“நான் எப்படி ஞானத்தை அடைவேன்? சில ஆழமான அனுபவங்களை எனக்கு நீங்கள் வழங்க முடியாதா? என் வாழ்க்கையில் ஒரு தீவிர மாற்றத்தை நான் விரும்புகிறேன்,” என்று யாரோ ஒருவர் என்னிடம் ஒருநாள் கேட்டார்.

பல ஆர்வமுள்ள தேடுதல்-உள்ளவர்கள் இவ்வாறு என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள். அவர்களுடைய பிரச்சினைகளை (ஆன்மீக மற்றும் உணர்ச்சிப் பூர்வமான), என்றென்றும் தீர்த்து வைக்கும் படியான ஒரு சஞ்சீவி, சில மாய யதார்த்தங்களைத் தேடுகின்றனர். பலர் நிலையான மற்றும் தனிப்பட்ட முயற்சியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டிருக்கும் போது, இன்னும் பெரும்பாலானவர்கள் விரைவான தீர்வைத் தேடுகின்றனர். இங்கே ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் என் சொந்த எண்ணங்களைப் பிரதிபலிக்கும் அத்ய சாந்தியின் (Adya Shanti) ஒரு அழகான மேற்கோள்:

தேடுதல் உள்ள பலர், தங்கள் சொந்த விடுதலைக்கான முழுப் பொறுப்பையும் எடுக்க மாட்டார்கள். தங்களை முழுமையாக உந்தித் தள்ளும் ஒரு பெரிய, இறுதி ஆன்மீக அனுபவத்திற்காகக் காத்திருக்கிறார்கள். இந்த விதமான இறுதி ஆன்மீக அனுபவத்திற்கானத் தேடுதல், மலிந்து கிடக்கும் ஆன்மீக நுகர்தலைத் தழைக்கச் செய்கிறது. அதில் தேடுதல் உள்ளவர்கள் ஒரு ஆசிரியரிடமிருந்து மற்றொரு ஆசிரியரிடம் சென்று, சாக்லேட் கடையில் இனிப்பு வாங்குவது போல், ஞானம் அடைதலை வாங்கப் பார்க்கிறார்கள். இத்தகைய ஆன்மீக ஒழுக்கமின்மை ஞானம் அடைவதற்கான தேடுதல் உள்ளவர்களை, அனுபவம் தேடும் வெறியர்களாக விரைவில் மாற்றிவிடுகிறது. பலர் உண்மையில் சக்தி வாய்ந்த அனுபவங்களைப் பெற்று இருக்கையில், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இவை தனிப்பட்டவரின் ஆழ்ந்த மாற்றத்திற்கு, எது ஞானம் அடைதலின் வெளிப்பாடோ, அதற்கு வழிவகுக்காது.

ஞானம் பற்றிய மிகப்பெரிய தவறான கருத்துக்களில் ஒன்று, அது தானாகவே நடக்கும் என்பது. அப்படி இல்லை. அதைச் சம்பாதிக்க வேண்டும், அவ்வாறே வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். உண்மையான ஞானம் என்பதில் ஒரு தனி சிறப்புத் தருணம் என்று எதுவும் இல்லை, ஒரு அற்புத நுண்ணறிவை மலர வைக்கும், வாழ்நாள் முழுவதும் உணரும் உயர்ந்த அனுபவங்கள் மற்றும் பயிற்சிகள் என்று தேடுதல் உள்ளவர்களுக்கு விளக்குவதைச் சில நேரங்களில் சவாலானதாகவே நான் உணர்கிறேன். ஒரு சில குருவின் மந்திரத் தொடுதல் அல்லது ஒருவேளை ஒரு மின்னலின் தாக்குதல் ஆகியவற்றால் அவர்கள் ஒரு ஞானத்தின் தருணத்தை அடைவார்கள் என்று நினைத்திருந்தால் நான் அவர்களைக் குறை சொல்ல மாட்டேன். ஏனென்றால், நம்மிடம் உள்ள நிறைய ஆன்மீக நூல்கள் இது போன்ற கருத்துகளைத் தான் தருகின்றன. நானும் கூட எனது பல ஆன்மீக அனுபவங்களை என்னுடைய மெமோயரில் (memoir) பகிர்ந்துகொண்டதில், ஏதாவது ஒன்றின் மூலம் இவ்வாறே தவறுதலாகச் சொல்லி இருக்கலாம். இந்த விஷயத்தில், போதி மரத்தடியில் புத்தருக்குக் கிடைத்த ஞானம், பெரும்பாலும் அசாதாரண முக்கியத்துவம் வாய்ந்த தனித்துவமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. அது அப்படிப்பட்ட ஒன்று இல்லை.

இத்தகைய அனுபவங்களைப் புரிந்துகொள்ளும் மற்றும் சிறப்பித்துக் காட்டும் பொழுது, தன்னை உணரும் இத்தகைய நிலையை அடைய அவர்கள் செய்த மிகப்பெரிய முயற்சியை நாம் கவனிக்காமல் இருந்து விடுகிறோம். ஒரு கணம் ‘ஞானம் அடைதல்’ என்பதை, நோபல் பரிசு வெல்வதாக யோசித்துக் கொள்வோம். நாம் பிற நோபல் பரிசு பெற்றவர்களைச் சந்திப்பதன் மூலம் அதைப் பெறமுடியாது, மற்றும் நாம் விரும்பியதால் மட்டுமே அது நிச்சயமாக நமக்கு வழங்கப்பட முடியாது. ஒரு காரணத்திற்காக வாழ்நாள் முழுவதுமான ஒரு அர்ப்பணிப்பு, அல்லது ஒரு தனித்தன்மை வாய்ந்த ஒரு வேலை, மற்றும் சூழ்நிலைகளும் சாதகமாக இருந்தால், அந்தக் குழு உங்கள் பரிந்துரையைக் கருத்தில் கொண்டு, உங்களுக்கு அதை வழங்கலாம். நோபல் பரிசு வெல்வது, உங்கள் வாழ்க்கை மற்றும் உங்கள் வாழ்க்கைமுறையில் ஓரளவு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அத்தோடு, பலரை நீங்கள் ஊக்குவிப்பீர்கள் மற்றும் இப்படிப் பல. ஆனால், அதற்கு அப்பால் அதிகம் ஒன்றும் இல்லை. இது உங்கள் உறவுகளை மேம்படுத்தப் போவதில்லை, இது உங்கள் உடல் ஆரோக்கியத்தைச் சரிசெய்யப் போவதில்லை. அந்தச் சவால்கள் அப்படியே தான் இருக்கும்.

முன்னேற்பாடு மற்றும் தயார்நிலை இல்லாத எந்த ஆன்மீக அனுபவமும் மாற்றத்தை ஏற்படுத்தாது. ஒரு அனுபவம் உங்களுக்குள் ஒரு வகையான நீடித்த மாற்றத்தைத் தூண்டவில்லை என்றால், அது நுட்பமானதாக இருந்தாலும், இறுதியில் அது அர்த்தமற்றதாகும். நீங்கள் தொடர்ந்து நேர்மையாக, விடாமுயற்சியுடன் நடந்தால், பல அறிவுரைகள், பாடங்கள் மற்றும் அனுபவங்கள் உங்கள் வாழ்க்கையை வித்தியாசமாக வழிநடத்தும் ஞானத்தைக் கொடுக்கின்றன. உங்களது ஆனந்த நிலையைத் தக்க வைத்துக்கொள்ள உகந்தவாறு வித்தியாசமாக வழிநடத்தும். நீங்கள் ஞானம் அடைந்திருந்தாலும், நீங்கள் வேதனையை அனுபவிக்க மாட்டீர்கள் அல்லது உங்கள் வாழ்க்கையில் நடக்கும் எல்லாவற்றிலும் எப்பொழுதும் மகிழ்ச்சியைக் காண்பீர்கள் என்றும் அர்த்தமல்ல.

ஆர்.கே. லக்ஷ்மன் (1921 – 2015), இந்தியாவின் மிகப் பிரபலமான கார்ட்டூனிஸ்ட்களில் ஒருவர், தி டிஸ்டார்ட்டட் மிரர் (The Distorted Mirror) என்ற அவரது பயண நூலில், ஒரு அழகான பத்தியை எழுதி இருக்கிறார்.

என் தொழில் பற்றி மக்கள் ஆர்வமாக உள்ளனர் மற்றும் அனைத்து வகையான கேள்விகளையும் கேட்டு அவர்களது சந்தேகங்களைப் போக்கிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். சமீபத்தில் ஒரு பெண்மணி, “உங்கள் கார்ட்டூன்களுக்கு நீங்களே தான் படம் வரைகிறீர்களா?” என்று கேட்டார். “ஆமாம், நானே வரைகிறேன்” என்று பதில் சொன்னேன். “கார்ட்டூன்களைப் பற்றிய தலைப்புகளையும் நீங்களே எழுதுகிறீர்களா?” என்று கேட்டார். “கண்டிப்பாக,” என்று நான் சொன்னேன். இறுதியாக அவள், “கார்ட்டூன்களுக்கான கருத்துக்கள்? அதையும் நீங்களே தான் யோசிப்பதாகச் சொல்லாதீர்கள்,” என்றாள்.

மிகவும் அரிதாகவே கேட்கப்படுகின்ற, கேள்வி ஒன்று இருக்கிறது, ஆனால் அது ஆழமாக என்னைச் சிந்திக்க வைக்கிறது. இதுதான்: “நீங்கள் உங்களைச் சுற்றிப் பார்க்கும் போது, எல்லாமே உங்களுக்கு வேடிக்கையானதாகத் தோன்றுகிறதா?”

ஒரு கார்ட்டூனிஸ்ட், தனது சக மனிதர்களைப் பீடித்திருக்கும் வருத்தமும், கவலையும் நிறைந்த ஒரு நிம்மதியற்ற வாழ்க்கையைப் போல் அல்லாமல், நிரந்தரமாக ஒரு இனிமையான வாழ்க்கையை நடத்துவதில்லை. வெங்காய விலையின் ஏற்ற இறக்கம், ஒரு பள்ளி ஆசிரியரை எப்படி மகிழ்விக்க அல்லது சீற்றம் அளிக்கச் செய்கிறதோ அதே போல் தான், அது என்னையும் பாதிக்கும். அதேபோல் வரிகள் எனக்கும் அதிருப்தி அளிக்கும். ஒலிபெருக்கியால் மனச்சலிப்பு, மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் என்னையும் கோபப்படுத்தும். நிச்சயமாக ஒரு மருத்துவர் இருமல், சளி, ஒவ்வாமை மற்றும் மூச்சுக்குழாய் அழற்சியின் அடிப்படையிலேயே வாழ்வை எப்போதும் பார்க்க மாட்டார். வெள்ளித் திரையின் ஒரு நட்சத்திரத்திற்கு, கேமரா வாழ்க்கையின் வரம்பிற்கு அப்பால் ரம்மியமான காட்சிகள், பாலியல், பாடல்கள் மற்றும் கெட்ச்அப்-இரத்தம் தொடராது என்பதை அறிந்து கொள்ளப் போதுமான உணர்வு நிச்சயமாக உள்ளது என்று எனக்குத் தெரியும். அப்படியானால், ஒரு கார்ட்டூனிஸ்ட் அவரைச் சுற்றி ஏன் கேலிச்சித்திரங்களைக் காண வேண்டும், வேடிக்கை-உரையாடலைக் கேட்க வேண்டும்? ஆகவே, வாழ்க்கையைப் பற்றிய என் கருத்து, சர்க்கரை அல்லது மண்ணெண்ணெய் வரிசையில் நிற்கும் அடுத்த மனிதனைப் போலவே சாதாரணமானதாகவே இருக்கும் என்று சுய உறுதியுடன் நானே என்னை ஆற்றிக் கொள்கிறேன்.

ஞானமும் இது போன்ற ஒன்றே. நீங்கள் வேதனையை அனுபவிக்க மாட்டீர்கள் என்று அர்த்தமல்ல அல்லது உங்களைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றாலும் எப்பொழுதுமே பாதிக்கப்பட மாட்டீர்கள் என்றும் அர்த்தமல்ல. நாம் அனைவரும் நம் கர்மா, மனோநிலை மற்றும் வாழ்க்கையைப் பற்றிய அணுகுமுறை ஆகியவற்றின் அடிப்படையில் அனுபவித்தே ஆக வேண்டும். உங்கள் வாழ்வில் மாறும் ஒரே விஷயம், நீங்கள் இன்னும் ஆன்மீக ரீதியில் வளர்கிறீர்கள், நீங்கள் மேலும் மேலும் நெகிழ்வானவர்களாகவும், கனிவாகவும் ஆகிறீர்கள். வாழ்க்கை உங்களைச் சுழற்றி அடிப்பது மாறாது, அதை எப்படி நீங்கள் அணுகுகிறீர்கள் அல்லது தடுத்து நிறுத்துகிறீர்கள் என்பது மாறுகிறது. ஒரு முனைப்புக் கட்டம் உருவாக்கப்படும் போது, நீங்கள் சுயாதீனமாக, மிகவும் சுயாதீனமாக ஆகிறீர்கள். உலகம் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறது, அது உங்களை எப்படி உணர்கிறது, இன்னும் பலவற்றைப் பற்றி மிகக் குறைவாகவே கவலைப்படுவீர்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீங்கள் உங்கள் சொந்த கார்ட்டூன்களை வரைவீர்கள், உங்கள் சொந்த தலைப்பை எழுதுவீர்கள், மற்றவர்களுக்கு ஆர்வத்தை அல்லது அவநம்பிக்கையை ஏற்படுத்தும், யோசனைகளும் கூட உங்களுக்கு வரும்.

புகழ்பெற்ற ஜென் பழமொழி சொல்கிறது, “ஞானத்திற்கு முன்: மரம் வெட்டுதல், தண்ணீர் கொண்டுவருதல். ஞானத்திற்குப் பின்: மரம் வெட்டுதல், தண்ணீர் கொண்டுவருதல்.”

ஒரு ஜீவன்-முக்தராக, விடுதலை பெற்ற ஆன்மா அல்லது ஞானமடைந்த ஒரு நபர், தம்முடைய கடமைகளில் இருந்து விடுபட முடியாது. ஏக்நாத் ஈஸ்வரன் கூறுவதைப் போல், சுய-உணர்தல் என்பது ஒருவரின் நல்ல செயல்களுக்கான வெகுமானம் இல்லை. இது அனுபவ ரீதியில் நீங்கள் புரிந்து கொள்ளும், வாழ்க்கையைப் பற்றிய ஒரு கண்ணோட்டம் ஆகும். நீங்கள் உண்மையிலேயே ஞானத்தின் கோட்பாட்டை இறுகப் பிடிக்க விரும்பினால், அதை வாழ்க்கையின் ஒரு வழிமுறையாக, நற்குணங்களுக்கு ஒரு அர்ப்பணிப்பாக, ஒரு குறிப்பிட்ட வழியில் உங்களைக் கொண்டு செல்லும் ஒரு உறுதியாக, உங்கள் வாழ்க்கையை உங்களுக்கு உகந்தபடி வழிநடத்தும் விதமாகப் பாருங்கள்.

விடுதலை என்பது, எவரெஸ்ட் சிகரத்தின் மேல் ஒரு புகழ்பெற்ற கொடியை நாட்டுவது அல்ல, கவனத்துடன் வளைந்து நெளிந்து உயரத்தில் செல்லும் பாதையில் சுறுசுறுப்பாகப் பயணித்தல், வழியில் நின்று முகாமிடுதல், சக பயணிகளைச் சந்தித்தல் மற்றும் வாழ்த்துதல், பிரமிக்க வைக்கும் காட்சிகளை அனுபவித்தல், சவால்களைப் பாராட்டுதல், ஏற்கனவே அடைந்துள்ள இடத்தில் மகிழ்ச்சியாக இருத்தல் ஆகியவை ஆகும். இவை அனைத்தையும் உள்நோக்கிய பார்வையுடன், ஆனால் இலக்கின் மீது கவனம் செலுத்திய படி செய்ய வேண்டும்.

நீங்கள் இதை உணரும் போது, நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சியின் ஒரு சிறந்த உணர்வு உங்களைச் சூழ்ந்து கொள்கிறது. இருண்ட தருணங்களே இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள், நீங்கள் ஏற்கனவே ஞானத்தை அடைந்து இருக்கிறீர்கள். அதை அனுபவிக்க ஒரு குறிப்பிட்ட வழியில் நீங்கள் வாழ வேண்டும். பின்னர் நீங்கள் உங்களை எப்படித் தேவையற்ற முறையில் தீவிரமாக எடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடித்து, அதற்காக நீங்களே சிரிக்கிறீர்கள். திச் நஹ்த் ஹான் கூறுவது போல்:

பிறப்பு உலகத்துக்கு வெளியே ஒரு சொர்க்கத்தை எப்படி நான் ஒருமுறை தேடினேன் என்று நினைக்கும்போது சிரிக்கிறேன். பிறப்பு மற்றும் இறப்பு உள்ள இந்த உலகில் தான் இந்த அற்புதமான உண்மை வெளிப்படுத்தப்படுகிறது. ஆனால் இது திடீரென்று பெரும் அதிர்ஷ்டத்தை அடைந்த ஒருவரின் சிரிப்பு அல்ல; இது வெற்றி பெற்ற ஒருவரின் சிரிப்பும் அல்ல. நீண்ட நாட்களாக மிகுந்த கஷ்டத்துடன் ஏதோ ஒன்றைத் தேடியபின், ஒரு நாள் காலையில் அவருடைய கோட்டின் பாக்கெட்டில் அதைக் கண்டு பிடித்த ஒருவரின் சிரிப்பு தான் அது.

மதநம்பிக்கை உள்ள ஒரு மனிதர், ஒரு துறவியைத் தொலை பேசியில் கூப்பிட்டுத் தனது புதிய வீட்டை ஆசீர்வதிக்க அவரை அழைத்தார். அந்தத் துறவி பிஸியாக இருப்பதாகக் கூறி அந்தக் கோரிக்கையை நாசூக்காக நிராகரித்தார்.
“ஆனால், நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று அந்த மனிதர் வலியுறுத்திக் கேட்டார்.
“ஒன்றும் இல்லை.”
அந்தத் துறவி வருகை தரும் ஒரு மனநிலையில் ஒருவேளை அன்று இல்லாமல் இருக்கலாம் என்று நினைத்து, அவர் அடுத்த நாள் மீண்டும் போன் செய்தார். “என் வீட்டை ஆசீர்வதிக்க நீங்கள் இன்று வர முடியுமா?” என்று கேட்டார்.
“மன்னிக்கவும், நான் பிஸியாக இருக்கிறேன்,” என்று துறவி கூறினார்.
“என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?”
“நான் எதுவும் செய்யவில்லை,” என்று துறவி பதிலளித்தார்.
“ஆனால் நேற்றும் அதைத் தான் நீங்கள் செய்து கொண்டிருந்தீர்கள்?” என்று அந்த மனிதர் கூறினார்.
“ஆமாம், நான் அதை இன்னும் முடிக்கவில்லை!” என்று துறவி பதிலளித்தார்.

ஞானமும் தொடர்ந்து செய்யும் ஒரு விஷயமாகும். உங்களுக்குள் உள்ள ஏதேனும் ஒன்றை நிச்சியமாக மாற்றக்கூடிய, ஒரு திருப்பக்கூடிய தருணம் இருக்கலாம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால், அந்த மாற்றத்தில் வாழ்வது, கவனமாக இருப்பது மற்றும் அதற்கும் மேலான விஷயம் ஆகும். அதுவே உண்மையான ஞானம் ஆகும்.

இவ்வளவு தான். இதுவே வாழ்க்கை. இது அழகாக இருக்கிறது. இதை வாழுங்கள். இதை விரும்புங்கள். உங்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும். சிரிப்புடன் வாழுங்கள். தெரிந்து கொள்ள வேண்டியது இவ்வளவே. மீதமுள்ள பெரும்பாலானவை இல்லாமல் வாழ முடியும்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email