நம்பிக்கைக்கு, அறிவியல் அல்லது நியாயத்தின் அடிப்படையில் ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? உங்களுக்கு உண்மையிலேயே நம்பிக்கை இருக்கிறதென்றால் பிறகு எதிர்காலத்தைப்பற்றிய கவலைகள் உங்களை எப்படி இன்னும் பிடித்திருக்கிறது? நீங்கள் உங்கள் நம்பிக்கையை உறுதியாக்க விரும்பினால் எல்லாத் தர்க்கத்தையும் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில், நான் நம்புகிறேன். நீங்கள் உங்கள் பகுத்தறிவு மனத்தை உறுதியாக்க விரும்பினால் நம்பிக்கையை ஒதுக்கி வைத்து விடுங்கள். நம்பிக்கையில் காரணத்தைத் தூண்ட முயற்சிக்கும் போது நாம் இரண்டையும் மாசு படுத்துகிறோம். நம்பிக்கை உள்ளது அவ்வளவு தான், கடவுள் இருக்கிறார் அவ்வளவு தான், இயற்கை உள்ளது அவ்வளவு தான், நம்பிக்கை உணர்வு உள்ளது அவ்வளவு தான். நம்பிக்கை என்று வரும் போது “ஏன்” என்ற கேள்வி பதில் அளிப்பதில்லை . நிச்சயமாக, நம்மால் விளக்கங்களையும், கோட்பாடுகளையும் பொருத்த முடியும் ஆனால் அவை ஒரு தற்காலிக ஊக்கத்தைத் தாண்டி எந்த ஒரு நோக்கத்தையும் தீர்ப்பதில்லை. தோரா, குரான், பைபிள் அல்லது பாகவதத்தில் உள்ள கதைகள் உண்மையானவையா? கேள்வி என்னவென்றால் இவற்றை அறிவதால் உனக்கு என்ன நன்மை? பெரும்பாலும் நம்பிக்கையின் அடிப்படை, நாம் ஏற்கனவே உண்மையானது என்று ஏற்றுக் கொண்ட ஒன்றே ஆகும், மற்றும் அது அரிதாகவே நிச்சயமான உண்மையாக இருக்கும்.

நம்பிக்கையானது உங்களுக்குள் ஆழமாக இயங்கும் போது, தெய்வீகத்திடம் சரணடைவது தானாகவே வருகிறது. சரணாகதியின் உப தயாரிப்பு உள்மன அமைதியாகும். ஒரு குழந்தை தன் தாயின் கரங்களில் பாதுகாப்பை உணர்கிறது ஏனெனில் தன்னைப் பாதுகாப்பாள் என்று அதற்குத் தெரியும். அது ஒரு அறிவார்ந்த யோசனை அல்ல, குழந்தையிடம் நன்கு ஆழமாகப் பதிந்த ஒரு நம்பிக்கை ஆகும். மேலும், உங்களிடம் நம்பிக்கை உள்ளது என்று நீங்கள் நம்புவதற்கும், உண்மையில் நம்பிக்கை இருப்பதற்கும் இடையே உள்ள இந்த நுட்பமான வேறுபாடே உங்களது உள்மன அமைதியில் அனைத்து வித்தியாசத்தையும் ஏற்படுத்துகிறது.

நான் உங்களுக்கு ஒரு அழகான கதையை விவரிக்கிறேன். நான் கடினமாக முயற்சித்தும் இங்கு மேற்கோளாகக் கொடுத்துள்ள கவிதையின் மூலத்தைக் கண்டறிய முடியவில்லை.

எதிர்காலத்தில் எல்லாம் சரியாக இருக்குமா என்ற கவலை மற்றும் மூடத்தனமான ஐயம் கொண்ட ஒரு மனிதர் முற்றும் தெளிந்த அவருடைய குருவிடம் கேட்டார். “எனக்கு நம்பிக்கை வேண்டும் என்று எனக்குத் தெரியும் ஆனால் இந்த எண்ணத்தைக் கைவிட முடியவில்லை. நான் இன்னும் கவலைப்படுகிறேன். விஷயங்கள், அவை செல்ல வேண்டிய வழியில் செல்ல முடியவில்லை என்றால் என்னவாகும்? எதிர்மறை எண்ணங்கள் என்னை விடாது சூழ்ந்து கொண்டு எனது வாழ்க்கையை அனுபவிக்க என்னால் முடியவில்லை. கடவுள் என்னைப் பார்த்துக்கொள்ளவில்லை என்றால் என்னவாகும்?” என்று அவர் தன் குருவிடம் கேட்டார்.
குரு ஒரு ரோஜா மொட்டை எடுத்து சீடரிடம் கொடுத்து, “உங்களது பணி, அனைத்து இதழ்களும் உதிராமல் இந்த மொட்டைப் பிரிப்பதாகும்” என்று கூறினார்.
சீடர் கவனமாக மொட்டைப் பிரிக்கத் தொடங்கினார். விரைவில் அந்த இதழ்களைச் சேதப்படுத்தாமல் பிரிப்பது சாத்தியம் இல்லை என்று உணர்ந்தார். “அது பார்க்க எளிதாக இருந்தது போல அவ்வளவு எளியக் காரியம் அல்ல. குறைந்தது சில இதழ்களாவது சேதமடையும் என்று நான் வருந்துகிறேன்,” என்று தனது குருவிடம் கூறினார்.
அவரிடம் இருந்து அந்த மொட்டைப் பெற்றுக் கொண்டு குரு பதில் கூறினார்:

அது ஒரு சிறிய ரோஜா மொட்டே
கடவுளால் வடிவமைக்கப்பட்ட ஒரு மலர்;
ஆனால் என்னால் அதன் இதழ்களைப் பிரிக்க முடியாது
இந்த என்னுடைய திறமையற்ற கைகளால்.

மலர்கள் பிரியும் அந்த இரகசியம்
என்னைப் போல் ஒருவனால் அறியப்படவில்லை.
கடவுள் மிக இனிமையாக இந்த மலரைத் திறக்கிறார்,
ஆனால் என் கைகளில் அவை இறக்கின்றன.

என்னால் ஒரு மொட்டைப் பிரிக்க முடியாது என்றால்,
கடவுள் வடிவமைத்த இந்த மலரை,
அப்புறம் எப்படி எனக்கு ஞானம் இருக்கும்
இந்த என் வாழ்வைப் பிரிக்க?

எனவே நான் கடவுளை நம்புவேன்
என் நாளின் ஒவ்வொரு நொடியையும் வழி நடத்த.
நான் கடவுளின் வழிகாட்டலை எதிர் பார்த்திருப்பேன்
வழியின் ஒவ்வொரு அடியிலும்.

எனக்கு முன்னால் இருக்கின்ற பாதையை
கடவுள் மட்டும் தான் அறிவார்.
தருணங்களை வெளிக் கொண்டுவர அவரை நான் நம்புவேன்
அவர் அந்த ரோஜாவைத் திறப்பதைப் போலவே.

“நீங்கள் எவ்வளவு தான் திட்டமிட முடியும்? மேலும் எவ்வளவு திட்டமிட வேண்டும் என விரும்புகிறீர்கள்?” என்று குரு தொடர்ந்தார். “ஏன் உங்கள் கைகளில் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்கள்? அது சோர்வை அளிக்கிறது. கைவிடப் பழகுங்கள். நீங்கள் கர்ப்பத்திலிருந்த போது யார் உங்களைப் பார்த்துக்கொண்டது? பேசக் கூடத் தெரியாத போது யார் உங்களுக்கு உணவளித்தது? உங்களது சொந்த வாழ்க்கைக்குத் தேவையானதைச் சம்பாதிக்க முடியாத இளம் பருவத்தின்போது உங்களுக்கு அனைத்தையும் வழங்கியது யார்? இவற்றை நீங்கள் ஆய்வு செய்தீர்கள் என்றால், இயற்கையால் உங்களுக்காகத் தேர்வு செய்யப்பட்ட யாரோ ஒருவர், எப்பொழுதும் உங்களுடன் இருந்ததை உங்களால் கண்டுபிடிக்க முடியும். சில நேரங்களில் கை விடுதல் என்பது, என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து விட்டேன். இப்போது அதன் விளைவு அல்லது அதைப்பற்றிய கவலையில் இருந்து நான் என்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு சாதாரண ஞாபகப்படுத்துதலே ஆகும்.”

உங்களுக்குத் தன்னம்பிக்கையும், உங்களது வாழ்க்கையை அருளுடனும், பொறுப்புடனும் வாழத் தைரியத்தைக் கொடுக்க வடிவமைக்கப்பட்டதும் தான் நம்பிக்கையாகும். நாம் மன்னிப்புக் கோரிவிட்டு நமது மோசமான கர்மாவைத் தொலைத்து விடலாம் என்று அர்த்தம் இல்லை. மாறாக, முதலிலேயே நல்ல கர்மாவைச் செய்ய நமக்கு வலிமை இருக்க வேண்டும். உங்களது எடையைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ, உங்களது கர்மா அல்லது நிதி சம்பந்தமான உங்கள் கடன்களை அடைக்கவோ கடவுள் அவதரிப்பார் என்று நான் நினைக்கவில்லை. நமது சொந்த வாழ்வின் பொறுப்பை நாமே ஏற்றுக் கொள்ள வேண்டும். நமது ஆசைகள், தேர்வுகள் மற்றும் முயற்சிக்கும் காரியங்களின் விளைவே நாம் ஆவோம். வழக்கமான ஞானத்திலிருந்து விலகி, நம்பிக்கை என்பது, அதனுடைய மூட்டைமுடிச்சு மற்றும் அதன் நீடித்த பயிற்சி ஆகிய இவையாவும், உங்கள் உள்வலிமைக்காக மட்டுமே அன்றி, வெளிப்புற கடவுளை மகிழ்விக்க அல்ல என்று சொல்லத் தயவு செய்து என்னை அனுமதியுங்கள். ஒரு தெய்வீகத்தைத் திருப்தி செய்து இந்த வாழ்விற்கோ அல்லது அதற்குப் பின்னாலோ சில சலுகைகளை இறைஞ்சிப் பெற எனக்கு விருப்பமில்லை. அதற்குப் பதிலாக, இந்த வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்ந்து, இயற்கையை அதன் கடமையைச் செய்ய விட்டு விடலாம். எனக்கு உண்மையிலேயே நம்பிக்கை இருந்தால், கடவுள் அல்லது இயற்கையின் வழி பாரபட்சமற்றது என்று எனக்குத் தெரிந்திருக்க வேண்டாமா?

நெப்போலியன் ஒரு முறை “நீங்கள் போரிடும் போது, அனைத்திற்கும் நீங்களே பொறுப்பு என்பது போல் போரிட வேண்டும். மேலும் பிரார்த்தனையின் போது, எல்லாம் கடவுளின் பொறுப்பு என்பது போல் பிரார்த்தனை செய்ய வேண்டும்’’ என்று கூறினார். சுருங்கக்கூறினால் இதுவே நம்பிக்கை ஆகும்.

நம்பிக்கை என்பது நமது செயல்களை முழுமையாக்குவதாக இருக்க வேண்டுமே தவிர நம்மைச் செயலற்றவராக மாற்றக் கூடாது. இறுதியாக நாம் செய்யும் தேர்வுகளுக்கு நாமே பொறுப்பு ஏற்க வேண்டும். உங்கள் மேல் நம்பிக்கை கொண்டு எழுந்திருங்கள் மற்றும் கடவுள் மேல் நம்பிக்கை கொண்டு தூங்கச் செல்லுங்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email