம்மை எங்கும் அழைத்துச் செல்லாது.

1965 இந்திய-பாகிஸ்தான் போரில், பாகிஸ்தான் இராணுவம் அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட குண்டு துளைக்க முடியாத பாட்டன் டாங்குகளை (Patton tanks) வாங்கி இருந்தது. பாகிஸ்தான் அவர்களுடைய போர்க் கவசங்கள் குண்டுகளால் துளைக்க முடியாதது என்று கூறியது. பல போர்களில் வெற்றி பெற்று, போர்க்களத்தில் சுதந்திரமாக சுற்றித் திரிவோம் என்றும், அவர்கள் விரும்பியபடி பாதுகாப்பு இடத்திலிருந்தே ஒரு நியமனத்தைப் போடப் போகிறோம் என்றும் கூறினர்.
“ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு இருக்கிறது,” என்று தலைமை வகித்த, உயரமான சீக்கிய மனிதரான, இந்தியத் தளபதி கூறினார். “இதற்கும் ஒரு வழி இருக்க வேண்டும்.”
டாங்கியின் ஒரே புள்ளியில் மிகச் சரியாகத் தொடர்ந்து குண்டு பாய வைக்கும்படிக் கூறி, தனது ஆட்களை அனுப்பினார்.
“அந்தக் கவசம் வெப்பம் மற்றும் நிலையான குண்டு வீச்சின் சக்தியின் கீழ் உருகும்,” என்று அவர் கூறினார்.
அது வேலை செய்தது! பின்னடைவில்லாத துப்பாக்கிகளில் இருந்து வந்த ஒரே சீரான குண்டுகள், சூடான கத்தி வெண்ணெய்க்குள் ஊடுருவிச் செல்வதைப் போல், அந்த டாங்கிகளுக்குள் நுழைந்தன. இறுதியில் இந்தியர்கள் பல (97) பாட்டன் டாங்கிகளைக் கைப்பற்றினர். அன்றிலிருந்து அந்த நகர், பாட்டன் நகர் என்று அழைக்கப்படுகிறது.

எனவே, வெற்றிக்கான முக்கிய காரணம், என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் தெரிந்து கொள்வது அல்ல, இலக்கை அடையும் வரை குறிப்பிட்ட உறுதிப்பாடு, தொடர்ந்த நிலைத்தன்மை மற்றும் துல்லியத்துடன் உண்மையிலேயே செயல்படுவதாகும். பிளாக் லோட்டஸிலும் அதே போல் தான். தியானிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக ஆக இதன் பலனும் அதிகரிக்கும். அதிகமானவர்கள் இருப்பது சிறப்பு சேர்க்கும். இந்தப் பயன்பாட்டின் முக்கிய அம்சங்கள் சில இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன:

1. உலகளாவிய தியானம்

மாதத்தின் ஒவ்வொரு 2 வது மற்றும் 4 வது சனிக்கிழமை, நாம் மாலை ஆறு மணிக்கு (6pm IST) ஒன்றாகத் தியானிப்போம். இது கிட்டத்தட்ட 7 நிமிடத்திற்கான தியானம். இந்த அமர்வு முடிந்தவுடன், அது பயன்பாட்டில் “கடந்தகால தியானங்கள் (Past Meditations)” என்ற பிரிவில் இருக்கும். இதனால் நீங்கள் அதை உபயோகித்து மீண்டும் தியானிக்கலாம். என் தனிமை முடிவடையும் வரையில், எந்தவொரு இணையதள அணுகு முறையும் எனக்கு இருக்காது. எனவே, இந்தத் தியானங்கள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு உள்ளன. ஆனால், நான் என் தனிமையிலிருந்து வெளியே வரும் வரை எல்லா உலக தியானத்திலும் உங்களுடன் சேருவேன். இது உங்களுக்கு நான் அளிக்கும் வாக்குறுதி..

2. தனிப்பட்ட தியானம்

இரக்கம், மன்னிப்பு, அமைதி, நன்றியுணர்வு மற்றும் பலதரப்பட்ட வகைத் தனித்தனி தியானங்களிலிருந்து, சுய-கண்டுபிடிப்புக்கான பயணத்தை மேற்கொள்ள நான் உங்களை அழைக்கிறேன். ஒவ்வொரு தியானமும் வழிகாட்டுதல் (என் குரலுடன்) அல்லது தனியாக (இசை மட்டுமே) அமைக்கப்பட்டுள்ளது. உங்கள் பயன்பாட்டிலிருந்து இந்தத் தியானங்களை நீங்கள் இயக்கலாம், அல்லது நீங்கள் அவற்றைப் பதிவிறக்கம் செய்யவும் முடியும், அதாவது நீங்கள் தியானத்தைப் பதிவிறக்கம் செய்ததும், உடனடியாக அதை உபயோகப்படுத்த முடியும்.(தியானம் செய்ய நினைக்கும் போது பதிவிறக்கம் செய்யக் காத்திருக்க வேண்டாம்) அதன்பிறகு எப்போது வேண்டுமானாலும் கிளிக் செய்து ஆரம்பிக்கலாம்.

3. வீடியோக்கள்

இந்தப் பயன்பாட்டிற்கு என்றே பிரத்தியேகமாக 19 சுருக்கமான வீடியோக்களை நான் பதிவு செய்துள்ளேன். ஆரம்பத்தில், நீங்கள் இந்த வீடியோக்களில் 5 ஐக் காண்பீர்கள். இந்தத் தொடர் தீர்ந்துவிடும் வரை ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய வீடியோ வெளியிடப்படும். முதல் வீடியோவில் நான் இந்த பிளாக் லோட்டஸ் ஆப்-ஐ, பின் ப்ரிக் எஃபெக்ட் என்றே குறிப்பிட்டு உள்ளதைக் கவனிக்கலாம். ஏனென்றால் இது பிப்ரவரி மாதம் பதிவு செய்யப்பட்டது. நாங்கள் இந்தப் பயன்பாட்டை உபயோகத்திற்குக் கொண்டுவர முயற்சித்தபோது, கூகுல் ப்ளே (Google Play) இந்தப் பெயர் அதன் கொள்கைகளை மீறுவதாகக் கூறி, அந்தப் பெயர் எங்களுக்கு மறுக்கப்பட்டது. இன்னும் அழகான, பிளாக் லோட்டஸ் இப்படித் தான் பிறந்தது. புரிந்துகொள்ள முடிந்த வகையில், எங்களது குழுவில் யாரும் ‘ப்ரிக்’ என்ற பெயரைப் பயன்படுத்தவில்லையே என்று புகார் செய்யவில்லை..

4. மேற்கோள்கள், நகைச்சுவை, செய்திகள் & நிகழ்வுகள் மற்றும் புத்தகங்கள்.

இந்தப் பிரிவுகள் அடிக்கடி சென்று படிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன, அங்கு நீங்கள் அமைதியாகப் புத்தகங்கள், நிகழ்வுகள் ஆகியவற்றைக் கொண்டு அமைதியாக உங்கள் நாளைக் கழிக்கலாம். அதுவும் குறிப்பாக வேலையின் ஒரு முக்கியமான கூட்டம் (meeting) அல்லது உங்கள் காலாண்டு மதிப்பீட்டில் இருக்கும்போது இது பயனுள்ளதாக இருக்கும்!

5. வெளியீட்டு அட்டவணை

  1. நவம்பர் வரை, ஒவ்வொரு முதல் சனிக்கிழமையும் ஒரு தனிப்பட்ட தியானம், பயன்பாட்டில் வெளியிடப்படும்.
  2. மாதத்தின் ஒவ்வொரு 2 வது மற்றும் 4 வது சனிக்கிழமை ஒரு புதிய உலகளாவிய தியானத்தைச் செய்ய முடியும்.
  3. ஒவ்வொரு 3 வது சனிக்கிழமையும் தியானத்தைப் பற்றிய புதிய வீடியோப் பேச்சு, பயன்பாட்டில் வெளியிடப்படும்.

6. முக்கிய விஷயங்கள்

  1. அதிகபட்ச நன்மைகளைப் பெற உங்கள் ஹெட்ஃபோன்கள் / இயர்ஃபோன்களுடன் அனைத்துத் தியானங்களையும் செய்யும்படியாக, நான் பரிந்துரைக்கிறேன். இந்தத் தியானத்தின் ஒலி வேண்டுமென்றே ஒரு குறிப்பிட்ட சிறந்த ஒலி அலையில், ஹெட்ஃபோன்கள் தேவைப்படும் விதத்தில் வைக்கப்பட்டு உள்ளது. நிச்சயமாக, நீங்கள் விரும்பினால் ஹெட்ஃபோன்கள் இல்லாமலும் செய்ய முடியும்.
  2. இது ஒரு பேட்டா (beta) பதிப்பாகும். நாங்கள் முயற்சித்துள்ளோம், ஆனால் தயாரிப்பில் எவ்வாறு வரும் என்பது எங்களுக்குத் தெரியாது. எனவே, பொறுமையாக இருங்கள். பயன்பாடு செயலிழந்தாலோ அல்லது தியானத்தைப் பதிவிறக்கம் செய்வது மெதுவாக இருந்தாலோ, தயவுசெய்து பொறுத்துக் கொள்ளுங்கள். இது நீங்கள் பொறுமையை உருவாக்கிக் கொள்ள உதவுவதற்கான பயன்பாட்டின் ஒரு அம்சமாகும்.
  3. நீங்கள் ஆஸ்ரமத்தின் இணையதளத்தில், (இங்கே) தொடர்புப் படிவத்தைப் பயன்படுத்தி நிர்வாக குழுவுக்கு, இந்தப் பயன்பாடு பற்றிய உங்கள் கருத்துக்களை வழங்க முடியும். அல்லது நீங்கள் blacklotusapp.org என்ற இணைய தளத்திற்குச் சென்றும் கருத்துக்களைச் சொல்லலாம்.
  4. ஒரு தியானம் அல்லது ஒரு சொற்பொழிவு, பயன்பாட்டில் வெளிவந்த ஒரு மாதம் கழித்து, அது பிளாக் லோட்டஸ் யூ-ட்யூப் சேனலில் (Black Lotus YouTube channel) கிடைக்கும் (இங்கே). வேண்டும் என்றால் அதற்கும் பதிவு செய்துகொள்ளுங்கள். இது சில அழகான பஜனைகளையும், இன்னும் பல இசை வீடியோக்களையும் கொண்டிருக்கும். இசை மட்டுமே கொண்ட தியானத்திற்கு (குரல்வழி இல்லாமல்), இந்தப் பயன்பாடு மட்டுமே, ஒரே சேனல் ஆகும்.
  5. எனது சேனலில் (omswamitv) ஒவ்வொரு வாரமும் வரும் வீடியோக்கள் மற்றும் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை வரும் பதிப்புகள் தொடர்ந்து வரும்.

பயன்பாட்டு செயல்திறன், சிக்கல்களின் அடிப்படையில் சில தடைகள் இருக்கப் போகின்றன, ஆனால் பதிப்பின் அடுத்த நிலையைக் கொண்டு வரும்வரை, உங்களுடைய சொந்த நலனுக்காகவும், சமூகத்தின் நன்மைக்காகவும், பொறுமையுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இனி வரும் நாட்களில்

குழு தொடர்ந்து பயன்பாட்டை இன்னும் நன்றாகச் செய்வதற்கும், மேலும் வலுவான நிலைகளைக் கொண்டு வருவதற்கும் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. பல திட்டமிட்ட மேம்பாடுகளைத் தவிர, இப்போது ரகசியமாக வைக்கப்பட்டுள்ள, மிக அற்புதமான அம்சம் ஒன்றும் இருக்கிறது. உண்மையில், அது மிக ரகசியமானது, எனக்குக் கூட அது என்னவென்று தெரியாது (வெறும் நகைச்சுவைக்காக). இப்போது உள்ள நிலையில், அடுத்த வருடம் அது வெளியிடப்படும்.

இந்த விலைமதிப்பற்ற பயன்பாடு முற்றிலும் இலவசம். நள்ளிரவில் நிறைய நேரம் செலவிடப்பட்டு, இரவு உணவை மறந்து, ஆனால் எவரது இதயத்தையும் புண்படுத்தாமல் இந்த பிளாக் லோட்டஸ் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இறுதியாக, இங்கே பயன்பாட்டு பதிவிறக்க இணைப்புகள் உள்ளன:

ஐ-போன்களுக்கும், ஐ-பாடுகளுக்கும்.
ஐ-பாட்களுக்கு. 
எல்லா அண்ட்ராய்டு போன்களுக்கும், டேப்லெட்டுகளுக்கும்.

நீங்களும் ஒரு முயற்சி செய்து, இந்த முழு உலகத்தையும் ஒரு குடும்பமாகக் காண்பதற்கும், ஒவ்வொருவரும் மற்றவரின் நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்வதற்கும் இந்த அழகான பயணத்தில் சேர்ந்து கொள்வீர்கள் என நம்புகிறேன் – எல்லைகள், பிரதேசங்கள் மற்றும் மதங்களுக்கு அப்பாற்பட்டு.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email