ஒரு சில வருடங்களுக்கு முன்பு நான் படித்த, என்றாவது உபயோகிக்க வேண்டும் என்று ஞாபகத்தில் வைத்திருந்த, ஒரு கதையிலிருந்து ஆரம்பிக்கிறேன். உங்களுடன் இதைப் பகிர்ந்து கொள்ள, சனிக்கிழமை காலையை விட, எது சிறந்த நேரமாக இருக்க முடியும். இங்கே (கிட்டத்தட்ட எப்படி எழுதப்பட்டதோ அதைப் போன்றே, மூலம் அநாமதேயமானது):

நான் முதுமை அடைய அடைய, சனிக்கிழமை காலை நேரத்தை நான் அதிகமாக அனுபவிக்கிறேன். ஒருவேளை, நான் முதலில் எழுவதால் கிடைக்கும் அமைதியான தனிமையாலோ, அல்லது வேலைக்குச் செல்ல வேண்டாம் என்ற அளவில்லாத சந்தோஷத்தினாலோ இருக்கலாம். எப்படி இருந்தாலும், ஒரு சனிக்கிழமை காலையின், முதல் சில மணி நேரங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றன.

ஒரு சில வாரங்களுக்கு முன்பு, எப்பொழுதும் போல் ஆரம்பித்த சனிக்கிழமை காலை, அவ்வப்போது வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் ஒரு படிப்பினையாக மாறியது.

நான் வானொலியில் எனக்குப் பிடித்த சனிக்கிழமை நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்தேன், அதில் நிகழ்ச்சியைக் கேட்போர், நிலையத்துடன் தொடர்பு கொண்டு அவர்களது பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். மேலும் நடத்துநர் தவிர, மற்ற அழைப்பாளர்களும் தங்கள் கருத்தை வழங்க முடியும். டாம் என்ற பெயரில் யாரோ ஒருவர், அவருடைய வேலையின் தன்மை காரணமாக அவர் குடும்பத்தில் இருந்து எப்படி விலகி இருக்க வேண்டி உள்ளது என்பதைப் பகிர்ந்து கொண்டார், ஆனால் அந்த வேலையில் அவருக்கு நிறையப் பணம் மற்றும் சந்தோஷம் கிடைத்ததாகக் கூறினார். அவருக்கு வயது முப்பத்து இரண்டு. அவருடைய கேள்வி என்னவென்றால், அவர் எதற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் – வேலைக்கா அல்லது குடும்பத்திற்கா?

கொஞ்சம் வயது முதிர்ந்த, தங்கக் குரலைக் கொண்ட மற்றொரு நபர் கூப்பிட்டார். அவர் பேசிய விதம், அவர் ஒலிபரப்புத் துறையில் இருக்க வேண்டும் என்பது போல் இருந்தது. அவர் சில ஆலோசனைகளை வழங்கினார், நான் அதை என்றும் மறக்க மாட்டேன்.

“டாம், உங்கள் வேலையில் நீங்கள் பிஸியாக இருப்பதைப் போல் தெரிகிறது. அவர்கள் நிறையச் சம்பளம் உங்களுக்குக் கொடுக்கலாம். ஆனால் நீங்கள் வீட்டிலிருந்தும், உங்கள் குடும்பத்திலிருந்தும் இவ்வளவு காலம் பிரிந்து இருப்பது பெருத்த துரதிர்ஷ்டம் ஆகும். ஒரு இளைஞன் தன் எதிர்காலத்தைப் பாதுகாக்க ஒரு வாரத்திற்கு அறுபது அல்லது எழுபது மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்பதை நம்புவதற்குக் கடினமாக உள்ளது,” என்று அவர் கூறினார்.

“என் சொந்த முன்னுரிமைகள் மீது கவனமாக ஒரு நல்ல முடிவெடுக்க உதவிய ஒரு விஷயத்தை நான் சொல்கிறேன்,” என்று அந்த மனிதர் தொடர்ந்தார். “ஆயிரம் பளிங்குக் குண்டுகளை வைத்து என் கோட்பாடு. ஒரு நாள் அமர்ந்து நான் ஒரு சிறிய கணக்கைப் போட்டுப் பார்த்தேன். சராசரி நபர் ஒருவர் சுமார் 75 ஆண்டுகள் வாழ்கிறார். சிலர் இன்னும் அதிகமாகவும், சிலர் குறைவாகவும் வாழ்கிறார்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் சராசரியாக 75 வருடங்கள் வாழ்கிறார்கள்.”

“இப்போது, 75 ஐ 52 ஆல் பெருக்கினால் 3900 வருகிறது. அது ஒருவரின் சராசரி வாழ்நாள் முழுவதும் வரும் சனிக்கிழமைகளின் எண்ணிக்கை ஆகும். நான் ஐம்பத்து ஐந்து வயதான பிறகே இந்த விஷயத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்கினேன், அதற்குள் 2800 சனிக்கிழமைகளை நான் வாழ்ந்து விட்டேன். நான் 75 வயது வரை உயிருடன் இருந்தால், நான் அனுபவிக்க இன்னும் சுமார் 1100 சனிக்கிழமைகளே பாக்கி உள்ளன, என்று நினைத்தேன்.”

“நான் ஒரு பொம்மைக் கடைக்குச் சென்று, அவர்களிடம் இருந்த எல்லா பளிங்குக் குண்டுகளையும் வாங்கினேன்” என்று அந்த மனிதர் மேலும் கூறலானார். “மொத்தம் 1000 பளிங்குக் குண்டுகள் இருந்தன. நான் அவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்று ரேடியோவிற்குப் பக்கத்தில் ஒரு தெளிவான பிளாஸ்டிக் டப்பாவின் உள்ளே வைத்தேன். அப்போதிலிருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும், நான் ஒரு பளிங்குக் குண்டை அதிலிருந்து எடுத்து, அதைத் தூக்கி எறிந்தேன். அந்தப் பளிங்குக் குண்டுகள் குறையக் குறைய, என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தினேன் என்று நான் கண்டுபிடித்தேன். உங்கள் முன்னுரிமைகளை நேர்ப்படுத்த, இந்தப் பூமியில் உங்கள் நேரம் செலவழிந்து போவதை பார்ப்பதைப் போல் வேறு எதுவும் இல்லை.”

“நான் உங்களிடமிருந்து விடை பெற்று, என் அருமை மனைவியைக் காலை உணவிற்காக வெளியே அழைத்துச் செல்லும் முன், கடைசியாக ஒன்றைக் கூறுகிறேன். இன்று காலை, கடைசி பளிங்குக் குண்டை அந்த டப்பாவிலிருந்து நான் எடுத்தேன். நான் அடுத்த சனிக்கிழமை வரை உயிருடன் இருந்தால், எனக்குக் கொஞ்சம் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டு உள்ளது எனலாம். நாம் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு விஷயம், இன்னும் கொஞ்சம் நேரம் தான். உங்களுக்கு அன்பானவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிடுவீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு இது நல்ல காலைப் பொழுதாக அமையட்டும்!”

அவர் முடித்த போது, ஒரு ஊசி விழுந்திருந்தாலும் கூட நீங்கள் கேட்டிருக்கலாம். அந்த நிகழ்ச்சியை நடத்தியவருக்குக் கூட, ஒரு சில நிமிடங்கள் பேசுவதற்கு எதுவுமே இல்லை. காலையில் சில வேலைகளைச் செய்துவிட்டுப் பிறகு உடற்பயிற்சி நிலையத்திற்குச் செல்ல நான் திட்டமிட்டு இருந்தேன். அதற்குப் பதிலாக, நான் மாடிக்குச் சென்று ஒரு முத்தத்துடன் என் மனைவியை எழுப்பினேன். “வா, நான் உன்னையும் குழந்தைகளையும் காலை உணவுக்கு அழைத்துச் செல்கிறேன்.”

“எது உங்களை இப்படி ஆக்கியது?” அவள் ஒரு புன்னகையுடன் கேட்டாள்.
“ஓ, சிறப்பாக எதுவுமில்லை, நாம் குழந்தைகளுடன் ஒரு சனிக்கிழமையைக் கழித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் தான்.”
அவள் உற்சாகத்தில் படுக்கையைவிட்டு வெளியே குதித்தாள்.
“அத்துடன், நான் சில பளிங்குக் குண்டுகளையும் வாங்க வேண்டும்,” என்று நான் அவளிடம் சொன்னேன்.

இன்று நம்மில் பெரும்பாலோர் வேலை, இலக்குகள், இலட்சியம் மற்றும் பலவற்றால் உந்தப்பட்டு இருக்கிறோம். நாம் எல்லாவற்றிலும் உயர்ந்து இல்லாவிட்டால், இழக்க நேரிடும் என்று உணர்கிறோம். நாம் ஒரு இடத்தில் இல்லாவிடில் அங்கு உள்ள அனுபவங்களை இழந்துவிடுவோம் என்ற பயம் (FOMO – Fear of Missing Out), நியாயமாகச் செய்யக்கூடியதைத் தாண்டிச் செய்வதற்கு நம்மைத் தூண்டுகிறது. நம் ஆரோக்கியம், ஆன்மீகம், உடல் நலம், மற்றும் நமக்கு உண்மையில் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை இழந்து, நாம் இவ்வாறு செய்கிறோம். உலகமே மிகப்பெரிய போட்டியில் இயங்குகிறது என்பதை நான் மறுக்கவில்லை, ஆனால் உங்களைச் சுற்றி சீரான வாழ்க்கை வாழ்பவர்களை நீங்கள் கவனித்தால், அவர்கள் வளர்ந்து வருவதையும், நன்றாகவே இருப்பதையும் பார்க்கலாம்.

அமெரிக்காவில் ஒரு மக்கள் பராமரிப்பகத்தில், அந்திம காலத்தில் இருந்த நோயாளிகளிடம், அவர்களது வாழ்க்கையில் மிகவும் வருந்தியது எதற்கு என்ற ஒரு ஆய்வை அவர்கள் ஒரு முறை செய்தனர். அதிக நேரம் வேலை செய்திருக்கலாம், அல்லது அவர்கள் அந்த முக்கியமான ஆய்வினை முடித்திருக்கலாம், அல்லது ஒரு குறிப்பிட்ட பொருளின் தயாரிப்பைத் தொடங்கி இருக்கலாம் என்று விரும்பியதாக அந்த நோயாளிகளுள் ஒருவர் கூடக் கூறவில்லை. ஒவ்வொருவரும் பின் நோக்கிச் சென்று, தங்கள் குடும்பத்துடன் அதிக நேரத்தைச் செலவிட எவ்வளவு ஆர்வத்துடன் விரும்புவதாக எழுதினார்கள்.

வேத நூல்கள், எல்லாம் சாசுவதமில்லை, எதுவுமே நிலைத்து இருக்கப் போவதில்லை என்று தொடர்ந்து நினைவூட்டுகின்றன. நம் வாழ்வில் இப்போது உள்ள எதுவாக இருந்தாலும், ஒரு நாள் அது இருக்காது. ஏதோ ஒரு சனிக்கிழமை நிச்சயமாக நமது கடைசி சனிக்கிழமையாக இருக்கப் போகிறது. நாம் விழித்து எழாத ஒரு காலைப் பொழுது இருக்கும், நாம் இனிமேல் மூச்சு விடமாட்டோம் என்ற ஒரு தருணம் இருக்கும். இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. இது மறுக்கமுடியாத உண்மை என்று கருதுவதும், எல்லாமே நிலையற்றவை என்பதை உணர்ந்துகொள்வதும், நம் வாழ்வை முழுமையாக வாழ்வதற்குப் போதுமான காரணங்கள் அல்லவா? நிச்சயமாக, அனைத்து நேரமும் வேலை செய்து கொண்டே இருப்பது நம்மை பிஸியாக வைத்திருக்கும், ஆனால் இது ஒரு முழுமையாக வாழும் முறை இல்லை. கவனத்தைத் திசை திருப்புவது மற்றும் நம் முன்னுரிமைகளின் மேல் கொண்ட கவனத்தை இழப்பது மிகவும் எளிதானது. ‘கேண்டி க்ரஷ் ஸாகா’ (Candy Crush Saga) போன்ற ஒரு எளிய விளையாட்டின் திசைதிருப்பல் கூட, எதற்கும் உதவாமல் உங்கள் நேரத்தை மணிக்கணக்காகச் செலவழிக்க வைக்கும். ஒரு பயனற்ற பணியில் செலவழித்த அனைத்து நேரத்தையும், ஒரு ஜிம்மில், ஒரு தோட்டத்தில், உங்களுடைய அன்புக்குரியவர்களுடன், அல்லது ஓய்வெடுத்துக் கொண்டு செலவழித்திருக்கலாம். இதற்கான காரணம்? கவனக் குறைவு.

உங்களுக்கு 75 (அல்லது 77) வயது ஆவதற்கு முன் இன்னும் எத்தனை சனிக்கிழமைகள் பாக்கி உள்ளன என்பதைக் கணக்கிட்டு அத்தனைப் பளிங்குக் குண்டுகளை ஒரு ஜாடியில் போட்டு வைப்பது ஒரு புத்திசாலித்தனமான எண்ணம் என்று நான் நினைக்கிறேன். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒன்றை வெளியே எடுங்கள். வானொலியில் அந்த அறிஞர் கூறியதுபோல், “உங்கள் முன்னுரிமைகளைச் சரிவரப் பெறுவதற்கு, இங்கே இந்தப் பூமியில் உங்கள் நேரம் குறைவதைப் பார்ப்பதைப் போல் வேறு எதுவும் இல்லை.” இதுவே உங்கள் வாழ்க்கை ஜாடி அல்லது கவனத்தின் ஜாடி ஆகும். அனுபவங்களை இழந்துவிடுவோம் என்ற பயத்தை, அனுபவங்களை இழந்துவிடும் ஆனந்தமாக மாற்றி விடுங்கள் (FOMO into JOMO – Joy of Missing Out). உலகில் நடக்கும் எல்லாவற்றையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை, எல்லா இலக்கியங்களையும் படிக்கவோ அல்லது எல்லாவற்றிலும் தேர்ந்தோ இருக்க வேண்டிய அவசியமில்லை. சுலபமாய் எடுத்துக்கொள்ளுங்கள்.

முல்லா நஸ்ருதீன் வீட்டிற்கு ஒரு நண்பர் வந்தார். முல்லாவின் மனைவி விருந்தினருக்குச் சூடான சப்பாத்தி மற்றும் அருமையான காய்கறி சப்ஜியையும் உணவாக அளிக்க முடிவு செய்தார்.
நண்பர், போதும் என்று கூறும் வரை முல்லா அடுப்பில் இருந்து சப்பாத்தியை ஒவ்வொன்றாக அவருக்குப் போட்டுக் கொண்டே இருந்தார்.
“இன்னும் ஒன்று போட்டுக் கொள்ளுங்கள்!” என்று முல்லா அவரை வற்புறுத்தினார்.
“இல்லை, முல்லா, நான் ஏற்கனவே ஐந்து சாப்பிட்டு விட்டேன்!” என்று அவர் பதிலளித்தார்.
“நான் வழக்கமாக எண்ணுவதில்லை, ஆனால் உண்மையில் நீங்கள் ஏழு சப்பாத்திகள் சாப்பிட்டீர்கள்.”

யாரும் எண்ணுகிறார்களோ இல்லையோ, ஒரு பதிவு எப்போதும் வைக்கப்படுகிறது. யாரோ ஒருவர் பதிவேட்டுடன் எங்கோ உட்கார்ந்து இருக்கிறார் என்று நான் சொல்லவில்லை, நாம் ஒவ்வொருவரும் அந்தக் கடைசி தருணத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். சிறிய விஷயங்கள், வெறுப்பு, பொருள் சார்ந்த இலக்குகள் ஆகியவற்றில் நம் நேரத்தை வீணாக்குவது தகுதியானதல்ல. உங்கள் ஓய்வு காலத்தில் சில வருடங்களாவது கடற்கரை அருகில் வசிக்கலாம் என்று நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் கடினமாக உழைக்கலாம். இறுதியில், நீங்கள் நகரத்தில் உங்கள் குழந்தைகளுடன் ஒரு அறையில் வசிப்பீர்கள், அல்லது வயது முதிர்ந்தோர் காப்பகத்தில் அதிகபட்சமாக ஒரு தோட்டத்தைப் பார்த்தபடி வசிப்பீர்கள். ஒரு நல்ல வருங்காலத்திற்கான நம்பிக்கையில், உங்களின் நிகழ் காலத்தை அழிப்பது ஒரு விவேகமான உபாயமாக இருக்க முடியாது. உங்களது இன்று, நேற்றைக்கு உங்கள் எதிர்காலமாக இருந்தது. எதிர்காலம் என்பது, தொலைதூரத் தேதியோ அல்லது இறுதி இலக்கோ அல்ல, அது இதோ இங்கே வந்துவிட்டது, அது அடுத்த படியாகும்.

நாம் நமது நேரத்தை எங்கே செலவிட வேண்டும் என்பதை அடிக்கடி மறந்து விடுகிறோம். நம்மிடம் சொந்தமாக இல்லாத விஷயங்களில் அக்கறை இல்லாதவர்களைக் கவர்ந்திழுக்க முயற்சிக்கிறோம். நமக்குத் தேவையில்லாத விஷயங்களில் செலவழிக்க, நமக்கு விருப்பம் இல்லாத விஷயங்களில், சம்பாதிக்க மட்டுமே வேலை செய்கிறோம். நீங்கள் ஒரு குழந்தையாக இருந்தபோது உங்கள் வாழ்க்கை இப்படியாக அமைய வேண்டும் என்று நீங்கள் கனவு கண்டிருப்பீர்கள் என்பதை நான் சந்தேகிக்கிறேன். இது இப்படியாக இருக்க வேண்டியதில்லை. மிகப்பெரிய திட்டத்தில் முற்றிலும் பொருத்தமற்றதாக இருக்கும் விஷயங்களைப் பற்றி நாம் கவலைப்படுகிறோம். …ஆனால் நாளைக்கு என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியாது. உங்கள் வாழ்க்கை எதற்காக உள்ளது? இது சிறிது நேரம் தோன்றி பின்னர் மறைந்து விடும் ஒரு ஆவியாகும். (ஜேம்ஸ். 4:14).

வேகத்தைக் குறையுங்கள், இடைநிறுத்தம் செய்யுங்கள், நிறுத்துங்கள். நீங்கள் உண்மையிலேயே இதைத் தான் செய்ய விரும்புகிறீர்களா? எந்தப் பாதையில் நீங்கள் நடக்க விரும்புகிறீர்கள் என்பது முற்றிலும் உங்கள் விருப்பம், ஆனால் கவனமாக இருங்கள்.

ஜூன் 17 அன்று ப்ளாக் லோட்டஸில் (Black Lotus) ஒரு நேரடி சுவாமிநாரில் (Swaminar) என்னுடன் நீங்கள் தொடர்பு கொள்ளுங்கள். (பிளாக் லோட்டஸ் பயன்பாட்டின் மூலம் நீங்கள் கேள்விகளைக் கேட்கலாம் மற்றும் நேரடி வீடியோ ஒளிபரப்பின் மூலம் மிக அதிகமாக வாக்களிக்கப்பட்ட பத்து கேள்விகளுக்கு நான் பதிலளிப்பேன். மேலும் விவரங்களுக்கு, நீங்கள் iOS க்கு ஆப் ஸ்டோரிலிருந்து (app store) அல்லது ஆன்ராய்டு (Android) சாதனங்களுக்குக் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து (Google Play Store) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.)

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email