கனடாவில் ஒரு சில வாரங்களுக்கு முன்பு அறிவுள்ள, அமைதியாகப் பேசும் ஒரு இளம் பையன் என்னிடம் வந்து, நம்மில் பலருக்கு மிகவும் சம்பந்தம் உள்ள ஒரு கேள்வியைக் கேட்டான். அவன் தனது பியானோ வாசித்தலைச் சோதிக்கும் நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டும் என்றும், அவனது தாயார் அவனை மற்ற மாணவர்களுக்குக் கைதட்ட வேண்டும் மற்றும் அவர்களை வாழ்த்த வேண்டும் என்று கூறுவதாகவும் சொன்னான்.

“நான் எப்போதும் அதைச் செய்கிறேன் சுவாமிஜி, ஆனால் எனக்கு யாரும் கை தட்டுவதில்லை” என்றான். “மற்றவர்க்கு நல்லதே நடக்கும் என்றும் வாழ்த்தச் சொல்கிறார். நான் எப்போதும் அவ்வாறே செய்கிறேன், ஆனால் எனக்கு யாரும் நல்லதே நடக்கும் என்று சொல்வதில்லை. என்ன பிரயோஜனம்? அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. நான் ஏன் அவர்களைப் புகழ வேண்டும்?” என்றான்.

அவன் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளான் என்பதையும், அவனது கண்கள் குளமாகி இருப்பதையும் என்னால் பார்க்க முடிந்தது.

நான் அவனிடம், “நம்முடைய உலகில், நீ எப்போதும் எதற்கும் கவலைப்படாத மக்களைச் சந்திப்பாய். நீ செய்பவற்றை மதிக்காத, அவற்றிற்குத் தகுந்த கைம்மாறு செய்யாதவர்களைச் சந்திப்பாய். இத்தகையவர்கள் பெரும் அளவில் இருக்க மாட்டார்கள், ஏனெனில் அதிக அளவில் மிக நல்ல மக்களும் உள்ளனர். இருந்தபோதிலும், உன்னுடைய அன்பைக்கூடக் கவனிக்க முடியாத அளவிற்குச் சிலர் தங்களுடைய சொந்த உலகில் மிகவும் ஆழ்ந்து போயிருக்கிறார்கள், நன்றியோடு ஏற்றுக் கொள்ள மட்டுமல்ல, பாராட்டுவதற்கும் முற்றிலும் மறந்து விடுகிறார்கள். நீ இது போன்ற மக்களிடம் நடந்து கொள்வது எப்படி என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டேன்.

“நான் வலுவானவனாக இருக்க வேண்டும்?” என்று அந்தப் பையன் கூறினான்.

“உம் ….சரி.”

நான், நீ வலுவாக இருக்க வேண்டும் என்று அவனிடம் சொல்லவில்லை, அவன் அவனாகவே இருக்க வேண்டும் என்று சொல்ல விரும்பினேன். அவன் சொல்லும் வலிமையிலிருந்து என்னுடைய மனதை மாற்றிக் கொண்டு, “அந்த வலிமை எங்கிருந்து வரும்?” என்று நான் கேட்டேன்.

அவன் தெரியாது என்று தனது தலையை அசைத்தான்.

“உனது பலம் உனது நடத்தையில் இருந்து வரும். மற்றும், அனைத்துச் சூழ்நிலையிலும் உனக்குத் தகுந்த விதத்தில் நடந்து கொள். அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கட்டும் என்று வாழ்த்துவதையோ அல்லது அவர்களுக்குக் கைதட்டுவதையோ நீ நிறுத்திவிட்டால், நீயும் அவர்களைப் போலவே ஆகிவிடுகிறாய். உன்னுடைய அன்பை விட்டுக் கொடுக்காததின் மூலம், நீ அவர்களுக்கும் மேலே உயருகிறாய். நீ அந்த வழியில் தனிப்பட்டவன் ஆகிறாய். வலுவானவன், மேம்பட்டவன்.”

அவனது கண்கள் பளிச்சிட்டன, மற்றவர்களைக் கவர்வதற்காக அவர்களைப் புகழவோ, வேறு ஏதாவது செய்யவோ தேவையில்லை என்று நான் அவனுக்கு அறிவுறுத்தினேன். அவன் ஒரு மிதியடி போல் ஆக வேண்டும் என்று நான் சொல்லவில்லை. நல்ல நடத்தை என்று நான் குறிப்பிடுவது உன்னைத் துச்சமாக நடத்த அனுமதிப்பது அல்ல (சிலர் எப்படியும் பொருட்படுத்தாமல் இருப்பார்கள்). நல்ல விதமாக நடந்து கொள்வது எப்படி என்பது உனக்கு நன்றாகத் தெரியும் என்பதை உன் செயல்கள் காட்ட வேண்டும் என்று அர்த்தம்.

“கண்ணுக்குக் கண் என்பது உலகத்தில் உள்ள அனைவரையும் குருடர்களாக மட்டுமே ஆக்கும்,” என்ற காந்திஜியின் வார்த்தைகளை மேற்கோளாகக் காட்டுகிறேன்.

இந்த உலகம் சவால் விட்டு, உன்னைக் குத்தித் தூண்டிவிடும் போது, நீ உன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, உனது கொள்கைகளை விடாமல் பிடித்துக் கொண்டு, உன்னுடைய நிலையை விட்டு நழுவாமல் நிற்பது ஓர் சுலபமான செயல் அல்ல. ஆனால் அது முற்றிலும் செய்து முடிக்கக் கூடியது தான். நமது மேன்மையை வெளிக்காட்ட முயற்சி செய்யும் உள்ளார்ந்த ஆசை நமக்குள் உள்ளது. நமக்குள் உள்ள ஆணவம், நமக்கு அடுத்தவரை விட அதிகம் தெரியும் என்றும், அவரைவிட மேலானவர் என்றும் நம்மைக் காட்டிக் கொள்ளத் தூண்டுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம், பெரும்பாலான மக்கள் அதற்கு எதிர்மறையாகவே செய்து முடிக்கிறார்கள். புத்திசாலித்தனமான வாதங்களோ, உரத்த குரலில் பேசுவதோ ஆன்மீகத்தில் மேன்மையைக் காட்டுவதற்கான ஆதாரம் அல்ல.

உங்களுடைய சொற்களால் நீங்கள் ஆன்மீகத்தில் உயர்த்தப்பட்டவர் என்று நிரூபிக்க முடியாது. நீங்கள் சொல்ல வந்த விஷயம் எதுவாக இருந்தாலும் சொல்வது மட்டுமே போதாது. சொல்லிக்கொண்டே இருப்பது சுலபம். நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை நமது நடத்தை மட்டுமே காட்டுகிறது. நமது வார்த்தைகள் நமது நடத்தையில் இருந்து துளிர் விடும் போது மட்டும் தான், அது நம் முன் இருக்கும் நபர் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் செல்வாக்கு மிக்க ஒருவராக இருந்தால், நீங்கள் ஒரு வெற்றுப் பேர்வழி என்று கண்டுபிடித்தாலும் கூடச் சந்தேகத்திற்கு இடமில்லாமல், உங்களுக்கு மரியாதையையும், உங்களுடைய பேச்சிற்கு மதிப்பையும் மக்களால் அளிக்க முடியும். ஆனால், அவர்கள் தங்கள் இதயங்களால் உங்களை மதிக்க வேண்டும் என்றால், அவர்களைக் கவரக்கூடிய மற்றும் உருக்கக்கூடிய உங்களது நடத்தையினால் அதைத் தெளிவு படுத்த வேண்டும். நமது இதயத்தில் ஒருவருக்கு இருக்கும் மரியாதை எப்படியும் உண்மையான மரியாதையாக இருக்கும். வேறு எந்த வகையும் வெறும் கண்துடைப்பே ஆகும்.

அவர்கள் உங்களுக்குப் பெரிய ஒரு பாராட்டைக் கொடுக்கவில்லை என்றால் என்ன? அவர்களுக்குக் கைதட்டுவதன் மூலம், நீங்கள் உயர்ந்த நடத்தையை வெளிப்படுத்துகின்றீர்கள். உங்களுடைய நடத்தைகளை அவர்களும் ஏற்க, அவர்களை நீங்கள் ஊக்கப்படுத்தலாம். இதன் காரணமாக நிறைய மக்கள் மகிழ்ச்சியாக ஆகலாம். உலகம் ஒரு நல்ல இடமாக இருக்கும்.

என்னை நம்புங்கள். அன்பாகவும், தெய்வீக முறையிலும் செயல்படுவது கடினமானது இல்லை. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்களையே ஒரு எளிய கேள்வியைக் கேட்டுக் கொள்வதாகும்: நான் எதற்கு உறுதுணையாக இருக்கிறேன்? எந்த விதமான நடத்தை உங்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தானாகவே தெரிய வரும். பெரும்பாலும் முக்கியமான நேரத்தில், நீங்கள் இந்தக் கேள்வியை உங்களிடமே கேட்டுக் கொள்ள மறந்து விடுவீர்கள். நாம் இப்படி மாற்றி நடந்து கொண்டிருக்கலாம் என்று பின்னர் உணரக் கூடும். எப்படி இதைச் சமாளிப்பது? மீண்டும் ஒரு மிகவும் சுலபமான வழி. “நான் எதற்கு உறுதுணையாக இருக்கிறேன்?” என்ற இந்தக் கேள்வியைத் தினமும் காலையும், மாலையும் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இந்த முறையால், சரியான நேரத்தில் நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வீர்கள்.

ஆல் டாப்பரின் “ஒரு மதகுரு, ஒரு பாதிரி, ஒரு யூத மதகுரு (ராபை)” (Al Tapper’s A Minister, a Priest, and a Rabbi) என்ற புத்தகத்திலிருந்து ஒரு ஜோக் படித்தேன்:

ஒரு மதகுரு, ஒரு பாதிரி, ஒரு யூத மதகுரு மூவரும் காவல்துறை அதிகாரி சோதனைக்கு வந்த போது போக்கர் விளையாடிக் கொண்டிருந்தனர்.

போலீஸ் அதிகாரி மதகுருவிடம் திரும்பி, “வணக்கத்துக்குரியவரே, நீங்கள் சூதாட்டம் ஆடினீர்களா?” என்று கேட்டார்.

மதகுரு தம்முடைய கண்களை வானத்தை நோக்கித் திருப்பி, “ஆண்டவரே, நான் என்ன செய்யப் போகிறேனோ அதற்காக என்னை மன்னியுங்கள்” என்று கூறிவிட்டு, “இல்லை அதிகாரி, நான் சூதாடவில்லை” என்று அந்தப் போலீஸ் அதிகாரியிடம் கூறினார்.

பின்னர் அந்த அதிகாரி பாதிரியாரிடம், “பிதா மர்பி நீங்கள் சூதாடினீர்களா?” என்று கேட்டார்.

அவரும் தேவலோகத்தில் ஒரு முறையீடு செய்துவிட்டுப் பின்னர், “இல்லை, அதிகாரி, நான் சூதாடவில்லை.” என்று சொன்னார்.

யூத மதகுருவிடம் திரும்பி அதிகாரி மீண்டும், “ராபை கோல்ட்ஸ்டீன், நீங்கள் சூதாடினீர்களா?” என்று கேட்டார்.

யூத மதகுரு தனது தோள்களைத் தூக்கி, “யாருடன்?” என்று கேட்டார்.

நீங்கள் திரும்பத் தர்க்கம் செய்யவில்லை என்றால், மற்றவர் எப்படி உங்களுடன் வாக்குவாதம் செய்ய முடியும்? அவர்களுடைய விளையாட்டில் நீங்கள் ஒரு அங்கம் வகிக்கவில்லை என்றால், அவர்கள் யாருடன் தங்களது விளையாட்டுக்களை விளையாடுவார்கள்? எப்படி ஒருவர் வானத்தை நோக்கி உமிழ முடியும்?

கடினமான மக்களை, சவாலான நேரங்களை, சூழ்நிலைகளை மற்றும் இது போன்ற பல விஷயங்களை எதிர் கொள்ளும் போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது, என்னைப் பொருத்தவரை மிகவும் சுலபமான ஒன்றாகும். இங்கே: என்ன விஷயமானாலும், ஒருபோதும் உங்களுடைய நற்குணத்தைக் கைவிட்டு விடாதீர்கள். சில நேரங்களில் நீங்கள் உறுதியாக, சவாலாக, எதிர்மறையாகக் கூட இருக்க நேரலாம். அது பரவாயில்லை. அப்படி இருந்தாலும், நாம் நமது நற்பண்பைக் கைவிட்டு விடலாம் என்று அர்த்தம் இல்லை. ஏன்? எந்த விஷயமானாலும், நற்பண்பை விட்டுவிடுவதால் எவரும் மரியாதையைப் பெறுவதோ, அன்பைச் சம்பாதிப்பதோ அல்லது தெய்வத்தை திருப்திப்படுத்துவதோ இல்லை.

நற்குணம் என்பது ஒரு தரமோ அல்லது உடன்பிறந்த பண்போ அல்ல. அது ஒரு உணர்வும் அல்ல. நற்குணம் என்பது ஒரு வகையான நடத்தை ஆகும். அது தேர்வு செய்யப்படுவதாகும். அது ஒரு பழக்கம் ஆகும்.

நல்லவராக இருங்கள். அன்பாக இருங்கள். அது எப்போதும் மதிப்பு வாய்ந்தது. எப்போதும். ஆமாம், எ-ப்-போ-து-ம்!

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook0Tweet about this on TwitterShare on LinkedIn0Google+0Email to someone