நாம் மற்றவர்களுக்கு எதையாவது கொடுக்கும் போது, அடுத்தவர்களுக்கு நல்லது செய்ய நம்மால் முடியும் போது, எவ்வளவு சந்தோஷமாக உள்ளது என்று நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா? நீங்கள் கொடுப்பதை மற்றவர் அக்கறையுடன் ஏற்றுக் கொண்டாலும், ஏதாவது வழியில் அதற்கு ஏற்றவாறு கைமாறு செய்தாலும், சந்தோஷத்தின் அளவு இன்னும் அதிகமாகிறது. இதுவரை அனைத்தும் நன்றாக உள்ளது. ஆயினும், பல முறை நாம் செய்த நன்மைக்கு, எதிர்பார்க்கும் கைமாறு நமக்கு வருவதில்லை. ஒன்று, மற்ற நபர் நாம் அவருக்குச் செய்யும் நன்மையைப் பாராட்டுவது இல்லை, அதை மதிப்பதில்லை, அல்லது ஒருவேளை அவர்களுக்கு அதற்கு மேல் நல்ல விதத்தில் நடந்து கொள்ளத் தெரிவதில்லை. நீங்கள் அவர்களுக்குச் செய்யக் கடமைப்பட்டிருப்பதாக அவர்கள் நினைக்கின்ற போது, அது இன்னும் கூட மோசமாகிறது.

உண்மையில் நமக்குக் கிடைக்க வேண்டியதை விட அதிகமான புகழ் கொடுக்கப்படும் போது நாம் ஒன்றும் புகார் செய்வதில்லை. மற்றவர்களால் நம்மீது குவிக்கப்படும் முகஸ்துதி மற்றும் வழிபாடுகளுக்கு மிகத் தகுதியானவர் தான் நாம், என்று சிந்திக்கத் தொடங்குகிறோம். ஆனால், நாம் நமது முயற்சிகள், தொண்டோ அல்லது சிறந்த செயலோ எதுவாயினும் அதற்குத் தகுந்தாற்போல் மதிப்பிடப்படவில்லை என்று உணரும் போது நாம் எரிச்சலை உணரத் தொடங்குகிறோம். இந்த எரிச்சல் குறைவது இல்லை. அந்த நபரை அடுத்த முறை பார்க்கும் போது, அவர் அல்லது அவள் எப்படி நன்றி இல்லாதவராக நடந்து கொண்டார் என்பதைப் பற்றித் தொடர்ந்து நினைவு கொள்கிறோம்.

பொதுவாக அனைத்து உறவுகளிலும் உள்ள சிக்கல்களுக்கு இதுவே முக்கியக் காரணம் ஆகும். ஒன்று நீங்கள் செய்ய வேண்டியதை விட அதிகம் செய்வதாகவும், மற்றவரிடமிருந்து அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றோ, அல்லது மற்ற நபர் செய்ய வேண்டியதை விடக் குறைவாகச் செய்வதால் பொறுப்புடன் நடந்து கொள்வதில்லை என்றோ நீங்கள் உணர்கிறீர்கள். எப்படி இருந்தாலும், ஆணி வேராக உள்ள உணர்வு ‘என்னைப்  பயன்படுத்திக் கொள்கிறார்கள் அல்லது நான் போற்றப்படவில்லை’ என்பதே ஆகும்.

எனினும் இன்று என் கவனம் உறவுகளில் பரஸ்பரம் கொடுத்து வாங்குவதைப் பற்றி அல்ல, சேவையைப் பற்றிய நமது அணுகுமுறையைப் பற்றியதாகும். தொண்டு, கருணை மற்றும் மற்றவர்களுக்குச் சேவை செய்தல் ஆகியவற்றின் மீது எனது பார்வையைத் திருப்பினால், பல பிரச்சினைகள் மறைந்து விடக்கூடும். நாம் நிலைமையைத் தலைகீழாக மாற்றினால் என்னவாகும்? நான் இதற்கு மேல் செல்வதற்கு முன் பிரபலமான ஒரு சிறிய கதையைப் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்தியாவின் இரண்டு பெரிய ஞானிகள், அற்புதமான கவிஞர்கள், சமகாலத்தவர்கள் மற்றும் நண்பர்களாக இருந்தனர். ஒருவர் இந்து மத ஞானி கோஸ்வாமி துளசிதாஸ் மற்றும் இன்னொருவர் அப்துல் ரஹீம் கான்-இ-கான் என்ற ஒரு முஸ்லீம் துறவி ஆவார். ரஹீம், அக்பருடைய தர்பாரின் “நவரத்னா” (navaratna) என்று அழைக்கப்பட்ட ஒன்பது முக்கிய அதிகாரிகளுள் ஒருவர். நல்ல வருமானத்துடனும், அவரது தனிப்பட்ட வருமானத்திலிருந்து ஒரு பெரிய அளவிலான பணத்தை நன்கொடையாகக் கொடுக்கும் வழக்கத்துடனும் இருந்தார்.

ஒவ்வொரு நாளும், மக்கள் தங்கள் பிரச்சினைகளுடன் அவரை அணுகினார்கள், அவரும் அவர்களுக்குத் தேவையானவற்றைத் தன்னால் முடிந்தவரைக் கொடுத்தார். ஏழைகளுக்குத் தர்மம் கொடுப்பதற்கு ரஹீம் கையாண்ட தனிப்பட்ட ஒரு வழி மிகவும் அசாதாரணமானதாக இருந்தது. அவர் தர்மம் கொடுக்கும் போதெல்லாம் மற்றவருடைய கண்களைப் பார்க்காமல், கீழ்நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

மற்றவர்க்குத் தானம் அளிக்கும் போது ஏன் கீழ்நோக்கிப் பார்க்கிறீர்கள். அதை நீங்கள் நியாயமான முறையில் சம்பாதிக்கவில்லையா, கரைபட்ட செல்வத்தைக் கொடுப்பதற்காக வெட்கமாக இருப்பதாலா, என்று துளசிதாஸ் நட்பு முறையில் ரஹீமுக்குக் கேலியாக ஒரு கடிதம் எழுதினார். நகைச்சுவையாக அவர் இவ்வாறு எழுதினார்:

aisī denī deṃna jyūm̐, kita sīkhe ho saina,
jyoṃ jyoṃ kara ūṃcyo karo, tyoṃ tyoṃ nice naina.
ஐஸீ தேனி தேம்நா ஜியூம், கித்த சீகே ஹோ சைனா,
ஜ்யோம் ஜ்யோம் கற உம்ச்யோ கரோ, தியோம் தியோம் நீசே நயனா.

“என் அருமை நண்பரே, நீங்கள் ஏன் இப்படித் தர்மம் செய்ய வேண்டும்? எங்கே இதைக் கற்றீர்கள்? தர்மம் செய்ய உங்கள் கைகளை உயர்த்தும் போது நீங்கள் உங்கள் கண்களைத் தாழ்த்திக் கொள்கிறீர்கள் [என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்].”

ரஹீம் பணிவு, ஞானம் மற்றும் அறிவுடனான ஒரு திறமையான பதிலை எழுதி அனுப்பினார்.

denahāra koī aura hai, bhejata jo dina raina,
loga bharama hama para kare, tāso nice naina.
தீனஹாரா கோயி ஔரா ஹே, பேஜதா ஜோ தீனா ரைனா,
லோகா பரமா ஹமா பரா கரே, தாசோ நீசே நயனா. 

“கொடுப்பவர் வேறு யாரோ ஒருவர் [கடவுள்], அவர் இரவும் பகலும் கொடுத்து வருகிறார். ஆனால் மக்களுக்குக் கொடுப்பவர் யார் என்ற சந்தேகம் எழுகிறது. கொடுப்பவன் நான் என்று நினைக்கிறார்கள். அதனால் தான் நான் என் கண்களைத் தாழ்த்திக் கொள்கிறேன்.”

புகழப்பட வேண்டிய ஒரு விஷயம். கொடுப்பதைப் பற்றியதான நமது அணுகுமுறை இதை விட வேறு நல்ல முறையில் இருக்க முடியுமா என்று நான் சந்தேகிக்கிறேன். நாம் கொடுப்பவற்றை நாம் சம்பாதித்திருக்கலாம் ஆனால் நாம் உண்மையில் அவற்றுடனேயே பிறக்கவில்லை என்பதை ஒரு கணம் நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். நம்மிடம் உள்ள அனைத்தும், எல்லா விதத்திலும் வேறு யாரோ ஒருவரால் நமக்கு வழங்கப்பட்டது. நமது ஆசிரியர்கள், பெற்றோர், உடன்பிறந்தோர், நண்பர்கள், சமூகம், அரசு, இயற்கை அல்லது வேறு யாராவது ஒரு சாதனமாக இருந்திருக்க வேண்டும்.

இதேபோல், எப்போதும் இல்லை என்றாலும் அடிக்கடி, நாம் ஒரு சாதனமாகவே இருக்கிறோம். நம்மிடமிருந்து தர்மம் பெறுபவர், நாம் தர்மம் கொடுக்கக் கூடியவராக இருப்பதால் மட்டுமே பெறுகிறார் என்று அவசியம் இல்லை. நாம் அவருக்குக் கடன்பட்டவராக இருக்கக் கூடும். ஒருவேளை அவர்கள், அவர்களுடைய கர்மாவின் மூலம் அதைச் சம்பாதித்து இருக்கலாம், நாம் நமது கர்மாவின் கணக்கை அடைக்க வேண்டி இருக்கலாம். குறிப்பாக, நீங்களாகவே தேர்வு செய்யாமல் கட்டாயத்தின் பேரில் கொடுத்தால், நீங்கள் ஒரு பழைய கர்மாவின் கடனைத் தீர்ப்பதற்கான ஒரு பெரும் வாய்ப்பாகவே அது உள்ளது. எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள். கோபம் கொள்ள வேண்டாம். எவ்வளவு விரைவில் அதைக் கொடுத்து முடிக்கிறீர்களோ அவ்வளவு விரைவாக அதை விட்டு வெளிவர முடியும்.

நாம் தேர்வு செய்தோ அல்லது செய்யாமலோ கொடுக்கிறோம் என்றால், உண்மையாகவே நாம் அனைவருமே வெறும் ஒரு சாதனமாகவே இருக்கிறோம். பல்வேறு மதங்களின் புனித நூல்களின்படி, ஒரு அடிப்படைக் கருத்தினைக் கவனிக்க வேண்டி இருந்தால், நாம் தெய்வீகத்தின் கைகளில் கருவிகளாகவே இருக்கின்றோம் என்ற போதனையாகவே இது இருக்கக் கூடும். சிலர் மற்றவர்களை விடத் தூய்மையான மற்றும் அதிக ஆற்றல் மிக்கக் கருவியாக இருக்கிறார்கள் அவ்வளவுதான்.

நீங்கள் 1000 லிட்டர் தண்ணீரைத் தீர்க்க வேண்டும் என்றும், உங்களுடைய குழாயுடைய வாயின் அகலம் 2 சென்டிமீட்டர் மட்டுமே என்றும் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதைக் காலி செய்ய, அதுவும் குழாயில் எந்த அடைப்பும் இல்லை என்ற அனுமானத்துடன், உங்களுக்கு நிறைய நேரம் எடுக்கும். இப்போது உங்களுடைய குழாயின் வாயின் அகலம் 20 சென்டிமீட்டர் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். அதே அளவு நீரைக் காலி செய்ய, உங்களுக்கு மிகக் குறைந்த நேரமே எடுக்கும்.

இப்படித்தான் கர்மாவிலும் நடைபெறுகிறது. ஒரு கர்மாவின் கடனைக் கழிக்கும் போது, விரைவாகவும், அதிகமாகவும் நீங்கள் செலுத்தினால், வேகமாகக் கர்மாவை முடித்துவிட்டு அதிலிருந்து விடுபட முடியும். எவ்வளவு அதிகமாக அடைப்புகள் உள்ளனவோ அவ்வளவு அதிகமான நேரம் எடுக்கும். தவறான எண்ணங்களால் (நானே செய்பவன், வழங்குபவன் மற்றும் இதுபோன்று பல), தவறான எதிர்பார்ப்புகளால் (நான் ஒருவருக்கு ஏதாவது ஒன்றைச் செய்வதால் அவரிடம் எனக்கு உரிமை உள்ளது), தவறான உணர்வுகளால் (என் தொண்டைக் குறைவாக மதிப்பிட அவர்களுக்கு என்ன தைரியம்) மற்றும் பல வழிகளில் இது போன்ற அடைப்புகள் வர முடியும்.

எவரிடமும் எதையும் கொடுக்கக்கூடிய ஒரு நிலையில் இருப்பது ஒரு மாபெரும் பாக்கியம், ஒரு ஆசீர்வாதம் என்பதை எல்லா நேரங்களிலும் நினைவில் கொள்ள முடியுமானால், மற்ற நபர் கைம்மாறு எதுவும் செய்யாத போது குறைந்த அளவு காயத்தையே உணர்வீர்கள். நம்மால் கொடுக்க முடியும் போது, இயற்கையானது நம் மேல் ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையை வைத்திருக்கிறது என்று அர்த்தம். யாரோ ஒருவரின் வாழ்க்கையில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் வகையில், கொடுக்கப் போதுமான அளவு வலு நம்மிடம் உள்ளதாக அது உணர்கிறது. என்னை நம்புங்கள், இத்தகைய ஒரு ஆசிக்குப் போதுமான நன்றியுடையவர்களாக நம்மால் இருக்க முடிவதில்லை. எப்படிப்பட்டவராக நீங்கள் இருக்க விரும்புகிறீர்கள்? நன்றியில்லாமல் அல்லது நன்றியுடன் எடுத்துக் கொள்பவராகவா, அல்லது கருணை மற்றும் அடக்கத்துடன் கொடுக்கக்கூடிய ஒருவராகவா? நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் எதிர்பார்ப்புகள் இல்லாமல் கொடுக்கும் போது (அது எளிதானது அல்ல ஆனால் நிச்சயமாகச் செய்யக்கூடியது தான்), இயற்கை எந்த ஒதுக்கீடும் இல்லாமல் உங்களை ஆசீர்வதிக்கும். நீங்கள் நிறுத்தி வைத்துக் கொள்ளாதவரை, அதுவும் நிறுத்திக் கொள்ளப் போவதில்லை. மேலும் இயற்கையிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. அது, ஒரு குறிப்பிட்ட பற்றின்மை மற்றும் மனஅமைதியுடன் கொடுக்க வேண்டும் என்பதாகும். அது எவ்வளவு அமைதியாகக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது என்பதைப் பாருங்கள். ஒருவேளை இதுவே அதன் நித்தியத்துவத்தின் ரகசியமாக இருக்கலாம். ஒரு நீர்வீழ்ச்சி அல்லது ஒரு நதியைப் பாருங்கள். அது பகுத்தறியாமல் தொடர்ந்து கொடுக்கிறது. ஆன்மீக உறவு என்பது கொடுப்பவர் மற்றும் பெறுபவர்க்கு இடையே உள்ள உறவு இல்லை என்று ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். மாறாக அது கொடுப்பவருக்கும் அவரது ஆன்மாவிற்கும் இடையே உள்ள உறவாகும். உங்களுடனான உங்களது உறவு உண்மையானதும் அர்த்தம் உள்ளதுமானதாக இருந்தால், வாழ்க்கையின் மற்ற அனைத்தும் விரைவில் இரண்டாம் பட்சம் ஆகிறது.

நன்றி உணர்வுடன் வழங்கப்படும் அறமானது ஒரு ஆன்மீகச் செயல் ஆகும், அதேசமயம் எதிர்பார்ப்புகளைக் கொண்டு செய்யப்படும் அறமானது வெறும் ஒரு வர்த்தகச் செயல் ஆகும்.

அடுத்த முறை நீங்கள் கொடுக்கும் போது, மற்ற நபர் அதற்கான கைம்மாறு எதுவும் செய்யவில்லை என்றால் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் கோரிக்கை எதுவும் இல்லாமல், உங்களுடைய நற்செயலால் அவர்களைச் சோர்வடையச் செய்யுங்கள். நாளடைவில் இது முற்றிலும் மதிப்புள்ளதாக இருக்கப் போகிறது, குறிப்பாக, ஆன்மீகத் துறையில் உங்களை உயர்த்திக் கொள்வதிலும், உங்களை விடுதலைப் படுத்திக் கொள்வதிலும் உங்களுக்கு அக்கறை இருக்குமானால். நம் இருப்பிற்கான மற்றும் என் எழுத்துக்களுக்கான முழுக் காரணமும் இதுவே ஆகும், என்று நான் இத்துடன் சேர்க்க விழைகிறேன்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email