அதன்பின் அவர், ஒருபோதும் பார்த்திராத ஒரு மடாலயத்திற்குத் தனது வேலையாட்களுடன் பயணம் செய்தது பற்றிய ஒரு கதையைச் சொன்னார். அவர்கள் அதன் கதவுகளை நெருங்கியபோது, அங்குக் காவலில் இருந்த பெரிய பற்கள் மற்றும் சிவந்த கண்களுடனான ஒரு பெரிய நாயைக் கண்டார். அது பயங்கரமாக உறுமிக் கொண்டு, அதைக் கட்டியிருந்த சங்கிலியிலிருந்து விடுவித்துக் கொள்ளக் கஷ்டப்பட்டுப் போராடிக் கொண்டிருந்தது. அந்த நாய் அவர்களைத் தாக்கத் துடித்துக் கொண்டிருந்ததைப் போலத் தோன்றியது. ரின்போச் இன்னும் அருகாமையில் சென்றபோது, அதன் நீலநிற நாக்கையும் அதன் வாயில் இருந்து எச்சில் தெளிப்பதையும் பார்க்க முடிந்தது. அவர்கள் நாயிடமிருந்து சற்று தூரமாக விலகி நடந்தே, அதனைக் கடந்து, நுழைவாயிலில் நுழைந்தார்கள். திடீரென்று சங்கிலி அறுந்து, நாய் அவர்களை நோக்கி ஒடி வந்தது. ஊழியர்கள் பயங்கரமாகக் கூச்சலிட்டுப் பயத்தில் உறைந்து போனார்கள். ரின்போச் திரும்பி அவரால் முடிந்தவரை விரைவாக நாயை நோக்கி நேராக ஓடினார். அந்த நாய் மிகுந்த ஆச்சரியத்துடன், தனது கால்களுக்கு இடையில் தனது வாலை வைத்துக் கொண்டு தூரமாக ஓடிவிட்டது.
நான் இதை வாசித்தபோது, இமயமலைக் காடுகளில் ஒரு நாய்களின் கூட்டத்திடம் இதேபோல் நான் செய்த ஒரு நிகழ்ச்சி ஞாபகம் வந்தது. தங்கள் எஜமானர்களால் துரத்தி விடப்பட்ட, இனி மேல் தங்களது செம்மறி ஆடுகளை அடக்கவோ, பாதுகாக்கவோ முடியாது என்ற நிலையில் இருந்த நாய்கள் அவை. காடுகள் நாய்களின் மூல உணவுக்கான இடம் இல்லை, அதனால் அவை தொடர்ந்து பசியுடன் இருந்தன, இதன் விளைவாக எரிச்சலுடன் இருந்தன. என் வழியில், பல கிராமவாசிகள் அந்த நாய்களைப் பற்றி என்னிடம் எச்சரிக்கை செய்தனர். அவை எப்பொழுதும் கூட்டமாகப் பழகிய கொள்ளைக் கூட்டத்தைப் போலவே சுற்றிக் கொண்டிருந்தன. ஆனால், அந்த நாய்களுடன், என் தனிப்பட்ட அனுபவம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. அவை குரைப்பதைப் பார்த்தபோது, நான் அவற்றை நோக்கி நடந்தேன். அன்பும் இரக்கமும் கொண்ட விழிப்புணர்வு அலைகளைத் துல்லியமாக அனுப்பிவிட்டு, என்ன நேர்ந்தாலும் அந்த நாய்களை நான் காயப்படுத்த மாட்டேன் அல்லது பயமுறுத்த மாட்டேன் என்று நான் மனதில் தீர்மானித்தேன். அந்த அர்த்தத்தில், இது ட்ருங்பா ரின்போச்சேவின் அணுகுமுறைக்குச் சற்று மாறுபட்டது. ஆனால், அது வேலை செய்தது. நான் நாய்களின் மிக அருகில் சென்றேன், உடனடியாக அவை அமைதியாக ஆகிவிட்டன. என்னிடம் உணவு இல்லை, இருந்திருந்தால் அவற்றுக்கு உணவு அளித்திருப்பேன். ஆயினும், இது ஒரு விடுதலையான அனுபவமாக இருந்தது, பலவிதமான காட்டு விலங்குகளுக்கும் இதே போன்ற முடிவுகளைப் பின்னாளில் அளிக்க முடிந்தது.
எந்தப் பயத்திற்கும் இதே போல் செய்யலாம். அடிக்கடி, உங்கள் பயத்தை எதிர்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள், ஆனால் உங்கள் பயத்தை எதிர்கொள்ளுங்கள் என்பதற்கு உண்மையில் என்ன அர்த்தம்? அதன் அர்த்தம் என்னவாக இருந்தாலும் சரி, அதை எப்படிச் செய்வது? தொடங்குவதற்காக, உங்கள் பயத்தை உருவகமாக்குங்கள். உங்கள் பயம் என்னவாக இருந்தாலும், அதை உருவகம் செய்து, தீவிரமான காட்சியாகவும் பாருங்கள். உங்கள் பயம் உண்மையில் ஒரு நபர் போலவும், நீங்கள் அவரை எதிர்கொள்ளுவது போலவும் கற்பனை செய்யுங்கள். உங்கள் பயத்துடன் பேசுங்கள், அன்பு மற்றும் இரக்கத்தின் அலைகளை வெளிப்படுத்தி அதை ஆதரியுங்கள். உங்கள் பயத்திற்கு எரிபொருளாக இருந்த அதே ஆற்றல், இப்போது அதற்குப்பதிலாக உங்கள் வலிமையாக மாறும். இதை முயற்சிக்கவும்.
பயம் என்றால், நமது முதன்மைப் பயமான மரண பயம் பற்றியான விஷயங்களை நான் குறிப்பிடுவதாக அர்த்தம் இல்லை. அதற்குப் பதிலாக, நமது வளர்ப்புமுறை மற்றும் பிற சமூக விதிமுறைகளால் உருவாக்கப்பட்ட அல்லது வளரக்கூடிய நிபந்தனைக்கு உட்பட்ட அச்சங்களைக் குறிப்பிடுகிறேன்.
விக்டர் ஃபிராங்கில் தனது புத்தகத்தில் “லோகோதெரபி” (Logotherapy) பற்றி விளக்கும் போது, பொது இடங்களில் நிறைய வியர்வைச் சுரந்து கொண்டிருந்த ஒரு மனிதனைப் பற்றி எழுதியிருந்தார். ஒவ்வொரு முறை, அவர் மேடையில் பேச வேண்டும் அல்லது ஒரு குழுவில் உரையாற்ற வேண்டும் என்ற போது, அவருக்குச் சங்கடத்தைத் தரும்படியாகத் தீவிரமாக வியர்வை வழியத் துவங்கிவிடும். தமக்கு வியர்த்துவிடும் என்ற கவலையினாலேயே, அவருக்கு இன்னும் அதிகமாக வியர்த்து விடும்.
“உங்கள் பதற்றத்தை அறிவியுங்கள். பார்வையாளர்களை நீங்கள் நன்கு அறிந்திருக்கவில்லை என்றால், அதை உங்களுக்கு நீங்களே அறிவித்துக் கொள்ளுங்கள்,” என்று விக்டர் அவரிடம் ஆலோசனை கூறினார்.
பதற்றத்தை முன்கூட்டியே தூண்டக்கூடிய எவரையும் சந்திக்கும்போது, “முன்பு எனக்கு ஒரு குவார்ட்டர் அளவு மட்டுமே வியர்த்தது, ஆனால் இப்போது அதைப் போல் பத்து மடங்கு வியர்க்கப் போகிறது!” என்று தனக்குத் தானே கூறிக் கொண்டதாக, ஒரு வாரம் கழித்து வந்த அந்த மனிதர் கூறினார்.
இதன் பயனாக, நான்கு ஆண்டுகளாகத் துன்பம் அனுபவித்த பிறகு, இந்த ஒற்றை சுய-தூண்டுதலால், அந்த வாரத்திற்குள் நிரந்தரமாக அவர் குணப்படுத்தப்பட்டார்
டாக்டர் ஃபிராங்கில் அதை மிகையான-நோக்கமாகக் குறிப்பிட்டார்: ஒரு குறிப்பிட்ட வழியில் இருக்க, செயல்பட அல்லது உணர வேண்டும் என்ற ஒரு மிகையான எண்ணம். இருவரின் நெருங்கிய தொடர்பில் உண்டாகும் பதட்டத்தின் உணர்வோ, ஒரு மாணவர் பரீட்சையை எதிர்கொள்ளும் போதோ அல்லது ஒரு பேச்சாளர் பலரின் முன்னால் பேசும் போதோ, மிகையான-நோக்கம் உங்கள் முழுத் திறனையும் செயலாக்கவிடாமல், உங்கள் திறனைக் கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது. உங்கள் பயத்தை உருவகமாக்கி, அதற்கு அன்பு மற்றும் இரக்கத்தின் அலைகளை அனுப்புவதே, உங்கள் பயத்தையும், அச்சங்களையும் கையாளுவதற்கான நல்ல வழியாகும். ஆழமாகச் சுவாசியுங்கள். இரண்டாவதாக, உங்கள் பயம், அச்சம் அல்லது பதற்றத்திற்கான காரணத்தை அம்பலப்படுத்துவது, உங்களை அமைதிப்படுத்திக் கொள்ள உதவுகிறது. உங்கள் பதற்றத்தை அல்லது அதன் காரணத்தை மறைக்க முயற்சிக்காமல் முதலிலேயே வெளிப்படையாக அறிவிப்பு செய்யுங்கள். அதை மறைக்க எடுக்கும் எந்த முயற்சியும், அதை இன்னும் வெளிப்படையாக்கும் அல்லது நீங்கள் உங்கள் கையில் உள்ள பணியில் 100% கவனம் செலுத்த முடியாது. ஏனெனில் நீங்கள் உங்கள் பதற்றத்தைப் பற்றி மிகுந்த உள்உணர்வுடன் இருப்பதால், அது உங்களை இன்னும் நடுக்கத்திற்கு உள்ளாக்கும். உங்களுடைய (மற்றும் பலருடைய) மனது உங்கள் தைரியத்திற்காக, வெளிப்படையாக இருப்பதற்காக மற்றும் நேர்மைக்காக உங்களை மதிக்கும். முன்பே சொல்லுவதன் மூலம், உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதை நீங்கள் மற்றவர்களுக்குத் தெரிவித்திருப்பீர்கள். இந்த அணுகுமுறை பெரும்பாலும் வேலை செய்கிறது, ஏனென்றால் அது உங்கள் பயத்தின் ஆதாரத்திற்கே செல்கிறது.
மேலும், எங்கள் பயத்தின் ஆதாரம் என்ன என்று கேட்கிறீர்களா?
எதிர்பார்ப்புகள்.
எனது பார்வையில், நமது எதிர்பார்ப்புகளே நமது அச்சங்கள், பயம் மற்றும் பதற்றங்களின் (மன நோய்களைத் தவிர) முதன்மைக் காரணமாக இருக்கின்றன. இதை நம்மிடமிருந்தும், மற்றவர்களிடமிருந்தும் நாம் பெறுகிறோம். நாம் ஒவ்வொருவரும் நம் அன்றாட வாழ்வில் எதிர்பார்ப்புகளின் சுமையை அனுபவிக்கிறோம். ‘சாதாரணம்’ என்று கருதப்பட்டவற்றில் இருந்து, நீங்கள் வித்தியாசமானவராக இருந்தால், உங்கள் மேல் ஒரு தொடர்ந்த அழுத்தம் இருக்கிறது, ஒன்று நீங்கள் மற்றவர்களைப் போல் ஆக வேண்டும் அல்லது உங்கள் விதிவிலக்கின் மதிப்பை நிரூபிக்க வேண்டும். உதாரணமாக, லட்சக்கணக்கான பிள்ளைகள் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்ற அழுத்தத்தை அனுபவிக்கிறார்கள். பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளைப் பற்றி எவ்வளவு பெருமைப்படுகிறோம் என்று, தங்கள் பிள்ளைகளுக்கு ஊக்கமளிக்கும் விதமான சொற்களைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, அதற்குப் பிரதி உபகாரமாக அந்தச் சொற்களுக்கு ஏற்ற விதமாக வாழ நினைப்பது அந்தக் குழந்தைகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்கிறது. இது எளிதானது அல்ல. அது இன்னும் அதிகமான பதற்றத்துடன் அவர்களை உணர வைக்கிறது.
இது போன்ற பதற்றம் மற்றும் அச்சங்களை எதிர்கொள்ளும் போது இரண்டு விஷயங்களில் ஒன்று நேரிடுகிறது. ஒன்று, நமக்கு எது பயத்தைத் தருகிறதோ அதை நாம் எதிர்க்கத் தொடங்குகிறோம் (அது ஒரு நபர், ஒரு எதிர்பார்ப்பு, ஒரு சூழ்நிலை அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம்) அல்லது முற்றிலும் அதைக் கைவிட்டுவிடுகிறோம் (இனி நான் அதைப்பற்றிக் கவலைப்படப் போவதில்லை). இரு அணுகுமுறைகளுமே நமது ஆன்மீக மற்றும் உணர்ச்சிப்பூர்வமான முன்னேற்றத்திற்குத் தீங்கு விளைவிப்பவை. நமது அச்சத்தின் அடித்தளத்தில், நமது எதிர்பார்ப்புகளின் வேர்களாக உள்ள, நமது அறியாமையை அகற்ற வேண்டும். நம் வாழ்வில் ஏதோ ஒரு தருணத்தில், நமது கவனக்குறைவை கவனச் செறிவாக மாற்றிக் கொள்வதற்காக, நமது எதிர்ப்பை அடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
நான் ஆரம்பித்த இடத்திற்கே திரும்பப் போகிறேன், இங்கே மீண்டும் பேமா சோட்ரோனின் ஒரு அழகிய பத்தியில் இருந்து:
வாழ்க்கையில் நம் எதிர்ப்பைக் குறைக்கும் வழி அதை நேர்க்கு நேர் சந்திப்பதே ஆகும். அறை மிகவும் சூடாக இருப்பதனால் நாம் கோபத்தை உணர்ந்தால், வெப்பத்தை நாம் சந்தித்து அதன் ஞாயமான உக்ரகத்தை உணர முடியும். அறை மிகவும் குளிராக இருப்பதால் நாம் கோபத்தை உணர்ந்தால், குளிர்ச்சியைச் சந்தித்து, அதன் பனிக்கட்டித் தன்மையையும், அதன் குத்தும் தன்மையையும் உணரலாம். நாம் மழை பற்றி புகார் செய்ய விரும்பும் போது, அதற்குப் பதிலாக அதன் ஈரப்பதத்தை உணரலாம். காற்று நமது ஜன்னல்களை உலுக்குகிறது என்று நாம் கவலைப்படும் போது, காற்றை எதிர் கொண்டு அதன் சப்தத்தைக் கேட்க முடியும். ஒரு சிகிச்சைக்காக நமது எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்வது என்பது நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு பரிசு ஆகும். சூடு மற்றும் குளிர்ச்சிக்கு எந்தச் சிகிச்சையும் இல்லை. அவை என்றென்றைக்கும் தொடர்ந்து கொண்டே இருக்கும். நாம் இறந்த பிறகும், அதன் ஏற்ற இறக்கம் மற்றும் ஓட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். கடலின் அலைகளைப் போலவே, இரவும் பகலும் போலவே – இது இந்த இயற்கையின் இயல்பாகும். இதைப் பாராட்ட முடிவது, நெருக்கமாகப் பார்க்க முடிவது, நம் மனதைத் திறக்க முடிவது – என்பதே மையம் ஆகும்.
ஓரளவு தைரியம், சில உறுதியான முடிவு, ஒருவிதமான உறுதிப்பாடு ஆகியவை நமது அச்சங்களை எதிர்கொள்ளத் தேவையானவை ஆகும். நாம் அவற்றைச் சந்திக்காத வரை, அவற்றைப் புரிந்து கொள்ள மாட்டோம். நாம் நமது அச்சங்களைப் புரிந்துகொள்ளாவிட்டால், அவற்றிற்கு மேலாக உயர்வது எப்படிச் சாத்தியமாகும்? எப்படியிருந்தாலும், அன்புடன் அரவணைப்பு மனப்பான்மையை வளர்த்துக்கொள்வது, நிரந்தர கவனத்துடன் இருப்பது ஆகியவை நம்முடைய அறியாமைகளைத் துடைப்பது, அச்சங்களை அகற்றுவது என்பவற்றிற்கு மிக்க அவசியம் ஆகிறது. இவை நம் பலவீனங்களை எதிர்கொள்ள நம்மைத் தயார் செய்கிறது.
முல்லா நஸ்ருதீன், ஒரு திரைப்பட அரங்கத்தில் தனது நண்பருடன் படம் பார்த்துக் கொண்டிருந்த போது, படத்தில் ஒவ்வொரு முறை சிங்கம் வரும் போதும், தனது இடத்திலேயே சுருண்டு, சுண்டப்பட்டது போல் குதித்துக் கொண்டிருந்தார். அவர் தனது முகத்தை மூடிக் கொண்டு, கத்தி, தன் நண்பனை இறுகப் பிடித்துக் கொண்டார்.
“உனக்கு என்ன நேர்ந்தது? இது ஒரு படம் தான்,” என்று அவரது நண்பர் அவரைத் திட்டினார்.
“நான் ஒரு முட்டாள் இல்லை! இது ஒரு படம் தான் என்று எனக்குத் தெரியும், ஆனால் அந்தச் சிங்கத்திற்கு அது தெரியுமா?” என்று முல்லா பதிலளித்தார்.
இதுவே தான் நமது அச்சத்தினால் நிகழ்கிறது. நாம் நமது பயங்களைப் பார்த்து சங்கடத்திற்கு ஆளாகிறோம். நாம் எதிர்த்து, தவிர்த்து, ஓடி விடுகிறோம். அந்த சிங்கத்தைப் போலவே, நமது அச்சமும் அதன் வழியில் போகிறது. இப்படியாகத் தான் இருக்க வேண்டிய அவசியமில்லை. அதிக மன்னிப்பு, அன்பு மற்றும் கவனம் உள்ளவர்களாக இருக்க எப்பொழுது நம்மைத் தயார்படுத்திக் கொள்ள நாம் பொறுப்பேற்கிறோமோ அந்தத் தருணமே, நாம் நம்முடைய அச்சங்களைக் காட்டிலும் வலுவானவராக ஆகி விடுகிறோம். உங்களது உரிமை அல்லது அறியாமை ஆகிய உணர்விலிருந்து எழும் எதிர்பார்ப்புகளை (உங்களிடமிருந்தும், மற்றவர்களிடமிருந்தும்) நீங்கள் பரிசோதிக்கும்போது, நீங்கள் தானாகவே உங்கள் பயத்தின் ஆதாரத்திற்குச் செல்கிறீர்கள். நீங்கள் ஆதாரத்தை அடைந்துவிட்டால், உங்கள் அச்சத்தைக் கிள்ளி எரிவது எளிதாகிறது. தவிர, பயம் எப்போதும் மோசமானது இல்லை. சில நேரங்களில், நாம் திட்டமிட்டுத் தயார் செய்ய, கட்டுப்பாட்டுடன் செயல்பட, நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கு முன் விளைவுகளைக் கருத்தில் கொள்ள உதவுகிறது.
வேத நூல்கள், நமது அச்சங்களைக் கடக்க நான்கு விஷயங்கள் தேவை என்று கூறுகின்றன.
1. தக்ஷதா (Dakshata), ஓரளவு தகுதி, அதாவது தயாராக இருப்பதாகும்.
2. உதாசீனதா (Udasinata), நடுநிலைப் பார்வை, வைராக்கியா (vairagya) அல்லது பற்றின்மை என்ற பொருளில்.
3. சமர்பனா (Samarpana), சரணடைதல், என்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் என்னால் கட்டுப்படுத்த முடியாது என்று புரிந்து கொள்ளுதல்.
4. க்ருபா (Kripa), கருணை – இந்த முடிவற்ற படைப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் தெய்வீகத் தன்மை தான், என் வாழ்க்கையையும் இயக்கிக் கொண்டிருக்கிறது என்ற அசைக்க முடியாத அந்த நம்பிக்கை.
மேலே உள்ள நற்குணங்களை மேம்படுத்துவதற்கு நீங்கள் உழைத்தால், நிலையான முதன்மை பயங்கள் இன்னும் அவ்வப்போது வந்து தவிக்க வைத்த போதிலும், காரணமற்ற பயங்கள் போய்விடும். உள்ளே உள்ள ஞானத்தின் வெளிச்சம் உங்கள் அச்சத்தின் இருளை அழித்துவிடும். ஒளி தான் நம் இயற்கை தர்மம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் உள்ளங்கைகளில் ஒரு சிறிய விளக்கை ஒளித்துக் கொண்டு ஒரு இருண்ட அறைக்குள் நீங்கள் நடக்க முடியும். உங்கள் உள்ளங்கைகளைத் திறக்கும் தருணத்தில், முழு அறையும் ஒளிர்கிறது. இருட்டைக் கொண்டு இதே போல் செய்ய முடியாது. நீங்கள் இருட்டை மறைக்க முடியாது அல்லது முன் செய்ததைப் போல், நன்கு ஒளிரும் ஒரு அறையை இருட்டாக்க முடியாது. நாம் வெளிச்சம் உடையவர்கள், நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம்மை மறைத்துக் கொள்ளாமல் இருப்பதாகும்.
உங்கள் உணர்வுகளுக்கு ஒளியூட்டிக் கொண்டால், உங்கள் இதயத்தில் இருளுக்கு இடம் இருக்காது. உங்கள் அச்சத்தைத் தாண்டி செல்வதற்கு, அதை விடப் பெரியதாக ஆகுங்கள். எந்த நாளிலும், அது மதிப்புக்குரியதாகும்.
அமைதி.
சுவாமி