மிகவும் மரியாதைக்குரிய பாபா பால்பாரதியிடம் ஒரு அற்புதமான அரேபியக் குதிரை இருந்தது. அசைந்தாடும் பயிர்கள் ஒரு விவசாயியிடம் விளைவிக்கும் அதே உணர்ச்சிகள், அந்த ஆண் குதிரையைப் பார்த்த மாத்திரத்தில் அவருக்கு ஏற்பட்டது. பாபாவின் துல்லியமான முன்கணிப்புக்களால் மகிழ்ச்சியடைந்த முகலாயர்களின் கடைசி மன்னர் அந்தக் குதிரையை அவருக்குப் பரிசாக அளித்தார். பாபா, ஒரு ஆண்டி (பகீர்), ஒரு கிராமத்தில், கோவில் வளாகத்தில் வசித்து வந்தார். அங்கு அவர் தனக்கு ஒரு குடிசையும், சுல்தான் என்று பெயரிடப்பட்ட தனது குதிரைக்கு ஒரு கொட்டிலையும் கட்டிக் கொண்டிருந்தார்.

“உங்கள் குதிரையைப் பற்றி மிக உயர்வாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நான் அதைப் பார்க்க விரும்புகிறேன்,” என்று கடஹ்சிங் கூறினார்.
கடஹ்சிங், பாபாவின் பக்தர் மற்றும் சீடர் ஆவார், ஆனால் இது மட்டுமே அவருடைய அறிமுகம் அல்ல. அவர் வழிப்போக்கர்களை அவர்கள் எதிர்பார்க்காத சமயத்தில் சூறையாடும் மிகுந்த பயங்கரமான கொள்ளைக்காரர். எப்போதுமே உற்சாகமாக இருக்கும் பாபா அவரைக் குதிரை லாயத்திற்கு அழைத்துச் சென்றார்.

“நம்பமுடியவில்லை, உண்மையில் இது நான் இதுவரை பார்த்த குதிரைகளிலேயே மிகச்சிறந்த குதிரை ஆகும்!” என்று கருப்பு நிறத்தில் பளபளக்கும் அந்த அற்புதக் குதிரையைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே கடஹ் கூறினார்.
“சுல்தானின் வருகையால் என் வாழ்க்கையில் ஒரு புதிய அர்த்தத்தைக் காண முடிந்தது,” என்று குதிரையின் பிடரி மயிரைக் கைகளால் துழாவிய பாபாவின் நெஞ்சம் பெருமையுடன் விரிந்தது. “ஒவ்வொரு நாளும் ஒரு அழகான நாள் தான் இப்போது!” என்றார்.

கடஹ் விரும்பிக் கேட்டுக் கொண்டதால், சுல்தானை ஒரு முறை சவாரிக்கு அழைத்துச் செல்ல பாபா அனுமதித்தார். அந்தக் கம்பீரமான குதிரை, வீசும் காற்றை விட வேகமாகப் பாய்ந்து சென்றது. என்ன வலிமை, கட்டுப்பாடு மற்றும் வேகம்! பேராசை மற்றும் பொறாமை உணர்வுகளால் கடஹ்ஹின் இதயம் மிகவும் எரிச்சல் அடைந்தது. ஒரு துறவிக்குக் குதிரையால் என்ன பயன்; சுல்தான், கடஹ்ஹின் தோழனாக, சொத்தாக இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தார். அதைக் கொட்டகையில் கட்டிப் போட்டுவிட்டு, அவர்கள் குடிசைக்குள் திரும்பிச் சென்றனர். அங்கு கடஹ் அதை வாங்குவதற்கு விலை பேசினார்.

“எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் தரமாட்டேன்!” என்று பாபா தன் எதிர்ப்பைத் தெரிவித்தார்.
சிறிது நேரப் பேரத்திற்குப் பின் பாபா எந்தத் தொகைக்கும், சுல்தானைப் பிரிய விருப்பப்படவில்லை என்பதைப் பரிந்து கொண்ட போது, “ஒரு நாள், நான் இந்தக் குதிரையை உங்களிடமிருந்து எடுத்துக்கொள்வேன்,” என்று எச்சரித்தார்.
“இல்லை கடஹ், தயவுசெய்து அவ்வாறு செய்யாதே. என் சுல்தான் இல்லாமல் என்னால் வாழ முடியாது.”
“எப்படியாக இருந்தாலும், ஏதாவது சூழ்ச்சி செய்தாவது அதை நான் பெறப் போகிறேன்,” என்று கடஹ் உள்ளூர வெறுப்புடன் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். சீடர்களுடைய எல்லாப் பயபக்தியையும், சீடர்களுக்கான சித்தாந்தக் கொள்கைகளையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, கடஹ் அப்படியே சென்றுவிட்டார்.

பாபாவால் அன்று இரவு தூங்க முடியவில்லை; அவர் தனது படுக்கையைக் கொட்டிலில் போட்டுக்கொண்டு இரவும் பகலும் சுல்தானைக் காத்துவந்தார். ஒரு சில வாரங்கள் கழிந்தன, குதிரையைத் திருடுவதற்கு யாரும் முயற்சி செய்யவில்லை. முன்போல் இல்லாமல், பாபா கொஞ்சம் ஆசுவாசமடைந்து சுல்தானின் மேல் ஏறி அந்தக் கிராமத்தின் புறநகர்ப் பகுதிக்குச் சென்றார்.

“தயவுசெய்து எனக்கு உதவி செய்யுங்கள், நான் இறந்து கொண்டிருக்கிறேன்,” என்று ஒரு வலுவற்ற குரல் அவரை அழைத்தது.
பாபா அந்தத் திசையில் பார்த்தார், ஆனால் இருட்டாக இருந்ததால் அந்த நபரை அடையாளம் காண முடியவில்லை. அவர் நெருக்கமாகச் சென்றார், யாரோ ஒருவர் தூசி ஒட்டிய உடலுடன் தரையில் சுருண்டு கிடந்ததைப் பார்த்தார்.
“என்ன நடந்தது?” என்று பாபா குதிரையில் இருந்தபடியே கேட்டார்.
“தயவுசெய்து என்னை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள், கடஹ்சிங் மற்றும் அவரது ஆட்கள் என்னை இறக்கமற்றுத் தாக்கினர்,” என்று அவர் கெஞ்சினார்.
“ஆனால், எனக்கு நீ யார் என்று கூடத் தெரியாது.”
“நான் புகழ்பெற்ற டாக்டர் துர்கா தத்தின் சகோதரன், உன்னைக் கெஞ்சுகிறேன், தயவுசெய்து இந்த ஏழைக்கு உதவி செய்யுங்கள்,” என்று அவனுடைய வயிற்றைப் பிடித்துக் கொண்டு கஷ்டப்படும் குரலில் கெஞ்சினான்.

பாபா, ஒரு மனித மனத்துடன் பார்த்தாரோ அல்லது ஒரு துறவி மனத்துடன் பார்த்தாரோ, எப்படி இருந்தாலும் தேவைப்படும் ஒரு நபருக்கு உதவ வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது என்று உணர்ந்தார். அவர் கீழே இறங்கி, அந்த மனிதன் குதிரை மீது ஏற பெரும் சிரமத்துடன் உதவினார். பாபா குதிரை மீது ஏறுவதற்குள், காயமடைந்தவர் போல் இருந்த அந்த மனிதன் கடிவாளத்தைக் கைகளில் பிடித்துக் கொண்டு, பாபாவின் மார்பில் வலுவாக உதைத்துத் தரையில் தள்ளிவிட்டான்.

“ஒரு நாள் இந்தக் குதிரை என்னுடையதாகிவிடும் என்று நான் உங்களிடம் சொன்னேன்,” என்று சவாரி செய்தவர் வெற்றிகரமாகக் கூறினார்.
அவர் குதிரையை ஓட்டிக்கொண்டு சில அடிகளைக் கடந்த போது, “நிறுத்து! கடஹ்சிங்,” என்று பாபா கர்ஜித்தார். கடஹ்ஹால் அவரது குருவின் குரலை அலட்சியம் செய்ய முடியவில்லை. மேலும், அவர் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. அவரிடம் ஆயுதங்கள் இருந்தன மற்றும் குதிரையின் மேலும் இருந்ததால், அவர் நிறுத்தினார்.
“ஒருவரிடமும் சொல்லாதே” என்று தூசியைத் தட்டிக் கொண்டே அருகில் வந்து பாபா முணுமுணுத்தார். “இந்தச் சம்பவத்தைப் பற்றி ஒருவரிடமும் குறிப்பிடாதே. நீயே சுல்தானை வைத்துக் கொள்ளலாம்,’’ என்றார்.
“ஏன்? பாபாவால் தன் சொந்த குதிரையையே காப்பாற்ற முடியவில்லை என்றால், அவர் எப்படி நம்மை இரட்சிப்பார் என்று மக்கள் கூறுவார்களே என்று நீங்கள் பயப்படுகிறீர்களா?” என்று கடஹ்சிங் குதிரையைத் தடவிக் கொண்டே கேட்டார்.
“இதோ பாருங்கள் கடஹ், மக்களுக்கு இது தெரிந்தால், தேவையில் உள்ள வேறொரு நபரை யாருமே நம்பமாட்டார்கள். மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவுவதை நிறுத்திவிடுவார்கள்.” அத்துடன் பாபா பால்பாரதி, சுல்தானை விரும்பியதே இல்லை என்பது போல், துறவிக்கே உரித்தான பற்றற்ற தன்மையுடன் திரும்பி நடந்து சென்றார்.

கடஹ் மிகுந்த பெருமிதத்துடன் குதிரையை ஓட்டிச் சென்றார். பாபா இனி இழப்பதற்கு எதுவும் இல்லை, ஆகையால் கவலைப்படவும் எதுவும் இல்லை என்று ஆறுதலாக எண்ணினார். கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும், கடஹ் அதிகமாக அமைதியற்றவனாகிக் கொண்டே வந்தான். என் குருவுக்கு இப்படிச் செய்ய என்னால் எப்படி முடிந்தது? எனக்குள் இருக்கும் எந்த மிருகம் என்னை இப்படித் தரக் குறைவாக நடக்க வைத்தது? என் மேல் கோபப்படுவதற்குப் பதிலாக, பாபா உலகத்தைப் பற்றித் தான் இரக்கத்துடன் எண்ணினார். அந்தக் குதிரை இல்லாமல் வாழவே முடியாது என்று சொன்ன அவர், எவ்வளவு அமைதியாக அந்தக் குதிரையிடமிருந்து தூரமாக விலகிச் சென்றார்… இது போல் பலவிதமான எண்ணங்கள் கடஹ்ஹைப் பாதித்தன. ஆழ்ந்த இரவு நேரத்தில் அவர் ஆலயத்திற்குச் சென்று, குதிரையை அதன் கம்பத்தில் கட்டிப் போட்டுவிட்டு அங்கிருந்து நழுவிவிட்டார்.

காலையில் பாபா தனது குடிசையில் இருந்து வெளியே வந்த போது, சுல்தான் எஜமானரின் அடிச்சுவடுகளை அடையாளம் கண்டு கொண்டு பெரும் மகிழ்ச்சியுடன் கனைத்தது. ஆச்சரியத்துடன் பாபா கொட்டிலை நோக்கி வெறும் காலுடன் ஓடினார். தன் கண்களைப் போல் நேசித்த அதைப் பார்த்து, ஆச்சரியத்துடன் அதன் மேல் சாய்ந்து அதன் நீண்ட கழுத்தில் தனது முகத்தைப் பதித்து, ஆதரவாகத் தட்டியும், தடவியும் கொடுத்தார். பாபாவின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. “ஓ சுல்தான், இப்போது தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்ய மக்கள் பயப்பட மாட்டார்கள்” என்றார்.

இந்தக் கதை (ஹார் கீ ஜீட், Haar ki jeet), சுதர்சன் என்ற பிரபல இந்தி எழுத்தாளரால் (1895-1967) எழுதப்பட்டுள்ளது. நான் இங்கே அதை மொழிபெயர்த்திருக்கிறேன். நான் முதலில் அந்தப் புத்தகத்தைப் படித்தபோது, அது என்னை மிகவும் பாதித்தது, அது பட்டாம்பூச்சி விளைவை எனக்கு நினைவூட்டியது.

ஒரு மிகப் பெரிய மணல் குவியலில், எவ்விதமான மாற்றமும் ஏற்படாமல் அதிலிருந்து நாம் ஒரு மண் துகளைக் கூட அகற்ற முடியாது. அது போலவே, நமது ஒவ்வொரு செயலும் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், பிரபஞ்சத்தின் இயல்பில் ஒரு அதிர்வை ஏற்படுத்துகிறது, அது மற்றவர்களையும் பாதிக்கிறது. சிறிய செயல்கள் அல்லது காரணங்கள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். நம் செயல்களின் விளைவுகள் இப்போதே வெளியில் தெரியாமல் இருக்கலாம் (அவை பெரும்பாலும் தெரிவது இல்லை), ஆனால் அவை கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி இறுதியில் வெளிப்படையாகின்றன. இந்தக் கோட்பாடு, நமது மிகச் சிறிய நடவடிக்கை கூட முழு பிரபஞ்சத்தின் மீதும் விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று கூறுகின்ற வேதியியல் பார்வையுடன் சரியாக ஒத்துப்போகின்றது. நாம் தான் பிரபஞ்சம், பிரபஞ்சம் மற்றும் அதில் உள்ள அனைத்தும் அது உள்ளடக்கியவற்றைக் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளது, அதில் நீங்களும் நானும் அடங்குவோம்.

சில வாரங்களுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு, உண்மையில் பல ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் ஒரு சூறாவளி உருவாகவும், அதற்கான பாதையை உருவாக்கவும் தூண்டுதலாக இருக்கலாம். ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பால் இடம்பெயரும் நுண்ணிய அளவிலான காற்று, வானிலை அறிக்கையின் கணிப்பிற்குக் காரணியாகிறது என்று 1961 இல் எட்வர்ட் லாரன்ஸ் என்பவரால் கூறப்பட்டது, அது முற்றிலும் வித்தியாசமான விளைவுகளைக் காட்டியது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பட்டாம்பூச்சியின் விளைவு என்பது கர்மா சட்டத்தின் நுட்பமான மற்றும் மிகவும் அதிநவீனமான விளக்கமாகும். நாம் என்ன செய்தாலும் அது நம்மை மட்டுமல்ல, மற்றவர்களையும் பாதிக்கிறது.

சர்வபூதேஸூ யேனைக்கம் பாவமவ்யயமிக்ஷ்ஷதே
அவிபக்தம் விபக்தேஸூ தஜ்னானம் வித்தி சாத்விகம்

அனைத்து, வெவ்வேறானதும், தனித்தனியான பொருட்களும் உலகளாவிய ஆற்றல் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. தூய ஞானத்தால், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பிரிக்கக்கூடிய மற்றும் வேறுபட்ட பொருட்களில் ஒரு நித்தியமான மற்றும் பகுக்க முடியாத சக்தி ஓடிக் கொண்டிருப்பதை ஒருவர் காண்கிறார்.
(ஸ்ரீமத் பகவத் கீதா, 18.20.)

நம் செயல்கள் நம்மைப் பற்றியது மட்டுமே, என்னுடைய மகிழ்ச்சி என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியது மட்டுமே என்று நம்புவதென்பது, வெறும் அறியாமையின் அறிகுறி மட்டுமல்ல, நீடித்த துயரம் மற்றும் துன்பத்துக்கான அழைப்பாகும். நாம் மற்றவர்களிடமிருந்து சுயாதீனமாக இருப்பதாகத் தோன்றலாம் அல்லது தொலைதூர உலகச் சம்பவங்களால் பாதிக்கப்படாமலும் இருக்கலாம். ஆனால் நம்மில் ஒவ்வொருவரும் உலகளாவிய மகிழ்ச்சி மற்றும் அமைதியை அளிப்பவராகவோ அல்லது வாங்குபவராகவோ இருக்கிறோம். நாம் அதை உணர்கிறோமோ இல்லையோ, நாம் தொடர்ந்து மற்றவர்களுக்கு உதவுகிறோம் அல்லது அவர்களின் காலை மிதிக்கிறோம் (சில சமயங்களில் இரண்டையும் ஒரே நேரத்தில் செய்கிறோம்).

முல்லா நஸ்ருதீனின் மனைவிக்கு ஆறு வயது சகோதரன் இருந்தான். அவனது பெற்றோரின் கண்டிப்பால் அவன் வெறுப்படைந்திருந்தான்.
“இது உண்மைதானா? பெற்றோரின் கர்மா அவர்களது குழந்தைகளையும் பாதிக்கின்றனவா?” என்று அவன் முல்லாவிடம் கேட்டான்.
“அது மட்டுமல்ல, உன் சகோதரியுடன் வாழும் அவர்களது மருமகனாகிய என்னையும் பாதிக்கிறது,” என்று ஆழ்ந்த பெருமூச்சுடன் முல்லா கூறினார்.

குறுகிய மற்றும் தற்காலிகமானதாகத் தெரியும் நமது இந்த வாழ்வில், நித்தியத்தின் ஒரு தடயத்தைச் சுமந்து கொண்டிருக்கிறோம். எப்போதும் இருந்து கொண்டிருக்கும் மற்றும் விரிவாகிக் கொண்டிருக்கும் இந்த முடிவில்லாப் பிரபஞ்சம், ஒரு தொடக்கமோ அல்லது ஒரு முடிவோ இல்லாமல், நம் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு வஸ்துவாலும் ஏற்படும் எண்ணற்ற சிறிய சிறிய அதிர்வுகளால் செழிப்படைகிறது. ஒரு மலைப்பகுதியில் இருந்து ஒரு பாறாங்கல் உருளுதல், ஒரு கொசு நீர் ஓட்டத்தில் சறுக்கிச் செல்லுதல், நமது நீடித்த சிந்தனைகள், நமது வார்த்தைகள் மற்றும் செயல்கள் எல்லாம் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன. எனவே தான் நமது பாதையில் கடந்து செல்லும் அனைவரிடமும் கருணை, அன்பு மற்றும் விருப்பத்துடன் இருக்க வேண்டும் என்று நான் சொல்கிறேன். தனிநபர் குறிக்கோள்கள் மற்றும் சுதந்திரத்திற்காகப் போராடும் ஒரு சுயாதீனமான உறுப்பினராக நாம் இருக்கையில், உண்மை என்னவென்றால், உலகளாவிய ரீதியில் நாம் ஒன்றோடொன்று இணைந்திருக்கிறோம் மற்றும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறோம். நாம் அனைவரும் ஒன்று. முழுமை நம்மை உள்ளடக்கி உள்ளது.

முழுமையான எண்ணங்கள், முழுமையான உணர்ச்சிகள், முழுமையான வார்த்தைகள் மற்றும் முழுமையான செயல்கள், முழுமையான உலகிற்கு வழிநடத்தும். மேலும், ஒரு முழுமையான உலகம், மொத்த இருப்பையும் முழுமையானதாக ஆக்கும்.

நாம் கவனமாக இருப்போம். முழுமையாக இருப்போம். இது செய்யக் கூடியது.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email