“ஒரே ஒரு விஷயம் தான் நான் கடவுளிடமிருந்து வேண்டுகிறேன்,” என்று ஓர் இளம் பெண் கூறினாள். “மன்னிப்பு. மன்னிப்பைத் தவிர நான் வேண்டுவது வேறு எதுவும் இல்லை.”

“என் தந்தைக்கு எச்-ஐ-வி பாஸிட்டிவ் (HIV positive) இருந்தது மற்றும் அவரது கடைசி நாட்கள் மிகுந்த வலியுடன் ஆனதாக இருந்தது,” என்று அவள் தொடர்ந்து கூறினாள். “அவரால் நகரக்கூட முடியவில்லை மற்றும் அவருக்குத் தொடர்ந்த ஒரு கவனிப்புத் தேவையாக இருந்தது. நான் அவரிடம் ஒருவகை வெறுப்பை உருவாக்கிக் கொண்டதால், அவரை முழுமையாக நான் அலட்சியப்படுத்தினேன். என் அம்மா ஒருவரே குடும்பத்திற்குத் தேவையானதை சம்பாதிக்க வேண்டி இருந்ததால், அவளால் நாள் முழுவதும் வீட்டிற்கு உள்ளேயே இருக்க முடியவில்லை. நான் என் தந்தையை அக்கறையுடன் கவனித்திருக்க வேண்டும், ஆனால் நான் அதைச் செய்யவில்லை. இது நடந்து கொஞ்ச காலம் ஆகிவிட்டது, ஆனால் என்னால் என்னையே மன்னிக்க முடியவில்லை.”

வேறு ஒரு பெண், “என்னுடைய அம்மா, ஒவ்வொரு நாளும் அவளது முகத்தில் புதிது புதிதாக இரத்தம் கசியும் காயங்கள் ஏற்படும்படி கொடூரமாக அடிக்கும், அவளது வாழ்க்கையில் உள்ள இந்தப் புதிய மனிதனை விட்டு விட வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன்,” என்று அவளது துயரத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டாள்.

“எச்-ஐ-வி (HIV) யால் இறந்த என் உண்மையான தாயைச் சந்திக்க நான் விரும்புகிறேன்,” என்று மற்றொரு இளம் பெண் கண்ணீர் ததும்பும் கண்களுடன் என்னிடம் கூறினாள். “நான் யாருடன் வசித்து வந்தேனோ அந்தப் பெண் என்னைப் பெற்றெடுத்த தாய் இல்லை என்று எனக்குத் தெரியாது. அவளும் எயிட்ஸ் நோயினால் தான் இறந்தாள். அவளுக்கும் என்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை.”

நான் இந்த வாரம், உண்மையென நம்பமுடியாத இளம் பெண்களின் ஒரு குழுவைச் சந்தித்தேன்.

2016 ல், நான் கிட்டத்தட்ட 400 மணி நேரம் போதனை உரையிலும், 2000+ மணி நேரம் எழுதுவதிலும் (புத்தகங்கள் மற்றும் பதிவுகள்), 300 மணி நேரம் பியானோவிலும், தொலை தூரப் பயணங்களின் காரணமாக 120+ மணி நேரம் வானிலும், 100+ மணி நேரம் விமான நிலையங்களிலும், சுமார் 300 மணி நேரம் சாலை வழியிலும், 1000+ மணி நேரம் மக்களைச் சந்திப்பதிலும் கழித்தேன். 1000 க்கும் மேற்பட்ட மணி நேரம் மின்னஞ்சல்களில் சென்றது. ஒரு ஆண்டிற்கான 8760 மணி நேரத்தில் 5200 மணி நேரம் இவ்வாறு கழிந்தது.

ஆனால், கடந்த மூன்று நாட்களில் இந்த இளம் குழந்தைகளுடன் ஆறு மணி நேரம் இருந்ததும் மற்றும் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சந்தித்த அந்தத் தொண்ணூறு நிமிடங்களும் என்னால் மிகவும் மறக்கமுடியாத தருணங்களாக இருந்தன. ஏன், என்று நீங்கள் கேட்கலாம்? மனித இருப்பை பற்றிய – நான்கு உண்மைகளை – இந்தக் குழந்தைகள் தொடர்ந்து எனக்கு நினைவூட்டியது தனிச் சிறப்பிற்கு உரியதாகும்.

இவர்கள் வழக்கமான செயல்பாடுள்ள குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் இல்லை. இந்த இளம் பெண்களில் பெரும்பாலானவர்கள் மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியில் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானவர்கள் அல்லது பாலியல் தொழிலாளிகளின் மகள்களாக இருந்தனர். சிந்திக்க முடியாத செயல்களுக்கு ஆளானவர்களாகவோ அல்லது அதற்குச் சாட்சியாகவோ சிலர் இருந்திருக்கிறார்கள். கிராந்தி என்று அழைக்கப்படும் என்-ஜீ-ஓ (NGO) நிறுவனத்தை நிறுவிய ராபின் சௌராஸியா, அவர்களை ஆசிரமத்திற்கு அழைத்து வந்திருந்தார். நாங்கள் அவர்களுக்கு ஆசிரமத்தில் மூன்று நாட்களுக்கான குடியிருப்புசார் நிகழ்ச்சிகளை நடத்தினோம். அவர்கள் கூறியதைக் கேட்டு சில நேரங்களில் நான் என் கண்ணீரை அடக்கப் போராடினேன்.

கடந்த 40 நாட்களில், நான் 1500 க்கும் மேற்பட்ட மக்களுக்கு மத்தியில் உரையாற்றினேன் மற்றும் 1200 க்கும் மேற்பட்டவர்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்தேன். லட்சாதிபதிகள், மிகப் பெரிய தொழிலதிபர்கள், வேலையற்ற இளைஞர்கள் மற்றும் இந்தக் குழந்தைகள் ஆகியவர்களைச் சந்தித்தேன். எல்லோரும் தங்களது வாழ்க்கையில் பல விதமான சவால்களைச் சமாளித்து வரும் போது, நம்மில் சிலர் மற்றவர்களை விட நேர்மறையானவர்கள். எல்லோருடனும் ஒப்பிடும்போது இந்தப் பெண்களிடம் குறிப்பிடத்தக்க வகையில் காணப்படுவது அவர்களின் நேர்மறை உணர்வு, வாழ்க்கையைப் பற்றிய ஓர் ஆர்வம் மற்றும் அவர்களின் கண்களில் தெரியும் ஒரு நம்பிக்கைத் தீப்பொறி ஆகியவை ஆகும்.

இது வாழ்க்கையின் நான்கு உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள என்னைத் தூண்டுகிறது. இவை புத்தருடைய 2500 வருடங்களுக்கு முந்தைய பழமையான உன்னதமான உண்மைகள் இல்லை. இவை என்னுடைய சொந்த, ஒரு நவீனப் பதிப்பு என்று நீங்கள் கூறலாம்.

1. நிச்சயமானது என்பது ஒரு கட்டுக்கதை

வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமற்றது மட்டுமல்ல, எதுவுமே முற்றிலும் நிச்சயமானதுமல்ல. எவ்வளவு விரைவில் வாழ்க்கை எந்தவிதமான உறுதிப்பாட்டையும் வழங்குவதில்லை என்று நாம் புரிந்து கொள்கிறோமோ, வாழ்க்கையைக் கையாள்வது நமக்கு அவ்வளவு எளிதாகிறது. வாழ்க்கையில், எதையும் பற்றி எவ்வளவு உறுதியாக நீங்கள் இருந்தாலும், நீங்கள் படிப்படியாக வளரவளர அந்த உத்திரவாதங்களும் மறைந்துவிடும் என்பதைக் கொடுக்கப்பட்ட ஒரு விதி முறையாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

நீங்கள் ஒரு விதையை விதைத்து அதற்கு அனைத்து ஊட்டச்சத்துக்கள், வளமான சூழ்நிலை ஆகியவற்றை வழங்கினாலும், அது முளை விடும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஆனால் மறுபுறம், பாறைகளின் நடுவில் நீங்கள் தூக்கி எரிந்த ஒரு விதை ஒரு மாபெரும் மரமாக வளர்ந்து விடுகிறது. இரண்டிலும் எந்த உத்தரவாதமும் இல்லை.

நீங்கள் என்ன முடிவு செய்தாலும், எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தாலும், நீங்கள் நிச்சயத் தன்மையினால் வரவேற்கப் படமாட்டீர்கள் ஆனால் சந்தேகம், சவால்கள் மற்றும் சுய சந்தேகம் (மற்றும் இறுதியில் பரிசுகளும் கூட) உங்களை வரவேற்கும். தொடர்ந்து நடந்து கொண்டே இருங்கள். நமது எதிர்காலம் கற்களில் செதுக்கப்படவில்லை, எதுவுமே முன் கூட்டியே விதிக்கப்படவில்லை. உங்கள் தலையெழுத்தை நீங்களே மாற்றி எழுதவும், நீங்கள் விரும்பும் விளைவை அடையத் தேவையான வேலைகளைச் செய்யவும் முடியும், ஆனால் நீங்கள் உண்மையில் எதிர்பார்த்து அடைய விரும்பிய இலக்காக அதன் விளைவு இல்லாமலும் இருக்கலாம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அல்லது நீங்கள் விரும்பும் பலன், நீங்கள் எதிர்பார்த்த அளவு உங்களுக்கு நிறைவைக் கொடுக்காமலும் இருக்கலாம். நாம் நமது பயணத்தைத் தொடங்கிய நேரத்தில் இருந்து நமது இலக்கை அடையும் நேரம் வரை நிறைய விஷயங்கள் மாறக்கூடும், மற்றும் அடிக்கடி மாறுகிறது.

இந்த நிச்சயமற்ற, கணிக்கமுடியாத மற்றும் நிலையற்ற தன்மை தான், நமது வாழ்க்கையைப் புதிரானதாகவும், அருமையானதாகவும் ஆக்குகிறது.

2. முரண்பாடுகள் சேர்ந்தே இருக்கின்றன

நீங்கள் உண்மையில் உங்கள் வாழ்க்கையை வாழ்ந்து முழு பயனையும் அடைய விரும்பினால், வாழ்க்கை மிகக் குழப்பமானதாகவும் மற்றும் சில நேரங்களில் நியாயமற்றதாகவும் கூட இருக்க முடியும் என்ற அனுமானத்துடன் தொடங்கவும். கெட்ட விஷயங்கள், பயங்கரமான விஷயங்கள் நல்ல மக்களுக்கு அனைத்து நேரமும் நடக்கின்றன. துன்பத்தை அனுபவிப்பவர்கள் எல்லோரும் தங்களது சொந்த கர்மாவினால் மட்டும் தான் அதை அனுபவிப்பதாக நீங்கள் நினைத்தால், மீண்டும் யோசியுங்கள். அடிக்கடி நாமும் மற்றவர்களின் கர்ம வினைக்குள் அடியெடுத்து வைப்பதால், அது நம்மையும் பாதிக்கிறது. உதாரணமாக, யாரோ ஒருவர் வலுவான ஒரு வாசனைத் திரவியத்தைப் பூசிக்கொண்டு நம் அருகே வந்தால், நாமும் அந்த வாசனையை உள்ளிழுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கர்மாவின் சுற்றுப்பாதையும் அதே போலத்தான்.

நிச்சயமான கர்மாவின் சட்டமோ அல்லது வேறு எந்தச் சட்டமோ நிச்சயமானது என்று சொல்வது, நிச்சயத் தன்மையின் முதல் உண்மையை மீறுவதாக உள்ளது. எதுவுமே நிச்சயமானதோ அல்லது முழுமையானதோ இல்லை (இந்த அறிக்கை கூட அல்ல). சில நேரங்களில், சில விஷயங்களுக்கு எந்த விளக்கமும் இல்லை. அந்தி நேரத்தில் இருள் மற்றும் ஒளி ஒன்றாக இணைந்திருப்பதைப் போல, உண்மைகள் மற்றும் முன்னுக்குப்பின் முரணானவை சேர்ந்தே இருக்கின்றன. உங்கள் நம்பிக்கை எதுவாக இருந்தாலும், அது எவ்வளவு தான் உறுதியானது என்று நீங்கள் நினைத்தாலும், அது அப்படி இல்லை என்று நிரூபிக்கப் போதுமான ஆதாரங்களை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.

உங்கள் திறனை சிறந்த அளவு உபயோகப்படுத்தி, உண்மையான மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வது மட்டும் தான் நீங்கள் செய்யக் கூடிய ஒரே விஷயம் ஆகும். நீங்கள் இதை உங்களுக்காக, உங்களுடைய சொந்த மன அமைதிக்காகச் செய்கிறீர்கள். வாழ்க்கை ஒரு நல்ல எஜமானராக, ஆனால் ஒரு மோசமான வர்த்தகராக உள்ளது. அதற்கு நியாயமாக இருப்பது அல்லது ஒரு தரத்தை நிர்ணயிப்பது பற்றி எல்லாம் எந்தக் கவலையும் இல்லை, அது எந்தக் காரணத்தையும் தெரிந்து கொள்வதுமில்லை.

ஒவ்வொரு தருணத்திலும் வாழ்க்கை அதன் மையத்தில் நிறையக் குழப்பங்களையும், முரண்பாடுகளையும் சுமந்து வரும். அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அதன் காரணங்களை அறிந்துகொள்வது நமது ஆர்வத்தைத் தணிக்கலாம், நாம் வளரவும் உதவலாம். ஆனால் அது நம்மை மகிழ்ச்சியடையச் செய்யும் என்பது இல்லை. மகிழ்ச்சி, காரணத்தில் இருந்து வருவதில்லை, அது நமது புரிந்து கொள்ளுதல் மற்றும் ஏற்றுக் கொள்ளுதலில் இருந்து வருகிறது. வாழ்க்கையைப் பொறுத்தவரை புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுமே இல்லை.

3. வாழ்க்கை ஒரு வரம்

எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையாக இருந்தாலும், பெரும்பாலும், வாழ்க்கை ஒரு வரம் தான். உங்கள் வாழ்க்கையை வாழ இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன: நீங்கள் அதை ஒரு வரம் என்றோ அல்லது அது போன்று இல்லை என்றோ தான் வாழ முடியும். எப்படி இருந்தாலும், நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், வாழ்க்கையைப் பற்றிப் புகார் செய்து கொண்டே இருப்பதால் எவருக்கும் அது சிறந்ததாக ஆகிறதில்லை. வாழ்க்கை நமது புகார்களைக் காது கொடுத்துக் கேட்கிறதில்லை. அது பெரும்பாலும் ஒரு நல்ல விஷயம் ஆகும் ஏனெனில் மனம் எப்போதும் ஏதாவது ஒரு விஷயம் பற்றி புகார் செய்து கொண்டே இருக்கும். வாழ்க்கை உண்மையில் உங்களது முனகல்களைக் கேட்கத் தொடங்கினால் அது செயல்படுவது முடியாததாகிவிடும்.

உங்கள் கடந்த காலம் என்னவாக இருந்தாலும் சரி, நீங்கள் எங்கு இருந்தாலும், எங்கு இருக்கவேண்டி இருந்தாலும் சரி, உண்மை என்னவென்றால் நீங்கள் இப்போது இங்கே இருக்கிறீர்கள். அவ்வளவு தான். இதுதான் வாழ்க்கை. உண்மையில், இரண்டு தேர்வுகள் மட்டுமே உள்ளன: வாழத் தொடங்கவும் அல்லது குறை கூறிக்கொண்டே இருக்கவும். நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழத் தொடங்க விரும்பினால், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இப்போது நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கிருந்து, எதற்கும் தயாராக மனத்தை வைத்துக் கொண்டு அந்தப் பாதையில் நடக்கத் தொடங்கவேண்டும். நீங்கள் சூரிய ஒளியை எதிர்பார்த்த போது மழை பெய்யக்கூடும். நான் இதை ஒரு சூதாட்டம் என்று சொல்லவில்லை ஆனால் ஏற்படும் விளைவுகள் எதுவுமே நம் கைகளில் இல்லை.

நீங்கள் உங்கள் வாழ்க்கையானது எப்படி ஆசீர்வதிக்கப்பட்டது என்று பார்க்க வேண்டும் என்றால், ஒரு காகிதத்தில் உங்கள் வாழ்க்கையில் என்னவெல்லாம் நல்லவைகளோ அதை எழுதவும். உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கும் பிடித்தது எதாவது இருக்க வேண்டும். அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்குள் நன்றிக்கான நேர்மறை உணர்ச்சிகளையும், வியப்புணர்வையும் தூண்டி, உங்களின் பிரகாசமான பக்கத்தைப் பார்க்க வைக்கக் கூடும்.

4. நம்பிக்கை உள்ளது

நம்பிக்கை என்பதால், உங்கள் கனவுகள் நனவாகும் என்று நான் கூறவில்லை (வாழ்க்கை நிச்சயமற்றதாகவும், நியாயமற்றதாகவும் இருக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்). ஒரு காட்டுத்தீயை எரியூட்ட ஒரு தீப்பொறி போதுமானது என்பதே நான் கூறுவதன் அர்த்தமாகும். அந்தத் தீப்பொறி எங்கிருந்து வேண்டுமானாலும் வர முடியும். வாழ்க்கை, நீங்கள் ஒரு முறை சிந்தித்து வைத்திருந்தபடி இல்லாமல் வேறு வழியில் திரும்பி, அது உங்களை ஏமாற்றி இருக்கலாம் என்றாலும், நீங்கள் எல்லாவிதமான சாத்தியக் கூறுகளுக்கும் தயாராக இருந்தால் அது எங்காவது அழகாகவே முடிவடையும்.

உங்கள் நம்பிக்கைக்கு (நம்பிக்கைகளுக்கு) ஒரு வாய்ப்புக் கொடுக்க, நீங்கள் உண்மையாக இருக்க வேண்டும். சில நேரங்களில் பகல் கனவு பரவாயில்லை, ஆனால் அதுவும் உண்மையானதாக இருக்கட்டும். மீண்டும் அடிப்படைக்குச் சென்று, உங்களது வரையும் பலகையிடம் போய் நீங்கள் எங்கு உள்ளீர்களோ அதில் இருந்து தொடங்கவும். உங்களது கனவையோ அல்லது அதை அடைவதற்கான நடவடிக்கையையோ கைவிட்டு விட வேண்டாம். ஏதாவது ஒன்று சாதகமாக அமையும். அது எப்போதும் ஏதாவது ஒரு வழியில் நடக்கும். வாழ்க்கை எவருக்காகவும், எந்தக் காரணத்திற்காகவும் நின்று விடுவது இல்லை. நம்பிக்கை வையுங்கள், ஆர்வமுடன் இருங்கள்.

உங்களது வாழ்க்கை கடினமானதாக இருந்திருக்கலாம். ஒருவேளை நீங்கள் நிறையச் சமாளிக்க வேண்டியும், அதிக மன அழுத்தத்துடனும், உங்களது பிரச்சினைகள் மிக மோசமானதாகவும், எல்லா விஷயங்களும் உண்மையில் கடினமானதாகவும் இருந்திருக்கலாம். ஒப்புக் கொள்கிறேன். நல்லது. இதுதான் வாழ்க்கை. இப்பொழுது என்ன?

தினசரி எண்ணற்ற மக்கள் தாங்கள் எந்தத் தவறும் செய்யாமல் கஷ்டப்படுகிறார்கள், நமது சக மனிதர்கள் உணவு அல்லது மருந்து வாங்க முடியாமல் இறக்கின்றனர், இலட்சக்கணக்கான மக்கள் நம்பமுடியாத தனிமையான வாழ்க்கையை வாழ்கிறார்கள், இலட்சக்கணக்கான குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறார்கள், பெண்கள் தாக்கப்படுகிறார்கள், மற்றும் அப்பாவிகள் கொல்லப்படுகின்றனர். இத்தகைய உலகத்தில் தான் நாம் வாழ்கிறோம்.

நமக்கு இன்னும் நிறைய மதம், பிரிவு, அரசியல் அல்லது பேச்சு நிகழ்ச்சிகள் தேவையில்லை. நமக்குத் தேவை நல்லிணக்கம் மற்றும் கருணை. நம்பிக்கை மற்றும் நேர்மறையாக இருந்தால் மட்டுமே இவை இரண்டும் சாத்தியமாகும். நாம் நமது வாழ்க்கையை ஒரு வரமாய் பார்க்கத் தொடங்கினால், நாம் நமது இருப்புக்கான வழிகளை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினால் மட்டுமே இவை சாத்தியமாகும். நல்லிணக்கமே சந்தோஷம் ஆகும். நாம் நன்றி அற்றவராக இருக்கும் போது, இயற்கையானது நல்லவற்றை நம்மிடமிருந்து எடுத்து, அதை மதிக்கும் ஒருவரிடம் அதைக் கொடுக்கிறது என்பதை நான் மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறேன்.

உங்கள் வாழ்க்கை இன்னும் அழகாக இருந்திருக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால், பொறுப்பெடுத்துக் கொண்டு அதற்கான வேலைகளைச் செய்யுங்கள், ஏனெனில் நமது செயல்கள் தான் நமது வாழ்க்கையை இயக்குகின்றன. அதை நம் எண்ணங்கள், வார்த்தைகள், உணர்ச்சிகள் மற்றும் ஆசைகள் தான் ஊக்குவிக்கின்றன என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை, ஆனால் நிகழ் காலத்தில் நமது செயல்கள் மூலம் நாம் என்ன உருவாக்குகிறோமோ, அதுவே இறுதியில் எதிர்காலத்தில் நம்மை வரவேற்கிறது. எவ்வளவு அதிகமாக உங்கள் நடவடிக்கை உண்மையாக உள்ளதோ, அவ்வளவு அதிகமாக நேர்மறையான விளைவு இயற்கையிடம் இருந்து கிடைக்கிறது.

நீங்கள் சேற்றில் உழன்று கொண்டே உங்கள் கடந்த காலம் அல்லது நிகழ் காலத்தில் எது சரியாக இல்லை என்று புகார் செய்யலாம். அல்லது, உலகத்தை சகஜமாக எடுத்துக் கொண்டு, வாழ்க்கை உங்களை எங்கே கொண்டு செல்கிறது என்று காணலாம். சிந்தியுங்கள், செயல்படுங்கள், உருவாக்குங்கள்.

உங்கள் காலணியைக் கழற்றிவிட்டு வாழ்க்கையின் பாதையில் நடக்கவும். தெய்வீகத் தரையில் தெளிக்கப்பட்டுள்ள முத்துக்களைப் போன்று, பச்சைப் புல்லை அழகு படுத்திக் கொண்டிருக்கும் காலைப் பனித்துளிகள் உங்கள் கால்களைத் தொட அனுமதியுங்கள். இயற்கையின் கம்பீரம், காந்தி மற்றும் அன்பை உங்களது உள்ளத்தில் ஊடுருவிச் செல்ல விடுங்கள், இதன் காரணமாக நிச்சயமற்றவை, சூழ்ச்சிகள் அனைத்தையும் உள்ளடக்கிய உங்களது வாழ்க்கையுடன் நீங்கள் நட்புணர்வுடன் இருக்கலாம். பேரின்பம் உங்களது இருப்பின் ஒவ்வொரு கணத்திலும் பிரதிபலிக்கும். ஏதாவது ஒன்றை அழகாக உருவாக்குங்கள். அர்த்தமுள்ளதாக ஏதாவது ஒன்றைச் செய்யுங்கள்.

இனிய 2017 க்கான வாழ்த்துக்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email