நன்றியானது உங்களை எவ்வாறு வலுவாக உருவாக்க முடியும் என்பதைப் பற்றி முன்னால் நான் எழுதியிருக்கிறேன். நன்றியுடையவராக இருப்பதை எவ்வாறு நடைமுறையில் கொண்டு வருவது என்பது பற்றியும், இரண்டு வகையான நன்றியைப் பற்றியும், நன்றியுடையவராக இருக்க நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது பற்றியும், இன்று நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் திரும்பவும் வலியுறுத்துகிறேன்; நன்றி, மிக ஆழமான உணர்வுகளில் ஒன்றாகும். நீங்கள் நன்றி செலுத்துபவராக இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் தானாகவே அன்பாக, பேரின்பமாக, அமைதியாக மற்றும் சாந்தமாக ஆகிறீர்கள். சாந்தமாக இருப்பது அல்லது அமைதியாக இருப்பது, எல்லோரிடமும் அன்பு செலுத்த முடிவது ஆகியவை நன்றி செலுத்தும் ஆன்மாவின் இயற்கையான வெளிப்பாடுகளாகும்.

ஒரு வழியில், நன்றியை வெறும் வாய்வார்த்தையாக இல்லாமல் சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளுதலும், திருப்தியுடனும் மனநிறைவுடன் கூடிய நன்றியாக இருப்பதுவும் பற்றியதாகும். உணர்ச்சிகளின் மாற்றத்தின் ஒரு பகுதியாக, நீங்கள் வலுவானவராக, சிறந்தவராக மற்றும் சந்தோஷமானவராக ஆவீர்கள். நான் நன்றியின் முக்கியத்துவத்தை இதற்கு மேல் வலியுறுத்திக் கூற முடியாது. நீங்கள், உங்களின் செயல்கள், வார்த்தைகள், மற்றும் எண்ணங்களால் பாராட்டிக் காட்ட முடியும். முதல் இரண்டும் மற்றவர்களை நேரடியாக நன்மையடையச் செய்யும். இதை நடைமுறையில் கொண்டு வருவதற்கு முன்னால், இரண்டு வகையான நன்றியைப் பற்றி விரிவாகக் கூற விழைகிறேன். இரண்டும் பரஸ்பரம் தனிப்பட்டவை இல்லை. ஆகையால் பல உன்னத மனிதர்கள் இந்த இரண்டையும் பயிற்சி செய்கிறார்கள். பின்வருமாறு:

கடவுளிடம் நன்றியுடையவராக இருப்பது

சிலர் கடவுளிடம், எல்லையற்ற ஆன்மாவிடம், மேலே இருப்பதாக அவர்கள் உணரும் ஒருவரிடம் நன்றியுடையவராக இருக்கிறார்கள். அது அவர்களுக்கு உள்ளத்தளவில் மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுக்க வல்லது. வாழ்க்கையின் கடினமான கட்டங்களில் தழைத்து நிற்க உதவுகிறது. வேறு பல நன்மைகளுடன் முறையாக வாழ ஊக்கம் கொடுக்கிறது. கடவுள் இருப்பதை யார் நம்புகிறார்களோ, அவர்கள் எந்த மதத்தைப் பின்பற்றுபவராயினும், அவர்கள் யாரோ ஒருவருக்கு நன்றியுடையவர்களாக இருக்க முடியும். நித்திய பிரார்த்தனையும் நன்றியின் ஒரு வடிவமே ஆகும். எனினும், கடவுளிடம் மட்டும் நன்றியுடன் இருப்பது முழுமையான நன்றியுணர்வு ஆகாது. அம்மாவிடம் நன்றியுடன் இருப்பது ஆனால் அவரது குழந்தைகளிடம் கவனக்குறைவாக, அலட்சியமாக அல்லது பொறுப்பற்ற விதமாக இருப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். இதனால் ஏற்படும் பலன் மிகக் குறைவே. கடவுளிடம் நன்றியுடன் இருப்பதை விட அவரது குழந்தைகளிடமும், அவரது படைப்பினிடமும் நன்றியுடையவராய் இருப்பது மிகவும் முக்கியமானதாகும். இது இரண்டாவது வகை நன்றிக்கு வழிவகுக்கிறது.

மற்றவர்களிடம் நன்றியுடையவராக இருப்பது

அன்பும் நன்றியும் ஆத்ம நண்பர்கள்; மகிழ்ச்சியும் நல்லிணக்கமும் அவர்களின் குழந்தைகள் ஆகும். மற்றவர்கள் உங்களுக்கு ஏதாவது செய்திருக்கிறார்கள் என்று நீங்கள் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் நன்றியுடையவராக இருப்பதென்பது சாத்தியமற்றதாகும். உங்களுடைய அகங்காரத்தினால் அல்லது அறியாமையினால், அது உங்களின் உரிமை என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் நன்றியை உணரத் தவறி விடுவீர்கள். இதனால் நீங்கள் எந்த விதமான மகிழ்ச்சியையோ, மிகக் குறைந்த அளவிலாவது அமைதியையோ மற்றும் பேரின்பத்தையோ அனுபவிக்க முடியாது. நன்றி கலந்திருக்கும் எந்த உறவும் செழித்து வளரக் கூடும். நன்றியைக் கடைப்பிடியுங்கள், உங்களுக்குள் ஒரு மாற்றத்தை அனுபவிப்பீர்கள் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். இதைத் தொடருங்கள், குறுகிய காலத்தில் உங்களை நீங்களே ஆச்சர்யப் படுத்த முடியும். நன்றியுணர்வு என்பது எப்பொழுதும் ஆடம்பரமான சைகையைப் பற்றியதில்லை. உண்மையாக நன்றி என்று கூறுவதிலிருந்து, அளவிட முடியாத கருணையை வெளிப்படுத்துவது வரையிலான ஏதாவது ஒன்றாக இருக்கலாம். இதை நீங்கள் கடைப்பிடிக்க ஒரு வழியைக் கூறுகிறேன்.

இதைத் திறம்பட நடைமுறைப் படுத்த நீங்கள் இரண்டு பட்டியல்களைத் தயார் செய்ய வேண்டும்:
பட்டியல் 1. கடவுளுக்கு: நீங்கள் நன்றியுடையவராக இருக்க நினைக்கும் விஷயங்களைக் கொண்ட பட்டியலைத் தயாரியுங்கள். எடுத்துக்காட்டாக – சுகாதாரம், தங்குமிடம், உடை, உணவு, குடும்பம், வாய்ப்புகள் அல்லது நீங்கள் முக்கியமானது என்று நினைப்பவை எல்லாம் இருக்கலாம். உங்கள் பட்டியலில் முதலில் நான் நன்றி தெரிவிக்க விரும்புபவை என்று ஆரம்பித்து, அடுத்து ஒவ்வொரு விஷயமாக எழுதி, முடிவில் கடவுளுக்கு நன்றி என்பது போல் இருக்கலாம்.
பட்டியல் 2. மற்றவர்களுக்கு: உங்களுக்கு வேண்டியவர்கள் அனைவரின் பெயர்கள், உங்களிடம் ஒரு வித்தியாசமான திருப்பத்தை ஏற்படுத்தியவர்களின் பெயர்கள், உங்கள் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர்களின் பெயர்களைக் கொண்ட பட்டியலைத் தயாரித்துக் கொள்ளுங்கள். அதில் உங்களின் வாழ்க்கைத் துணை, பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், உங்களின் சகாக்கள் அல்லது நீங்கள் சந்தித்திராத ஆனால் உங்களை ஈர்த்தவர்களின் பெயர்கள் கூட இருக்கலாம்.

கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை

ஆரம்பக் காலத்தில் நாற்பது நாட்களுக்குப் பின்வருமாறு செய்யுங்கள். பின்னர் அதை ஏற்று அதை உங்களின் ஒரு பகுதியாக, உங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக ஆக்கிக் கொள்ளுங்கள்:
1. தினமும் காலையிலும், இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னும் உங்களின் முதல் பட்டியலை வாசியுங்கள்.
2. அடுத்த நாற்பது நாட்கள் ஒவ்வொரு நாளும் இரண்டாவது பட்டியலில் இருந்து குறைந்தது ஒரு நபருக்காவது உங்கள் நன்றியை வெளிப்படுத்துங்கள். இது உண்மையிலேயே நன்றியைத் தெரிவிக்கும் ஒரு எளிய மின்னஞ்சல், ஒரு தொலைப்பேசி அழைப்பு, காபி குடிக்க ஒரு அழைப்பு, பூக்களை அனுப்புதல் அல்லது உங்களை வெளிப்படுத்தும் விதமாக ஏதாவது ஒரு சைகையாக இருக்கலாம். நடைமுறைப் படுத்தும் நேரத்தில் உங்களின் நன்றியைத் தெரிவிக்கும் சைகையால் தினமும் ஒருவரையாவது சொற்களாலோ அல்லது செயல்களாலோ மிகவும் சிறப்பாக உணரச் செய்ய வேண்டும்.
3. ஒவ்வொரு நாளும் தயங்காமல் செய்தேன் என்பதை ஒவ்வொரு இரவும் ஆம் / இல்லை என்ற குறிப்பு மூலமோ அல்லது விவரமாகவோ குறித்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் தவற விட்டாலும் திரும்பவும் முதலிலிருந்து ஆரம்பியுங்கள்.

அவ்வளவு தான். எளிமையானது. இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வரும் போது உங்கள் பட்டியலில் மேலும் சேர்க்க நினைப்பவற்றைத் தயங்காமல் சேருங்கள். நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் நீங்கள் எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி ஆத்மார்த்தமாக உங்கள் நன்றியை வெளிப்படுத்த வேண்டும். இது கடினமானது ஆனால் செய்து முடிக்கக் கூடியதாகும். உண்மையான நன்றியுணர்வு ஒருவரைத் தாராளமானவராகவும், கருணையுடையவராகவும் மற்றும் எண்ணற்ற அன்புடையவராகவும் செய்கிறது.

அதன் செயல்திறனை தீர்வு செய்ய நீங்களே நடைமுறையில் முயற்சிக்கவும். நம்பமுடியாத அளவில் நீங்கள் உணர்வுப்பூர்வமான வலிமையைப் பெறுவீர்கள். நீங்கள் உணர்வுப்பூர்வமாக வலுவானவராக இருந்தால், எதிலும் மற்றும் எல்லாவற்றிலும் வெற்றிபெற முடியும். நன்றியுடைமை உங்களை உணர்வுப்பூர்வமாகத் தூய்மையாக்குகிறது. இத்தகைய தூய்மை உங்களை நிபந்தனையின்றி அன்பு செய்ய அனுமதிக்கிறது.

வைரங்கள் மற்றும் நிலக்கரி இரண்டும் ஒரே சுரங்கத்தில் காணப்படுகின்றன. இரண்டும் கார்பனின் தூய்மையான வடிவங்கள். இருந்தாலும் இரண்டும் வெவ்வேறு மூலக்கூறு அமைப்பாகும். எனினும் நிலக்கரி ஒரு வைரத்தைப் போல் மதிக்கப் படுவதில்லை. உங்களின் இருப்பை இழக்கும் வரை ஒரு உலையில் எரிய விரும்புவதோ அல்லது ஒரு திருமண மோதிரத்தில் அன்பின் அர்ப்பணிப்பைக் குறிக்கும் விதமாகப் பதிக்கப் படுவதோ நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு வழிமுறையாகும். அது உங்களின் அணுகுமுறை, மனப்போக்கு, ஆய்வு செய்து முடிவெடுத்தலைப் பொறுத்ததாகும்.

நீங்கள் கவனம் செலுத்தினால், நன்றியுடையவராக இருக்க நிறைய உள்ளது என்று அறிவீர்கள். சந்தோஷமாக இருங்கள், நன்றியுடன் இருங்கள். நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று உங்களுக்குத் தெரியும் என்று நான் நம்புகிறேன்.

செல்லுங்கள்! யாரிடமாவது சென்று அவர்கள் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதைச் சொல்லுங்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email