ஜப்பானிய மொழியில்ஒ ரு சொல் இருக்கிறது, ஒவ்வொரு மொழியிலும் உள்ள சில தனிப்பட்ட வார்த்தைகளைப் போல, அது மொழிபெயர்க்கப்பட முடியாதது என்று அவர்கள் சொல்கிறார்கள். வாப்-சாபி (Wab-Sabi). இது ஒரு வார்த்தை மட்டுமல்ல, ஒரு தத்துவமாகும், ஒரு வாழ்க்கை முறையாகும். எளிய சொற்களில் விளக்குவதாக இருந்தால், வாழ்வின் குறைபாடுகளிலேயே அழகைக் கண்டுபிடித்தல், மற்றும் இயற்கையின் சுழற்சியான வளருதல் மற்றும் மூப்படைதலுடன் இயல்பாகப் பாய்தல் என்று அர்த்தம்.

ஆனால், அருளுடனான ஒரு வாழ்க்கைக்கு எது தேவை? அருள் மட்டுமல்ல, நன்றியுள்ளவர்களாகவும், அமைதியானவர்களாகவும் உள்ள ஒரு அழகான வாழ்க்கை வாழ என்ன தேவை?

என் தாழ்மையான கருத்தில், உங்கள் தினசரி வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட தரத்தை ஏற்றுக் கொள்ளுதல் தேவைப்படுகிறது. இது உங்களது இரண்டாவது இயல்பாக ஆக வேண்டி உள்ளது. இல்லை, இது நான் தொடர்ந்து பேசுகின்ற இரக்கம், நன்றியுணர்வு, மன்னிப்பு அல்லது வேறு சில சிக்கலான விஷயங்களைப் பற்றியது இல்லை. இந்தக் குறிப்பிட்ட விஷயம் உங்களைப் பற்றியதாகும். நீங்கள், உங்கள் வாழ்க்கை, உங்கள் உலகத்தைப் பற்றியதாகும். நான் அதைப் பற்றிப் பேசுவதற்கு முன், உங்களுடன் [1998 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட] ஒரு அழகான சிறுகதையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஜெரால்டின் எட்வர்ட்ஸின் ‘ஸெலப்ரேஷன்!’ (Celebration!) என்ற புத்தகத்தில் வாசித்தேன்! அதிலிருந்து ஒரு மேற்கோள்:

“அம்மா, நீங்கள் டாஃப்போடில் பூக்களை அதன் காலம் முடியும் முன்னால் வந்து பார்க்க வேண்டும்.” என்று பல முறை என் மகள் தொலைப்பேசியில் உரையாடியபோது கூறினாள்.

நான் போக விரும்பினேன், ஆனால் லாகுனாவிலிருந்து ஏரி ஆரோஹெட் வரை போவது இரண்டு மணிநேர பயணமாக இருந்தது. “அடுத்த செவ்வாயன்று நான் வருகிறேன்,” என்று அவளது மூன்றாவது அழைப்பில், சிறிது தயக்கத்துடன் சத்தியம் செய்தேன்.

அடுத்த செவ்வாய் குளிர் மற்றும் மழையுடன் புலர்ந்தது. நான் வாக்குறுதி அளித்திருந்ததால் அங்கு சென்றேன். இறுதியாகக் கரோலின் வீட்டை நான் அடைந்ததும், பேரக்குழந்தைகளை அணைத்து வாழ்த்தினேன். “டாஃப்போடில் பூக்களை மறந்துவிடு கரோலின்! மேகம் மற்றும் மூடுபனி ஆகியவற்றால் இந்தச் சாலை கண்ணுக்கே தெரியவில்லை, உன்னையும் இந்தக் குழந்தைகளையும் தவிர, இன்னும் கொஞ்ச தூரம் ஓட்டிச் சென்று நான் பார்க்கத் துடிக்கும் அளவுக்கு இந்த உலகில் வேறு எதுவுமே இல்லை!” என்று கூறினேன்.
என் மகள் அமைதியுடன் சிரித்துக் கொண்டே, “நாங்கள் இப்படிப்பட்ட சூழலில் தான் எப்பொழுதும் ஓட்டுகிறோம், அம்மா,” என்றாள்.
“இந்த நிலை சீராகும் வரை, நீ சாலையில் என்னைத் திரும்ப ஓட்ட வைக்காதே. சீரானதும் நான் வீட்டிற்குப் போகிறேன்!” என்று நான் உறுதியுடன் கூறினேன்.

“என் காரை கேரேஜிலிருந்து எடுத்துக் கொண்டு வருவதற்கு நீங்கள் என்னை அழைத்துச் செல்வீர்கள் என்று நான் நம்பிக் கொண்டிருந்தேன்.”
“எவ்வளவு தூரம் நாம் ஓட்ட வேண்டும்?”
“ஒரு சில தொகுதிகள் தாண்டியே, நான் ஓட்டுகிறேன். எனக்குப் பழக்கமானது தான்.”, கரோலின் கூறினாள்.
பல நிமிடங்கள் கழித்து, “நாம் எங்கே போகிறோம்? இது கேரேஜ்ஜூக்கான வழி இல்லையே!” என்று நான் கேட்டேன்.
“நாம் கேரேஜ்ஜூக்கான நீண்ட வழிப் பாதையில் சென்று கொண்டு இருக்கிறோம், டாஃப்போடில் உள்ள வழியாக,” என்று கூறி கரோலின் சிரித்தாள். “கரோலின், தயவு செய்து காரைத் திருப்பு,” என்று நான் உறுதியாகச் சொன்னேன்.
“பரவாயில்லை அம்மா, நான் சத்தியம் செய்கிறேன். இந்த அனுபவத்தை நீங்கள் தவறவிட்டால் ஒருபோதும் உங்களை நீங்களே மன்னிக்க மாட்டீர்கள்.”

சுமார் இருபது நிமிடங்களுக்குப் பிறகு, நாங்கள் ஒரு சிறிய சரளைச் சாலையில் திரும்பினோம். அங்கு தான் ஒரு சிறிய தேவாலயத்தைக் கண்டேன். தேவாலயத்தின் மற்றொரு பகுதியில், “டாஃப்போடில் தோட்டம்” என்று கையால் எழுதிய அடையாளத்தைக் கண்டேன். நாங்கள் காரில் இருந்து வெளியே வந்து, ஒவ்வொருவரும் ஒரு குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டோம். நான் கரோலினைப் பின்பற்றி அந்தப் பாதையில் சென்றேன். பின்னர், நாங்கள் அந்தப் பாதையின் ஒரு மூலையில் திருப்பினோம். நான் நிமிர்ந்து பார்த்து ஸ்தம்பித்து நின்றேன்.

எனக்கு முன்னால் மிகவும் ரம்மியமான காட்சி இருந்தது, யாரோ ஒரு பெரிய கொப்பரை நிறையத் தங்கத்தை எடுத்து மலை உச்சி மற்றும் சரிவுகளில் கீழே ஊற்றியதைப் போலப் பார்த்தேன். மலர்கள் கம்பீரமான சுழற்சியைப் போன்ற வடிவில், ஆழமான ஆரஞ்சு, வெள்ளை, எலுமிச்சை, மஞ்சள், சால்மன் இளஞ்சிவப்பு, குங்குமப்பூ மற்றும் வெண்ணெய் மஞ்சள் ஆகிய வர்ணங்களில் ரிப்பனால் மற்றும் துணியால் சிறப்பாகக் கட்டப்பட்டதைப் போல் வளர்க்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு வர்ணமும், தனித்தனியாக ஒவ்வொரு குழுவாகச் சுழற்சிகளுடன் அமைக்கப்பட்டு, ஒரு ஆற்றைப் போலவே அதன் தனித்துவமான நிறத்துடன் ஓடியது. ஐந்து ஏக்கரில் அந்த மலர்கள் இருந்தன.

“ஆனால் இதை யார் செய்தார்கள்?” என்று கரோலினிடம் நான் கேட்டேன்.
“இது ஒரே பெண்ணால் செய்யப்பட்டது. இது அவளது சொத்து, அவளுடைய வீடு, இங்கேயே அவள் வாழ்கிறாள்,” என்று அவள் பதிலளித்தாள்.

கரோலின் நன்கு பராமரிக்கப்பட்டு உள்ள ஒரு பண்ணை இல்லத்தைச் சுட்டிக்காட்டினாள், அது இந்த அற்புதத்தின் மத்தியில் சிறியதாகவும், எளிமையானதாகவும் இருந்தது. நாங்கள் அந்த வீடுவரைச் சென்றோம்.

உள் முற்றம் மீது, நாங்கள் ஒரு சுவரொட்டியைப் பார்த்தோம்.

நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளுக்கான பதில்கள் என்பது தான் தலைப்பு.

முதல் பதில் மிகவும் எளியது. “50,000 தாவர பல்புகள்,” என்று அதில் இருந்தது.
இரண்டாவது பதில், “ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றாக, ஒரு பெண்ணால். இரண்டு கைகள், இரண்டு கால்கள், மற்றும் மிகச் சிறிய மூளையுடன்.”
மூன்றாவது பதில், “1958 இல் தொடங்கியது.”

அங்குதான், இந்த ‘டாஃப்போடில் கோட்பாடு’ இருந்தது.
எனக்கு, அந்த ஒரு கணம் என் வாழ்க்கையை மாற்றும் ஒரு அனுபவமாக இருந்தது.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு செடியாகத் தொடங்கி, அவளுடைய கண்ணோட்டத்தில் கண்ட அழகு மற்றும் மகிழ்ச்சியை, ஒரு தெளிவற்ற மலை உச்சியில் கொண்டுவருவதற்காக உழைத்த, நான் ஒருபோதும் சந்தித்திராத அந்தப் பெண்ணைப்பற்றி யோசித்துப் பார்த்தேன். ஆனாலும், ஒரு நேரத்தில் ஒன்று என்று நடுவதைப், பல ஆண்டுகளாகச் செய்தது உலகத்தையே மாற்றிவிட்டது. இந்த அறியப்படாத பெண், அவள் வாழ்ந்நு கொண்டிருக்கும் உலகை எப்போதைக்குமாக மாற்றிவிட்டாள். அவள் வர்ணிக்க முடியாத (விவரிக்க முடியாத) மிக அருமையான, அழகிய, மற்றும் எழுச்சி தரக்கூடிய ஏதோ ஒன்றை உருவாக்கியிருந்தாள்.

அவளது டாஃப்போடில் தோட்டம் சொல்லித்தந்த கோட்பாடு, கொண்டாடப்பட வேண்டிய மிகச்சிறந்த கோட்பாடுகளில் ஒன்றாகும். அதாவது, ஒவ்வொரு முறையும் நமது இலக்குகள் மற்றும் ஆசைகளை நோக்கி ஒவ்வொரு அடியாக நகரக் கற்றுக்கொள்வது – ஒரு குழந்தையின் அடி அளவே நகர்வது – மற்றும் செய்வதை விரும்பக் கற்றுக் கொள்வது; நேரத்தை ஒன்று திரட்டி பயன்படுத்தக் கற்றுக் கொள்வது. தினசரி முயற்சியைச் சிறிது சிறிதாக அதிகமாக்கிக் கொண்டே, சிறிய அளவிலான நேரங்களையும் நாம் பெருக்கிக் கொண்டே வந்தால், நாமும் அற்புதமான விஷயங்களைச் சாதிக்க முடியும் என்பதை நாம் கண்டுபிடிப்போம். நம்மால் உலகத்தை மாற்ற முடியும்.

நான் விடாமுயற்சி + பொறுமையைப் பற்றிக் குறிப்பிடுகிறேன். விடாமுயற்சி மட்டுமல்ல, பொறுமையும் வேண்டும். விடாமுயற்சியுடன் ‘ஒரு கட்டத்தில் ஒரு படி’ என்று நடக்க முடியும், ஆனால் பொறுமையுடன் நடந்துகொள்ளும் போதுதான் அது நயமுள்ளதாக ஆகிறது. நாம் பொறுமையாக இருக்கும்போது நமது நிதானத்தை இழக்காமல், எதையும் சாதிக்க முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் விரும்பியதைப் பெறவில்லை என்றாலும் பொறுமையாக இருங்கள். உங்கள் மகன், மகள், மனைவி, நீங்கள் சொல்வதைக் கேட்கவில்லை என்றாலும், கவலைப்படாதீர்கள், முயற்சி செய்து பொறுமையாக இருங்கள். (அல்லது, ஒருவேளை அடிக்கடி நிகழும் சூழ்நிலையாக இருக்கலாம்: நீங்கள் அவர்கள் கூறுவதைக் கேட்பதில்லை, எந்தக் கஷ்டமும் இல்லை, அவர்களை பொறுமையாக இருக்கச் சொல்லுங்கள்…). ஏதோ ஒரு குறிப்பிட்ட கருத்தைப் புரிந்துகொள்ளவோ அல்லது குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்கவோ உங்களால் முடியாவிடில், எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள், பொறுமையாக இருங்கள். மற்ற நபர் அவரது நடத்தையை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், இன்னும் கொஞ்சம் அவகாசம் அளியுங்கள், பொறுமையாக இருங்கள். பெரும்பாலும், எல்லாம் தோல்வியடைந்தாலும், பொறுமை வேலை செய்கிறது. செய்வதை விடச் சொல்வது எளிதானது என்று எனக்குத் தெரியும், ஆனால் இந்த முயற்சி மதிப்புக்குரியது.

நான் இமயமலையில் ஒரு நாளைக்கு 22 மணி நேரம் வீதம் பல மாதங்களுக்கு, ஒவ்வொரு நாளும் இந்த வழக்கத்தைக் கடைப்பிடித்துத் தொடர்ந்து தியானம் செய்தபோது, சில நேரங்களில் மிகவும் களைப்பாக இருந்தது. நான் இதற்கு முன் செய்த அனைத்தையும் விடக் கடினமாகவும், மிகுந்த சோர்வைத் தருவதாகவும் இருந்தது. என் குறிக்கோளை அடைந்தே ஆக வேண்டிய தீர்மானத்துடன் இருந்தபோதிலும், சில நேரங்களில் வேதனைகள், வலிகள் மற்றும் சோர்வு அதற்கும் மேல் அதிகமாக இருக்கும். நேராக உட்கார வேண்டியிருந்தது மட்டுமே சவால் அல்ல, அவ்வாறு செய்வதுடன், ஒருமுகப்பட்ட செறிவுடன் இருத்தலும் ஆகும். என் வழக்கத்தில் உறுதியாய் இருப்பதற்கு, எனக்கு நானே சொல்லிக் கொள்வதற்கு ஒன்றே ஒன்று தான் இருந்தது:

“ஸ்வாமி, நீங்கள் விரும்பினால் நீங்கள் எழுந்திருக்கலாம், ஆனால் என்ன செய்வீர்கள்? நீங்கள் அமர்ந்து பொறுமையுடன் தியானம் செய்தால், இறுதியில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், ஏனென்றால் அதற்காகத் தான் நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். எப்படியும் நேரம் செல்வது தொடரும்.”

இது எப்போதும் எனக்கு வேலை செய்தது மற்றும் நான் என் சத்தியத்தை ஒருபோதும் உடைக்காமல், நான் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட அதே நேரத்தில் அமர்ந்து, குறிப்பிட்ட அதே அளவு நேரம் தியானம் செய்தேன். உறுதியாக இருத்தல் என்பது கடமை ஆனால் பொறுமை என்பது அணுகுமுறை ஆகும். மற்றும், இது பிந்தையதைப் பற்றி மிக முக்கியமான ஒன்றைச் சொல்ல எனக்கு வழிவகுக்கிறது; அது எரிச்சல் அடையாமல், விஷயங்கள் நடப்பதற்காகக் காத்துக் கொண்டு, வெறுமனே உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பற்றியது மட்டுமே அல்ல. அது ஒருவேளைச் செயலற்ற பொறுமையாக இருக்கலாம். அமைதியான மனநிலையுடன் முயற்சிக்க வேண்டும் என்பதுவே செயலுடனான பொறுமை ஆகும். நீங்கள் தேவையற்றதை ஒதுக்கிக் கொண்டு, தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பது.

நீங்கள் உழுதல் மற்றும் உங்களுடைய நிலத்தைப் பராமரித்தலில் மிகவும் சோர்வடைந்து இருப்பதாகவும், இருந்தாலும் விதைகளை விதைக்க நீங்கள் முற்படுகிறீர்கள் என்றும் கற்பனை செய்து கொள்ளுங்கள். பொறுமை என்பது முளைகள் மண்ணிலிருந்து தங்கள் தலைகளை உயர்த்துவதற்காகக் காத்திருப்பதில் மட்டும் இல்லை. ஒவ்வொரு நாளும் நீங்கள் தண்ணீர் விடும் போது நேர்மறையாகவும் மற்றும் நம்பிக்கையுடனும் இருப்பதாகும். என்னால் முடிந்த அளவு நான் முழுமையாகச் செய்ய வேண்டும், அவற்றின் செயல்படும் நேரம் வரும் போது தான் அது உருவாகும் என்பதைப் புரிந்து கொள்ளுதல் ஆகும். உண்மையான பொறுமையைப் பற்றிய ஒரே ஒரு கடினமான விஷயம் என்னவென்றால், அதற்காக ஒரு காலவரையறையை நாம் செய்ய முடியாது. நாம் விதைக்கும் விதைகள் அனைத்தும் நாற்றுகளாக ஆகிவிடாது, அதனால் பரவாயில்லை. பொறுமையாக இருத்தல் என்பது மீண்டும் விதைகளைக் கவனிப்புடனும், நம்பிக்கையுடனும் விதைத்தலே ஆகும்.

தேடுதல் உள்ள ஒருவர், எல்லோரும் அதைய விரும்பும் ஒரு திறமையான குருவைப் பார்க்கச் சென்றார்.

“நீங்கள் எனக்குத் தீட்சை அளிப்பீர்களா? நான் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறேன்,” என்று கேட்டார்.
“இதற்கு நிறையப் பொறுமை வேண்டும், நீங்கள் காத்திருக்க வேண்டும்,” என்று குரு பதிலளித்தார்.
“நான் எதற்கும் தயாராக இருக்கிறேன்! நான் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?”
“மன்னிக்கவும், நான் உனக்கு தீட்சை அளிக்க முடியாது. நீங்கள் வெளியேறலாம்.”

நாம் எவ்வளவு காலம் பொறுமையாக இருக்க வேண்டும் என்று கவலைப்படும் கணமே, பொறுமையின்மை வந்துவிடுகிறது. எவ்வளவு காலம் எடுக்கும் என்பது நமக்குத் தெரியாது என்பதே பொறுமையின் அர்த்தம் ஆகும். பொறுமையின்மை என்பது, என் தேவைகளை முதலில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையே, என்று நான் எங்கோ படித்திருக்கிறேன். ஒருவேளை, உங்கள் தேவைகளைச் சில நேரங்களில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் அல்லது நிறைவேற்றிக் கொள்ள முடியும், அடிக்கடி அல்ல, நிச்சயமாக எப்போதுமே அல்ல. இயற்கை, பிரபஞ்சம், மக்கள் மற்றும் நம் அன்புக்குரியவர்களும்கூட வேறு வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. மற்றவர்களுடைய மற்ற தேவைகளும் கூட நிறைவேற்றப்பட வேண்டும். பொறுமையின்மை, கோபத்தைத் தூண்டிவிடுகிற வெறுப்புக்கு வழிவகுக்கிறது. கோபம் அதன் துணையான ஈகோ (ego) இல்லாமல் ஒருபோதும் வருவதில்லை. நம் உணர்வில் இவை நுழையும் போது, அது நம்மைக் குருடாக்குகிறது. நாம் பகுத்துணரும், சிந்திக்கும் திறனை இழக்கிறோம். மேலும், கிருஷ்ணர் கூறுவது போல, புத்தி-நாஷத் ப்ரணஷ்யதி (ப.கீ. 2.63); பகுத்துணரும் தன்மையை இழந்துவிட்ட ஒருவரிடமிருந்து பெரிய விஷயங்களைப் பெற முடியாது.

ஒருவேளை நமது திட்டங்கள் சிதைந்து போகலாம். பரவாயில்லை. நாம் புதியவற்றைச் செய்யலாம். நாம் எதிர்பார்க்கும்படி வாழ்க்கை வழிவகுக்காமல் இருக்கலாம் (அது எப்போதாவது தான் நாம் எதிர்பார்க்கும்படி நடக்கிறது), பரவாயில்லை. நாம் தொடர்ந்து முயற்சி செய்வோம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விஷயங்களுக்கு, நமது அழகான பதில் பொறுமையே ஆகும். நமது தேவை என்னவாக இருந்தாலும் சரி, நமது இலக்கு எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், ஒரு காலகட்டத்திற்கு ஒரு அடி அளவே, நிமிர்ந்த தலையுடன், கருணை, நம்பிக்கை மற்றும் உறுதியுடன் கடக்க வேண்டும்.

பொறுமையாக, ஒரு நேரத்தில் ஒரு செடி வீதம் நட்டால், சில காலத்திற்கு முன்பாகவே 50,000 டாஃபொடில்ஸின் தோட்டம் உங்களிடம் இருக்கும். இப்படித் தான் வாழ்க்கையின் குறைபாடுகள், அதன் எரிச்சல்கள் மற்றும் சவால்களில் நாம் அழகைக் காண முடியும். இப்படித் தான் பயணத்தின் மகிழ்ச்சியானது, அடைவதற்கான உற்சாகத்தை விட அதிகமாக இருக்கும். வாப்-சாபி (Wab-Sabi).

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email