பின்வரும் கேள்வியை யாரோ ஒருவர் மின்னஞ்சல் செய்திருந்தார். உண்மையில் அடிக்கடி இதே கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள்.

“என் உள் மனக் கொந்தளிப்பைக் குறைப்பதற்கு எனக்குச் சில ஆலோசனைகள் தேவை. நான் என் ஐம்பதுகளில் இருக்கிறேன் ஆனாலும் என் வாழ்வில் அமைதியை உணரவில்லை. வேலையில் நிலைத்து இருப்பதற்காக மற்றும் குடும்பத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகப் போராடுவது என ஓடிஓடி உழைத்ததில் களைப்படைந்து சோர்வாக இருக்கிறேன். நான் விலைப்பட்டியலுக்குப் (பில்) பணம் செலுத்தும் ஒரு அடிமை ஆகி இருக்கிறேன்.”

அனைத்துமே துயரத்தைக் கொடுக்கிறது என்ற புத்தரின் பார்வை முதலில் ஒரு நம்பிக்கையற்ற பார்வையாகத் தோன்றுகிறது, ஆனால் ஆழ்ந்து சிந்தித்தால், வாழ்வில் மிகுந்த அனுபவத்தைக் கண்டவர்களின் உண்மையும் இதை ஒத்தே இருக்கிறது. நான் பல மகிழ்ச்சியான மக்களைச் சந்திக்கிறேன். இருந்தாலும் பெரும்பாலும், மனஅழுத்தத்தில் உள்ளவர்கள் மற்றும் சோகமாக இருப்பவர்களைச் சந்திக்கிறேன். துன்பம் தானே வருகிறது என்றும், சந்தோஷமாக இருப்பதற்கு, நீங்கள் கடினமாக உழைக்க வேண்டி உள்ளது என்றும் தோன்றுகிறது.

உண்மை என்னவென்றால், மகிழ்ச்சி தான் நம் இயல்பான நிலை, ஆனால் பெரும்பாலும், பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்க சில விஷயங்கள் தங்கள் வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது முற்றிலும் அவர்களின் தவறு அல்ல; நம்முடைய வெற்றி, நம் வங்கியில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள பணம், மற்றவர்களின் அங்கீகாரம், நமது பொருள் உடைமைகளின் அளவு இவற்றைப் பொறுத்து தான் நமது மகிழ்ச்சி உள்ளது என்று நம்புவதற்கு நாம் வடிவமைக்கப்பட்டு உள்ளோம். பொருள்சார்ந்த செல்வம் நமது வாழ்வை ஒரு பயனுள்ள அனுபவமாக ஆக்குகிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை, ஆனால் அதே நேரத்தில், அது இல்லாதிருந்தால் நாம் அமைதியாகவோ அல்லது மகிழ்ச்சியாகவோ இருக்க முடியாது என்று அர்த்தமில்லை.

பசியுடனேயே தூங்கப் போகிறவர்கள், மருந்துகள் வாங்க முடியாதவர்கள், தங்கள் தலைக்கு மேல் ஒரு கூரை கூட இல்லாதவர்கள், ஒழுங்கான ஆடை அணிய முடியாதவர்கள் நிறையப் பேர் நம் உலகில் இருக்கிறார்கள். மேலே கூறிய அனைத்தும் மற்றும் அதற்கு மேலும் அதிகமாக இருந்தும், ஆயிரக் கணக்கான மக்கள் சந்தோஷமாக இல்லை. அவர்களுக்கு ஒரு குடும்பம், நண்பர்கள், கொஞ்சம் சேமிப்பு (ஒருவேளைக் கடன் கூட), நல்ல உடல்நலம் ஆகியவை இருந்தும் அவர்கள் அமைதியற்றவர்களாக உள்ளனர்.

உள்மன அமைதியைக் கண்டுபிடிப்பதற்கான முக்கிய மந்திரம், ஏற்றுக் கொள்வதில் தொடங்குகிறது. இது நாம் செய்த தேர்வுகளின் பொறுப்பை நாமே ஏற்றுக் கொள்வதில் ஆரம்பிக்கிறது. சரியா, தவறா அல்லது நல்லதா, கெட்டதா என்பதைப் பற்றிய அவசியம் இல்லை, ஆனால் நாம் எடுக்கும் ஒவ்வொரு தேர்வுக்கும் ஒரு விளைவு உண்டு. ஒரு கடவுள் இறங்கி வந்து நம் கடந்தகாலத் தேர்வுகளை மாற்றுவார் என்றோ, அல்லது உள்மனத்திற்கு அமைதியை அளிப்பார் என்றோ நாம் நம்ப முடியாது, ஏனென்றால் அனைவருக்கும் ஏற்கனவே அது ஆசீர்வதிக்கப்பட்டு உள்ளது. நம் ஆசைகளாலும் உணர்ச்சிகளாலும் அதை நாம் மூடி மறைக்கிறோம்.

அமைதியாக இருப்பதில் எந்தப் போராட்டமும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். நீங்கள் யார், உங்களிடம் என்ன உள்ளது என்பதில் சுலபமாக இருக்கவே போராடுகிறீர்கள் – சில நேரங்களில் இந்த இரண்டையும் ஏற்றுக் கொள்வது கடினமாக இருக்கலாம். உங்களுடைய கடந்த காலம் சுடப்பட்ட களிமண் பானையைப் போல் இருக்கிறது. அது ஏற்கனவே நெருப்பில் இடப்பட்டு, கடினமாகி, ஒரு வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் மாற்றி அமைக்க முடியாது. அப்படி ஏதாவது செய்ய முயற்சித்தால் அது உடைந்துவிடும். ஆனால் தற்போது என்பது, மென்மையான களிமண் போன்றது, நீங்கள் விரும்பியபடி அதை வடிவமைக்க முடியும். எப்படி வடிவமைக்கிறீர்கள் என்பது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும்.

எப்பொழுதும் பணம் செலுத்த ஏதாவது ஒரு பில் இருக்கும், எப்போதுமே ஒரு குடும்பத்திற்கு உணவளிக்க வேண்டும், எப்போதுமே போராட்டம் இருக்கும், உலகம் போட்டித் தன்மையுடனே தான் இருக்கும் என்று வைத்துக் கொள்வோம். நமது மென்மையான களிமண், பில்கள், போராட்டம் மற்றும் தேவைகளால் செய்யப்பட்டதாக வைத்துக்கொள்வோம். ஒப்புக் கொண்டாகிவிட்டது. இப்பொழுது என்ன? நம் உள் மன அமைதியைக் கெடுக்க, அதை நாம் அனுமதிக்க வேண்டுமா அல்லது களிமண்ணைப் பிசைந்து கொண்டே இருப்பதை (முணுமுணுப்பதை) நிறுத்திவிட்டு அதைக் கொண்டு ஏதாவது உருவாக்க ஆரம்பிக்கலாமா?

பில்களுக்குப் பணம் செலுத்துவதோ, ஒரு குடும்பத்திற்கு உணவளிப்பதோ அல்லது பணியில் உள்ள சவால்களோ, உண்மையான பிரச்சினைகள் அல்ல. வாழ்க்கையில் நமக்குள்ள எதிர்பார்ப்புகளே உண்மையான பிரச்சினைகள் ஆகும். வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று நமக்கு ஒரு நினைப்பு உள்ளது, ஆனால் அது அந்த வழியில் நடப்பதில்லை. நாம் விரும்பியபடி அதைக் கொண்டு வருவதில் நம் முழுப் போராட்டமும் உள்ளது. உண்மையில், எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும், ஏற்றுக்கொள்ளுதல் இருந்தால், எந்தப் போராட்டமும் இல்லை. எதிர்ப்பில் தான் போராட்டமே உள்ளது.

உங்களைத் திரும்ப வடிவமைக்க, உங்கள் நிகழ்காலம் மற்றும் அதன் விளைவாக உங்கள் எதிர்காலத்தை மறுபடியும் மாற்றிக் கொள்வதற்கான வழி என்னவென்றால், உங்கள் தேர்வுகள் மற்றும் உங்கள் செயல்களுக்கான முழுப் பொறுப்பையும் முதலில் நீங்கள் ஏற்றுக் கொள்வதாகும். நீங்கள் உங்களுடன் வசதியாக இருக்க இது உதவும். இரண்டாவது, நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் மற்றும் நீங்கள் செய்ய விரும்பும் விஷயங்களுக்கு இடையில், எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்மானிப்பது. மூன்றாவது, உங்களுக்கு எதில் பேரார்வம் உள்ளதோ, அதில் உங்களின் சிறிதளவு நேரத்தை முதலீடு செய்வது. மேலும், உங்களிடம் எந்த ஆர்வமும், நோக்கமும் அல்லது ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்குகளும் இல்லை என்றால், அப்படி ஒன்றைக் கண்டறிவதற்கு நீங்கள் மிக முக்கியமான முன்னுரிமையை வழங்க வேண்டும்.

முல்லா நஸ்ருதீன் ஊர்ஊராகச் செல்லும் ஒரு வணிகக் கூட்டத்தில் சேர்ந்தார். குதிரை, ஒட்டகம் மற்றும் தங்கம் ஆகியவற்றுடன் கூடிய இரண்டு பணக்காரர்களுடன் நட்பாக இருந்தார். முல்லாவிடம் ஒரு கழுதை மற்றும் ஒரு கந்தல் பை மட்டுமே இருந்தது. அவர்கள் மதிய உணவுக்காக ஒரு இடத்தில் நிறுத்தி, தங்களது உணவுப் பைகளைத் திறந்தனர்.

முதலாமவர் பெருமையுடன், “நான் வறுத்து மற்றும் உப்பு போட்ட உலர்ந்த பழங்கள் மட்டுமே சாப்பிடுகிறேன். இனிப்புக்காக, பழுத்த பேரீச்சம் பழங்களையே எடுத்துக் கொள்கிறேன்.” என்றார்.
இரண்டாமவர், “என் பயணங்களின் போது பிஸ்தா, முந்திரி சேர்த்த பொரியுடன், ஃபாலாஃபெல் (falafel) மட்டுமே சாப்பிடுகிறேன். இனிப்புக்கு பக்லாவா (தேனில் ஊறவைத்த பருப்புகள்) அல்லது பேரீச்சம் பழம் எடுத்துக் கொள்கிறேன்.” என்றார்.

நஸ்ருதீன் தனது மதிய உணவைத் திறந்தார். அவரிடம் ஒரு உப்பு போட்ட ரொட்டித் துண்டும், கரும்பிலிருந்து எடுக்கப்பட்ட இனிப்பான வெல்லத் துண்டு ஒன்றும், மட்டுமே இருந்தன. அவர் தனது உணவை ஆர்வத்துடன் பார்த்து, “நான் கோதுமையை மாவாக்கி, அத்துடன் தண்ணீர், ஈஸ்ட், உப்பு ஆகியவற்றை முறையாகக் கலந்து, சரியான வெப்பநிலையில் சுடப்பட்ட உணவையே சாப்பிடுகிறேன். என் உணவிற்குப் பிறகு, கரும்புச் சாறு பிழிந்து, வடிகட்டிக் காய்ச்சிய இனிப்பு உருண்டையையே எடுத்துக் கொள்கிறேன்.” என்றார்.

வாழ்க்கையை ஒரு தென்றல் காற்றாக உணர்வதற்கும் அல்லது ஒரு ஆரவாரமான சண்டைகளைக் கொண்டதாக உணர்வதற்கும் உள்ள அனைத்து வித்தியாசமும், நீங்கள் வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையில் உள்ளது. நீங்கள் என்னிடம் கேட்டால் அது அத்தகைய இரண்டுமே இல்லை என்று தான் நான் சொல்வேன். வாழ்க்கை கணக்கிலடங்கா எண்ணற்ற தருணங்களின் சேர்க்கையே ஆகும், அநேக மெல்லிய இழைகளால் தீட்டப்பட்ட ஒரு ஓவியம் ஆகும். ஒவ்வொரு நிமிடமும் கவனம் செலுத்தி, ஒவ்வொரு இழையின் பகுதியிலும் நன்கு உழைத்து வேலை செய்தால், முழு ஓவியமும் தானே அழகாக ஆகிவிடுகிறது.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email