ஒவ்வொருவரும் தனியாகத் தான் இருக்கிறார்கள். இது தான் உண்மை.

ஏதாவது ஒரு காலக் கட்டத்திலாவது தனது வாழ்க்கையில் தனிமையை உணராத எவரையும் எனக்குத் தெரியாது. சிலர் இதை மற்றவர்களை விட அதிக நாட்களுக்குத் தொடர்ச்சியாகவும், அடிக்கடியும் அனுபவிக்கிறார்கள், ஆனால் நாம் ஒவ்வொருவரும் இந்த உணர்ச்சியை அனுபவித்திருக்கிறோம். தனிமையின் இயல்பைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது ஏனெனில் அது சோகம் என்ற மற்றொரு சக்திவாய்ந்த உணர்ச்சியைத் தூண்டுகிறது மற்றும் அதிகமாக்குகிறது.

நீங்கள் தனிமையை உணரும் போது, சோகமாக உணர்கிறீர்கள். எல்லாம் அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது, அனைவரும் தூரத்தினர் போல் தோன்றுகின்றனர் மற்றும் வாழ்க்கையை ஒரு இழுவையாக உணர்கிறீர்கள். தனிமை ஒரு சுகமற்ற உணர்வு ஆகும். நீங்கள் மற்றவர்களை அல்லது உங்கள் சொந்த வாழ்க்கையையே கண்காணித்தீர்கள் என்றால், பெரும்பாலானவர்கள் தனிமையாக உணர்வதைத் தவிர்க்கவே ஓயாது உழைத்து வருகின்றனர் என்று கண்டறியலாம். நம்மைச் சுற்றி எப்போதும் மக்கள் இருந்தே அல்லது கூட்டமாக மக்களுடன் வாழ்ந்தே நாம் பழகிவிட்டோம். அதனால் நமது தனிப்பட்ட மற்றும் நமது இயல்பான பேரின்பத்தின் சுதந்திரத்தை நாம் இழந்து விட்டோம்.

பிறந்த கணத்திலிருந்து நாம் மக்களால் சூழப்பட்டுள்ளோம். வீட்டில் பெற்றோர் மற்றும் கூடப் பிறந்தவர்கள், பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இப்படிப் பலப்பலர். வயது ஆக ஆக, நமது உறவுகள் மிகவும் சிக்கலாக மற்றும் விரிவாக ஆகியிருக்கிறது. வேலை செய்யும் இடத்தில், மாலில் (விற்பனைக் கூடங்களில்), கோவிலில், நாம் எப்போதும் மக்களால் சூழப்பட்டுள்ளோம். பலர் வீட்டிற்கு வந்ததும் ஒரு தொலைக்காட்சியின் முன்னிலையில் அவர்களது மாலை வேளையைச் செலவிடுகிறார்கள். எவ்வளவு தனியாக இருக்கிறீர்களோ அவ்வளவு அதிகமாகத் தொலைக்காட்சியை நீங்கள் பார்க்கிறீர்கள். எவ்வளவு தனிமையை உணர்கிறீர்களோ அவ்வளவு அதிகமாகக் கடைக்குச் சென்று சாமான்கள் வாங்கும் தூண்டுதல் உங்களுக்கு இருக்கும். என்னுடைய கவனிப்பு சரியில்லை என்று நீங்கள் நினைத்தால், தயவு செய்து சிறிது நேரம் இதைப்பற்றி ஆழ்ந்து சிந்தித்து, உண்மையை நீங்களே கண்டு கொள்ளுங்கள்.

தனிமை என்பது ஒரு உள்மன வெற்றிடமாகும். நம்மில் பெரும்பாலோர் வெளி அனுபவங்களால் அதனை நிரப்ப முனையும் தவற்றைச் செய்கிறோம். நாம் நமது உள்ளக் குரலை, நமது சுய தன்மையைப் பற்றி மறக்க நினைக்கிறோம், இதன் மூலம் நாம் தனிமையை உணராமல் இருக்கலாம் என நினைக்கிறோம். இதற்காக மக்கள் சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிடுவதிலிருந்து தேவையற்று கடைக்குச் செல்வது வரை, டிவி பார்ப்பது, அவசியம் இல்லாத போதும் நீண்ட நேரம் வேலை செய்வது போன்ற அனைத்து வகையான செயல்பாடுகளிலும் ஈடுபடுகிறார்கள். இந்த நடவடிக்கைகள் உங்களைக் களைப்படையச் செய்கின்றன, உங்களைப் பற்றி உங்களையே மறக்கச் செய்கின்றன. உங்களைப் பற்றி மறந்து போவது உங்களை புறக்கணிப்பதற்குச் சமமாகும்.

எப்பொழுது உங்களை விரும்பவும், ஏற்றுக் கொள்ளவும் கற்றுக் கொள்கிறீர்களோ, அப்பொழுது சுய மதிப்பும், சுய ஏற்பு உணர்வும் தானாகவே உருவாகிறது. நீங்கள் உங்களுடன், உங்கள் திறமைகளுடன், உங்கள் திறன்களுடன் தொடர்பு கொள்ளத் தொடங்குகிறீர்கள். அந்த நிலையில், நீங்கள் உங்களுடன் சுகமாக இருக்கத் தொடங்குகிறீர்கள், அது நிகழும்போது தனிமையின் பயமானது, சூரிய உதயத்தில் மறையும் புதிய பனித்துளிகளைப் போல் மறைந்துவிடுகின்றன.

நீங்கள் யார் என்பதைப்பற்றியான ஒரு குறிப்பிட்ட சகஜத் தன்மையைப் பெற்றதும், வெளி உலகின் உறுதிச் சான்றுகள், மேலும் மேலும் சேர்த்துக் கொள்வதற்கான ஆசை, எண்ணற்ற மக்களால் சூழப்பட்டிருக்க விரும்பும் ஒரு தூண்டுதல் வெகுவாகக் குறைகிறது. உங்களது ஆசைகள் குறையும் போது, உலகம் அழகாகத் தெரிகிறது மற்றும் நீங்கள் முழுமையை உணர்கிறீர்கள். ஏனென்றால், அந்த ஆசீர்வதிக்கப்பட்ட தருணத்தில் நீங்கள் ஏற்கனவே ஒரு முழுமையான நபர் என்றும், ஒரு அழகான நபர் என்றும், அதை ஒப்புக் கொள்வதற்கோ அல்லது அங்கீகரிப்பதற்கோ வேறு யாரும் தேவை இல்லை என்றும் உணர்கிறீர்கள்.

ஒருவரின் ஆன்மீக முன்னேற்றத்தை அளவிடுவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று ஒரு சீடர் தன் குருவிடம் கேட்டார்.
“ஆமாம், ஒரு நாளில் எத்தனை முறை கலக்கம் அடைகிறாய் என்று கவனி,” என்று குரு கூறினார்.

ஆன்மீகத்தில் முன்னேறிய மக்கள் எப்படி எளிதாக அமைதியின்றிப் போவதில்லையோ, அதுபோல உணர்ச்சிகளில் பரிணாமம் அடைந்த மக்கள் அவ்வளவாகத் தனிமையை உணர்வதில்லை. நீங்கள் எவ்வளவு தனியாக உணர்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ள ஒரு எளியச் சோதனை என்னவென்றால், நீங்கள் சமூக ஊடகத்தில் எவ்வளவு ஈடுபாட்டுடன் இருக்கிறீர்கள் என்று பார்ப்பதாகும். 24 மணி நேரத்தில் நீங்கள் எத்தனை முறை பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க மாதிரி எதுவும் இல்லை என்று சொல்லத் தொடர்பு கொண்டீர்கள் என்பதை ஆய்வு செய்யவும். சமூக ஊடகம் கெட்டது அல்லது தவறு என்று நான் கூறவரவில்லை; நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று பார்க்க உதவுவதற்கு ஒரு வழியைக் காட்டி இருக்கிறேன். வலைத்தளத்தில் உங்கள் சுறுசுறுப்பு அதிகரிக்க அதிகரிக்க (அது உங்கள் வேலையின் ஒருபகுதியாக இல்லாத போது), நீங்கள் அதிகமாகத் தனியாக உள்ளீர்கள் என்பதாகும்.

நான் இங்கே தனிமைப் பயம் மற்றும் தனிமை உணர்வு இவற்றுக்கு இடையே உள்ள ஒரு முக்கியமான வேறுபாட்டினைக் கூற வேண்டும். சலிப்புத் தன்மையின் காரணமாக (அதற்கான காரணம் நிறைய இருக்கிறது என்றாலும்) நீங்கள் தனிமையை உணரலாம். ஆனால் தனிமையின் பயமானது, பாதுகாப்பின்மை மற்றும் போதாமை போன்ற உணர்வுகளில் இருந்து நேரடியாக எழுகின்றது. முன்னதில், அதாவது தனிமை உணர்வில், இணைப்பு துண்டிக்கப்பட்டது போல் அல்லது திக்குத் தெரியாதது போல் உணர்கிறீர்கள். உங்களுக்கு அதிக அளவில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இருக்கலாம், இருந்தாலும் நீங்கள் இன்னும் தனியாக உணரலாம். ஆனால், உங்களுக்குத் தனிமைப் பயம் உள்ள போது, பெரும்பாலும் நீங்கள் உங்களுடனேயே வாழ விரும்பவில்லை, நீங்கள் ஒரு துணைக்காக ஏங்குகிறீர்கள் என்றே அர்த்தம்.

உங்களுக்குத் தனிமையில் இருக்கப் பயம் இல்லை என்றால், உங்களுக்குத் தனிமையைப் பற்றி எந்தப் பயமும் இருக்க முடியாது. உங்களுக்கு இந்தப் பயம் இருக்குமானால், நீங்கள் அதற்கு மேலே உயர விரும்பினால் என்ன செய்ய வேண்டும்? மற்றொரு முறை எழுதுகிறேன்.

ஒரு நீண்ட கடினமான பயணத்திற்குப் பிறகு, ஒரு பணக்காரர் பனி மலைகளில் அமைந்திருந்த ஒரு சிறிய கிராமத்தில் உள்ள மேன்மையான மருத்துவரை அடைந்தார்.

“நீங்கள் ஏதாவது ஒரு நகரத்தில் ஏன் வாழக் கூடாது?”என்று அங்கு வந்த அந்த மனிதர் கேட்டார்.
“ஏனென்றால் நான் இங்கே இருக்க விரும்புகிறேன்,” என்று அந்த மருத்துவர் கூறினார்.
“ஆனால், இது அதிக தூரத்தில் உள்ளது!”
“எங்கே இருந்து தொலைவில்?”

எனக்குப்பிடித்த நிகழ்ச்சிக் குறிப்புகளில் இதுவும் ஒன்று, ஏனென்றால் நீங்கள் எவ்வளவு அதிகமாக உங்களுடன் தொடர்பில் இருக்கிறார்களோ அவ்வளவு குறைவாகப் பிறருடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை அது மிகவும் அழகாக விளக்குகின்றது. தனிமைப் பேரின்பத்தில் திளைக்கின்ற ஒருவர் அமைதியான ஆழ்மனக் கடலினுள் மூழ்குகிறார். இத்தகைய ஒரு நபர் ஒருபோதும் தன்னிடம் இருந்து தொலைவில் இருப்பதில்லை. நீங்கள் உங்களுடனேயே நெருக்கமாக இருக்கும் போது, உங்களுக்குத் தனிமை உணர்வு ஏற்படுவதில்லை. தனிமை உங்கள் வாழ்வில் இருந்து வெளியே செல்லும் போது, துக்கமும் சென்று விடுகிறது. இனம் இனத்தைச் சேரும்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email