இந்த உலகத்தில் நாம் வாழும் வாழ்க்கையின் பெரும்பாலான விஷயங்கள் அனிச்சையாக எந்திரங்களைப் போல் இயங்குகின்றன. மக்கள் பிறக்கிறார்கள், வளர்கிறார்கள், கல்வியைப் பெறுகிறார்கள், வேலையை ஏற்கிறார்கள், திருமணம் செய்து கொள்கிறார்கள், குழந்தைகளைப் பெறுகிறார்கள், அவர்களையும் மற்றும் தங்களையும் பராமரித்துக் கொள்கிறார்கள், முதுமையை அடைகிறார்கள், பின் இறந்து போகிறார்கள்.

வெளியே செல்வது, திரைப்படங்கள் பார்ப்பது, இசையைக் கேட்பது மற்றும் மக்களுடன் பழகுவது என்று பெரும்பாலான மக்கள் ஏன் இவ்வாறு அனுபவிக்கிறார்கள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? பெரிய அளவிலான மக்களின் சேர்க்கை, கூட்டங்கள், கச்சேரிகளுக்குச் செல்வது முதலானவற்றில் ஏன் பலர் மகிழ்கிறார்கள்? சமூகம் மற்றும் பரிணாமம், தங்கள் மகிழ்ச்சியை வெளியே நாட மக்களைப் பெரிதும் பக்குவப்படுத்தி இருக்கிறது. மகிழ்ச்சிக்கான இத்தகைய வெளிப்புற நோக்கத்தால், உண்மையில் நீங்கள் யார் என்பதற்கும், நீங்கள் எப்படிப்பட்டவர் என்று காட்டிக் கொள்ள முனைகிறீர்கள் என்பதற்கும் இடையேயான தூரம் அதிகரிக்கிறது, இடைவெளியும் அதிகரிக்கிறது.

எனவே, ஒருவர் இந்தப் பொருள் உலகின் வாய்ப்புகளைத் தொடரக் கூடாதா அல்லது ஒருவர் தமது பொறுப்புகளைப் புறக்கணிக்க வேண்டுமா? இல்லவே இல்லை. அதற்கு மாறாக, உங்கள் கனவு வாழ்க்கையை வாழ்வதில், குறிப்பாக மற்றவர்களுக்கு உதவி செய்வதில் உங்களை அது ஈடுபடுத்துகிறது என்றால், எந்தத் தவறும் இல்லை. ஆனால், இன்று என் கவனம், நாம் இயற்கை மற்றும் தேவையானது என்று நினைக்கும் பல நடவடிக்கைகளுக்கு, ஒரு புதிய கண்ணோட்டத்தை நீங்கள் பெற உதவுவதாகும்.

நீங்கள் நேரம் செலவிட்டு ஆராய்ந்தால், உங்கள் அனைத்து வெளிப்புறச் செயல்களும், நீங்கள் உங்களையே மறக்கும்படியாகச் செய்கின்றன என்பதைக் காண்பீர்கள். நீங்கள் உங்களையே சமாளிக்க வேண்டியதில்லை, உங்களைச் சரி செய்து கொள்வதற்கான வேலைகளைச் செய்யும் தேவை மறைந்துவிடுகிறது. சினிமாக் கூடத்தில், டிவி பார்க்கும் போது, ஒரு விருந்தினர் கொண்டாட்டத்தில், ஒரு சமூக நிகழ்ச்சியில், ஒரு கூட்டத்தின் மத்தியில் நீங்கள் ஒரு வெளி ஆதாரத்துடன் இணைத்துக் கொண்டிருக்கும் போது, நீங்கள் யார் என்பதில் இருந்து விலகிச் செல்கிறீர்கள், உங்களைச் சுற்றி உள்ள சூழல் உங்களது மனநிலையை வடிவமைக்கிறது, அது உங்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெறுகிறது, அது மூலத்தில் இருந்து உங்களைத் துண்டிக்கிறது.

ஒருநாள் என் குடிசைக்கு வெளியே, திடீரென்று வீசிய காற்றினால் ஒரு பசுமையான மரம் வேகமாக ஆடிக் கொண்டிருந்தது, அதன் இலைகள் தொடர்ந்து விளையாடுவதைப் போல் படபடத்துக் கொண்டிருந்தன. வானம் மேகமூட்டத்துடனும், நதி முரட்டுத்தனமாகவும் இருந்தது, மலைகள் பச்சை நிறத்தில் செழிப்பாகவும், தொலைவில் கால்நடைகளின் மேய்ச்சலையும் காண முடிந்தது. பெரிய அளவில் சுறுசுறுப்பான செயல்பாடுகள் இயற்கையில் நடந்து கொண்டிருந்தன. ஆனால் அந்த இடம் முற்றிலும் அமைதியாகவும், மேன்மையுடனும் இருந்தது. நான் என் கவனத்தை மீண்டும் இலைகளிடம் திருப்பினேன். அவை நடனம் ஆடிக்கொண்டு, மரத்தில் இருந்து தங்களைத் தனியாக பிரித்துக் கொள்ள முயற்சிப்பதைப் போல் கடினமாகச் சுழன்று கொண்டு, ஒருமுறை பிரிக்கப்பட்டால் வலிமைமிக்க காற்றுடன் அவற்றால் அதிக தூரம் மற்றும் அதிக உயரம் பறக்க முடியும் என்று அறிந்தாற்போல் வெளியே உள்ள அதிக சுதந்திரத்தை அடைய அவை போராடிக் கொண்டிருந்தன.

அப்போதுதான் ஒரு இலை மரத்தை விட்டுப் பிரிந்து, தரையில் மோதி ஒரு குட்டையில் இறங்குவதற்கு முன்னால், காற்றில் பத்து அடிகளுக்கும் மேல் உயரப் பறந்து கொண்டிருந்தது. முன்னர் பச்சையாக இருந்த அந்த இலை விரைவில் அழுகத் தொடங்கிவிடும் என்று நான் நினைத்தேன். அதற்குச் சுதந்திரம் கிடைத்தபோதிலும், அதன் மூலத்தில் இருந்து துண்டிக்கப்பட்டதால், ஊட்டத்தைக் கிரகிக்கும் மற்றும் வலிமை அடையும் திறனை அது இழந்துவிட்டது. அது அங்கு உயிரற்று கிடக்கின்றது. அது மரத்தில் இணைத்து இருந்த போது, பூமியிலிருந்து தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்தைப் பெற முடியும். இப்போதும் அந்த இரண்டும் இருந்தாலும் கூட, அவற்றால் அந்த இலைக்கு ஊட்டச்சத்தைக் கொடுக்க முடியாது, அதைச் சிதைக்க மட்டுமே முடியும்.

இந்த உலகில் நீங்கள் என்ன செய்தாலும் சுதந்திரமாக அனுபவியுங்கள், நீங்களாகவே இருங்கள். ஆனால் அந்தத் தெய்வீக, ஆதியிலிருந்து வந்த ஆற்றல், நீங்கள் வேர் விட்டு வளர்ந்த அந்த மிகச்சிறந்த விதை ஆகிய மூலத்தில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ளாதீர்கள். மூலத்தை வெட்டிவிட்டுப் பெறும், எந்தச் சுதந்திரமும் குறுகிய வாழ்வை உடையது மற்றும் தற்காலிகமானது தான்.

நீங்கள் இன்னும் வேருடன் இணைக்கப்பட்டு உள்ளீர்களா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? கோவில்களுக்குச் செல்வது, புனிதமான பெயர்களை உச்சரித்துக் கொண்டே இருப்பது ஆகியவை சரியான குறியீடுகள் அல்ல, அவை வெறும் நடவடிக்கைகள் தான், உண்மையில் வெளி நடவடிக்கைகளாகும். நீங்கள் உங்களுடனேயே இணக்கமாக, ஆழ்மனத்தில் அமைதியாக இருக்கும் போது தான் நீங்கள் பெருமளவு உட்புறமாகத் திரும்பி உள்ளதாக, ஆன்மீகச் சாரத்தை நீங்கள் புரிந்து கொண்டு மற்றும் கிரகித்துக் கொண்டுள்ளீர்கள் என்று அர்த்தம். இதுவே நீங்கள் மூலத்துடன் இருப்பதற்கான பெரிய அறிகுறி ஆகும்.

முன் ஒரு காலத்தில் ஒரு ராஜா, அவரது பரிவாரங்களுடன் ஆழமான இமாலய காடுகளில், தன் குகையில் இருந்த ஒரு முனிவரை அணுகினர். அதற்கு ஒரு சிறிய நுழைவு வாயில் இருந்தது. அவர் குனிந்து குகையின் உள்ளே சென்றார். உள்ளே மிக அமைதியாக இருந்தது.

“ஓ முனிவரே, நீங்கள் இங்கே மிகவும் தனிமையில் இருப்பதாக உணர வேண்டுமே?” என்று ராஜா கேட்டார்.
“நீங்கள் இங்கே இருப்பதால், நான் உண்மையில் இப்போது தான் தனியாக இருக்கிறேன்,” என்று அந்த முனிவர் கூறினார். “முன்னால் நான் என்னுடனேயே அனுபவித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் மற்றவர்களுடன் தொடர்பில் இருக்கிறீர்கள், அவர்களுடன் இணைக்கப்பட்டு உள்ளீர்கள், எனவே அவர்கள் சுற்றி இல்லாத போது நீங்கள் தனிமையாக உணர்கிறீர்கள், ஆனால் நான் என்னுடனேயே தொடர்பில் இருக்கிறேன், நானே என்னைச் சுற்றி இல்லாத போது தான் தனியாக உணர்கிறேன்,” என்றார்.

நீங்கள் உங்களுடனேயே எவ்வளவு வசதியாக இருக்கிறீர்கள் என்று கண்டுபிடிக்க விரும்பினால், உங்களுடனேயே ஒரு சில நாட்கள் தனிமையில் இருந்து பயிற்சி செய்து, உங்களை ஆய்வு செய்யவும். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளத் தொடங்குவீர்கள். சிறிது நாட்களுக்கு முன் நான் தனிமைப் பயிற்சியைப் பற்றி எழுதினேன். மீண்டும் கூறுகிறேன், பொருள் உலகில் நீங்கள் அனுபவிப்பதை நிறுத்த வேண்டும் என்று நான் கூறவில்லை. உண்மையில் நீங்கள் மூலத்துடன் இணைந்திருக்கும் போது, நீங்கள் உங்களுடன் சகஜமாக இருக்கும் போது, எந்தச் செயலிலிருந்தும் உங்களுக்குக் கிடைக்கும் எந்த மகிழ்ச்சியும் பன்மடங்காகப் பெருகுகிறது, அது மிகப் பெரியதாகிறது, இதற்கு முன் இல்லாத அளவு மகிழ்ச்சியையும், பேரின்பத்தையும் நீங்கள் அனுபவிப்பீர்கள்.

நீங்கள் உங்களுடனேயே இருப்பதை அனுபவிக்கும் போது, உலகம் முழுவதுமே சந்தோஷத்தையும் சமாதானத்தையும் உங்களுடன் இருக்கும் போது அனுபவிக்கும். நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு உங்களுடன் சகஜமாக இருக்கிறீர்களோ அவ்வளவு அதிகமாக உங்கள் உள் அமைதி, உங்களைச் சுற்றி என்ன நடந்தாலும் அதனால் பாதிக்கப்படாமல் அப்படியே இருக்கிறது. ஒரு மரத்தில் உள்ள இலையைப் போல, நீங்கள் மூலத்துடன் இணைந்திருந்த போது, காற்றடிக்கும் சமயத்தில் நடனமாடுகிறீர்கள், சேறு மற்றும் தண்ணீரில் இருந்து ஊட்டச்சத்தைப் பெறுகிறீர்கள், ஒருமுறை பிரிக்கப்பட்டுவிட்டால், அதே காற்று உங்களைச் சுற்றிச் சுழற்றுகிறது, பூமி உங்களைச் சிதைக்கிறது, மரத்திற்குப் பாசன வசதி செய்த அதே நீர் இப்போது இலையை அழுகச் செய்கிறது.

உங்களுக்குள் என்ன இருக்கிறதோ அது, உங்களுக்கு வெளியே என்ன இல்லையோ அதை விட எண்ணற்ற மடங்கு மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும். உங்களுக்குள் என்ன உள்ளதோ அது, வெளியே இருப்பவை மற்றும் இல்லாதவை ஆகிய அனைத்தையும் பார்க்கும் கண்ணோட்டத்தைக் கொடுக்கிறது.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email