நீங்கள் மிகப் பெரிய, வெற்றிகரமான மனிதர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தால், அவர்களின் ஒரு தனிப்பண்பு உங்கள் முன்னால் குதித்து எழுவதைக் காணலாம். அது அவர்களின் எதற்கும் வளைந்து கொடுக்காத, தனித் தன்மை உடையப் பண்பாக இருக்கலாம். அவர்கள் எளிமையானவராகவும் இருக்கலாம். இருந்தாலும் அவர்கள் வேலையை ஒரு சுய முக்கியத்துவத்துடனும், கண்ணியமான முறையிலும் நடத்தினர். சில நேரங்களில் ஒரு மங்கலான இழையையே பெருமைக்கும் அகந்தைக்கும் நடுவிலும், வலியுறுத்திக் கூறுவதற்கும் ஆணவத்திற்கும் இடையிலும் இருக்கச் செய்தனர்.

உங்களை முக்கியமானவராக உணரச் செய்யும் பொழுது நம்பிக்கை  உருவாகிறது. உங்கள் வேலையை முக்கியமானதாக உணரும் பொழுது திடநம்பிக்கை வருகிறது. மற்றவர்களை முக்கியமானவராக உணரச்செய்யும் பொழுது மனநிறைவு உண்டாகிறது. மற்றவர்களிடம் அவர்களும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்னும் நம்பிக்கையை உண்டு பண்ணும் திறமை தான்  தலைவர்களை முதலாளிகளிடமிருந்தும்,  உன்னதமானவர்களை சாதாரணமானவர்களிடமிருந்தும் வேறுபடுத்திக் காட்டும் முதன்மைக் காரணியாகும்.

சுய முக்கியத்துவம் என்பது பெரும்பாலும் முகம் சுளிக்க வைக்கும் சொல் ஆகும். அது பெரும்பாலும் தற்பெருமையின் மறு சொல்லாகும். அதற்கு சில எதிர்மறையான உட்பொருளும் இருக்கலாம். குறிப்பிடத்தக்க முறையில் சரியான உந்துசக்தியாக இருக்கும் பொழுது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அது ஒரு தேவையான மூலப்பொருள் ஆகும். இந்த விஷயத்தை இரண்டு பகுதிகளாக வகைப்படுத்த அனுமதியுங்கள்:

1. நீங்கள் முக்கியமானவர் என்று நம்புவது

நீங்கள் செய்வது முக்கியம் என்று உணரும் பொழுதும், உங்களை நீங்களே நம்பும் பொழுதும், உங்களுக்குள் வலிமை அதிகரிக்கிறது. உங்கள் வேலை எவ்வளவு சிறியதானாலும் அது தனிச் சிறப்பு வாய்ந்தது என்று நம்புவது உங்கள் சுய மரியாதையை மேலும் ஊட்டுகிறது. இத்தகைய மன உறுதியே உங்கள் நம்பிக்கையைக் கூட்டுகிறது. இந்த நம்பிக்கையே உங்கள் இலக்குகளை அடைவதற்கான ஒரு முக்கியமான வெற்றிக் காரணியாகும். இலக்குகள் ஆன்மீக முயற்சிகளாகவோ அல்லது பொருள் தேடுவதாகவோ இருக்கலாம்.

உங்களைப் பற்றி எவ்வளவு முக்கியமாக நீங்கள் உணர்கிறீர்கள் என்பது மூன்று காரணிகளால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. முதலாவது நீங்கள் உங்களை எப்படிப் பார்க்கிறீர்கள். இரண்டாவது, நீங்கள் செய்யும் காரியங்களில் எவ்வளவு வெற்றி அடைகிறீர்கள். மூன்றாவது மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள். உங்களுக்கு எது முக்கியம் என்று தோன்றுகிறதோ அதை நோக்கி உண்மையாக வேலை செய்யும் பொழுது முதல் காரணி தானாக ஊக்கத்தைப் பெறுகிறது. முதல் இரண்டு காரணிகளில் முன்னேரும் பொழுது மூன்றாவது காரணியின் முக்கியத்துவம் சிறிது காலத்தில் மறையத் துவங்கி விடும்.

வேறு ஒரு இடத்தில் ஒரு முறை நோபல் பரிசு பெற்றவரும், ஒரு இந்திய தத்துவஞானியும், எழுத்தாளருமான ரவீந்திரநாத் தாகூரின் வாழ்க்கையில் இருந்து ஒரு கதையை மேற்கோளாகக் கூறியிருந்தேன். அதை நான் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:

தாகூரிடம் மிகவும் நன்றாக ஓவியம் வரையும் சீடர் ஒருவர் இருந்தார். எனினும், மக்கள் அவரைப் பற்றியும், அவரது வேலையைப் பற்றியும் என்ன நினைக்கிறார்கள் என்றும் அவர்களின் கருத்துக்கள் என்னவாக இருக்கும் என்றும் கவலை கொண்டிருந்தார். இது அவரது படைப்பாற்றலுக்குத் தடையாக இருந்தது. பல சந்தர்ப்பங்களில் தாகூர் கலைப் படைப்பின் போது, சீடரின் மனம் என்ன நினைக்கிறது என்று கவனிக்கச் சொன்னார். எதைப் பற்றி மிகுந்த அக்கறை கொண்டுள்ளாரோ அதைப் படம் வரையும் கித்தான் துணியில் வரைய வேண்டும். அந்தத் துணி அவரது மனம் கூறுவதை வரையும் விளையாட்டுத் தளமாக இருக்க வேண்டுமே தவிர மற்றவர்களின் தேவையற்ற கருத்துக்களின் குப்பைக் கிடங்காக அல்ல.

ஒரு நாள், அவர் தாகூரின் ஒரு அழகான ஓவியத்தை வரைந்தார். அது எல்லா விதத்திலும் தத்ரூபமாக இருந்தது. தாகூரே ஒப்புதல் அளித்தும் கூட சீடர் மனம் திருப்தி அடையவில்லை. மற்றவர்களிடமும் இந்த உருவப்படம் பற்றிய அவர்களின் கருத்துக்களைப் பெற வேண்டுமா என்று சீடர் கேட்டார். சீடருக்குப் பாடம் புகட்ட ஒரு நல்ல வாய்ப்பு இது என்று தாகூர் நினைத்தார்.

சரி, உண்மையில் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த உருவப்படத்தைத் சந்தையின் பரபரப்பான ஒரு மூலையில் காலையிலேயே சென்று வைத்து விடு என்று தாகூர் கூறினார். அவரின் அசல் புகைப்படம், பென்சில்கள் மற்றும் மக்களின் கருத்தைக் கேட்டு ஒரு குறிப்பு ஆகியவற்றையும் விட்டு வரச் சொன்னார். அதை நாள் முழுவதும் அங்கேயே விட்டு விட்டு மாலையில் மீண்டும் திரும்பக் கொண்டு வரச் சொன்னார். சீடரும் அதை ஒப்புக் கொண்டார். இரண்டு நாட்கள் கழித்து அவர் மீண்டும் தாகூரிடம் சென்றார். அவர் வருத்தத்துடன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்.சீடர் தனது ஓவியத்திறனை நினைத்து அதிர்ச்சியுடன் இருப்பதாகக் கூறினார். நீங்கள் அந்த ஓவியம் தத்ரூபமாக இருப்பதாகக் கூறினீர்கள். ஆனால் நானும் மற்றவர்களும் அவ்வாறு நினைக்கவில்லை என்று ஏளனமாக அந்த ஓவியத்தைத் தாகூரின் முன் காட்டினான். உருவப்படம் முழுவதும் கரும் புள்ளிகளாக இருந்தன. உண்மையில் கரும் புள்ளிகள் கித்தான் துணி முழுவதையும் மறைத்திருந்தன. மக்கள் உருவப்படம் முழுவதும் தவறுகளைக் குறித்திருந்தனர்.

தாகூர் ஒரு சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார். மக்களின் இந்தக் கருத்துக்களுக்கு அர்த்தம் ஒன்றும் இல்லை என்றார். நான் இப்பொழுதும் அது மிகச் சரியாக இருப்பதாகத் தான் நினைக்கிறேன். நீங்கள் அந்தக் குறிப்பில் என்ன எழுதி இருந்தீர்கள்? இந்த உருவப்படத்தை அசல் படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து எங்கே தவறாக உள்ளதோ அங்கே குறிக்கவும் என்று அந்தக் குறிப்பில் இருந்தது.

சரி, இப்பொழுது கருப்புப் புள்ளிகளை அழித்து விட்டு உருவப்படத்தைத் திரும்ப எடுத்துச் செல். இந்த முறை அசல் படத்துடன் இந்த உருவப்படத்தை ஒப்பிட்டு முரண்பாடுகளைச் சரி செய்யவும் என்று குறிப்பை மாற்றி எழுதி வைக்கச் சொன்னார். இந்தச் சோதனையின் முடிவில் அவர் மீண்டும் தாகூரிடம் உருவப்படத்தை எடுத்துக் கொண்டு வந்தார்.இந்த முறை அதில் ஒரு குறியீடு கூட இல்லை. இது எவ்வாறு சாத்தியம். முன்னால் வைத்த அதே ஓவியம் தான் ஆனால் ஒருவரும் எந்தத் திருத்தமும் செய்யவில்லை.

தவறுகளைக் கண்டுபிடிப்பது எளிதானது மகனே. பலரால் தவற்றையும், ஆற்றலையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது. அவர்களால் முடிந்திருந்தால் அவர்கள் தங்களின் ஆற்றலை வெளிப்படுத்துவதில் ஓயாது ஈடுபட்டிருப்பார்களே தவிர மற்றவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டுபிடிப்பதில் இல்லை. உங்களுடைய சொந்தக் கலை என்று வரும் பொழுது உங்கள் உள் உணர்வுகளை நம்புங்கள்.

நீங்கள் யார் என்பதிலும், நீங்கள் செய்யும் செயல்களிலும் உங்களுக்கே நம்பிக்கை இல்லை என்றால் மற்றவர்கள் உங்கள் கருத்துக்களுக்கு ஒப்புதல் அளிப்பார்கள் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்க முடியும். உங்களைப் பற்றியும் உங்கள் வேலையைப் பற்றியும் உங்கள் மனதில் நேர்மையான நல்ல அபிப்ராயம் இருந்தால் தான் தெளிவான சுய முக்கியத்துவம் உங்களுக்குக் கிடைக்கும். உங்களை நீங்களே நேசித்துக்கொள்ளவும், கவனித்துக்கொள்ளவும், உபசரித்துக் கொள்ளவும், நம்பிக்கை கொள்ளவும் கற்றுக் கொள்ளுங்கள். இப்படியாகத் தான் நீங்களே உங்களை முக்கியமானவராக உருவாக்க முடியும்.

2. மற்றவர்களை முக்கியமானவராக உணர வைத்தல்

இது எல்லாத் தலைவர்களிடமும் உள்ள தனித் தன்மை ஆகும். இது நல்லிணக்கத்தையும், உறவுகளைப் புரிந்து கொள்ளும் பண்பையும் உருவாக்க உதவுகிறது. உறவு முறை எதுவாக இருந்தாலும், தொழில்துறையிலோ அல்லது தனிப்பட்ட உறவு முறையிலோ யாரையாவது ஊக்குவிக்க விரும்பினால் முதலில் அவர்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை ஏற்பட வைக்க வேண்டும். அவர்களை உங்கள் சொந்தமாக்கி, அவர்களே அவர்களை முக்கியமானவர்களாக உணரச் செய்ய வேண்டும். மற்றவரை முக்கியமானவராக உணரச் செய்யும் பொழுது அவருடன் ஒரு சிறப்பான பிணைப்பினை உருவாக்கிக் கொள்கிறீர்கள். இதனால் உங்கள் உறவும் செல்வாக்கும் சிறப்படைந்து, அன்பின் அடையாளமாகவும் பாதுகாப்பாகவும் ஆகிறது. மற்றவரிடமிருந்து நீங்கள் தானாகவே நேர்மறையான உணர்ச்சிகளை அடையப் பெறுகிறீர்கள்.

மற்றவர்களை முக்கியமானவர்களாக நினைக்கச் செய்ய மூன்று வழிகள் உள்ளன:

அ. பாராட்டுதல்

ஒரு உண்மையான பாராட்டுதலால் என்ன செய்ய முடியும் என்று பார்க்க உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். எல்லோரிடமும் ஏதாவது சில நல்ல குணங்கள் இருக்கும். அதில் கவனம் செலுத்தி அதை வெளிப்படையாகக் கூறுங்கள். இந்த வழியில் நீங்கள் செய்யும் பாராட்டுதல் பொருத்தமான, போலி இல்லாத, உண்மையான மேலும் ஆழமான தாக்கத்துடன் நீண்ட காலத்திற்கு நிற்கும். எப்பொழுது இருபுறமும் மகிழ்ச்சியாக உள்ளதோ அப்பொழுது எந்த உறவையும் எளிதில் பேணி வளர்க்க முடியும்.

ஆ. அக்கறை

நீங்கள் உங்களுடைய வார்த்தைகள் மற்றும் சைகைகள் மூலம் அக்கறை காட்டும்பொழுது மற்றவர்களை நெருக்கமானவராக, சிறப்புடையவராக, நேசிப்பவராக உணரச் செய்கிறீர்கள். இதற்கு ஏதாவது ஆரவாரமாக எப்பொழுதும் செய்ய வேண்டும் என்றர்த்தம் இல்லை. சிறிய சைகைகளின் மூலம் உங்களுடைய அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தலாம். அவர்களும், அவர்களின் நலன் மற்றும் மகிழ்ச்சியும் உங்களுக்கு முக்கியம் என்றும் காட்டலாம்.

இ. கவனம்

உங்களிடம் யாராவது பேசும் பொழுது சிதறாத கவனத்துடன் கேட்பதே நீங்கள் செய்ய வேண்டியதாகும். என்னுடைய கவனிப்பிலிருந்து பெரும்பாலான மக்கள் குறிப்பாக நெருங்கிய உறவினர்களிடம் பேசும் பொழுது கவனத்தை சிதற விடுகிறார்கள். அடுத்தவர்கள் பேசும் பொழுது நாம் அவர்கள் கூறுவதை நன்கு கவனித்தால் அவர்கள் தங்களை முக்கியமானவராகவும், குறிப்பிடத்தக்கவராகவும் சிறப்பு மிக்கவராகவும் உணர்வார்கள்.

நீங்கள் மற்றவர்களை முக்கியமானவராக உணர வைக்கும் போது அவர்கள் பலம், மன அமைதி மற்றும் நம்பிக்கை பெறுகிறார்கள். இதன் பலனாக அவர்கள் உங்களை அதிகம் விரும்புவார்கள். உங்களுக்கு உதவ அதிகமாக முன் வருவார்கள். நீங்களும் உண்மையானவராக இருக்க வேண்டும்.

முல்லா நஸ்ருதீன் ஒரு முறை கடைக்கு சென்றார். நான் மிகவும் நேசிக்கும் ஒரு பெண்ணுக்கு ஒரு வாழ்த்து அட்டை வாங்க விரும்புகிறேன் என்று அவர் கூறினார். கடை உரிமையாளர் காட்டிய அட்டையில், உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன் மற்றும் உனக்காகவே இறக்கவும் விழைகிறேன் என்ற வாசகம் இருந்தது. இது அழகாக உள்ளது. இதில் ஆறு அட்டை எனக்குக் கொடுங்கள் என்று முல்லா நஸ்ருதீன் கேட்டார்.

புத்திக் கூர்மை என்பது நிலையற்ற தன்மையாகும். நேர்மையாக இருக்கவும்.

நீங்கள் உங்களை விரும்பினால் மற்றவர்களை விரும்புவது எளிதானதென்று காண்பீர்கள். நீங்கள் முக்கியமானவர் என்று உணர்ந்தால் மற்றவர்களையும் அவ்வாறே உணரச் செய்வீர்கள். நாம் உண்மையிலேயே நம் ஆழ் மனத்தில் நம்மைப்பற்றி என்ன உணர்கிறோமோ, மற்றவர்களையும் அவ்வாறாகவே உணர வைக்கிறோம். நீங்கள் தற்பொழுது இருப்பது போல் அல்லாமல் வேறு விதமாக உணர விரும்பினால் அதை மற்றவர்களுக்கு கொடுக்கத் தொடங்குங்கள். இயற்கை அதை நமக்குத் திருப்பிக் கொடுக்கும்.

மற்றவர்கள் தங்களை முக்கியமானவர்களாக உணர உதவுங்கள். உங்களை வெளிப்படுத்தி அவர்களின் நாளைச் சிறப்புடையதாக்குங்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email