ஒரு திறமையான துறவியின் அமானுஷ்ய சக்திகளைப் பார்த்து ராஜா பிரதாப்பானு ஆச்சரியமடைந்ததாக, கோஸ்வாமி துளசிதாஸ் இராமாயணத்தில் ஒரு குறிப்பிட்ட அத்தியாயத்தில் எழுதுகிறார்:

ஜனி அசரஜு கரு மன மாஹி, ஸுத தப தே துர்லப கசு நாஹி.
தபபல தே ஜக ஸ்ருஜயி பிதாதா, தபபல பிஷ்னு பயே பரித்ராதா. 
தபபல சம்பு கரஹி ஸன்ஹாரா, தப தே ஆகம நஹி கசு ஸன்ஸாரா. (துல்ஸி இராமாயணா, 1. 162.1-2)
அன்பார்ந்தவரே வியப்படைய வேண்டாம். சாதனாவால் முடியாதது எதுவும் இல்லை. பிரம்மாவின் உருவாக்குதல், விஷ்ணுவின் பாதுகாத்தல் மற்றும் சிவனின் அழித்தல் அனைத்தும் தவத்தினால் தான் நடக்கிறது. தவத்தால் அடைய முடியாதது எதுவும் இந்த மூன்று உலகங்களிலும் இல்லை.

விரைவில் திருத்தம் என்பது எதிலும் கிடையாது. சுய மாற்றத்தின் சாதனா, பயிற்சியின் வெற்றி, உங்களது முயற்சியின் அளவு, தரம் மற்றும் நிலையான தன்மையைப் பொறுத்ததாகும். சிறந்த நிலையான தன்மைக்கு அசாதாரண வெகுமதிகள் வழங்கப்படும். பதஞ்சலியின் பழமொழியில், யோகா என்பது மனம்சார்ந்த பதிவுகளை அழிக்கும் ஒரு பயிற்சியாகும் என்று யோகஷ்சித்தவ்ருத்திநிரோதஹ (Yōgaścittavrttinirōdhaḥ, பதஞ்சலி யோக சூத்திரங்கள், 1.2) வில் கூறுகிறார். மற்றும் அத-யோகானுஷாஸனம் (atha yōgānuśāsanam, அதே நூல், 1.1), “இப்போது யோகாவின் ஒழுக்கம் தொடங்குகிறது” என்று கூறத் துவங்குகிறார். எனவே, சாதனா என்பது ஒரு குறிப்பிட்ட ஒழுக்கத்தை ஒட்டியுள்ளதாக இருக்கிறது; ஒரு கண்டிப்பான மற்றும் கவனமான முறையில் உங்கள் இலக்கை அடையும் வரை.

சுய மாற்றத்திற்கான யோகா, பயிற்சியாளரை முற்றிலும் உள்நோக்கித் திரும்ப உதவுகிறது. ஒழுக்கத்தைத் தவிர, உண்மையான சாதனாவின் வெற்றி நான்கு முக்கிய அம்சங்களைப் பொறுத்திருக்கிறது: சாதகா (விழைபவர்), சித்தா (குரு), சாத்யா (இலக்கு) மற்றும் சாதன் (வளங்கள்) ஆகியவை ஆகும். இந்த நான்கில் ஏதாவது ஒன்று இல்லை என்றாலும் அது முழுப் பயிற்சியையும் பலவீனமடைய வைக்கிறது. கற்களால் ஆன ஒரு அரண்மனை, உடையக்கூடிய மற்றும் தற்காலிகமான ஒரு மணல் கோட்டையாக மாறுகிறது. நிஜமான பயிற்சியில் மூழ்குவதற்கு முன் சாதனாவின் அடிப்படைகளைப் புரிந்து கொள்வது பயனுள்ளதாகும். பின்வருமாறு:

1. சாதகா — தேடுபவர்

தேடுதல் உள்ளவரே சாதகா, பயிற்சியாளர், அந்தப் பாதையில் ஈடுபாட்டுடன் உள்ளவர். பொருள்களின் மேல் உள்ள நாட்டம் பயனற்றது என்று புரிந்து கொள்கிறார், பொருள்களைப் பெறுவதில் ஒரு விருப்பு வெறுப்பின்மை (வைராக்கியம்) மலர்ச்சியடைவதை இயற்கையாகப் பலப்படுத்துகிறார். உலக நாட்டங்களின் மேல் உள்ள வெற்றியின் அளவு எவ்வளவாக இருந்தாலும், அது தொடர்ந்து தற்காலிகமானது என்று அவர் புரிந்து கொண்டிருக்கிறார். மேலும், அவை தவிர்க்கமுடியாமல் அதிக துன்பம் மற்றும் அச்சத்தைக் கொண்டு வருகின்றன. இந்தப் பொருள் உலகில் நீங்கள் எதையாவது உருவாக்குவதற்கு வேலை செய்யும் போது ஏற்படும் முதல் பயம், தோல்வியைப் பற்றியது ஆகும். நீங்கள் வெற்றி பெற்றால், இரண்டாவது பயம் நீங்கள் அடைந்ததை இழந்து விடுவோமோ என்ற பயம். செய்த சாதனையைப் பாதுகாத்தல் மற்றும் பற்றிக் கொண்டிருத்தல் ஒருவரை விறுவிறுப்பாக வைத்திருக்கிறது. எவர் ஒருவர் தனது அச்சத்திற்கும் அப்பால் சென்று, தனது மனப் போக்குகளின் கடலைக் கடந்து, மனநிம்மதி என்னும் அமைதியான கடற்கரை மற்றும் அவரது உண்மையான இயல்பை அடைய முடிவெடுக்கிறாரோ அவரே தேடுதல் உள்ளவர் ஆவார். பயிற்சியாளர் இல்லாமல் எந்தப் பயிற்சியும் இல்லை. தேடுபவரே உண்மையான பயிற்சியின் முக்கியத் தூணாகிறார்.

தேடுபவர், எல்லாவற்றிற்கும் மேலாக இரண்டு விஷயங்களில் உறுதியுள்ளவராக இருக்க வேண்டும்: பயிற்சி மற்றும் பற்றின்மை.

கிருஷ்ணர் அர்ஜூனனிடம் கூறுகிறார்:
 அஸம்ஶயம் மஹாபாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம்
 அப்யாஸேந து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே.(பகவத் கீதை, 6.35)
 ஓ போர் வீரனே! சந்தேகத்திற்கு இடமின்றி, ஒருவரின் மனதை வெல்வது ஒரு அசாதாரணமான சாதனையாக உள்ளது. ஆனால், அர்ஜூனா! பயிற்சி மற்றும் பற்றின்மை ஆகியவற்றால் இது சாத்தியமாகிறது.

விழைபவர், வெளி உலகத்தின் பொருளாசை அல்லது உணர்ச்சி சம்பந்தமான தேடுதல்களில் தொடர்ந்து மகிழ்ச்சியைக் கண்டால், உள்ளே உள்ள ஒன்றைக் கண்டறியும் அவரது பயணம் இழுவையாக இருக்கும். அவரது முயற்சிகள் நீர்த்துப் போகும். தற்காலிக, மாயை மற்றும் சுயநலத் தன்மை கொண்ட இந்தப் பொருள் உலகத்தைப் பிரதிபலிப்பதன் விளைவாகவும், அத்துடன் கவனத்துடனான முயற்சியைக் கொண்டு, உங்களைக் கட்டுப்படுத்தும் அனைத்தையும் கைவிடுதல் (தியாகம்) மூலமும் பற்றின்மை வருகிறது. ஒரு உண்மையான தேடுதல் உள்ளவரிடம் இவை இரண்டும் இருக்கும். எந்தப் பிணைப்பும் இல்லாமல் உங்களால் அனுபவிக்க முடியும் என்றால், நீங்கள் வாழும் கலையைக் கற்றுக் கொண்டவர் ஆவீர். மகிழ்ச்சி மட்டுமே அல்ல, அந்த மகிழ்ச்சியின் மேல் கொண்ட பிணைப்பு தான் உங்களைக் கட்டி இணைக்கிறது. எல்லா விதமான சூழ்நிலைகளிலும் சமன்நிலையாக இருப்பதிலிருந்து பற்றற்ற நிலை வருகிறது. ‘எப்போதும் தற்போதைய’ மனநிலையிலேயே இருப்பதால் சமன்நிலை வருகிறது, இது சரியான பாதையை நினைவிலேயே வைத்திருக்க உதவுகிறது. இப்படிபட்ட ஒரு எச்சரிக்கையுடனான மனமே, ஒரு நல்ல தியானத்தின் இயற்கையான விளைவு ஆகும்.

2. சித்தா — குரு

சித்தா, திறமையானவர், ஏற்கனவே அவ்விடத்தை அடைந்து திறமையாக அதைச் செய்தவர், அவரே குரு ஆவார். அவரது பங்கு தேடுபவருக்கு வழிகாட்டுவது, இத்தகைய பயிற்சியாளர்களுக்கு தடைகள் முழுவதையும் தாண்ட உதவுவது. பலப்பல யுகங்களாக, பல்வேறு வகையான அனைத்து யோகா அமைப்புகளும் அதன் வழிமுறைகளும், ஒரு குருவிடமிருந்து சீடருக்குப் போதிக்கப்பட்டு வருகிறது. மிகவும் ஈடுபாடுள்ள தேடுதல் உள்ளவருக்குத் தனது குருவைக் கண்டுபிடிப்பதும், சந்திப்பதும், தானாக நடக்கும் ஒரு செயல் ஆகிறது — கிட்டத்தட்ட முன் கூட்டியே தீர்மானம் செய்யப்பட்ட ஒரு சந்திப்பு போல் ஆகும். ஒரு குருவைத் தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் உண்மையான பயிற்சியை ஆரம்பித்து, அதிலேயே உறுதியாக இருந்தால், இயற்கை உங்களது வாழ்வில் உங்களுக்கான குரு வந்து சேர வழி வகுக்கும். அத்தகைய காலம் வரும்வரை, நீங்கள் சரியான குருவைச் சந்திக்க நேர்ந்தாலும், அடையாளம் புரியாமலும், தெரிந்து கொள்ளாமலும் இருப்பீர்கள். ஒரு குருவைத் தேர்வு செய்வதில் அவசரப்பட வேண்டாம். குரு ஒரு சம்பிரதாயமோ அல்லது வசதிக்கான ஒரு பரிவர்த்தனையோ இல்லை. அவர், கிடைத்து விட்டது என்று குறித்துக் கொள்ளும் ஒரு பொருள் இல்லை.

சரியான குருவால் உங்களது சந்தேகங்களை அகற்ற முடியும். உங்களது தடைகளைக் கடந்து, ஆன்மீக சாதனையில் உங்கள் சொந்த முயற்சியில் நீங்கள் முன்னேறுவதை விட வேகமாகவும், சிறந்த முறையிலும் முன்னேற உதவ முடியும்.

அபவேத்சங்கயுக்தானாம் ததா விஷ்வாஸ்னாமபி,
குருபூஜாவிஹினானாம் ததா ச பஹுசங்கிநாம்.
மித்யாவாதறதானாம் ததா ச நிஷ்டுரபாஷினாம்,
குருசந்தோஷஹினானாம் ந சித்திஹ் ஸியாத்கதாசன. (சிவ சம்ஹிதா, 3.17-18)
பொருள் உலகத்துடன் பிணைக்கப்பட்ட ஒருவர் விசுவாசம் இல்லாமல், அவரது குருவின் மேல் பக்தி இல்லாமல், பிறருடன் விரும்பிப் பழகி மகிழ்ந்து, பொய்கள் பேசி, கடுமையாகப் பேசி, குருவின் தேவைகளை மதிக்காமல் இருந்தால் அவர்கள் ஆன்மீக இலக்கை அடைவது சாத்தியமில்லை.

ஒரு குரு இன்றியமையாதவர் அல்ல. இத்தகைய அறிக்கையின் மூலம் நான் ஆதி நூல்களின் வார்த்தைகளில் இருந்து மாறுபடுகிறேன்; நான் எனது சொந்த அனுபவம் மற்றும் கண்டு அறிந்தவற்றின் அடிப்படையில் அவ்வாறு கூறுகிறேன். எனினும், ஒரு சரியான குரு நிச்சயமாக உங்கள் பயணத்தின் வேகத்தை அதிகரிக்க முடியும். இலக்கினை அடையும் ஆசைத் தீ உங்களிடம் இல்லையென்றால், மனித உடலில் உள்ள குரு மட்டுமல்ல, கடவுள் கூட உங்களது இலக்கை அடைய உங்களுக்கு உதவ முடியாது. ஒரு திறமையான ஆன்மீக குருவால் அவரது சீடரின் சிறப்புத் தன்மையை வெளியே கொண்டு வர முடிவதைப் போல், ஒரு அர்ப்பணிப்புடன் உள்ள சீடர் அவரது குருவிடம் இருந்து மிகச் சிறந்தவற்றைப் பெற முடியும். பக்தி, நம்பிக்கை, நேர்மை, சேவை ஆகிய இவையே தேவையானவை ஆகும். உங்களது குரு உங்களிடமிருந்து பொருட்களை விரும்பினால் அல்லது உங்களால் எவ்வளவு கொடுக்க முடியும் என்பதற்கு ஏற்ப அவர் உங்களுக்கு வழங்கும் நேரம் இருந்தால், அத்தகைய குருவை ஒரு கெட்ட கனவைப் போன்று மறந்து விடுங்கள். எப்படி ஆசைகளைத் துறந்து அதற்கும் மேல் உயராத ஒருவர், நடுநிலை உணர்வைப் பற்றி உங்களுக்கு அறிவுறுத்த முடியும்?

‘தண்ணீரை வடிகட்டிய பின் குடி, குருவைச் சோதனை செய்த பிறகு ஏற்றுக் கொள்’ என்பது நாத் பிரிவினருடைய ஒரு பிரபலமான பழமொழி ஆகும். இது வாய்மொழியாகச் சொல்லப்பட்டு வருவதால், அதன் தோற்றம் பற்றி எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.

3. சாத்யா — இலக்கு

மூன்றாவது முக்கியமான தூண், சாத்யா (sadhya) அதாவது ‘இலக்கு’ ஆகும். உங்களது குறிக்கோளைத் தெரிந்து கொள்ள முக்கியமானதாகும். சுய மாற்றத்திற்கான யோகம், பல மைல்கற்களைக் கொண்டது. அவை தேடுதல் உள்ளவர்க்கு வழிகாட்டும் நோக்கத்திற்காக ஏற்பட்டவை. உங்களுக்கு உங்கள் இலக்குத் தெரியாது என்றால், எதையாவது அடைவது என்பதன் அர்த்தம் எல்லாவற்றையும் அடைய வேண்டும் என்பதாகும், எல்லாவற்றையும் சாதிக்க வேண்டும் என்பதன் அர்த்தம் எதுவுமே சாதிக்கப் போவது இல்லை என்றும் இருக்கலாம். உங்களுக்கு இலக்குத் தெரிந்தால் மட்டுமே, நீங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கையின் ஓட்டத்தை வரையறுக்க முடியும். சிலருக்கு அமானுஷ்ய சக்தியிலும், மற்றவர்களுக்குச் சமாதியிலும், மற்றும் பலருக்கு ஒரு சிறந்த வாழ்க்கை வழிமுறையிலும் விருப்பம் இருக்கலாம். சரியான பயிற்சி முறையால் எதுவும் சாத்தியம். ஒரு யோகியின் இலக்கு, யோகத்தைக் கடந்த சமாதிநிலை ஆக இருக்கலாம். மந்திரப் பயிற்சி செய்பவரைப் பொறுத்தவரை, மந்திரத்தின் உள்ளுறையும் ஆற்றலைத் தட்டியெழுப்புவதாக இருக்கலாம். உலகத்தினருக்குப் பொருள் செல்வத்தைச் சேகரிப்பதாக இருக்கலாம். உடல் நலமற்றவருக்கு நல்ல உடல் நிலையை மீண்டும் அடைவதாக இருக்கலாம். உங்களுடைய இலக்கு எதுவாக இருந்தாலும், முக்கியமாக ஒன்றே ஒன்று இருக்க வேண்டும் மற்றும் அதற்கேற்றபடி பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

நான் வைஷ்ணவ தாந்த்ரிக் உரையில் இருந்து ஒரு செய்யுளை மேற்கோளாகக் காட்ட விரும்புகிறேன்:

ஆறதாய்தொ யதி ஹரிதபஸா ததஹ் கிம் 
நாராதிதொ யதி ஹரிதபஸா ததஹ் கிம்.
அந்த்தர்வஹிர்யதி ஹரிதபஸா ததஹ் கிம்
நாந்த்தர்வஹிர்யதி ஹரிதபஸா ததஹ் கிம். (நாரத பஞ்சராத்ரா, 1.2.6)

உங்களது வழிபாடு உங்களை ஸ்ரீ ஹரியிடம் செல்ல வழிவகுக்கிறது என்றால், இதைவிட வேறு என்ன நன்மை தவத்தால் நடக்கும்; எந்த விதமான தவமும் உங்களை ஸ்ரீ ஹரியை நோக்கி அழைத்துச் செல்லாவிடில் அதனால் என்ன பயன். நீங்கள் உள்ளும், புறமும் அவரை வணங்குகிறீர்கள் என்றால், தவங்கள் இனி முக்கியமானதல்ல; நீங்கள் உள்ளும், புறமும் அவரை வணங்கவில்லை என்றால், எந்த ஒரு தவமும் எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க முடியும்.

மேலே உள்ள அறிக்கையைப் பல முறைப் படித்து, அதில் ஆழமாக மூழ்கி, அதை மனதில் ஆழப் பதியச் செய்யுங்கள். பக்தி உணர்வால் வெளிப்படுத்தப்பட்ட போதிலும், மேற்படி அறிக்கை அனைத்து சாதனாவின் சாரத்தையும் உயர்த்திக் காட்டுகிறது. அதாவது, இதன் பொருள்: சாதனாவின் பாதையில் இலக்கை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. நீங்கள் பயணிக்க எடுத்துக் கொண்ட பாதை உங்களை உங்களது இலக்குக்குக் கொண்டு செல்லவில்லை என்றால், இத்தகைய பாதையில் உங்கள் நேரத்தை ஏன் வீணடிக்க வேண்டும்? விதிகள், ஒழுக்கம், கட்டமைப்பு மற்றும் தத்துவம் ஆகியவை ஒரு முடிவை அடைவதற்காக மட்டுமே. உங்களது சாதனா உங்களது இலக்கை அடைவதற்காகவே ஆகும். அதை அடைந்து விட்டால், நீங்கள் உங்களது சொந்த விதிகளை வரையறுக்கத் தயாராக இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் விடுவிக்கப்படும் போது, சுதந்திரம் அடைகிறீர்கள். எல்லாவற்றில் இருந்தும் சுதந்திரம் அடைகிறீர்கள்.

ஆரம்பத்தில் விதிகளைப் பின்பற்ற வேண்டியது முக்கியம். ஒரு நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டும் போது, உங்களுடைய மற்றும் மற்றவர்களுடைய பாதுகாப்பிற்காக, நீங்கள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவதைப் போலத்தான். ஆனால் வீட்டை அடைந்த பின், குறிக்கப்பட்ட பாதையில் நடக்கவோ அல்லது சைகை காட்டிவிட்டுத் திரும்புவோ தேவையில்லை. பாதையின் அடையாளங்கள் உங்களுக்கு வழிகாட்டுவதற்கு உள்ளதைப் போன்றே, ஆன்மீகப் பாதையில் உள்ள எந்த ஒழுக்க நெறியும் உங்களுக்கு உதவவே உள்ளன. உங்களது இறுதி இலக்கின் மீதான பார்வையை இழந்து உங்களது ஒழுக்கத்தை ஒரு சடங்காக ஆக்கினால், உங்கள் பாதை பேரின்பம் மற்றும் மகிழ்ச்சி அற்றதாகி சுவாரஸ்யமற்ற பயிற்சிக் குவியல் ஆகிவிடும்.

4. சாதன் — வளங்கள்

கடைசி மற்றும் நிச்சயமாக முக்கியத்தில் குறையாத அம்சம் சாதன் (sadhan), வளங்கள் ஆகும். ஆதரவு இல்லாமல் ஒரு பயிற்சியைச் செய்வது சாத்தியம் இல்லை. வளங்கள் என்பதில், உங்களுக்குக் கணிசமான நிதி மூலதனம் தேவை என்ற அர்த்தத்தில் நான் கூறவில்லை. ஆரம்ப கட்டங்களில், நீங்கள் உங்கள் வீட்டில் உட்கார்ந்து பயிற்சிகளைத் தொடங்க முடியும். நீங்கள் முன்னேறும் போது, குறைந்தபட்சம் வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை கிட்டத்தட்ட ஒரு வாரம், பத்து நாட்கள் அல்லது ஒரு மாதம் “தியானம் மட்டுமே செய்யும் விடுமுறைக்குச்” செல்ல உங்கள் சூழ்நிலைகள் உங்களை அனுமதிக்க வேண்டும். அப்படிப் போகும் போது உங்கள் பயிற்சியானது தீவிர தியானமாக மட்டுமே இருக்கும்.

மேலும், தொடர்ந்து முன்னேற, அமைதி மற்றும் தனிமையில் தீவிரப் பயிற்சி செய்ய, ஒரு “அமைதியான” இடம் தேவைப்படுகிறது. ஒரு தீவிரப் பயிற்சி இல்லாமல் நீங்கள் தீவிரமான முடிவுகளைப் பார்க்கப் போவதில்லை.

இந்தக் கட்டத்தில் மேலே உள்ள எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. முதலாவதாக உங்களுக்குள் ஒரு தீவிரமான ஆசை, கட்டுப்பாட்டுடனான பயிற்சி, தூய்மையான தார்மீக, ஆன்மீக மற்றும் யோக ஒழுக்கம் தேவைப்படுகிறது. உண்மையான தேடுதல் உள்ளவருக்கு, தேவை ஏற்படும் தருணத்தில் இயற்கை எல்லாவற்றையும் ஏற்பாடு செய்கிறது. என்னுடைய சொந்த அனுபவத்தால் இதைச் சொல்லுகிறேன்.

பயணத்தை அனுபவியுங்கள்!

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook0Tweet about this on TwitterShare on LinkedIn0Google+0Email to someone