சத்தியத்தைத் தேடும் ஒரு மனிதர், ஒரு முனிவர்களின் மடாலயத்திற்கு வந்து சேர்ந்தார். அவர் குருவின் முன் விழுந்து வணங்கி, தஞ்சம் கோரினார். குரு அவரைச் சீடராக்கிக் கொள்ள இசைவதாகவும், ஆனால் சீடர் கடைப்பிடிக்க வேண்டிய சில கட்டுப்பாடுகள் அங்கு இருப்பதாகவும் கூறினார். “நீங்கள் மௌனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஆகையால், நீங்கள் ஒவ்வொரு பன்னிரண்டு வருஷத்திற்கும் ஒருமுறை தான் பேசுவதற்கு அனுமதிக்கப்படுவீர்கள், அதுவும் ஐந்து வார்த்தைகளுக்கு மேல் இல்லாத ஒரு வாக்கியம் மட்டுமே,” என்று குரு கூறினார்.
சீடர் உடனடியாக ஒப்புக்கொண்டார். பன்னிரண்டு ஆண்டுகளாக அவர் தியானம் செய்ய முயன்றார், பேசுவதற்கான வாய்ப்புக்காக ஆவலுடன் காத்திருந்தார்.
பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து கிடைத்த முதல் வாய்ப்பில் தனது குருவிடம், “படுக்கை மிகவும் கடினமாக உள்ளது,” என்று சீடர் கூறினார்.
“ம் …” என்று குரு முணுமுணுத்தார்.
இன்னுமொரு பன்னிரண்டு ஆண்டுகள் மௌனத்திற்குப் பிறகு, “உணவு மிகவும் குளிர்ந்து இருக்கிறது.” என்று சீடர் புகார் கூறினார்.
“ம் …” என்று குரு கூறினார்.
சீடர் கோபமாக உணர்ந்தார், ஆனால் அவர் கட்டுப்பாட்டை உடைக்க விரும்பவில்லை. அவர் மற்றும் ஒரு பன்னிரண்டு வருடங்கள் தியானித்தார், பின், “நான் செல்கிறேன்” என்றார். ஐந்து வார்த்தைகளின் வரம்பை மீறி அவர் தொடர்ந்து, “இது மோசமானது. எனக்கு எதுவும் கிடைக்கவில்லை, நான் எதையும் கற்றுக் கொள்ளவில்லை, நீங்கள் எனக்கு எதுவும் கற்பிக்கவில்லை,” என்றார்.
“நல்லது! போய்விடு, கடந்த முப்பத்து ஆறு ஆண்டுகளில் நீ செய்த புகார், புகார், புகார்களையே நான் கேட்டேன், மௌனத்தால் உனக்குக் கற்பிக்க முடியவில்லை என்றால், வேறு யாரால் உனக்குக் கற்றுக் கொடுக்க முடியும். வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ள முடியவில்லை என்றால், வேறு யாரிடமிருந்து கற்றுக் கொள்ள முடியும்?” என்று குரு பதிலளித்தார்.

நகைச்சுவையை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், இந்த நிகழ்ச்சி மிகவும் தீவிரமானதாக இருக்கலாம், ஆனால் இது அநேக மக்களின் வாழ்வினை போலவே உள்ளது. சிக்கல்களில் உள்ளவர்களிடம் இருந்து பெரும்பாலான மின்னஞ்சல்கள் எனக்குக் கிடைக்கின்றன. என்னைப் பார்க்க வருகின்றவர்கள் ஏதாவது ஒரு வழியில் மகிழ்ச்சியற்றவர்களாக உள்ளனர். அவர்கள் வாழ்க்கை, மற்றவர்கள், பொருட்கள், சூழ்நிலைகள், இக்கட்டான நிலைகளையும் பற்றிப் புகார் செய்கின்றனர். மேலே உள்ள கதையில், சீடன் மூன்று முறை மட்டுமே பேசினார், ஆனால் அவர் ஓராயிரம் முறை தனக்குள்ளேயே புகார் சொல்லிக் கொண்டே இருந்திருக்க வாய்ப்புள்ளது. இதை நான் ‘மூளைக்குள் புகார்’ என்று அழைக்கிறேன். பலர் இதை எப்பொழுதும் செய்கிறார்கள், அவர்கள் எப்பொழுதும் தங்கள் கனவில் கூட தங்கள் மனதிற்குள் புகார் செய்கிறார்கள்.

ராபர்ட் ஃபல்கம் எழுதிய ஒரு நல்ல கதை என் நினைவிற்கு வருகிறது. அவர் தனது இருபதுகளின் ஆரம்பக் காலத்தில் ஒரு கிராமப்புற விடுதியில் வேலை செய்தார். அவர் இரவு நேரத்தில் விடுதியில் வரவேற்பாளராகவும், பகல் நேரத்தில் தொழுவத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த இடங்களின் உரிமையாளர், அன்பானவரோ அல்லது விரும்பத்தக்க மனிதரோ அல்ல, மற்றும் ராபர்ட் தினமும் அதே மதிய உணவைச் சாப்பிடுவதால் மிகவும் நொந்து போயிருந்தார். கூடுதலாக, மதிய உணவிற்கான செலவும் அவரது சம்பளத்தில் இருந்து கழிக்கப்பட்டது. அதனால் அவர் கோபம் அடைந்திருந்தார்.

ஒரு இரவு, அவரால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது, குறிப்பாக அதே மதிய உணவைத் தான் இன்னும் இரண்டு நாட்களுக்குக் கொடுக்கப் போகிறார்கள் என்று கண்டுபிடித்த போது. இரவுத் தணிக்கையாளராகப் பணியாற்றும் அவரது சக ஊழியர்களில் ஒருவரான சிக்மண்ட் வோல்மேன், ஒரு ஜெர்மானிய யூதர் ஆவார். அவுஸ்விட்ஸில் (Auschwitz) உயிர் பிழைத்தவர், சிக்மண்ட் மூன்று ஆண்டுகள் சித்திரவதை முகாமில் இருந்தவர். ராபர்ட் கோபத்துடனும், கலங்கியும் இருந்த அதே ஹோட்டலில், சிக்மண்ட் சந்தோஷமாகவும், திருப்தியாகவும் இருந்தார். தன்னுடைய ஏமாற்றத்தைப் பகிர்ந்து கொள்ள யாரும் இல்லாததால், ராபர்ட் ஹோட்டல் உரிமையாளருக்கு எதிரான தனது கோபத்தை, சிக்மண்ட் உடன் பேசிய போது வெளிப்படுத்தினார். தினசரி அதே உணவை உண்பதைப்பற்றியும், அந்த உணவுக்காகப் பணம் கொடுக்க வேண்டி உள்ளதாகவும் கோபப்பட்டார். மிகுந்த கோபத்தால் அவர் உண்மையில் எல்லையை மீறினார். ஆனால், சிக்மண்ட் எதுவும் சொல்வதற்கு முன்பு பொறுமையாகக் கேட்டார்:
“ஃபல்கம், நான் கூறுவதைக் கவனியுங்கள். உங்கள் கோபத்தின் காரணம் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? அது உணவைப்பற்றி அல்ல, அது முதலாளியைப்பற்றி அல்ல, அது இந்த வேலையைப்பற்றியும் அல்ல,” என்றார்.
“அப்படியானால் என்னிடம் உள்ள தவறு என்ன?” என்று ஃபல்கம் கேட்டார்.
“ஃபல்கம், உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், ஆனால் உங்களுக்கு ஒரு சிரமத்திற்கும், ஒரு பிரச்சனைக்கும் இடையே என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. உங்களுடைய கழுத்தை உடைத்துக் கொண்டு விட்டால், உங்களிடம் சாப்பிட ஒன்றும் இல்லை என்றால், உங்கள் வீட்டில் தீ பிடித்துக் கொண்டால் — உங்களுக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்பதாகும். மற்றவை எல்லாம் ஒரு சிரமம் ஆகும். வாழ்க்கையே சிரமமானது தான். வாழ்க்கை கரடு முரடானது.” என்றார்.
ராபர்ட் ஃபல்கம்முக்கு ஒரு உணர்தல் ஏற்பட்டது. அவர் தனது கதையில், “நடைமுறைக்கான ‘வோல்மேன் சோதனையாக’ இதை நான் நினைக்கிறேன். வாழ்க்கை கரடு முரடானது. கஞ்சியில் உள்ள ஒரு கட்டி, தொண்டையில் உள்ள ஒரு கட்டி மற்றும் மார்பகத்தில் உள்ள ஒரு கட்டி, எல்லாம் ஒரே வகையான கட்டி இல்லை. அவற்றின் வித்தியாசத்தை ஒருவர் கற்றுக்கொள்ள வேண்டும்.” என்று எழுதினார்.

உங்கள் வாழ்க்கையைச் சிறந்ததாக ஆக்க விரும்பினால், போலியாக இல்லாமல் உண்மையாக இருப்பது முக்கியம். நீங்கள் தொடர்ந்து புகார் செய்து கொண்டிருக்கலாம் அல்லது நீங்கள் வாழ்க்கையை வாழத் தொடங்கலாம். வாழ்க்கையானது, தொண்ணூறு சதவிகிதம் நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதிலும், பத்து சதவிகிதம் எப்படி வாழ்கிறீர்கள் என்பதிலும் உள்ளது என்று சொல்கிறார்கள். உங்கள் வாழ்க்கையில் எது எது சரியில்லை என்பதற்கு மற்றவர்களே பொறுப்பு என்று சொல்வது சுலபமானது, இயற்கையானது மற்றும் இயல்பானது. ஆனால் அது உங்களை எங்கும் எடுத்துச் செல்லாது, அத்தகைய அணுகுமுறை உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவிடாது, அது உங்கள் கவலைகளை எளிதாக்காது. உங்கள் வாழ்க்கைக்கு வேறு யாரோ ஒருவர் பொறுப்பேற்க வேண்டும் என்று காத்திருக்காதீர்கள். உங்களையே பகுத்து ஆராயுங்கள், உங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள், உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள், உங்களை நேசியுங்கள். உங்களுக்குப் பொறுப்புகள் இருந்த போதிலும், உங்களுக்காகவும் வாழ்வதற்குப் பயப்பட வேண்டாம். வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் தீர்மானங்களுக்கு நீங்களே பொறுப்பேற்கும் போது, உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே உரிமையாளராக இருக்கும் போது மட்டுமே இவை அனைத்தும் சாத்தியமாகும்.

உங்களைப் புரிந்துகொள்ளுங்கள், அதனால் நீங்கள் உங்களுடனேயே வசதியாய் இருக்க முடியும், அதன் பின்னர் வாழ்க்கையை இடைஞ்சலாக உணரமாட்டீர்கள். உங்களை நீங்களே மகிழ்ச்சியாக ஆக்கிக்கொள்ள முடியாவிட்டால், மற்றவர்கள் உங்களை மகிழ்ச்சியாக ஆக்குவார்கள் என்று எப்படி நியாயமாக எதிர்பார்க்க முடியும்? உங்கள் மகிழ்ச்சிக்கான திறவுகோலை நீங்கள் மட்டுமே வைத்திருக்கிறீர்கள். சுதந்திரமாக இருங்கள், பயமில்லாமல் இருங்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email