பெரும்பாலான ஆத்திக மதங்கள் பக்தர்களைச் சரணடையத் தூண்டுகின்றன, அவை தெய்வீகச் சித்தத்திற்குச் சரணடைவதில் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. சில பாதைகளில் குரு, ஆன்மீக ஆசானிடம் பூரணச் சரணாகதி அடைவது தேவையாக உள்ளது. அப்படியானால், சரணடைவது என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? சரணடைவது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?

முன் ஒரு காலத்தில், ஒரு சிறிய கிராமத்தில், ஒரு வயதான விவசாயி தனது ஒரே மகனுடன் வசித்து வந்தார். அவர்களுக்கு ஒரு சிறிய துண்டு நிலம், ஒரு மாடு மற்றும் ஒரு குதிரை சொந்தமாக இருந்தது. ஒரு நாள் அவரது குதிரை ஓடிவிட்டது. அவர்கள் தங்களது குதிரையைத் தேடிச் சென்றனர், ஆனால் பலனில்லை. அவரது மகன் மிகவும் கலக்கமடைந்து இருந்தான். அண்டை வீட்டுக்காரர்கள் அந்த வயதான விவசாயியைப் பார்க்க வந்தார்கள்.

“என்ன கொடுமை நடந்துள்ளது, கடவுள் உங்கள் மீது மிகக் கடுமையாக உள்ளார்,” என்று கிராமவாசிகள் விவசாயிக்கு ஆறுதலாகக் கூறினார்கள்.
“இதுவும் அவரது கருணையாக இருக்க வேண்டும்,” என்று விவசாயி அமைதியாகப் பதிலளித்தார்.

இரண்டு நாட்கள் கழித்துக் குதிரை திரும்பி வந்தது, ஆனால் தனியாக இல்லை. நான்கு நேர்த்தியான மற்றும் வலுவான காட்டுக் குதிரைகள் அதன் பின்னால் வந்தன. விவசாயிக்கு இப்போது ஐந்து குதிரைகள் சொந்தமாயின.

“அதி அற்புதம். நீங்கள் மிகவும் அதிர்ஷ்டக்காரர்,” மற்றவர்கள் கூறினார்கள்.
“இதுவும் அவரது கருணையாக இருக்க வேண்டும்,” விவசாயி நன்றியுடன் பட்டும்படாமல் கூறினார்.

ஆனால் அவரது மகன் உற்சாகமாக இருந்தான். மறுநாள் அவரது மகன் ஒரு காட்டுக் குதிரை மீது ஏறி, சரியாகச் சவாரி செய்ய முடிகிறதா என்று பார்க்க, அது அவனைத் தூக்கி எறிந்தது. அவனது கால் முறிந்தது.

“இந்தக் குதிரைகள் உபயோகத்திற்கு ஆகாது. துரதிஷ்டத்தையே உங்களுக்குக் கொண்டு வந்துள்ளன. உங்கள் மகனுக்குக் கால் முறிந்து விட்டது” என்று அண்டை வீட்டுக்காரர்கள் தங்களுக்குத் தெரிந்த ஞானத்தை வழங்கினார்கள்.
“இதுவும் அவரது கருணையாக இருக்க வேண்டும்,” என்று விவசாயி பதிலளித்தார்.

ஒரு சில நாட்கள் கழித்து, ராஜாவின் அதிகாரிகள் கட்டாய இராணுவச் சேவைக்கு வாலிபர்களைத் தேர்வு செய்யக் கிராமத்திற்கு வந்தனர். ஒரு கால் உடைந்து இருந்ததால், அவர்கள் விவசாயியின் மகனை விடுத்து மற்ற அனைவரையும் அழைத்துச் சென்றனர். பொறாமை மற்றும் அன்பின் காரணமாக, கிராம மக்கள் விவசாயியின் மகன் தப்பித்ததற்குப் பாராட்டினர்.

“இதுவும் அவரது கருணையாக இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

நீங்கள் சரணடைவது பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் மேலே உள்ளக் கதையில் உள்ளது. சரணடைதல் என்பது உங்கள் கடவுளைப் புகழ்ந்து விட்டு பின்பு ஒவ்வொரு முறை துக்கம் வரும் போதும் புலம்புவது அல்ல. இறுதியாக, உங்களது செயல்கள் நீங்கள் சரணடைந்துள்ள அளவின் விகிதத்தைக் காட்டுகின்றன.

உயர்வு அல்லது தாழ்வு, தடித்த அல்லது மெல்லிய, நல்ல அல்லது கெட்ட நேரங்களில், நடப்பவை அனைத்தும் தெய்வீக அருள் என ஏற்றுக் கொண்டால், அதுவே சரணாகதி ஆகும். கோவில்களுக்கும், தேவாலயங்களுக்கும் செல்வது, கடவுளிடம் சரணடைவதாகச் சொல்வது மட்டுமே சரணாகதி ஆகாது. அசைக்க முடியாத நம்பிக்கையின் மற்றொரு பதமே சரணாகதி ஆகும், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் “நல்லது” என்று கருதுவது மட்டுமே நடக்கும் என்று அர்த்தம் இல்லை. எது எப்படி நடந்தாலும் நிபந்தனையின்றி, தொடர்ந்து தெய்வீகத்திடம் அடைக்கலம் நாடுவீர்கள் என்பதே அதன் பொருள்.

கடவுளுக்கு நன்றி சொல்ல, அவரிடத்தில் அன்பு செலுத்த, உங்களது உணர்ச்சியை அவரிடத்தில் வெளிப்படுத்த உள்ள ஒரு வழியே சரணாகதி ஆகும். உங்கள் சூழ்நிலைகளை மேம்படுத்த வேலை செய்ய வேண்டாம் என்று அதற்கு அர்த்தம் இல்லை, அதன் முடிவுகளைக் கடவுளின் கருணை என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அதன் அர்த்தம். ஏற்றுக்கொள்ளுதல் பற்றித் தனிப்பட்ட ஒரு விஷயம் உள்ளது — அது ஒருவருக்கு வலிமை மற்றும் அமைதியைக் கொடுக்கிறது.

அழகான ஒப்புமை ஒன்று எனக்கு நினைவுக்கு வருகின்றது. ஒரு குட்டிக் குரங்கு அதன் தாயை இறுகப் பற்றிக் கொள்கிறது. தனது தாயுடன் இருந்தால் தான் பாதுகாப்பாக இருக்கும் என்று அதற்குத் தெரியும். எங்கே, என்ன, எப்பொழுது, எப்படி என்பதைப் பற்றியதான முடிவெடுக்கும் விஷயங்களைத் தன் தாயிடம் அது விட்டு விடுகிறது. இது சரணடைதலுக்கு ஒரு உதாரணம் ஆகும். ஒரு பூனைக் குட்டியும் இதையே தான் செய்கிறது, ஆனால், அது தன் தாயைப் பற்றிக் கொள்வதற்கு மாறாக விட்டுவிடுதலைச் செய்கிறது. அதன் தாய் அதனைக் கவ்விக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுகிறது. இரையைப் பிடிக்கப் பயன்படுத்துகின்ற கூர்மையான பற்களால் அதன் குட்டிக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை. இதுவும் சரணடைதல் தான்.

ஒரு அடிப்படை வேறுபாட்டுடன் இரண்டும் சரணடைதலைக் காட்டுகின்றன: குரங்கின் விஷயத்தில் பொறுப்பு குட்டியினுடையது. அது தாயைப் பிடித்துக் கொள்ள வேண்டும் அல்லது வேறு எந்தப் பாதுகாப்பும் அதற்கு இல்லாமல் இருக்கலாம். அதேசமயம் பூனைக் குட்டியின் விஷயத்தில், அது முற்றிலும் அதன் தாயின் பொறுப்பாகும். அந்தப் பூனைக் குட்டி எதுவும் செய்வதில்லை.

அப்படியானால், நீங்கள் குரங்காக இருக்க வேண்டுமா அல்லது பூனைக்குட்டியாக இருக்க வேண்டுமா? பதில் என்னவென்றால், புத்திசாலியாக உங்கள் சொந்த வழிமுறையைக் கண்டு பிடியுங்கள். சிலர் குரங்கைப் போல் இருப்பதில் மிகவும் அமைதியாகவும், பலர் பூனைக் குட்டியைப் போல் செயல்படவும் நினைக்கிறார்கள். நீங்கள் சில நேரங்களில் குரங்கு போலவும், மற்ற நேரங்களில் பூனைக்குட்டி போலவும் செயல்படுவது கூடச் சிறப்பாக இருக்கலாம்.

ஒரு கிராமத்தில் வெள்ளம் வந்து, நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே இருந்தது. அங்கே குடியிருந்த அனைத்து மக்களும் ஏற்கனவே வெளியேறிவிட்டனர் ஆனால் கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்ட ஒரு மனிதர் சிரத்தையாகக் கடவுளிடம் வேண்டிக் கொண்டு தனது குடிசையின் ஓலைக் கூரை மீது நின்று கொண்டிருந்தார்.

பக்கத்துக் கிராமத்தில் இருந்து படகில் வந்த ஒருவர் இந்த மனிதரைப் பார்த்து, அவரைக் காப்பாற்றத் தன் பாதையை மாற்றிக் கொண்டு அங்கு வந்தார்.

“சகோதரரே கவலைப்பட வேண்டாம், என் படகினுள் குதித்து விடுங்கள்,” என்று உற்சாகத்துடன் கூறினார்.
“நன்றி ஆனால் நான் உங்களுடன் செல்லத் தேவையில்லை, என் கடவுள் வந்து என்னைக் காப்பாற்றுவார்.” என்று மாட்டிக் கொண்டிருந்தவர் பதில் அளித்தார்.

இந்தக் கதை மனிதனின் முட்டாள்தனத்தின் சிகரத்தைக் குறிக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால் மனித அறிவு, முட்டாள்தனம் ஆகிய இரண்டிற்கும் எல்லையே இல்லை. மற்றவர்களின் நம்பிக்கைகளையும், செயல்களையும் அபத்தமானது என்று முத்திரை குத்துவது எளிதாகும். ஆனால், நாம் நமக்குள்ளேயே பார்த்தால், நாமும் அதேபோல் இருந்திருப்பதையும் அல்லது அதையே கொஞ்சம் வித்தியாசமாகச் செய்திருப்பதையும் காணலாம்.

சரணடைதல் என்பதற்கு நீங்கள் உங்களது கண்களை மூடிக் கொண்டிருக்கவோ, செவிமடுக்காமல் இருக்கவோ, கேள்வி கேட்காமல் இருக்கவோ வேண்டும் என்று தேவையில்லை. மாறாக, கடவுளுடைய கண்கள் மூலம் உலகைப் பார்க்க வேண்டும், உங்களது உள் குரலில் கவனம் செலுத்த வேண்டும், கடவுளது பதிலைப் புரிந்து கொள்ளப் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பொருள். உண்மையான சரணடைதல் எந்த விதச் சோதனையையும், எந்த ஆய்வையும் தாங்கக் கூடியதாகும்.

ஆன்மீகப் பாதையில் குருவின் முக்கியத்துவம் பற்றியும், குருவிடம் சரணடைவது எவ்வளவு முக்கியம் என்பது பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புவதாகச் சிலர் எழுதியுள்ளனர். நான் வரும்காலத்தில் அதைப் பற்றி எழுத முயற்சிக்கிறேன். காத்திருங்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email