ஒரு சீடர் ஒரு முறை “தியானம் முடிந்தவுடன் நாம் ஏன் கடவுள்துதி செய்கிறோம்?” என்று அவரது குருவைக் கேட்டார்.
“நாம் அது முடிந்துவிட்டது என்று கடவுளுக்கு நன்றி செய்கிறோம்,” என்று குரு நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

இது ஒரு நகைச்சுவை என்றாலும், இந்தத் தியானமானது இவ்வாறாகத் தான் சில நேரங்களில் உணர முடிகிறது. நேர்மையாகவும் மற்றும் ஒழுக்கமாகவும் தியானிப்பவர்களைப் பொறுத்தவரை, தியானம் ஒரு நெடிய, கடினமான பயணமாகும். நீங்கள் உணர்வுகளின் மருக்களை நீக்கி, தழும்பேறிய எண்ணங்களை விட்டொழித்து, ஆசைகளின் அடுக்குகளை நீக்கி, உங்கள் மனத்தை ஒருநிலைப்படுத்த முயற்சிக்கிறீர்கள். அது எளிதல்ல. மனத்தைச் சமாதானப்படுத்தவும் மற்றும் முழுமையாக உறுதிப்படுத்தவும் பெரும் திறமை மற்றும் முயற்சி தேவைப்படுகிறது.

தியானத்தின் பல்வேறு வடிவங்கள் மற்றும் பாணிகளைப் பரிசோதிப்பதில் என் வாழ்க்கையின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை நான் முதலீடு செய்துள்ளேன். சில வழிகள் விரிவான காட்சியைப் பார்த்தலில் கவனத்தைச் செலுத்துகின்றன, சில ஒலிகளை வலியுறுத்துகின்றன, பல வழிகள் மண்டலங்களை உள்ளடக்கியுள்ளன, சில மூச்சுவிடும் ஒழுங்குமுறை பற்றிப் பேசுகின்றன, உங்களது எண்ணங்கள் அல்லது உணர்வுகளைக் கண்காணிப்பது பற்றிப் பல விவாதிக்கின்றன. ஆனால் தியானம் என்பது ஒரு செயற்கையான உணர்திறனை உருவாக்குவதைப் பற்றியது அல்ல, அது உங்களது மிகவும் இயற்கையான மனநிலையைக் கண்டுபிடிப்பது பற்றியதாகும் – பண்டைய விழிப்புணர்வு மற்றும் தெளிவுள்ள ஒரு மனநிலை. எனவே, நான் மிகவும் விரும்புகின்ற தியான அமைப்பு மகாமுத்ரா (Mahamudra) ஆகும். ஏனெனில் அது உங்கள் மனதின் கட்டமைப்புகள் நீக்கப்பட வேண்டும் என்றும், உங்கள் மனத்தை உள்ளவாறே – அமைதியானதாக, முடிவில்லாததாக, மற்றும் அழிவில்லாததாக – பார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

பல ஆண்டுகளாக, நான் தாந்த்ரிக் மற்றும் தாந்த்ரிக் அல்லாத இரண்டு வழிகளிலும் மகாமுத்ரா பயிற்சியை மேற்கொண்டு, அது உண்மையிலேயே குறிப்பிடத்தக்க பலனைக் கொடுப்பதைக் கண்டுபிடித்துள்ளேன். மகாமுத்ரா என்றால் பெரிய முத்திரை என்று பொருள். நீங்கள் அதைச் சலனமற்ற, அமைதியின், பேரின்பத்தின், வெறுமையின் முத்திரை என்றும் எடுத்துக் கொள்ளலாம். எப்படி நமது உலகம் (பொது உலகம் இல்லை!) நமது மனதின் பிரதிபலிப்பு ஆகும் என்பதைப் பற்றி நான் மற்றொரு நாள் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இப்போது, தியானத்தின் ஆறு அடிப்படைக் கொள்கைகளை, அதன் தோற்றம் பற்றிய ஒரு குறுகியக் குறிப்புடன் உங்களுடன் பகிர்ந்து கொள்ள என்னை அனுமதிக்கவும்.

1500 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் ஒரு பெரிய தியானம் செய்பவர் வசித்து வந்தார். அவரது பெயர் திலோப்பா. புத்தர், கவுதமர் போலவே இவரும் தனது ராஜ்யத்தைத் துறந்து, மற்ற தீவிரப் பயிற்சியாளர்களுக்குத் தியானத்தின் சாரம்சத்தைத் தொகுத்துக் கொடுப்பதற்குச் சென்றார். அவர் அதை மகாமுத்ரா என்று அழைத்தார் மற்றும் அவரது தலைமைச் சீடரும், வாரிசுமான நரோப்பா என்ற ஒப்பற்ற அறிஞருக்கு இந்தத் தியான அமைப்பை வாய்ச் சொற்கள் மூலமாகப் பரப்பினார். நரோப்பா மகாமுத்ராவைக் கற்றபின், திலோப்பா அவருக்குத் தங்கத்திற்கு ஒப்பான தவிர்க்க வேண்டிய ஆறு அம்சங்களைக் கொடுத்தார் — மொத்த அமைப்பின் சுருக்கத்தை ஆறு வார்த்தைகளில் கொடுத்தார். சமஸ்கிருதத்தில் இருந்த அதன் மூல அறிவுரைகள் இப்போது நடைமுறையில் இல்லை. ஆனால் அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவரது ஆலோசனை, குறுகிய மற்றும் எடைக்கு எடை தங்கத்தின் மதிப்புடையதாகும். திலோப்பா கூறியதைப் போல், ஒரு நல்ல தியானம் செய்பவர் தியானத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆறு விஷயங்களை, நானும் இங்கே முழுமையாக அங்கீகரிக்கிறேன்:

1. நினைவுகூரல்: கடந்த கால எண்ணங்களைத் தொடர வேண்டாம்.
2. கணக்கீடு: தற்போதைய எண்ணங்களில் மூழ்க வேண்டாம்.
3. கற்பனை: எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று கற்பனை செய்ய வேண்டாம்.
4. தேர்வு: உங்கள் எண்ணங்களை ஆய்வு செய்யவேண்டாம்.
5. கட்டுமானம்: ஒரு அனுபவத்தை உருவாக்க முயற்சிக்கவேண்டாம்.
6. வழிவிலகிய போக்கு: வேறுவேறு விஷயமாக அலைய வேண்டாம்; தற்போதைய தருணத்திலேயே இருங்கள்.

மேலே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவதில் எவ்வளவு அதிக முயற்சி செய்கிறீர்களோ அவ்வளவு பலனை நீங்கள் தியானத்திலிருந்து பெறலாம். நீங்கள் தியானத்தில் அமர்ந்து உங்களது எண்ணங்களை ஆய்வு செய்ய அல்லது தொடரத் தொடங்கினால், நீங்கள் மன உறுதி மற்றும் அமைதியைப் பெறுவதில் முன்னேற முடியாது. அமைதியின்மை, சோம்பல், எண்ணங்கள் மற்றும் காட்சிகள் ஆகிய இந்த நான்கு முக்கியத் தடைகள் தியானிப்பவரைத் தொடர்ந்து தொந்தரவு செய்யும்.

கடலில் அலைகள் தொடர்ந்து உருவாவதைப் போல், மனதில் எண்ணங்கள் இடைவிடாமல் வெளிப்படுகின்றன. உன்னதமானத் தியானத்தினால் கிடைக்கும் மிகமுக்கிய வெகுமதிகளில் ஒன்று என்னவென்றால் எண்ணங்கள் முற்றிலும் நிறுத்தப்படுவதாகும். இது ஒரு அசாதாரணமான உணர்வு தான்; மணிக்கணக்கில் இந்த நிலையில் அமர்ந்திருக்கும் போது எப்படி இருக்கும் என்பதைப் பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை. நீங்கள் தியானம் பற்றி மிகத் தீவிரமாக இருந்தால், திலோப்பாவின் ஆறு வார்த்தைகளைக் கொண்ட இந்த ஆலோசனை ஒரு மாபெரும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

சுருக்கமாக: தியானம் செய்யும் போது நடந்ததை நினைத்து ஏங்க வேண்டாம், குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம் மற்றும் உங்கள் கடந்த காலத்தைப் பற்றி வருந்த வேண்டாம். உங்களது இப்போதைய வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று ஆய்வு செய்ய வேண்டாம். எந்த எதிர்காலக் கற்பனையும் வேண்டாம். எந்தச் சிந்தனையையும் ஆய்வு செய்ய வேண்டாம். எந்தச் சிந்தனை வரும் போதும், அதன் பின்னால் ஓட வேண்டாம். அது மறைந்து விடும். ஏதாவது ஒரு குறிப்பிட்ட அனுபவத்திற்காக ஏக்கப்பட வேண்டாம். அவ்வாறில்லாவிடில் நீங்கள் அந்த அனுபவத்தைப் பற்றி மனதில் கோட்டைக் கட்டும்படியாக முடிந்து, அதனால் உங்கள் தியானத்தில் மாசு ஏற்படும். உங்களது மனதை அலைபாய விட வேண்டாம். இப்போது, இங்கே, தற்போதையத் தருணத்திலேயே இருங்கள். உங்களது விழிப்புணர்வை, உஷார்நிலையுடன் பராமரியுங்கள்.

உங்கள் பயிற்சியை விடாமுயற்சியுடனும், ஒழுக்கத்துடனும் செய்தால், தியானிக்கும் செயல் ஒரு செயலாகச் செய்வது நின்று விடுகிறது, மனம் ஒரு அமைதியான நிலைக்கு உருமாறுகிறது.

மகாமுத்ராத் தியானம், தியானிப்பவரின் பாதையில் ஒன்பது முன்னேற்ற நிலைகளைப் பட்டியலிடுகிறது. எனது அடுத்த இடுகையில் அதைப்பற்றிக் கூறுகிறேன்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email