“நாம் இறந்த பிறகு, உண்மையில் சொர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ செல்லுகிறோமா?” என்று யாரோ ஒருவர் ஒருமுறை என்னிடம் கேட்டார்.
“இல்லை.”
“வேதவாக்கியங்கள் பொய்யெனக் கூறுகிறீரா?” என்று அவர் வினவினார்.

ஹஸ்ரத் இனாயத் கான் என்ற சூஃபி ஞானியின் உரையாடலில் வாசித்த ஒரு சிறு கதையை நான் பதிலாக அளித்தேன்.

ஒரு சீடர் பல ஆண்டுகளாகத் தனது குருவின் கீழ் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார், ஆனாலும் எந்தவொரு தெய்வீக அனுபவமும், எதைப்பற்றியும் ஒரு தெளிவான புரிதலும் அவருக்குச் சிறிதும் கிடைக்கவில்லை.

ஒரு நாள், அவர் தன் குருவிடம், “பிரார்த்தனை செய்கிறேன். எனக்கு சொர்க்கத்தைக் காட்டுங்கள். நான் பல நாட்களாக உங்களுக்குச் சேவை செய்து வருகிறேன்,” என்று கெஞ்சினார்.
“குழந்தாய், அடுத்த அறையில் கண்களை மூடி அசையாமல் உட்கார். நீ சொர்க்கத்தைக் காணலாம்,” என்றார்.
“உண்மையாகவா, இப்படியேவா?”
“போ,” என்றார் குரு.

சீடர் அடுத்த அறையில் சென்று தியானம் செய்தார். நிச்சயமாகவே, அவர் ஒரு காட்சியைக் கண்டார், ஆனால் அது அவர் எதிர்பார்த்ததிலிருந்து வேறுபட்டு இருந்தது. அவர் பார்த்தது ஒரு பரந்த நிலம், அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அங்கு அழகான அரண்மனைகளோ அல்லது தேன் பாயும் நதிகளோ இல்லை. அங்குப் பாற்கடலோ அல்லது மாணிக்கக் கற்களோ இல்லை. கூரையில் வைரம் பதிக்கப்படவில்லை. முடிவில்லாத தரிசு நிலம் தவிர வேறு ஒன்றுமே இல்லை. உள்ளுக்குள் ஒரு ஏமாற்றம் அடைந்ததைப் போலவே, அவர் குருவிடம் திரும்பி வந்தார்.

அவர் தனது ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு, “ஓ குருவே, இப்போது நான் சொர்க்கத்தைப் பார்த்தேன், நிச்சயமாக நரகத்தையும் பார்க்க விரும்புகிறேன்,” என்றார்.
“ஹும்…,” குரு தனது வெள்ளைத் தாடியைத் தடவிக் கொண்டே, “நல்லது, போய் மீண்டும் தியானத்தில் உட்கார்ந்துகொள். நரகத்தின் ஒரு காட்சியும் உனக்குக் கிடைக்கும்,” என்றார்.

சீடர், குரு கூறியபடியே மீண்டும் ஒருமுறை செய்தார். அதே காலியாக இருந்த நிலத்தை மீண்டும் அவர் பார்த்தார். தீயை உமிழும் பாம்புகள், பிசாசுகள் அல்லது கொடூரமான மிருகங்கள் எதுவும் இல்லை. எவரும் எவருக்கும் சாட்டையடி கொடுக்கவில்லை, கொதிக்கும் எண்ணையும் இல்லை. அவர் எங்கு பார்த்தாலும், அவர் நின்ற இடத்திலிருந்து எல்லாத் திசைகளிலும் அடிவானம் வரை காலி நிலமாகவே இருந்தது. “என்ன இது, இது நிச்சயமாக நரகமாக இருக்க முடியாது,” என்று அவர் நினைத்தார்.

“குருவே, இது என்ன காட்சி? நான் சொர்க்கத்தையோ அல்லது நரகத்தையோ பார்க்கவில்லையே.” என்று அவர் நம்பிக்கையுடன் கேட்டார்.
“நீ மகிமை வாய்ந்த கட்டமைப்புகள், அற்புதமான காட்சியமைப்பு மற்றும் சொர்க்கலோகத்தில் பூவுலகில் இல்லாத அழகை எதிர்பார்த்தாயா?”
“ஆமாம்.”
“அல்லது, பாம்புகள், நெருப்பு, பிசாசு அல்லது சொல்லப்படாத சித்திரவதையை நரகத்தில் எதிர்பார்த்தாயா?”
“மிகச் சரி தான்.”
“மகனே, அங்கு எதுவும் இல்லை. நீ இங்கிருந்து அனைத்தையும் எடுத்துப் போக வேண்டும். சொர்க்கத்தின் மகிழ்ச்சியோ அல்லது நரகத்தின் நெருப்போ, எல்லாவற்றையும் சேகரிப்பதற்கான இடம் இதுவே,” என்றார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, சொர்க்கலோகமும், நரகமும் வாழ்க்கையின் மீதான நமது அணுகுமுறையின் இரண்டு அம்சங்கள் ஆகும். இவை நமது உணர்வுகள் மற்றும் கர்மாவின் இரண்டு கிடங்குகளாக உள்ளன. அது இங்கே எவ்வளவு திணறச் செய்வதாக உள்ளது என்பதோ, வாசனையோ அல்லது நாற்றமோ, இந்தக் களஞ்சியங்களில் நாம் என்ன சேமித்து வைத்திருக்கிறோமோ அதைப் பொறுத்தது. நாம் திருப்தியுடனும், நன்றியுடனும் இருக்கும்போது, நாம் சொர்க்கலோகத்தில் இருக்கிறோம். நாம் கோபமாக, உணர்ச்சிவசப்பட்டு அல்லது பொறாமையுடன் இருக்கும்போது, நாம் நரகத்தில் இருக்கிறோம். இரண்டுமே நம்முடைய மனதின் தருணங்கள், நிலைகள் மற்றும் சுழற்சிகளாகும்.

இது சொர்க்கலோகமாக இருக்க நாம் விரும்பினால், நம் எண்ணங்கள், செயல்கள் மற்றும் வார்த்தைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நம் இதயங்களில் மன்னிப்பையும், இரக்கத்தையும் காண வேண்டும். நாம் நன்றியுணர்வுடன் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் இன்னமும் பேரார்வம் உடையவர்களாக இருக்கலாம், இருப்பினும் நாம் தொடர்ந்து நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். திருப்தியாக உணர்தலே அனைத்து நேர்மறை உணர்ச்சிகளுக்கும் விதை ஆகும். பற்றிக் கொண்டிருத்தலே அனைத்து எதிர்மறை உணர்ச்சிகளுக்கும் தாய் ஆகும். உதாரணமாக, எது சரி என்று நாம் நினைக்கிறோமோ அல்லது விஷயங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் நாம் விடாப்பிடியாக இருக்கிறோமோ, அதே போல் விஷயங்கள் நடக்காத போது, நாம் கோபமடைகிறோம். நாம் ஒரு நபரை, பற்றிக் கொண்டிருக்கும் போது அல்லது அந்த நபர் மீது நமக்கு உரிமை இருப்பதாக நாம் நம்பும் போது, அந்த நபர் நாம் எதிர்பார்த்தபடி நடந்து கொள்ளாத போது நாம் பொறாமைப்படுகிறோம், மற்றும் இது போல் பல.

உணர்ச்சிகள் மனித மனதில் இருந்து பிரிக்க முடியாதவை, கடலில் இருந்து அலைகளைப் பிரிக்க முடியாததைப் போல. இருந்த போதிலும், நம் வாழ்க்கையில் மற்ற எல்லாவற்றையும் கற்றுக் கொள்வதைப் போல், பற்றின்மையையும் கற்றுக் கொள்ள முடியும், நன்றியுணர்வையும் பழகிக்கொள்ளலாம். நம்மால் அலைகளைப் பிரிக்க முடியாது ஆனால் ஆசைகள் மற்றும் உணர்ச்சிகள் ஆகிய அலைகள் மற்றும் சுனாமிக்குத் தயாராக இருக்க முடியும். வேதங்கள் அதை ‘வைராக்கியா’ என்று அழைத்தன: ஒரு இன்பமான பற்றின்மை நிலையில் (ஒருவர் ‘அப்யாஸா’, பழக்கத்தினால் கற்றுக்கொள்கிறார்), மைதானத்தில் கால்பந்து இங்கும் அங்கும் அலைக்கழிக்கப்படுவதைப் போல், பல்வேறு உணர்ச்சிகளின் இடையில், இனிமேலும் நாம் அலைக்கழிக்கப்படமாட்டோம்.

“சொர்க்கலோகம் என்பது, நிறைவேறிய ஆசையின் பார்வை ஆகும், நரகம் என்பது, நெருப்பின் மேல் இருக்கும் ஒரு ஆத்மாவின் நிழல் ஆகும்,” என்று ஓமர் கயாம் கூறுகிறார்.

இருப்பினும், ஆசைகள், அவற்றை நிறைவேற்றுவதன் மூலம் நிறைவேறாது. ஆசைகளின் நிறைவேற்றல் அதற்கு இன்னும் எரியூட்டுகிறது. மாறாக, நம் ஆசைகளின் வேராகிய மனம் வரை சென்று அதை நம் நண்பனாக ஆக்கிக் கொள்ள வேண்டும். உங்கள் மனம், உங்கள் உள் குரலுடன் ஒத்திசைவில் இருக்கும் போது, அது மிகவும் சிறப்பாகக் கவனிக்கிறது. உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் எல்லாவிதமான புதிய காரியங்களாலும் மெய்மறந்து போகாமல், எந்த விருப்பம் மிகவும் முக்கியமானது என்பதைச் சிந்தித்து, நீங்கள் சிறப்பாக முன்னுரிமை செய்ய முடியும். ஒருமுகப்பட்ட மனது மட்டுமே, உண்மையான விழிப்புணர்வின் சரியான கொள்கலமாகும். ஒருவேளை ஒரு பெரிய வீடு, வேகமான கார் உங்களுக்கு முக்கியமானதாக இருக்கலாம், அல்லது அது இல்லாமலும் இருக்கலாம். நீங்கள் அதைப்பற்றி எண்ணிப் பார்க்காத வரை அல்லது அதை அனுபவிக்காத வரை உங்களுக்குத் தெரியாது. எந்த வழியிலும், உங்கள் விருப்பங்களைப் பற்றி நீங்கள் கவனமாக இருந்தால், நீங்கள் சொர்க்கத்தில் அதிக நேரம் இருப்பீர்கள்.

பொருள் செல்வத்துடன், ஆழமாக இணைந்திருந்த ஒரு செல்வந்தர், இரண்டு பை நிறையத் தங்கம் எடுத்துக் கொண்டு சொர்க்கத்திற்குச் சென்றார். வாயிலில் அவர் நிறுத்தப்பட்டார்.
“பூமியில் இருந்து எதுவும் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை, நீ அதைப் போட்டுவிட வேண்டும்,” என்று தேவதூதன் கூறினார்.
“தயவு செய்யுங்கள், இது எனக்கு மிகவும் முக்கியம். இது என் வாழ்நாளின் வருவாயாகும். அவற்றை என்னுடன் எடுத்துச் செல்ல அனுமதியுங்கள்,” என்று கெஞ்சினார்.
அவர்கள் அது சாத்தியமில்லை என்று கூற முயன்றார்கள், ஆனால் அவர் ஔவிடாப்பிடியாக இருந்ததால், அது என்ன என்று பார்க்க ஒப்புக் கொண்டனர்.
தேவதூதன் அந்தப் பையில் தங்கத்தைப் பார்த்தவுடனேயே “என்ன! நீங்கள் நடைபாதையைக் கொண்டு வந்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்.

கற்பனை செய்ய முடியாத அளவிலான எல்லையற்ற படைப்புகளில், நம்மிடம் உள்ளவை மற்றும் நமது சாதனைகள் எந்த முக்கியத்துவமும் கொண்டவை இல்லை. நமது உலகம், இந்த உலகத்தில் உள்ள மிகச் சிறிய தூசியைவிடவும் மிகச்சிறியதாகும். இறுதியாக இந்தப் பரந்த உலகில், உங்கள் வங்கியில் எவ்வளவு அதிகச் சேமிப்பு உள்ளது என்பது ஒரு பொருட்டே இல்லை, உங்கள் இதயம் எவ்வளவு பெரியது என்பதே முக்கியமான விஷயம் ஆகும். பெருமையுடன் லட்சக்கணக்கில் பணம் வைத்துக் கொண்டு, கொடுமையான தனிமையில் வாழ்பவர்கள் ஏராளம். அவர்களுக்குப் பெரும்பாலும் ஆன்மீக மூலதனமே இருப்பதில்லை.

நமது தன்னலமற்ற செயல்கள் நம் ஆன்மீக மூலதனத்தின் கட்டமைப்பைக் கூட்டுகின்றன. பணிவுடன் சொர்க்கத்திலும், நயமாக நரகத்திலும் நடப்பதற்குப் பெரும் ஆன்மீகச் செல்வம் தேவையாக உள்ளது. அந்தச் செல்வத்தை அதிகப்படுத்த, ஒரு நன்றியுணர்வுடன் நமது வாழ்க்கையை வாழவேண்டும். நன்றியுணர்வு என்பது வெறும் நன்றி மட்டுமல்ல, அன்புடனும், அறப்பண்புடனும் இருப்பதாகும். நீங்கள் ஒரு ரெஸ்டாரண்டில் நல்ல உணவை அனுபவிக்கும்போது, நிறைவாக உணர்கிறீர்கள். நல்லது. கடவுளுக்கு நன்றியும் செலுத்துகிறீர்கள். நல்லது. ஆனால், உணவு பரிமாறுபவருக்கு, அவரது சேவையைப் பாராட்டும் விதமாக டிப் (tip) கொடுக்கும் போது தான் உண்மையிலேயே உங்கள் நன்றியுணர்வை நீங்கள் காட்டுகிறீர்கள். உண்மையாகவே அவருக்கு நன்றி செலுத்தும்போது தான், நீங்கள் உங்கள் ஆன்மீகச் செல்வத்தைக் கட்டமைக்கிறீர்கள்.

நீங்கள் மன அழுத்தில் இருக்கும் போது, அதில் இருந்து வெளிவர உங்களிடம் என்னவெல்லாம் இருக்கிறதோ அவை அனைத்துமே, எவ்வளவு ஆன்மீகச் செல்வத்தை நீங்கள் சம்பாதித்து இருக்கிறீர்கள் மற்றும் சேமித்திருக்கிறீர்கள் என்பதற்கு நேர் விகிதத்தில் இருக்கிறது. இதுவே முக்கியமானதாகும்: அதைக் கடனாகப் பெற முடியாது. அதைச் சம்பாதித்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு தன்னலமற்ற செயல், நன்றியுணர்வைக் காட்டும் ஒவ்வொரு சைகை, ஒவ்வொரு மென்மையான வார்த்தை, ஒவ்வொரு அன்பான சிந்தனை, நம்மை யார் என்று வரையறை செய்கின்றன. அவை நம் உலகத்தை உருவாக்குகின்றன. சொர்க்கமும், நரகமும் நமக்குள் இல்லை, அது நாம் தான்.

அன்பாக இருங்கள். உங்களுக்குக் கிடைத்த நல் ஆசீர்வாதங்களை எண்ணிக் கொள்ளுங்கள்.

மற்றொரு குறிப்பாக, உங்களுக்கு இரண்டு முக்கிய அறிவிப்புகளைக் கூற உள்ளேன்.

1. நீங்கள் இந்த இடுகையைப் படிக்கும் நேரத்தில், நான் ஆறு மாத கால நீண்ட தனிமைக்குச் சென்றிருப்பேன். இந்தக் காலகட்டத்தில், என்னை யாரும் அணுக முடியாது. நான் முன்கூட்டியே மாதத்திற்கு இரண்டு என, என் பதிவுகளைத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். எனவே ஒவ்வொரு 1 வது மற்றும் 3 வது சனிக்கிழமைகளில் அவை தொடர்ந்து உங்களுக்குக் கிடைக்கும். எனது அடுத்த மாத வலைப்பதிவில் “மந்திரா சயன்ஸ்” என்ற என்னுடைய புத்தகம் பற்றி அறிவிக்கப்படும். எல்லாவற்றிற்கும் மேலாக, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் அறிவித்திருந்த தியானப் பயன்பாடு (meditation app) அடுத்த மூன்று வாரங்களில் வெளியிடப்படும். அதன் பதிவிறக்க இணைப்புகள் என் அடுத்த இடுகையில் இங்கு வெளியிடப்படும். அதன் பெயர் ‘பிளாக் லோட்டஸ்’ என்பதாகும். அந்தப் பயன்பாட்டின் மூலம், உலகளாவிய அளவில் நாம் ஒன்றாகக் குறிப்பிட்ட நேரத்தில் தியானம் செய்ய முடியும் (அந்தத் தியானங்களை முன்கூட்டியே நாங்கள் திட்டமிட்டு விடுவோம்) அல்லது தனிப்பட்ட முறையில் உங்கள் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் தியானம் செய்யலாம்.

2. 2018 ஆம் ஆண்டில் குடியிருப்பு அல்லாத மூன்று தியான முகாம்களை அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். முந்தைய முகாமைப் போன்ற பராமரிப்புடன் கூடிய தரமான தங்கும் வசதியை எடுத்து விட்டதால், நாம் கணிசமாக விலையை 70% குறைத்துள்ளோம். தியானம் கற்றுக்கொள்ள விரும்புகிற அனைவருக்கும் இது இப்போது மலிவாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். எப்போதும் போல், எங்களிடம் குறைவான இடங்களே உள்ளன. கீழே உள்ள தொடர்புடைய இணைப்புகளின் மூலம் நீங்கள் பதிவு செய்யலாம்:
பெங்களூர்: ஆங்கில தியான முகாம். ஜனவரி 26-28.
பெங்களூர்: ஆங்கில காயத்ரி சாதனா கேம்ப். பிப்ரவரி 2-4.
தில்லி: ஹிந்தி தியான முகாம். ஏப்ரல் 21-23.

இதற்கிடையில், உங்களையும் மற்றும் ஒருவர் மற்றொருவரையும் கவனித்துக்கொள்ளுங்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email