இந்த உலகில் வாழ்வது உங்களுக்கு எப்படி இருக்கிறது? கடினமானதாகவா, சரியானதாகவா, உத்தமமானதாகவா அல்லது தகுதியானதாகவா? உங்களுக்கு இதைப்பற்றிச் சிந்திக்க சந்தர்ப்பம் கிடைக்காமலும் இருந்திருக்கலாம். இந்த உலகம் பைத்தியக்காரத்தனமானது. சில சமயம் பைத்தியத்தின் எல்லைவரை அழகாகத் தோன்றுகிறது அல்லது அழகின் எல்லைவரை பைத்தியக்காரத்தனமாகத் தோன்றுகிறது. பித்துப் பிடித்த உலகமாகவே இருந்து விடுகிறது. அவ்வாறு இருப்பதே அதைத் தனித்தன்மை வாய்ந்ததாகவும், பரிணாம வளர்ச்சி அடைவதாகவும், அழகானதாகவும் ஆக்குகிறது. இது தவிர்க்க முடியாததாகவும், அவசியமானதாகவும் தோன்றுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தப் பைத்தியக்காரத்தனத்தின் உச்சக்கட்டமே அதன் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரிடத்திலும் ஆழமாக மறைந்திருப்பதாகும்.

முன்னொரு காலத்தில் ஒரு அரசர் இருந்தார். அரச குல வழக்கப்படி புத்தாண்டு ஆரம்பத்தில் ஆஸ்தான ஜோதிடரிடம் பலன் அறிய விரும்பினார். ஜோதிடரும் அட்டவணைகளைப் பரிசோதித்துத் தன் கவலையை வெளிப்படுத்தினார். வரும் ஆண்டு இடையூறு விளைவிக்கும் ஆண்டாக இருக்கும் என்று அறிவித்தார். இந்த  ராஜ்யத்தில்  இந்த ஆண்டு விளையும் உணவு தானியங்கள், பருப்பு வகைகள் அல்லது இங்கு விளையும் எதைச் சாப்பிட்டாலும் சாப்பிடுபவர்கள்,  பித்துப் பிடித்தவர்களாகி விடுவார்கள் என்றும் சொன்னார்.

ராஜா கலக்கம் அடைந்தார். பித்துப் பிடித்த மக்களின் நிலை என்னவாகும் என்று உண்மையில் கவலையாக உள்ளது என்றும் எவ்வளவு காலத்திற்கு இந்த மனநிலை நீடிக்கும் என்றும் கேட்டார். இந்த நோயால் பீடிக்கப்பட்டிருக்கும் பொழுது மக்கள் ஒருவரை ஒருவர் பின்பற்றத் தொடங்குவர். இது சக்கரம் போல் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும். ஒரு தலை முறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கும் இது மாற்றப்படும். இதற்குச் சிகிச்சை எதுவும் இல்லை என்று ஜோதிடர் கூறினார்.

அறிவிற்கும் ஞானத்திற்கும் பேர் போன தன் முதலமைச்சரை ராஜா அழைத்துவரச் சொன்னார். ஜோதிடர் கூறிய ஆரூடத்தை அவருடன் பகிர்ந்து கொண்டார். இந்த இக்கட்டான நோயைத் தவிர்ப்பதற்கு ஒரு உபாயம் கொடுக்க முடியுமா என்று கேட்டார். மந்திரி நிதானமாக யோசித்து, பிறகு வருத்தமும் உற்சாகமும் கலந்த தொனியில் பின்வருமாறு கூறினார். நம் இருவருக்கும் மூன்றாண்டுகளுக்குத் தேவையான உணவுப்பொருட்கள் நமது உணவு சேமிப்புக் கிடங்கில் உள்ளது.

ஆட்சி செய்பவராக இருப்பதால் நீங்களும், உங்களுக்கு ஆலோசகராக இருப்பதால் நானும் பித்துப் பிடித்தவர்களாக ஆகக் கூடாது. ஆகையால் நாம் இந்தப் புத்தாண்டில் விளையும் உணவுப் பொருட்களைச் சாப்பிடாமல் நம் நிலையைச் சீராக வைத்துக்கொண்டால் விரைவில் இந்தப் பிரச்சனைக்கு விடை தேட முடியும் என்றார்.

அது நியாயமாகாது என்று அரசர் சொன்னார். என்னைப் பாதுகாத்துக் கொண்டு மற்றவர்களை பித்துப் பிடித்த நிலைக்கு மாற எவ்வாறு விட முடியும். இவ்வளவு பைத்தியக்காரர்களைச் சமாளிப்பது எவ்வளவு கடினம் என்று நீ கற்பனை செய்து பார்த்தாயா. நாமும் மக்கள் சாப்பிடும் அதே உணவையே சாப்பிடுவோம். நாமும் பைத்தியமாகிவிடுவோம். அப்பொழுது மக்களின் இந்த நிலை நம்மைப் பாதிக்காது. இந்த வகையில் நாமும் மற்றவர்களைப் போல் பைத்தியமாக மாறினால் மக்கள் மாறியதைக் கவனிக்கவோ, கவலைப்படவோ தேவை இல்லை. ஆனால் நாம் இருவரும் நம் கைகளில் நாம் பைத்தியம் என்று பச்சை குத்திக்கொள்ள வேண்டும். நாம் நமது மனநிலை மாறி சுயநிலைக்கு வர வேண்டும் என்று இது நம்மை நினைவு படுத்திக்கொண்டே இருக்கும்.

நான் என்ன சொல்ல விழைகிறேன் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். உலகின் இப்போதைய செயல்பாடுகள் சாதாரணமாகத் தோன்றுகின்றன. இதற்கு முதன்மைக் காரணம் நாம் அனைவரும் ஒரே விதமான உணவை சாப்பிட்டுக் கொண்டிருப்பதே என்பதை அறிந்து கொள்ள அதி புத்திசாலித்தனம் தேவையில்லை. ஞாபகப் படுத்துவதற்காக, கையில் பச்சை குத்தியுள்ள இந்த வாசகம் எதற்கு என்று அறிய முற்படும் வரை, நாம் உண்மை நிலையை அறிய மாட்டோம். அவ்வப்போது வாழ்க்கை நமக்கு விழிப்புணர்வைக் கொடுத்து ஞாபகப் படுத்தும். சிலர் அதைக் கவனித்து கடமைக்கும் ஆசைக்கும் இடையில் வாழ்க்கையைச் சமன் செய்வதையும், பலர் கவனிக்காமல் விடுவதையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஓடும் தண்ணீர் போல வாழ்க்கையை உணரக் கூடும். சாதாரண நிகழ்வாக, கடந்து செல்லும் ஒன்றாக, தன்னிச்சையாக , தானே நடப்பதாகத் தோன்றக் கூடும். என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்பது பலருக்குப் புரிவதில்லை. சரியானது அல்லது தவறானது என்று கண்டுபிடிக்க எதன் அடிப்படையில், யார் சொல்லிக் கொடுத்தது. அவர்களின் அறிவின் ஆதாரம் எது, அவர்கள் பின்பற்றும் முன் மாதிரியை யார் உருவாக்கியது. காட்டிலிருந்து மரங்களைக் காணப் பெரும்பாலும் தேவையானது ஒரு சின்ன இடைவெளி, சிறிது நேரம் மற்றும் கவனமாகப் பார்த்தல் ஆகும்.

ஒருமுறை ஜி.ஐ.குர்ட்ஜெப் என்ற மிகப்பெரிய ரஷ்ய சிந்தனையாளர் தனது சீடனான பீ.டி.ஓஸ்பென்சகியிடம் மூன்றுமாதம் தனிமையில் மௌனமாக இருக்கும்படிக் கூறினார். ஓஸ்பென்சகி அவ்வாறு செய்த பின் அவரைக் கடைத் தெருவிற்கு அழைத்துச் சென்றார். ஓஸ்பென்சகி மிகுந்த ஆனந்தமாக உணர்ந்தார் மற்றும் தன்நிலை இழந்தார். இது  பித்துப் பிடித்த உலகமாகத் தோன்றுகிறது. பொருட்களைப் பைத்தியக்காரர்கள் விற்கிறார்கள். பைத்தியக்காரர்கள் வாங்குகிறார்கள். பேருந்துகளை ஓட்டுபவர்களும் பைத்தியமே அதில் செல்பவர்களும் பைத்தியங்களே. ஒரு பைத்தியம் மற்றொரு பைத்தியத்திடம் பேசிக் கொண்டிருக்கிறது. இது ஒரு பெரிய மனநிலை குன்றிய வீடு. என்னால்  இந்தக் கூட்டத்தில் நிற்க முடியாது. தயவு செய்து என்னிடத்திற்குத் திரும்ப அழைத்துச் செல்லுங்கள் என்று அவர் தன் குருவிடம் கூறினார்.

என்னுடைய அனுபவத்திலிருந்து உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் பரிசுகளில் உன்னதமான பரிசு மௌனத்திலும், தனிமையிலும் நீங்கள் செலவிடும் நேரமாகும் என்றும் உங்களால் இந்த உலகத்தை முன்பு பார்த்தது போல் பார்க்க முடியாது என்றும் என்னால் நிச்சயமாகக் கூற முடியும். ஹிமாலயத்தில் மிகத்தனிமையில் பல மாதங்கள் கழித்த பிறகு இந்தச் சாமானியமான உலகுடன் ஒத்துப் போக பல மாதங்கள் ஆகியது. சக்தி மிக்க ஒரு மாற்றம் உங்களைத் தூய்மை ஆக்குகிறது. உங்களைச் சுற்றி, உங்களது நன்மைக்காகவே உங்களை மாற்றுகிறது. ஏனென்றால் தனிமை உங்களைத் தடுத்து சிந்திக்க வைக்கிறது. கவனமாகப் பார்க்க வைக்கிறது. ஒன்றிப் போக வைக்கிறது. உங்களை நீங்களே நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.

மக்கள் உங்களைப் பைத்தியம் என்றால் அவர்களே பைத்தியமாக இருக்கலாம். நீங்கள் நீங்களாகவே இருங்கள். உங்கள் சத்தியத்தை நீங்களே தேடுங்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email