புத்தர் ஞானம் அடைந்த பின்னர் அவரது குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற போது, அவருக்கு ஒரு ராஜோபசாரமான வரவேற்பு வழங்கப்பட்டது என்று கூறினார்கள். புத்தர் முன்னாளில் இளவரசராக இருந்ததைப் போல், அவரது தந்தையான ராஜா அவரை இப்பொழுதும் நடத்தினார். அமைச்சர்கள் மற்றும் அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் அவரை மிகவும் பயபக்தியோடு வரவேற்றனர். அவருடைய சொந்த மகன், இராகுலா, ஓடிவந்து அவரை இறுக்கமாகக் கட்டி அணைத்துக் கொண்டான். ஏழு ஆண்டுகளாக அவன் தனது தந்தையைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தான் மற்றும் எதிர்பார்ப்போடு அவரைப் பார்க்கக் காத்திருந்தான். போதிசத்துவரின் மனைவி எஸோதராவைப் பற்றிய ரஞ்சனி ஒபேய்சேகேரேவின் இலக்கியத்தின் ஒரு காட்சியிலிருந்து நான் தொடர்கிறேன்:

எஸோதரா, இராகுலாவின் தாய் அங்கு வரவில்லை. ராஜா அவளைக் கூப்பிட்டு அனுப்பினார். ஆனால் அவள், “நிச்சயமாக நான் அந்த மதிப்புக்குத் தகுதியானவளாக இருந்தால், சித்தார்த்தரே என்னை வந்து பார்ப்பார்,’’ என்று கூறிவிட்டாள்.

புத்தர் அவரது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்தபின்,”எஸோதரா எங்கே?” என்று கேட்டார். அவள் வர மறுத்து விட்டாள் என்று தெரிவிக்கப்பட்டதும், உடனே அவர் எழுந்து அவளது இருப்பிடத்திற்குச் சென்றார்.

ஆசிர்வதிக்கப்பட்ட அவர், இளவரசியின் அறைக்கு அவருடைய சீடர்கள், ஷரிபுத்ரா மற்றும் முத்கல்யாயனாவை அவருடன் வரும்படி அழைத்தார் மற்றும், “நான் கட்டுப்பாடுகள் அற்றவனாக இருக்கிறேன், இளவரசி இன்னும் கட்டுப்பாட்டில் இருக்கிறாள். என்னை நீண்ட நாட்களாகப் பார்க்காததால் அவள் மிகவும் வருத்தமாக உள்ளாள். அவளது வருத்தத்தை அதன் போக்கில் அனுமதிக்காவிட்டால் அவளது இதயம் பிளவுபட்டு விடும். அவள் பரிசுத்தமான ததாகதாவைத் தொட நேரலாம், நீங்கள் அவளைத் தடுக்கக் கூடாது.” என்றார்.

எஸோதரா சராசரியான ஆடைகள் அணிந்து வெட்டப்பட்ட முடியுடன், தனது அறையில் அமர்ந்து இருந்தார். புத்தர் நுழைந்த போது பாசத்தின் மிகுதியால், நிரம்பி வழியும் பாத்திரத்தைப் போல் அவளால் அன்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவள் நேசித்த மனிதர் புத்தர், உலகத்தின் கடவுள், சத்தியத்தின் போதகர் என்பதை மறந்து, அவரது பாதங்களைப் பிடித்துக் கொண்டு மிகச் சோகமாக அழுதாள்.

எனினும், சுத்தோதனா – ஷாக்யா ராஜா மற்றும் புத்தரின் தந்தை, அங்கிருக்கும் நினைவு வந்ததும், அவள் வெட்கமுற்று எழுந்திருந்து பயபக்தியுடன் தொலைவில் அமர்ந்தாள்.

ராஜா, இளவரசிக்காக மன்னிப்பு கோரினார். “இது ஒரு தற்காலிக உணர்ச்சி அல்ல, அவளது ஆழ்ந்த அன்பிலிருந்து உதிக்கும் ஒரு உணர்ச்சியாகும். அவள் தனது கணவனை இழந்த ஏழு ஆண்டுகளில் அவர் தனது தலையை மொட்டையடித்துக் கொண்டார் என்று கேட்ட போது அவளும் அப்படியே செய்தாள்; அவர் வாசனைத் திரவியங்கள் மற்றும் ஆபரணங்கள் பயன்படுத்துவதை விட்டுவிட்டார் என்று கேட்ட போது அவளும் அவற்றின் பயன்பாடுகளை மறுத்துவிட்டாள். அவளது கணவரைப் போலவே அவளும் குறிக்கப்பட்ட நேரத்தில் மண்ணாலான கிண்ணத்தில் இருந்து மட்டுமே சாப்பிட்டாள். அவரைப் போலவே அவளும் உயர்ந்த படுக்கைகள் மற்றும் அற்புத ஆடைகளைத் துறந்து விட்டாள். இளவரசர்கள் அவளைத் திருமணம் செய்து கொள்ளக் கேட்ட போது அவள், தான் இன்னும் சித்தார்த்தருக்குத் தான் உரியவள் என்று பதிலளித்தாள். எனவே அவளுக்கு மன்னிப்பு வழங்குங்கள்,’’ என்று கூறினார்.

வருத்தத்தைத் தவிர்ப்பதிலும், மகிழ்ச்சியைப் பாதுகாப்பதிலுமே பெரும்பாலான நமது வாழ்க்கைப் போராட்டத்தின் கவனம் உள்ளது. வாழ்க்கையின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடைந்தால் நாம் மகிழ்கிறோம், இல்லையென்றால் சோகமாகிறோம். எது நமது எதிர்மறை உணர்வுகளை இன்னமும் மோசமாக ஆக்குகிறது என்றால், அவை எழுகின்ற போதே அவற்றைச் சரிசெய்ய முடியாத, நமது இயலாமை தான். நாம் உதவி கிடைக்கப் பெறாதவராக உணர்கிறோம், நாம் அழுகிறோம், கோபம் அடைகிறோம், நாம் அதை விரும்புவதில்லை, ஆனால் நாம் செய்கிறோம். நான் மேற்கோள் காட்டிய கதையில், குறிப்பாக இரண்டு வரிகள் முக்கியமானவை:

“அவளது வருத்தத்தை அதன் போக்கில் அனுமதிக்காவிட்டால் அவளது இதயம் பிளவுபட்டு விடும்,” மற்றும், “இது ஒரு தற்காலிக உணர்ச்சி அல்ல, அவளது ஆழ்ந்த அன்பிலிருந்து உதிக்கும் ஒரு உணர்ச்சியாகும்.”

நாம் ஒன்றின் மீது அல்லது ஒருவரின் மீது அதிக உணர்வுப்பூர்வமாக ஈடுபாடு கொண்டால், அந்த நிலையில் வீழ்ச்சி ஏற்படும் போது துயரம் மிகப் பெரியதாக உள்ளது. ஒரு நதி தன் சொந்தப் பாதையை உருவாக்குவது போல், துக்கமும் தனது சொந்த வழியில் நிச்சயமாக இயங்குகிறது. நதியின் பாதையை மாற்றி அமைக்க முடியும், ஆனால் அதை நிரந்தரமாக நிறுத்த முடியாது. அதுவாகக் காய்ந்தாலன்றி, அது மற்றொரு ஆற்றில் அல்லது கடலில் கலக்க வேண்டும். துயரமும் அதைவிட அதிக உணர்ச்சியால் கிரகிக்கப்பட வேண்டும், இல்லையேல் அது எப்போதும் தணிவதில்லை. ஏனெனில், பெரும்பாலான மற்ற உணர்வுகளைப் போலல்லாமல், துக்கம் ஒரு தற்காலிக அல்லது விரைவில் குணமாகக் கூடிய உணர்வு அல்ல. இது அன்பின் அடித்தளத்திலிருந்து எழுகிறது. துக்கத்தினால் ஆன ஆறு, எப்போதும் நன்றியினால் ஆன ஆற்றில் மட்டுமே ஐக்கியப்பட முடியும், அது அன்பெனும் கடலில் மட்டுமே கலக்க முடியும். மிகவும் நேசித்த ஒருவர் உங்கள் வாழ்க்கையில் இருந்து வெளியேறும் போது, அது அதிகமாகக் காயப்படுத்துகிறது. மேலும், வேறு யாரையாவது நீங்கள் அதே அளவு நேசிக்க முடியும் வரை, உங்கள் வாழ்க்கையில் முன்பு இருந்த ஒருவரின் இழப்பின் துக்கத்திலிருந்து மீள முடியாது.

ஒன்று உங்களுக்கு யாரையாவது கண்டுபிடிக்கப் போதுமான அதிர்ஷ்டம் இருக்க வேண்டும், முழுமையாக அவனை / அவளை நேசிக்க வேண்டும் அல்லது நீங்கள் உங்களது கவனத்தைத் திருப்பக் கற்றுக்கொள்ள வேண்டும்; உங்களது துக்கத்தைக் கடக்க வேறு வழிகள் அதிகம் இல்லை. அது காலத்தினால் ஆறுகிறது. துக்கத்தின் மூலத்தை மாற்றுங்கள் அல்லது அன்பால் உங்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். எப்படியாகிலும் வருத்தப்படுவதற்காகத் துக்கப்பட வேண்டாம். துக்கம் என்பது தேர்ந்தெடுக்கப்படுவது அல்ல, அது ஒரு உணர்வு. தவிர வருத்தமாக உணர்வதற்காக வருந்துவது பயனற்றதாகும். அது உங்களை மேலும் செய்த தவற்றை எண்ணி நொறுங்க வைக்கிறது. அதற்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட உணர்வு உங்களைத் தாக்கும் போது, அதை ஏற்றுக் கொண்டு, அதை அதன் போக்கில் இயங்க அனுமதிக்கவும். அதன் தாக்கம் தணிய அனுமதியுங்கள்.

நான் இங்கே எச்சரிக்கை வார்த்தை ஒன்று சொல்ல வேண்டும்: அதன் போக்கில் இயங்குதல் என்றால் நீங்கள் அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் அல்லது அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. உங்கள் துக்கத்தைப் பற்றி நினைப்பது, உண்மையில் அதன் போக்கை விரிவுபடுத்துகிறது. நீங்கள் சோகமாக உணரும் போது குற்ற உணர்வு கொள்ள வேண்டாம் என்றாலும், மெதுவாக உங்கள் கவனத்தை (நேர்மறை அல்லது மனநிறைவுதரும் ஒன்றை நோக்கி) மாற்றும் முயற்சியைச் செய்தாக வேண்டும். வருத்தத்தில் இருந்து உங்களையும், உங்கள் மனதையும் படிப்படியாக வெளியே கொண்டு வர அது உங்களுக்கு உதவும்.

ஒரு சீடர் அவரது குருவிடம், “எனக்குக் கோபம் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. நான் தன்னிலையை இழக்கும் அளவிற்குக் கோபம் அடைகிறேன். நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.
குரு, அவரது நீண்ட வெள்ளை தாடியைத் தடவிக் கொண்டே, “ஹ்ம்ம்… நான் உன்னுடைய கோபத்தின் தீவிரத்தைப் புரிந்து கொள்ள, உன் கோபத்தைப் பார்க்க வேண்டும். எனக்காக இப்பொழுது கோபப்படு,’’ என்றார்.
சீடர் சாடையாகப் பார்த்து, “நான் எப்படி இப்பொழுதே உங்களுக்கு அதைக் காட்ட முடியும்? நினைத்த நேரத்தில் எல்லாம் அது போல் கோபம் அடைய முடியாது!” என்றார்.
“ஓ, நினைத்த நேரத்தில் எல்லாம் என்னிடம் உன் கோபத்தைக் காட்ட முடியாது என்றால், அது உன்னுடைய உண்மையான இயல்பு அல்ல. அதனுடைய ஆதாரத்திற்குச் சென்று அதனைக் கட்டுப்படுத்தி உபயோகிக்க வேண்டும்,” என்று கூறினார்.

வருத்தம் மற்றும் மகிழ்ச்சியானது துக்கம் மற்றும் சந்தோஷத்தைப் போல் ஒரே மூலத்தில் இருந்து தான் ஊறுகிறது – நமது மனம். அவற்றை நாம் நமது இதயங்களில் உணர்கிறோம், ஆனால் அவை நமது மனதில் இருந்து தொடங்குகின்றன. நமது உணர்வுகள் கடலில் உள்ள அலைகளைப் போன்றவை, முடிவில்லாதவை மற்றும் பிரிக்க முடியாதவை. எந்தக் கடலில் நீங்கள் விலைமதிப்பற்ற முத்து மற்றும் விலையுயர்ந்த கற்களைக் கண்டுபிடிக்கிறீர்களோ, அதே கடலில் தான் வெள்ளை சுறாக்கள் மற்றும் கொலையாளி திமிங்கிலங்களையும் கண்டுபிடிக்கிறீர்கள். மனமாகிய பெருங்கடலில், வாழ்க்கைக் கடலில், நமது உணர்வுகள் நிலையானவை, சிக்கலானவை மற்றும் பிணைக்கப்பட்டுள்ளவை. எப்போதும் சந்தோஷமாக உணர்வதோ அல்லது நிரந்தரமாகச் சோகமாக இருப்பதோ சாத்தியமற்றது. நாம் நமது உள் உலகத்தில் மூழ்கும் போது, அனைத்து விதமான உணர்வுகளையும் சந்திக்கப் போகிறோம்.

கடலில் உள்ள உயிரினங்களைப் போல, நமது உணர்வுகளுக்கும் கூட அவற்றிற்கான சொந்த வாழ்க்கை உண்டு. அமைதியாக இருக்க அவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குள் உள்ள அனைத்துடனும் இசைந்து வாழ ஆரம்பிக்கும் கணத்தில், நீங்கள் இயல்பாகவே ஒரு அமைதியான மனநிலையை அடைகிறீர்கள். எப்படி இசைவாக இருக்க வேண்டும்? கவனத்துடன் இருங்கள். நன்றியுள்ளவராக இருங்கள். அன்பும், நன்றியும் மட்டுமே வருத்தத்தின் கடைசி முனைகள் ஆகும்.

பிரார்த்தனையும் நன்றாக உதவுகிறது. எப்படி? மற்றொரு முறை பார்ப்போம்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email