புராணக்கதைகளின் படி, மேவாரின் வலுமிக்க ஆட்சியாளரான மஹாராணா பிரதாப் ஒருமுறை அவரது எளிய பணியாளருடன் உட்கார்ந்திருந்தார். 1580 ஆம் ஆண்டில் மொகலாயர்களுடனான அப்போதைய மோதலில் அவர்களால் தோற்கடிக்கப்பட்டு இருந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், மஹாராணா தன்னுடைய பேரரசின் பெரும்பகுதியை மீட்டெடுத்துக் கொண்டாலும், தற்போது அவர் தனது சுயவிவரத்தைக் குறைந்த அளவே வெளிப்படுத்தித் தனது இராணுவத்தை மீண்டும் வலுவாக்கிக் கொண்டிருந்தார். விரோதப் போக்குடனும், நிச்சயமற்றதுமான இந்தக் காலப்பகுதியில், கிடைத்ததைக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்த போது, அவருடைய படையிலிருந்த ஒருவர் இரண்டு மாம்பழங்களை அனுப்பினார்.

அவரது வேலைக்காரர் எட்டு பாகங்களாக அந்த மாம்பழங்களை வெட்டி அவற்றை ஒரு தட்டில் சீராக வைத்தார். அவை பார்க்க ருசியானதாக, கவர்ந்து இழுப்பதாக மற்றும் பழுத்ததாகத் தெரிந்தன.

“இது எப்படி உள்ளது என்று ருசி பார்த்து என்னிடம் சொல்” என்று மஹாராணா பிரதாப் முதல் துண்டை அந்த வேலையாளிடம் கொடுத்தார்.
“ஹூகும் (கட்டளை),” என்று கூறி அந்தத் துண்டைச் சாப்பிட்ட பிறகு, “அது மிகவும் சுவையாக இருக்கிறது!” என்றான். இன்னும் ஒரு துண்டு வேண்டும் என்று வேண்டினான்.

அரசர் சிறிதளவு ஆச்சரியமடைந்தார். மஹாராணா அவருக்கு இன்னொரு துண்டைக் கொடுத்தார், அந்த வேலைக்காரர் ஒரு நொடியில் அதை முழுங்கிவிட்டு இன்னும் வேண்டும் என்று கெஞ்சினார். இந்த அசாதாரணமான நடத்தையால் அரசர் அதிர்ச்சியடைந்தார், ஆனால் வெகு காலமாக அவருக்காக உழைத்த அந்த மனிதரின் மேல் இருந்த கரிசனத்தால், அவர் கேட்டபடியே அந்தப் பழத்தைக் கொடுத்தார்.

“நான் பட்டினியாய் இருக்கிறேன். தயவுசெய்து, மீதமுள்ளதையும் எனக்கே கொடுங்கள். தனிப்பட்ட முறையில் நானே சென்று உங்களுக்காகப் புதிய மாம்பழங்களைக் கொண்டு வருகிறேன்,” என்று அந்தப் பணியாளர் கெஞ்சினார்.

மிகக் குறைந்த நேரத்தில் ஒவ்வொன்றாக, ஏழு துண்டுகளை அவர் சாப்பிட்டுவிட்டார். அரசரிடம் இருந்த விளையாட்டு மற்றும் இரக்கம், நம்பிக்கையின்மை மற்றும் வெறுப்பாக மாறியது.

“நன்றி கெட்டவனே! நீ எனக்குச் சேவை செய்யத் தகுதியற்றவன்,” என்று மஹாராணா முழக்கமிட்டார். அதோடு, அந்த மாம்பழத்தின் கடைசித் துண்டை அவர் தனது வாயில் போட்டுக் கொண்டார், மறு கணமே அதை வெளியே துப்பினார்.
“நீ இந்த புளிப்பு மற்றும் கசப்பான மாம்பழத்தையா ருசியென்று அழைக்கிறாய்? இதன் சுவை மோசமானதாக உள்ளதே!” என்று சொன்னார்.
“என்னை மன்னிக்க வேண்டும் அரசே,” என்று வேலைக்காரர் சொன்னார். “பல ஆண்டுகளாக எனக்கும், என் குடும்பத்தினருக்கும் நீங்கள் உணவு அளித்திருக்கிறீர்கள். கஷ்ட காலங்களில் எங்களைப் பாதுகாத்து இருக்கிறீர்கள். உங்களுக்குக் கைம்மாறாக நான் எதையும் கொடுக்க முடியாது ஆனால் குறைந்தபட்சம், நீங்கள் இந்தப் புளிப்பு மாம்பழங்களை ருசிப்பதையாவது என்னால் தவிர்க்க முடியும்.”

அன்பு செய்யும் போது மீண்டும் அன்பை எதிர்பார்ப்பது நியாயமானது. நமது முயற்சிகள் அல்லது நம் திறமைகள் மற்றும் வேலைகளை அங்கீகரிக்க வேண்டும் என்று ஆசைப்படுவது என்பது சாதாரணமானதாகும். மக்கள் அன்பைத் திரும்பச் செய்யும் போது நட்புகளும் உறவுகளும் வளர்கின்றன.

சேவை மனப்பான்மை என்பது முற்றிலும் வேறுபட்ட ஒரு விஷயம். சேவையில், நாம் யாருக்காகப் பணியாற்றுகிறோமோ அவர்களின் நன்மையைத் தவிர வேறு எதையும் எதிர்பார்ப்பதில்லை.

உண்மையான சேவைக்கு முழுமையான தன்னலமற்ற தன்மை தேவைப்படுகிறது, பிறர்க்கென வாழ்வதற்கும் அப்பால், சேவையில் முக்கியமான எல்லை நீங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறீர்களா அல்லது சிறப்புள்ளவராக இருக்கிறீர்களா என்பதைப் பற்றியது அல்ல. அதற்குப் பதிலாக, நீங்கள் எடுத்துக் கொண்ட விஷயத்திற்காக உங்களிடம் உள்ள அனைத்தையும் அர்ப்பணிக்க வேண்டும் என்பதே உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும். முரண்பாடான ஓர் உண்மை இங்கு தான் உள்ளது, நமது பணியில் நாம் எவ்வளவு முழு மனதுடன் நம்மை அர்ப்பணிக்கிறோமோ, அங்கீகாரம் பற்றிய கவலை இல்லாமல், நாம் நடக்கும் அந்தப் பாதையில் அவ்வளவு பெரும் வெற்றியையும், திருப்தியையும் நாம் பெறுகிறோம்.

சில நேரங்களில் மக்கள், சரணடைதல் என்றால் என்ன என்றும், எப்படி ஒரு காரணம்/நபரிடம் சரணடைவது என்றும் என்னிடம் கேட்கிறார்கள். சேவையே சரணடைதல் ஆகும். சரணடைதல் இல்லாமல் உண்மையான சேவை சாத்தியமற்றதாகும் மற்றும் சேவை இல்லாவிடில் சரணடைதல் விரைவாக அழிந்து போகிறது. இதயத்தில் ஏற்படும் சரணடைதல் என்ற உணர்வே, நம்மைக் கைவிடுதலைச் செய்ய வைக்கிறது. இது நாம் எளிமையாகவும், ஓய்வாகவும் இருக்க உதவுகிறது. இது நம் வாழ்வில் நடக்கும் எல்லாவற்றையும் நாம் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும், அது நம்மால் முடியாது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வைக்கிறது. சேவை என்பது, நம்மால் கட்டுப்படுத்தக் கூடிய, நமது செயல்கள், வார்த்தைகள் மற்றும் நமது வழியில் எது வந்தாலும் அதற்கான நமது எதிர்வினைகள், அனைத்திலும் நம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வதே ஆகும்.

‘த ஹஸிடிக் மாஸ்டர்ஸ் கைட் டு மேனேஜ்மென்ட்’ (The Hasidic Masters’ Guide to Management) இல், மோஷே க்ராங்க் ஒரு அழகிய உவமையைக் குறிப்பிடுகிறார் (இதன் வேறுபாடுகள் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் காணப்படுகிறது) :

நான் ஒருமுறை வான மண்டலத்திற்குப் போனேன். நான் முதலில் நரகத்தைப் பார்க்கச் சென்றேன், அது கொடூரமானதாக இருந்தது. வரிசை வரிசையாக ஆடம்பரமான உணவுத் தட்டுகள் வைக்கப்பட்டிருந்தன, ஆனால் மேஜையைச் சுற்றி அமர்ந்திருந்த மக்கள் வலுவற்று, உற்சாகமற்று இருந்தனர். பசியால் வேதனையில் மூழ்கி இருந்தனர். நான் அவர்களுக்கு நெருக்கமாக வந்தபோது, அவர்களின் இக்கட்டான நிலையைப் புரிந்து கொண்டேன்.

ஒவ்வொருவரும் ஒரு கரண்டியை வைத்திருந்தனர், ஆனால் இரு கரங்களிலும் மரத் துண்டுகள் பிணைக்கப்பட்டிருந்தன, அதனால் தங்களது வாய்க்கு உணவைக் கொண்டு வர அவர்களது முழங்கைகளை மடக்க முடியவில்லை. அவர்கள் அருகில் இருந்த உணவுகளை உட்கொள்ள முடியாமல், சித்திரவதைக்கு உள்ளாகிய அந்த மக்களின் வேதனைக் குரல் என் இதயத்தை உடைத்தது.

அடுத்து நான் சொர்க்கத்திற்குச் சென்றேன். நரகத்தில் இருந்ததைப் போன்ற அதே அமைப்பைப் பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது — வரிசை வரிசையாக ஆடம்பரமான உணவுப் பொருள்களைக் கொண்டிருக்கும் தட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் நரகத்திற்கு நேர்மாறாக, சொர்க்கத்தில் மக்கள் ஒருவரோடு ஒருவர் திருப்தியாகப் பேசிக்கொண்டு, கண்டிப்பாகத் தங்களது ஆடம்பரமான உணவுகளைச் சாப்பிட்ட மனநிறைவுடன் உட்கார்ந்திருந்தார்கள்.

நான் அவர்களுக்கு அருகில் வந்தபோது, இங்கேயும், ஒவ்வொருவருடைய முழங்கைகளும் வளைக்க முடியாதபடி மரத்தாலான துண்டுகளைக் கொண்டு கைகளைக் கட்டி வைத்திருந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்தேன். அப்படியானால், அவர்கள் எப்படிச் சாப்பிட்டார்கள்?
நான் பார்த்துக்கொண்டிருந்தபோதே, ஒருவர் தன் கரண்டியை எடுத்து, தனக்கு முன்னாலிருந்த பாத்திரத்தில் நுழைத்தார். பின்னர் அவர் மேஜைக்குக் குறுக்காகக் கையை நீட்டி, எதிரில் இருந்த மனிதருக்கு உணவை ஊட்டினார்! உணவைப் பெற்றுக் கொண்டவர் அவருக்கு நன்றியைத் தெரிவித்ததோடு, அதற்குக் கைமாறாக மேசையின் மீது சாய்ந்து தனக்கு உபகாரம் செய்தவருக்குத் திரும்ப உணவளித்தார்.

திடீரென்று நான் ஒன்றைப் புரிந்து கொண்டேன். சொர்க்கமும், நரகமும் ஒரே மாதிரியான சூழ்நிலைகளையும், நிபந்தனைகளையும் வழங்குகின்றன. மக்கள் ஒருவரை ஒருவர் நடத்துகின்ற விதத்தில் தான் முக்கியமான வேறுபாடே உள்ளது.

நரகத்தில் சிக்கி உள்ள இரங்கத்தக்க ஆன்மாக்களுடன் இந்தத் தீர்வைப் பகிர்ந்து கொள்ள நரகத்திற்குத் திரும்ப ஓடினேன். ‘நீங்கள் பசியுடன் இருக்கத் தேவையில்லை. உன்னுடைய கரண்டியால் உன் பக்கத்தில் இருப்பவருக்கு நீ ஊட்டு, அவரும் கண்டிப்பாக அதே உதவியைத் திரும்பச் செய்து, உனக்கு ஊட்டுவார்,’ என்று பசியுடன் இருந்த ஒருவரின் காதில் நான் முணுமுணுத்தேன்.

‘மேஜையின் அந்தப்பக்கம் உட்கார்ந்திருக்கிற வெறுக்கத்தக்க அந்த மனிதருக்கு நான் ஊட்டிவிட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?’ என்று கோபமாகக் கேட்டான். ‘அவருக்குச் சாப்பிடும் இன்பத்தைக் கொடுப்பதைவிட நான் பட்டினியாகவே இருந்து விடுவேன்!’ என்றார்.

நம்மைப் பற்றிக் கவலைப்படுவதிலிருந்து, நம்மைச் சுற்றி உள்ளவர்களின் வாழ்வில் மதிப்பைக் கூட்டுவதிலும், மிகப் பெரிய காரியங்களுக்காகச் சேவை செய்வதிலும் நமது கவனம் திரும்பும் போது, நமது இயல்பான நற்குணம் வெளிவரத் தொடங்குகிறது. அனைத்தும் பிறகு சாத்தியம் ஆகிறது.

காலப்போக்கில் நல்ல விஷயங்கள் உயர்வானதாக மாறுகின்றன. நல்லவர்கள் காலப்போக்கில் உயர்வானவர்கள் ஆகிறார்கள். இதுவே இயற்கையின் படிப்படியான முன்னேற்றமாகும். ஏனெனில், நற்குணம் ஒரு பெயரை உருவாக்குவதில் அல்ல, ஒரு வித்தியாசத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. அதைத்தான் சேவையும் செய்கிறது: அது ஒரு வித்தியாசத்தை உருவாக்குகிறது.

மற்றவர்களுக்காக அக்கறை காட்டுவதும், சேவை செய்வதும் தான் ஒரு ஞானியை சாதாரண நபரிடமிருந்து வேறுபடுத்துகிறது.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email