சுய சந்தேகமானது, பெரும்பாலானவர்களுக்குச் சில சமயமும், சிலருக்குப் பெரும்பாலான சமயமும் இருக்கிறது. இது பயத்தின் துணைத் தயாரிப்பு ஆகும் – தோல்வியின் பயம், இழப்பின் பயம், சாதனைகளைச் செய்ய முடியாதோ என்ற பயம். நீங்கள் எப்போதும் இதை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. சில நேரங்களில், அது ஒரு நியாயமான முடிவு, ஒரு தர்க்கரீதியான கட்டுமானம், ஒரு சரியான மதிப்பீட்டிலிருந்து வெளிப்படுகிறது. இது ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு ஏற்பட்ட மனத்தின் ஒரு நிலையாக இருக்கலாம். உங்கள் பயத்தைப் புறக்கணிப்பதால், அது மறைந்து விடுவதில்லை. தவறான உறுதிப்பாடு தோல்விக்கான சாத்தியத்தை அகற்றாது, மற்றும் உங்கள் முயற்சியில் ஏற்படும் வெற்றிக்கான பற்றாக்குறை ஆழ்ந்த பயம் மற்றும் அதிகமான சுய-சந்தேகத்திற்கு வழிவகுக்கும். எனவே, சுய-சந்தேகத்திற்கான காரணம் என்ன, அதற்காக நீங்கள் என்ன செய்ய முடியும்? தொடர்ந்து படியுங்கள். உங்கள் பயத்தை வெல்வதற்கான வழியும், உங்கள் சுய சந்தேகத்தை நீக்குவதும், சந்தேகத்தின் வகை மற்றும் அடிப்படையைச் சார்ந்துள்ளது. மேலும், எந்தவித சந்தேகமும் இன்றி, நான் அதைப் புரிய வைக்கிறேன், மற்றும் அதை உங்களுக்காக வகைப்படுத்துகிறேன். சுய-சந்தேகம் பின்வரும் மூன்று வகைகளில் ஒன்றில் அடங்கும்:

1. செயல் செய்யாமையின் அடிப்படையில்

உதாரணமாக, ஒரு பல்கலைக்கழக மாணவர் தனது படிப்பில் கவனம் செலுத்தவில்லை, அவர் தனது பாட வேலைகளில் பின்தங்கி உள்ளார், இன்னும் ஒரு வாரத்தில் அவரது தேர்வுகள் உள்ளன. அவர் தனது பாடத்திட்டத்தை அவசர அவசரமாக முடிக்க விழைகிறார், ஆனால் தேர்வுகளில் நல்ல விதமாகத் தேர்வதைப் பற்றிய கவலை மற்றும் சந்தேகம் அவரிடம் இருந்தது. அவர் படிப்பதற்கு அமர்கிறார், ஆனால் அவரால் தொடர்ந்து கவனம் செலுத்தவோ அல்லது தொடர்ந்து படிக்கவோ முடியவில்லை, ஏனெனில் அவர் தோல்வியைப் பற்றிய ஒரு பயத்தை வளர்த்துக் கொண்டுள்ளார்.

சுய சந்தேகத்தை வளர்த்துக்கொள்வதற்கு அவர் தனக்குத் தானே எல்லாவிதமான காரணத்தையும் கொடுத்திருக்கிறார். உண்மையில், அது மட்டுமல்ல, அவரது புத்திசாலித்தனமான மனம் அவரை எச்சரிக்கிறது. சாதாரண சூழ்நிலைகளின் கீழ், அவர் தேர்வில் தேர்ச்சி பெறப்போவதில்லை. தனது மனத்தைச் செயற்கையாகத் தேற்றுவது அல்லது சமாதானப்படுத்துவதன் மூலம், அவர் தனது நம்பிக்கையை மீண்டும் பெற முடியாது. ஒரு பொய்யான உத்தரவாதம் ஓரளவுக்குத் தான் உங்களைக் கொண்டு செல்ல முடியும், இறுதியில் உண்மை தான், அதன் தலையை உயர்த்தப் போகிறது.

இந்த வகை சுய சந்தேகத்தைத் தீர்ப்பதற்கான சிறந்த வழி உங்கள் இலக்கை நோக்கி உண்மையாக வேலை செய்ய வேண்டும் என்பதாகும். உங்கள் இலட்சியத்தை அடைவதற்குக் கவனியுங்கள், கற்றுக் கொள்ளுங்கள், மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள், ஏற்றுக்கொள்ளுங்கள், புரிந்து கொள்ளுங்கள், விடாமுயற்சியுடன் நீங்கள் செய்ய வேண்டியதை சரியாகச் செய்யுங்கள். செயல்கள் முடிவுகளைக் கொண்டு வருகின்றன, செயல் மட்டுமே உங்கள் இலக்கை நோக்கி உங்களை வழிநடத்தும், மேலும் அவர்கள் சொல்வதைப்போல், வெற்றியைப் போன்று வேறு எதுவும் ஊக்கப்படுத்துவதில்லை. பயிற்சியின் மூலம், நீங்கள் முழுநிறைவை அடைகிறீர்கள்.

பயிற்சி. உறுதித்தன்மை. பொறுமை. இந்த மூன்றையும் சரி செய்ய நீங்கள் உழைத்தால், சுய சந்தேகம் உங்களை விட்டு நிரந்தரமாக அகன்றுவிடும், வெற்றியின் முன்னிலையில், அது உடனடியாக அதன் இருப்பை இழக்கிறது.

2. கடந்த அனுபவத்தின் அடிப்படையில்

உங்கள் கடந்த காலத்தை அடிப்படையாகக் கொண்ட சுய சந்தேகத்தின் உணர்வு ஒரு பொதுவான நிகழ்ச்சியாகும். ஒவ்வொரு முறை நீங்கள் தோல்வி அடையும் போதும், ஒரு உணர்ச்சியை, ஒரு அனுபவத்தை உங்கள் மனத்தில் நீங்கள் பதிவுசெய்கிறீர்கள். ஆயிரக் கணக்கான ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சி, எதிர்மறையான உணர்ச்சிகள் மற்றும் அச்சங்களை மனித மனமானது பற்றிக் கொள்ளும்படியாக மாற்றி உள்ளது. சிலர் மற்றவர்களைக் காட்டிலும் அதை அதிகமாகச் செய்கிறார்கள். தோல்வியே அடையாத எவரையுமே எனக்குத் தெரியாது. பலர் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொண்டு தங்களின் முழுத் திறனையும் ஆராயாமல் தங்கள் தோல்விகளையே பிடித்துக் கொண்டு இருக்கும் போது, சிலர் தமது பயத்தை நீக்கி விட்டு மீண்டும் செயலைச் செய்து வெற்றியை அடைகிறார்கள்.

உணர்வு மனம், கணக்கீட்டைச் சார்ந்தது. பகுப்பாய்வு மனத்தால் தான் மனிதர்கள் உணவுச் சங்கிலியின் மேல் மட்டத்திற்கு உயர்ந்துள்ளனர், இதன் காரணமாகத் தான் உணர்வுப் பூர்வமான மற்றும் நிபந்தனைக்கு உட்பட்ட அச்சங்களை வளரச்செய்து உள்ளனர். இன்னொரு முறை இதைப்பற்றி நான் விரிவாக விளக்குகிறேன்.

உதாரணமாகப் பல ஆண்டுகளுக்கு முன்பு, நீங்கள் உங்கள் எடையைக் குறைக்க முயற்சி செய்தீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் உணவைக் கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் ஒவ்வொரு வாரமும் நான்கு மணி நேரம் உடற்பயிற்சிக்குச் செலவிட வேண்டும். இந்த ஒழுங்குமுறையைப் பொருட்படுத்தாமல், திட்டமிட்டபடி நீங்கள் வேலை செய்யவில்லை. ஒரு வாரம் ஆறு நாட்கள் தொடர்ந்து உடற்பயிற்சி மையத்திற்குச் சென்றீர்கள், அடுத்த வாரம் ஒரே ஒரு முறை சென்றீர்கள். முன்னால் இருந்த எடையைத் தான் அளவுகோல் இப்போதும் காட்டுகிறது. நீங்கள் ஆர்வத்தை இழக்கத் தொடங்கினீர்கள், நம்மால் எடையைக் குறைக்க முடியுமா எனச் சந்தேகிக்க ஆரம்பித்தீர்கள். ஒரு நாள் நீங்கள் உங்கள் முயற்சிகளைக் கைவிட்டு, உங்கள் பழைய வாழ்க்கை முறைக்குத் திரும்பி, உங்கள் உடல் மற்றும் மன நலத்திற்கு இன்னும் அதிக சேதத்தை ஏற்படுத்தினீர்கள்.

நீங்கள் தோல்வி அடைய, நீங்களே உங்களை அனுமதித்தால், நீங்களே உங்கள் மனத்தைப் பலவீனமாக்குகிறீர்கள், அதிலும் குறிப்பாக நீங்கள் உங்களிடமே உண்மையாக இல்லாதிருந்தால். பயம், சந்தேகம் மற்றும் பிற எதிர்மறை உணர்வுகள் ஒரு பலவீனமான மனத்தில் வளர்கின்றன. கடந்தகாலத் தோல்வியின் அடிப்படையில் உங்கள் சுய சந்தேகம் இருப்பதாக இருந்தால், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் தோல்விக்கானக் காரணங்களை ஆராயவும். கடந்த நடவடிக்கைகளை நீங்கள் மீண்டும் செய்யாவிட்டால், கடந்த முடிவுகள் திரும்பவும் வெளிப்படாது. நீங்கள் ஒரு வரலாற்றில் நிகழ்ந்தபடியே திரும்பவும் வாழ்ந்தால் மட்டுமே, வரலாறு மீண்டும் மீண்டும் திரும்ப முடியும்.

“பைத்தியக்காரத்தனம் என்பது, ஒரே காரியத்தைத் திரும்பத்திரும்ப செய்வது ஆனால் வேறு பல விளைவுகளை எதிர்பார்ப்பது,” என்று ஐன்ஸ்டைன் ஒரு முறை சொன்னார்.

3. உள்ளார்ந்த பயத்தின் அடிப்படையில்

தெரியாத ஒரு காரியத்தைச் செய்ய விரும்புகிறவர்களுக்குப் பயத்தின் அடிப்படையில் சுய சந்தேகம் எழுவது மிகவும் சகஜமாகும், சிலருக்கு வெற்றிக்கான பழுத்த வாய்ப்பு இருக்கலாம், ஆனால் அவர்கள் சௌகரியமான வட்டாரத்தில் நிம்மதியாக இருப்பார்கள் அல்லது புதிதாக எதையும் முயற்சி செய்வதற்குப் பயப்படுவார்கள்; பிந்தையதைப் பற்றியே என்னுடைய தற்போதைய கவனம் உள்ளது.

ஆபத்துகளை எதிர்க்கும் திறன் ஒவ்வொருவரிடமும் மாறுபடுகிறது. ஒரு புதிய துணிகர முயற்சியைச் செய்யத் தலைப்படும்போது, அதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, சுயவிமர்சனம் மற்றும் தோல்வியின் பயம் உங்களைத் தொடர்ந்து பின்னோக்கி இழுத்துப் பிடிக்கிறது என்றால், நீங்கள் சிந்தனை மற்றும் யுக்திகளைக் கொண்டே அதை எதிர்கொள்ள முடியும். நீச்சல் எப்படி அடிப்பது என்பதைக் கற்று கொள்ள நீங்கள் ஆர்வத்துடன் இருந்தால், கண்டிப்பாக நீங்கள் தண்ணீரில் குதித்தே ஆக வேண்டும். நீங்கள் மிதவைகளை உதறிவிட்டு, தானே நீரில் நீந்த வேண்டிய நேரமும் வருகிறது.

பயத்தின் அடிப்படையிலான சுய-சந்தேகத்தைக் கடப்பதற்கான சிறந்த வழி பின்வரும் கேள்விகளுக்கு உங்கள் பதில்களை எழுதுவதே ஆகும்:
அ. நான் ஏன் மாற விரும்புகிறேன்?
ஆ. மாற்றத்தைத் தழுவ நான் தயாரா?
இ. மோசமானதாக என்ன நடக்க முடியும்?
ஈ. மோசமானதைக் கையாளப் போதுமான திறமையானவனாக நான் உணர்கிறேனா?

உங்கள் பதில்களை ஆராய்ந்து, எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அறிந்து, அதன்படி செயல்படவும்.

நீங்கள் சுய சந்தேகத்தை அனுபவிக்கும் போது, அதைக் களைவதற்கு அதன் ஆணிவேர் வரை செல்லுங்கள். குறிப்பாக அது தொடர்ந்து கொண்டே இருந்தால், அதைப் புறக்கணிக்க வேண்டாம். அது உங்களுடைய வெறும் பயமாக இருக்கலாம் அல்லது உங்களுடைய உள்ளுணர்வுத் திறன் உங்களுக்கு வழிகாட்டுவதாகவும் இருக்கலாம். சுய பிரதிபலிப்பினால் மட்டுமே உண்மையை நீங்கள் அறிய முடியும். திரும்பவும் நான் வலியுறுத்துகிறேன், சுய சந்தேகத்தைக் கடக்க உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளக் கூடிய மிகுந்த ஆற்றல் வாய்ந்த கேள்வி: மோசமானதாக என்ன நடக்க முடியும்?

எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் நேரத்தை, கடந்த காலத்தைப் பற்றித் தொடர்ந்து கவலைப் பட்டு, உங்கள் வருங்காலத்தைப் பற்றித் தேவைக்கு அதிகமாக எதிர்பார்த்து அல்லது நடவடிக்கை இல்லாத விரிவான திட்டங்களைத் தீட்டுவதில் செலவழிக்காதீர்கள். இது ஒரு விலையுயர்ந்த வாழ்க்கை, அதனைக் கொண்டு விலைமதிப்பற்ற ஒன்றைச் செய்யுங்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook0Tweet about this on TwitterShare on LinkedIn0Google+0Email to someone