நான் பலமுறை “தாக்கமடைந்த மனப்பான்மை” (conditioning – கண்டிஷனிங்) இலிருந்து விதிபடுவதைப்பற்றிப் பேசுகிறேன். என்னுடைய ஒவ்வொரு வீடியோவின் முடிவிலும் “உங்களின் சொந்த உண்மையைக் கண்டறியுங்கள்” (Discover Your Own Truth – டிஸ்கவர் யுவர் ஓன் ட்ருத் ) என்ற வாக்கியம் இருக்கிறது. அது ஒன்று மட்டுமே உங்களை விடுவிக்கும் என்று அடிக்கடி சொல்கிறேன். ஆனால், “தாக்கமடைந்த மனப்பான்மை” என்றால் என்ன என்று அடிக்கடி கேட்கப்படுகிறேன்? நாம் சுய உண்மையைக் கண்டறிய வேண்டியதன் அவசியம் என்ன? என் மதம் அல்லது என் கடவுள் என்னை ஏன் விடுவிக்க முடியாது? இந்தக் கட்டுரையின் மூலம் நான் உங்களுக்கு உலகத்தை வேறு கோணத்தில் பார்க்க உதவி செய்ய முடியும் என்று எண்ணுகிறேன்.

எனக்கு எந்த மதம், தத்துவம், ஜாதி, பிரார்த்தனை அல்லது வழிபாட்டு முறை மீதும் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று முதலிலேயே தெரிவித்துக் கொள்கிறேன். அவை எல்லாம் நல்லதையே நினைக்கின்றன. என் நடுநிலையைக் கொண்டு நான் அவை எல்லாவற்றையும் ஒப்புக்கொள்வதாகக் கருத முடியாது. இதன் பொருள் என்னவென்றால் – உங்களின் பாதையில் நீங்கள் செல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்பதாகும். உங்களின் பாதை உங்களுக்கு நிம்மதியையும் ஆனந்தத்தையும் கொடுத்தால், அது எவருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருந்தால், அந்தப் பாதையில் செல்வதால் உங்களுக்கு நன்மையே நடக்கும். எனக்கும் வழிபடுதல் பிடிக்கும்; ஆனால் இயற்கையிடம் ஏதாவது பெறுவதின் நோக்கத்துடன் அல்ல. என் நன்றியைச் செலுத்துவதற்கும், ஆனந்தத்தை வெளிப்படுத்துவதற்கும் மட்டுமே நான் வழிபாடு செய்கிறேன். “தாக்கமடைந்த மனப்பான்மை” என்ற இன்றைய தலைப்பைத் தொடர்ந்து நான் உங்களை ‘யூதிப்ரோ’ விடம் அழைத்துச் செல்கிறேன் – இது சாக்ரடீஸின் கடைசி நாட்களைப் பற்றி ப்ளாடொ எழுதிய நான்கு முக்கிய உரையாடல்களில் ஒன்றாகும்.

‘யூதிப்ரோ’, கடவுள் பக்தி அற்ற நிலைக்காகச் சாக்ரடீஸின் மேல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவர் புதிய கடவுள்களை உருவாக்கி இளைஞர்களைக் கெடுக்கிறார் என்று அவர் மேல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் வெளியில், அவர் யூதிப்ரோவை சந்திக்கிறார். யூதிப்ரோ ஒரு வழக்கறிஞர். கொலைக்குற்ற வழக்கு ஒன்றில் தனது தந்தைக்கு எதிராகவே வாதாடுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார். ஒரு ஏழை மனிதன் அடிமை ஒருவரைக் கொன்றுவிட்டான். ஏத்தென்ச் நகரின் மேலதிகாரிகள் தகுந்த தண்டனையை அளிக்கும் வரை குற்றவாளியை ஒரு குழியில் தள்ளுமாறு யூதிப்ரோவின் தந்தை உத்தரவிட்டார். தூதர் ஒரு தகுந்த பதிலைக் கொண்டு வரும் முன் குற்றவாளி மரணம் அடைந்தார். யூதிப்ரோவின் தந்தையின் மேல் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது.

யூதிப்ரோ, மதத்தின்மேல் மிகையான நம்பிக்கையை வைத்தவர். அதனால் தனது தந்தை பாவம் செய்தார் என்று முழுமையாகக் கருதி அவருக்கு எதிராகக் குற்றம் சாற்றி வாதாட இருந்தார். யூதிப்ரோ இப்படிப்பட்ட வழக்கின் பொறுப்பை எடுத்துக் கொண்டதால் சாக்ரடீஸ் யூதிப்ரோவிர்க்குப் பாவம் மற்றும் நல்ல செயல்கள், பக்தி மற்றும் பக்தி இன்மை, இதைப்பற்றி முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும் என்று கருதினார். “பக்தி என்றால் என்ன?” என்று சாக்ரடீஸ் அவரிடம் கேட்டார்.
“எது கடவுளுக்குப் பிடிக்குமோ அது பக்தி, எது கடவுளுக்குப் பிடிக்காதோ அது பக்தி இன்மை”, என்று யூதிப்ரோ பதில் அளித்தார்.
சாக்ரடீஸ் யூதிப்ரோவிடம் மேலும் கேள்விகள் கேட்டார்: “கடவுளுக்குப் பிடித்ததனால் ஒரு செயல் பக்தியான செயல் ஆகிறதா இல்லை அது பக்தியான செயல் என்றதால் கடவுளுக்குப் பிடிக்கிறதா? பக்தியான எல்லாச் செயல்களும் நியாயமானதா? எல்லா நியாயமான செயல்களும் பக்தியுடைய செயலா?”

ஆர்வத்திற்குரிய விஷயம் என்னவென்றால், இப்படித்தான் பல மதங்கள் செயல்களை பக்தியானவை மற்றும் பக்தியற்றவை என்று வகைப்படுத்துகின்றன: கடவுளைச் சந்தோஷப்படுத்தும் செயல்கள் அல்லது சொர்க்கங்களுக்குக் கொண்டு போகும் செயல்கள் பக்தியானவை என்று கருதப்படுகிறது. இதன் அபத்தத்தை ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்: மதங்களின் விதிமுறைகளின்படி செய்தால், கொல்வது கூடப் பக்தியான மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயலாகக் கருதப்படுகிறது. நான் ஒரு விலங்கை என் மதத்தின் விதிமுறைகள் படி கொன்றால் அது நன்று; ஆனால் வேறு வழியாகக் கொன்றால் அது சரி அல்ல. கோஷர் இறைச்சி சரியானது ஆனால் ஹலால் சரி அல்ல என்று சிலர் சொல்வார்கள்; ஹலால் இறைச்சி சரி ஆனால் கோஷர் சரி அல்ல என்று இன்னும் சிலர் சொல்வார்கள். உலகின் சில பகுதிகளில் பௌத்தர்கள் விலங்குகளை மூச்சுத் திணறவைத்துக் கொன்று, அதில் ஒரு சொட்டு ரத்தம் கூடச் சிந்தவில்லை என்பதால் அது சரி என்று நியாயப்படுத்துகிறார்கள். இந்தியாவின் பல பகுதிகளில் ஹிந்து மதத்தினர் அவரவரின் தெய்வங்களுக்கு ஆடுகளைப் பலி கொடுக்கிறார்கள். ஒவ்வொருவரும் தனது வழி சரி என்று எண்ணுகிறார்கள். இது தான் “தாக்கமடைந்த மனப்பான்மை”. கடவுளிடமிருந்து வரங்கள், சொர்க்கம், முக்தி, இப்படி ஏதாவதொரு பரிசு கிடைக்கும் என்று நினைக்கிறார்கள்.

“தாக்கமடைந்த மனப்பான்மை” இலிருந்து விடுபடச் சாக்ரடீஸ் மூன்று கேள்விகளை அடிக்கடி கேட்டார். இதே மூன்று கேள்விகளை நீங்களும் கேட்டு உங்களின் உண்மை மற்றும் அறிவு என்னவென்று பரிசோதனை செய்து கொள்ளலாம்:
1) உங்களுக்கு என்ன தெரியும்?
2) உங்களுக்குத் தெரிந்தவை எப்படித் தெரிய வந்தது?
3) நீங்கள் ஏன் அதைக் கருத்தில் கொள்ள வேண்டும்?

நமக்கு உண்மையாகவே என்ன தெரியும், அதை விட முக்கியமாக அது நமக்கு எப்படித் தெரிய வந்தது? நமக்குத் தெரிந்ததை யார் நம்மிடம் சொன்னார்கள்? நம்முடைய பெரியோர்கள் இதை நமக்குச் சொன்னார்கள் என்றால் அவர்களுக்கு இதைப் பற்றி எப்படித் தெரிய வந்தது? ஒரு விஷயம் ஒரு விதத்தில் செய்து வந்த காரணத்தினால் அது மட்டுமே சரியான முறை ஆகுமா (முதலில் அந்த முறை சரிதானா என்பதே சர்ச்சைக்குரிய விஷயம்)? நம் அறிவின் தோற்றம் என்னவென்பதைப் பற்றி நாம் அக்கறை காட்டாமல் இருந்தால் அது உண்மையானதா என்று நம்மால் உறுதி செய்யவே முடியாது.

ஒருமுறை ஒரு துறவி பிரசங்கம் செய்ய ஒரு கிராமத்திற்கு அழைக்கப்பட்டார். அவர் தனக்கு மிகவும் பிடித்த செம்மறியாட்டையும் உடன் அழைத்து வந்தார். உபந்யாஸம் அளிக்கும் பொழுது அந்தச் செம்மறியாட்டை ஒரு கம்பில் கட்டி வைத்தார். ஊர் மக்கள் ஒரு விலங்கைச் சொற்பொழிவிற்கு அழைத்து வந்ததை விசித்திரமாகக் கருதினார்கள். ஆனால் இதைப்பற்றி ஏதாவது சொன்னால் துறவி தவறாக எடுத்துக்கொள்வாரோ என்று அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. அப்பொழுது கோடைக்காலமாக இருந்தது. தற்செயலாக மழை பொழிந்து எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது. சொற்பொழிவு முடிந்தவுடன் துறவி தன் செம்மறியாட்டுடன் சென்றார், ஆனால் அன்று அந்த ஊரில் ஒரு புதிய பாரம்பரியம் தொடங்கியது – உபந்யாஸத்தில் செம்மறியாட்டைக் கட்டி வைப்பது. ஊர் மக்கள் செம்மறியாட்டை கட்டுவதற்கும் மழை பொழிவதற்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாகக் கருதினார்கள். இது மழை தெய்வத்தைச் சந்தோஷப் படுத்தியது என்று நம்பினார்கள்.

இந்தக் கதை நம்பமுடியாமல் இருப்பது போல் தோன்றலாம் ஆனால் உங்களைச் சுற்றிப் பாருங்கள், இந்த உலகத்தில் இது போன்ற பாரம்பரியங்கள் ஏராளமாக உள்ளன. எந்தப் பாரம்பரியங்கள் மதத்தின் பகுதியாகிறதோ அவை நிலைத்து நிற்கின்றன. மக்கள் அவற்றை ஏற்றுக்கொண்டு கேள்வி கேட்காமல் கடைப்பிடிக்கிறார்கள்.

இதை எல்லாம் உண்மை என்று நம்பி ஏற்றுக்கொண்டுவிட்டோம், ஆனால் உண்மையாகவே இவை உண்மைதானா? இவற்றில் பல விஷயங்கள் உண்மையாக இருந்தாலும் இருக்கலாம். ஆனால், உங்கள் சுய சிந்தனையால் அந்த முடிவுக்கு வந்தீர்களா அல்லது இதை யாராவது உங்களுக்குச் சொல்லி அந்த முடிவுக்கு வந்தீர்களா? “தாக்கமடைந்த மனப்பான்மை” என்பது சரி-தவறு, நல்லது-கெட்டது, ஒழுக்கமானது-ஒழுக்கமற்றது போன்ற பல இரட்டைகளை, நமக்கு யாராவது சொல்லி நாமும் அதை அப்படியே நம்பி விடும் பொழுது உண்டாகிறது.

“தாக்கமடைந்த மனப்பான்மை” நம்மை வடிவமைக்கிறது. சில முறை துரதிருஷ்டவசமாக நம்மை அது பிடிவாதக்காரர்களாகச் செய்கிறது; ஒருவேளை இது ஒரு தற்செயலான விளைவாகவும் இருக்கலாம். சில சமயம் நம்மை இது குருடராகக் கூட மாற்றுகிறது. நாம் எவ்வளவு அதிகமாகப் பிடிவாதக்காரர்கள் ஆகிறோமோ அவ்வளவு வலுவற்றவராக ஆகிவிடுகிறோம். நம் பிடிவாத குணம் நம்மைப் பல விஷயங்களைத் தாங்கச் செய்ய உதவலாம், ஆனால் ஒரு பெரிய அடி விழுந்தால் எல்லாம் உடைந்து விடும்.

எந்தத் தத்துவத்தையோ, துறவிகளையோ, மதங்களையோ நம்புவதற்கு முன் கேள்விகள் கேட்டு, அதனைச் சரியா என்று பரிசோதிக்கத் தயங்காதீர்கள். “தாக்கமடைந்த மனப்பான்மை”-யின் பல அடுக்குகளை, விட்டு விடும் நடைமுறை உங்களின் அடிப்படையான நம்பிக்கைகளைக் கேள்வி கேட்பதிலிருந்து தொடங்கும். அது கடினமாக இருக்கலாம் ஆனால் உங்களை அது மேம்படுத்தும் மற்றும் விடுவிக்கும்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email