ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு நான் துறவறம் மேற்கொள்வதற்கு முன், வட இந்தியாவில் ஒரு முறை குளிர் அலை வந்தது. இந்தக் குளிரால் வீடற்ற மக்கள் பலர் இறந்த சம்பவங்கள் பற்றி செய்தித்தாள்களில் அறிவிக்கப்பட்டன. என் தந்தை என்னால் முடிந்த சிறிதளவு உதவியையாவது செய்யுமாறு என்னை ஊக்குவித்தார். இதன் விளைவாக, என்னுடைய நெருங்கிய நண்பரும் என்னுடைய நிறுவனத்தின் மேலாளருமாக இருந்தவரும், நானும் தேவையானவர்களுக்குப் போர்வைகள் வினியோகம் செய்யலாம் என்று முடிவெடுத்தோம். எனினும், சில நிறுவனங்களுக்குச் சென்று அவற்றைக் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. உண்மையான தேவையுடன் இருந்தவர்களின் கைகளில் தான் அது நேரடியாகச் சென்றடைகிறது என்பதை நாங்கள் உறுதி செய்து கொள்ள விரும்பினோம். நாங்கள் சுமார் பதினைந்து டஜன் போர்வைகள் வாங்கினோம். ஒரே நேரத்தில் எழுபது போர்வைகள் வைக்க ஏதுவான ஒரு வாகனம் எங்களிடம் இருந்தது. என் நண்பர், அவரது சகோதரி, வண்டி ஓட்டுநர் மற்றும் நான் நள்ளிரவில் அந்த வாகனத்தில் கிளம்பினோம். தொழில்துறை நகரமான, ஒரு பெரிய ஊரின் முக்கியமான தெருக்களைச் சுற்றி ஓட்டத் தொடங்கினோம்.

வெளியில் வெப்பநிலை மூன்று டிகிரி சென்டிகிரேட் இருப்பதாக வண்டியின் வெப்பமானி காட்டியது. அடர்த்தியான பனி இல்லாவிட்டாலும், தெரு விளக்குகளைச் சுற்றி மூடுபனியினாலான ஒரு ஒளிவட்டம் இருந்தது. தெரு நாய்களும், மாடுகளும் கூட ஒளிந்து கொண்டிருந்தன. வலி மிகுந்த அமைதியும், குளிரும் நிறைந்து இருந்தது. நாங்கள் தெருக்களைச் சுற்றி ஓட்டிய பொழுது இதயத்தைக் குலையவைக்கும் காட்சிகளைக் கண்டோம். பல்வேறு இடங்களில் நடைபாதைகளில் வீடில்லாத மக்கள் படுத்திருந்தனர். சிலர் கோணிப் பைகளாலும், சிலர் தட்டையாக்கப்பட்ட அட்டைப் பெட்டிகளாலும், இன்னும் சிலர் செய்தித்தாள்களாலும் தங்களைப் போர்த்திக் கொண்டிருந்தனர். இந்தக் கூட்டத்தில் வயதானவர்கள், இளம் ஆண்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகள் அடங்குவர். அவர்களில் ஒருவர் கூட கால்களை முழுமையாக நீட்டிக் கொண்டு தூங்கவில்லை. உடல் வெப்பத்தைப் பாதுகாக்க சுருண்டு படுத்துக் கொண்டிருந்தனர். காரில் இருந்த எங்கள் நால்வருக்கும் சூடேற்றும் கருவி இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் நாங்கள் குற்றவுணர்வையும், அதிர்ச்சியையும் உணர்ந்தோம். இதைப் போன்ற விஷயங்களை முன்னால் பார்த்திருக்கிறோம் எனினும், மிகுந்த கவனத்துடன் பார்த்தது இதுவே முதல் முறையாகும்.

நாங்கள் காரிலிருந்து இறங்கி புதிய போர்வைகளைக் கொடுக்க சிலரை எழுப்பினோம். சிலர் பூரிப்படைந்தனர். சிலர் அழுதனர். சிலர் பொது இடத்தில் தூங்கிய அவர்களை அப்புறப்படுத்துவதற்காக வந்த போலீசார் என்று எங்களை நினைத்தனர். சிலர் இது ஒரு வேடிக்கை என்றும் நினைத்தனர். சிலர் குடித்திருந்ததால் எழ முடியாமலும், சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட போர்வையை விரும்பினவராகவும் இருந்தனர். எவருமே பணமோ அல்லது மற்ற பொருட்களையோ கேட்கவில்லை. போர்வை பெற்றதிலேயே மிகவும் திருப்தி அடைந்தவராகக் காணப்பட்டனர்.

அவர்களது ஆடைகள் அழுக்கடைந்தும் கந்தலாகவும் இருந்தன. அவர்களது தலைமுடி ஒழுங்காக இல்லாமல் கலைந்தும் சிக்கலாகவும் இருந்தது. அவர்களது உடல்களில், பல ஆண்டுகள் பட்ட துன்பம் மற்றும் வியர்வை நிரந்தரமாகக் குடிகொண்டு, உடல்கள் கருத்தும் அழுக்கடைந்தும் இருந்தன. ஆனால் அவர்களுடைய கண்களில் அமைதியும், நடந்ததை ஏற்றுக்கொண்ட பாவனையும் வெளிப்பட்டது. மேலும், போர்வைகள் கிடைத்ததால் அவர்கள் நன்றியையும், மனநிறைவையும் காட்டி புன்னகையுடன் இருந்தனர். சிலர் உடனடியாக போர்வையைப் பிரித்து போர்த்திக் கொண்டனர். அவர்கள் அவ்வாறு செய்ததைப் பார்க்க வார்த்தைகளால் விவரிக்க முடியாத திருப்தியுணர்வு தோன்றியது. அது புதிதாக இருந்ததாலோ அல்லது அடுத்த நாள் அதைச் சந்தையில் விற்று விடலாம் என்று நினைத்ததாலோ உடனே அதை உபயோகிக்க விரும்பாமல் சிலர் அதைத் தலையணை போல் வைத்துக் கொண்டனர். அது இப்பொழுது தேவையற்ற விஷயம். நாங்கள் எங்களது கர்மாவைச் செய்ததாக நினைத்தோம்.

அங்குப் பார்த்த ஒரு குறிப்பிட்ட காட்சி தாங்க முடியாததாக இருந்தது. நாங்கள் போர்வைகள் கொடுப்பதைத் தூரத்தில் இருந்து பார்த்த சிலர் எங்கள் காரை நோக்கி ஓடி வந்தனர். அந்தக் கூட்டத்தில் உடல் ஊனமுற்ற ஒரு பெண்ணும் இருந்தாள். மற்றவர்களைப் போல் அவளும் கார் சென்று விடுமோ அல்லது போர்வைகள் தீர்ந்து விடுமோ என்ற பயத்துடன் விரைந்து வர முயற்சித்தாள். அவள் ஓடமுயன்ற பொழுது தடுமாறிக் கீழே விழுந்தாள். அவளது நிலையைக் கண்டு நாங்கள் கிட்டத்தட்ட அழுது விட்டோம். அவள் எழுந்து நெருக்கமாக வந்தபோது மனநிலை பாதிப்படைந்தவளைப் போலவும் தோன்றியது. எங்களால் அதைத் தாங்க முடியவில்லை. எங்கள் வேலையைச் செய்து விட்டு விரைவில் அங்கிருந்து போகத் தொடங்கினோம். இது போன்ற துன்பத்தைப் பார்க்க மனம் இல்லாததால் போர்வைகள் கொடுக்க அதன் பின் நான் செல்லவில்லை. எனது நண்பரும் அவரது சகோதரியும் மற்றொரு நாள் இரவு மீதமுள்ள போர்வைகளைக் கொடுத்தனர்.

நான் வீட்டிற்கு வந்து கம்பளியில் சுருண்டு கொண்டு தலையணையில் தலை வைத்து கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த அறை எல்லாவிதமான பொருட்களுடன், கதகதப்பு செய்யப்பட்டு, குளியலறையுடன் வசதியாக இருந்தது. இது ஒரு கனவு போல் தோன்றியது. ஆஹா! என் தலைக்கு மேல் ஒரு கூரை இருக்கிறது. இது கிடைக்க நான் என்ன நல்ல கர்மா செய்தேன் என்று நினைத்தேன். ஓடிவந்த அந்த மக்கள் என் கண் முன் தோன்றினர். கூரை இல்லாதது மட்டுமல்ல, அவர்களின் மற்ற பிற தேவைகளைப் பற்றியும் யோசிக்காமல் இருக்க முடியவில்லை. இயற்கையின் அழைப்பிற்கு அவர்கள் எங்கே செல்ல வேண்டும், சமைப்பதற்குச் சரியான இடம் இல்லை. தங்கள் பாத்திரங்களையும் அடுப்பையும் வைக்க இடம் இல்லை. இந்தப் போர்வைகளை வைக்கக்கூட இடம் இல்லை. துணிகளைத் துவைக்கக்கூட இடம் இல்லை. எங்கிருந்து குடிநீர் எடுத்து வருவார்கள்? அவர்கள் தங்கள் பற்களைத் துலக்கினார்களா? அவர்களுக்கு அதற்கு வசதி உள்ளதா? அவர்களுக்கு வீடு என்றொரு இடம் இல்லை. சோர்வடைந்த பின் செல்ல ஒரு இடம் இல்லை. இது போன்ற ஆயிரக்கணக்கான கேள்விகள் எழுந்து மனதைச் சோர்வடையச் செய்தது.

ஒருவர் எவ்வளவு நன்றியுடன் இருக்க வேண்டும் என்பதை நான் யோசித்தேன். நன்றி உணர்வானது பொருட்களின் அளவையோ, உங்களிடம் என்ன இருக்கிறது என்பதையோ சார்ந்து இருப்பதில்லை. அது சாதாரணமான ஒரு மனநிலை. உள்ளத்தின் ஒரு வெளிப்பாடு. சகிப்புத்தன்மையின் ஒரு அர்ப்பணிப்பு. சந்தோஷமாக இருப்பதற்கான ஒரு தீர்மானம். அமைதியான ஒரு உணர்வு. போதும் என்ற ஒரு மனநிறைவு. திருப்தியான ஒரு உணர்வு.

நீங்கள் நன்றியுடையவராக இருக்க உங்கள் வாழ்க்கையில் சில விஷயங்கள் இருக்க வேண்டும் என்று நீங்கள் நம்பினால், எப்பொழுதுமே நன்றி கூறுவது உங்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும். ஏனெனில் உங்களிடம் எவ்வளவு இருந்தபோதிலும், இதைப்போல் இன்னொரு பங்கு இருக்க வேண்டும் என்று தான் தோன்றும். எது உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமோ அதை நோக்கி வேலை செய்யுங்கள். ஆனால் உங்களிடம் உள்ள அனைத்திற்கும் நன்றியுடையவர்களாக இருங்கள்.

நீங்கள் நன்றியுடையவராக இருக்கும் பொழுது கண்ணுக்குத் தெரியாத அமைதி என்ற போர்வை உங்களை மூடிக்கொள்கிறது. அது உங்களை ஒளிரச் செய்கிறது, சந்தோஷமடையச் செய்கிறது, வலுவடையச் செய்கிறது, கதகதப்பாக இருக்கச் செய்கிறது.

உணர்ச்சிகளை மாற்றிக் கொள்ளும் பாதையில், முதலாவதும் முக்கியமானதுமான உணர்ச்சி நன்றியைக் காட்டுவதாகும். அனைத்து பிற பழக்க வழக்கங்களைப் போலவே, இதையும் கற்கலாம், நடைமுறைப் படுத்தலாம், பேணி வளர்க்கலாம். எனது அடுத்த கட்டுரையில் நன்றியை எப்படி நடைமுறைப் படுத்துவது என்று நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

நாளைய தினம் உலகின் சில பகுதிகளில் அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அன்னை உங்களுக்குச் செய்துள்ள அனைத்திற்கும், நீங்கள் எவ்வளவு நன்றியுடன் இருக்கிறீர்கள் என்பதை அன்னையிடம் சென்று சொல்லுங்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email