ஒரு சில நாட்களுக்கு முன்பு ஒரு வாசகர் பின்வரும் கருத்தை வெளியிட்டிருந்தார்:

சுவாமி ஜி,
நான் வரவிருக்கும் உங்களுடைய பதிவுகளை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன் மற்றும் உங்களுடைய கருணையால் உண்மையைப் புரிந்து கொள்வேன் என்று நம்புகிறேன். என்னுடைய புரிதலைப் பற்றிய ஒரு கேள்வி உள்ளது. வரவிருக்கும் பதிவுகளில் அதற்கான பதில் தானே வரும் என்று நீங்கள் நினைத்தால், என் கேள்விக்குப் பதில் தருவது தொடர்பான தேர்வினை நீங்களே செய்யலாம்.
“சமாதி” நிலையைப் பற்றிய ஒரு கேள்வி. சமாதி அல்லது தூய பேரின்பநிலை என்பதன் அர்த்தம் என்ன? எனக்குப் புரிந்தவரை சமாதி என்பது, ஒருவருக்கு உண்மையில் அவர் யார் என்று தெரியும் போது உள்ள ஒரு நிலை, அதாவது கடவுளுக்கும், தனக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்று தெரியும் ஒரு நிலை. ஒருவர் “ஜடம்” அல்ல, “விழிப்புணர்வு” என்று உணருகின்ற போது உள்ள ஒரு நிலை. ராஜா ஜனகர் உண்மையை உணர்ந்து பிறகு அஷ்டவக்ர கீதாயில், “நான் எப்படித் திகைக்க வைக்கும்படி உள்ளேன், என்னை நானே வணங்குகிறேன்” என்று கூறி உள்ளது போன்ற ஒரு நிலை.
என் சிறிய அறிவுடனான என் சிறிய மனம் சரியான பாதையில் செல்கிறதா என்று தயவு செய்து எனக்கு வழிகாட்டவும்.
ஹரே கிருஷ்ணா!

சமாதி என்பதன் பொருளைப் பொறுத்தவரை: நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால், அது ‘கடவுளுக்கு’ இணையானதாக இருப்பது. உபாதி என்றால் அருகாமை, கிட்டத்தட்ட ஒரு படி கீழே இருப்பதைப் போல் என்று பொருள். சமாதி என்றால் ‘அதாகவே’ என்று பொருள். அந்தக் கோணத்தில் இருந்து பார்த்தால் நீங்கள் கூறுவது சரியே, ஒருவருக்கு உண்மையில் அவர் யார் என்று தெரியும் போது உள்ள ஒரு நிலையே சமாதி ஆகும். ஆனால் தெரிந்து கொள்வதற்கும் அதை அனுபவிப்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டைச் சுருக்கமாகக் கூற விரும்புகிறேன். அடுத்தவரிடம் இருந்து பெற்ற அறிவில் இருந்து, சமாதியைப் பற்றிய அனைத்தும் ஒருவருக்குத் தெரிந்திருக்கலாம், ஆனால் உண்மையான சமாதி என்பது தெரிந்து கொள்வதற்கும் அப்பாற்பட்டது – அந்த நிலையிலேயே இருப்பதைப்பற்றியதாகும். அது உணர்வைப்பற்றியதாகும். அது அனுபவிப்பதைப் பற்றியதாகும்.

ஒருவருடைய ஆத்மா வடிவமைக்கப்படும்போது, அது இந்த ஆழ்நிலையை அனுபவிப்பதில் இருந்து ஒருவரைத் தடுக்கிறது. அந்த நிலையை ஒருமுறை அடைந்தபின் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வடிவமைப்பில்லாத அந்த நிலையைப் பராமரித்து வைத்துக் கொள்வதாகும், அப்போது சமாதி நிலையும் தொடர்ந்து இருக்கும். நான் இன்னும் கொஞ்சம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்: மிகவும் வலுவான உணர்வுகள், உடல் சார்ந்த உணர்வுகள், ஒருவரின் உடல் முழுவதும் குறிப்பாக ஆக்ஞா சக்ரா மற்றும் சகஸ்ராரா மீது வெளிப்படும். அந்த உணர்வுகள் மிகவும் ஆழமானதாகையால் உங்களுக்கு வெளியில் உள்ள எதன் மீதும் ஆர்வம் இனி இருப்பதில்லை. வெளியில் உள்ள உலகம் உங்கள் அக நிலையை அறியாமல் இருக்கலாம், ஆனால் பேரின்பமானது உடல் உணர்வுகளாகவும் மற்றும் விவரிக்கவொண்ணாத மகிழ்ச்சி துளித்துளியாகத் தொடர்ந்து உங்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும்.

நீங்கள் எழுந்த கணத்தில் இருந்து தூங்கும் கணம் வரை, விடாது இந்தத் தனி அனுபவநிலையை உணர்வீர்கள். அதுவே சமாதி நிலை ஆகும். இது எனது தனிப்பட்ட அனுபவம் மற்றும் யார் வேண்டுமானாலும் அதற்காக உழைக்கத் தயாராக இருந்தால் இதை அனுபவிக்க முடியும். சிற்றலைகள் நீரில் தான் உருவாகின்றன பனிக்கட்டியின் மீது உருவாவதில்லை, அது போல சமாதியின் போது உங்களது பேரின்ப நிலை உறைந்துவிடுகிறது. உங்களது பிளவுபடாத பேரின்ப நிலையில் எந்த வித சிற்றலையும் ஏற்படாதது மட்டுமல்ல, கோபம், காமம், வெறுப்பு மற்றும் பிற எதிர்மறை உணர்வுகள் வெளிப்படவே முடியாது.

சமாதி என்பது ஒரு ஒளிக் கற்றையைப் பார்ப்பதைப் பற்றியதோ அல்லது பிரபஞ்சத்துடன் நொடிப்பொழுது கலந்துவிட்டதைப் போன்ற உணர்வைப் பற்றியதோ அல்ல. அந்த அனுபவத்தினால் என்ன பயன்? அது எப்படி ஒருவரை மாற்றும்? நவீன காலத்தில் உள்ள பல நூல்கள், நீங்கள் தியானத்தில் அமர்ந்திருக்கும் போது ஒரு நாள் தற்செயலாக நீங்கள் சமாதி நிலைக்குச் செல்வதைப் போல், படிக்கும் வாசகர்கள் நம்புவதற்கு வழிவகுக்கின்றன. அது முற்றிலும் தவறானது, ஏனென்றால் எதைச் சரி என்று ஏற்றுக் கொள்ள முடியாதோ, எதைத் திரும்ப அடைய முடியாதோ அது யோகிகளின் கண்ணோட்டத்தில் ஏற்றுக் கொள்ள முடியாதது. சமாதியின் போது நீங்கள் முழு உணர்வுடன் இருக்கிறீர்கள். நிச்சயமாக, அந்த உணர்வு சாதாரண நிலையிலிருந்து வேறுபட்டது, மிகவும் கூர்மையானது மற்றும் முறையாக வழிவகுக்கப்பட்டது.

நான் சரியான நேரத்தில் இதைப் பற்றி இன்னும் எழுதுவேன். சமாதி, என்ற பதத்தைக் காப்பு உறை போல் மூடியுள்ள மர்மத்தை விலக்கும் ஆவலால் உங்களுக்கு இதைக் கொடுத்து இருக்கிறேன்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email