நான் சகிப்புத்தன்மை பற்றி முந்தைய கட்டுரையில் சுருக்கமாகச் சொல்லியிருந்தேன். இன்று, நான் சகிப்புத்தன்மையை எவ்வாறு நடைமுறைப் படுத்துவது என்று தெளிவுபடுத்துகிறேன். இதை நீங்கள் கடைப்பிடித்து உங்களை உணர்வுப்பூர்வமாக மாற்றிக் கொள்ள முடியும். உணர்வுப்பூர்வமான சுமை இல்லாதவர்கள், பேரின்பமான மற்றும் அமைதியான நிலையில் எளிதாக இருக்க முடிகிறது.

அடித்தளத்திலுள்ள தத்துவத்தை மறுபடி வலியுறுத்த விரும்புகிறேன். இந்த உலகத்தில் இரண்டு வகையான உணர்வுகள் மட்டுமே உள்ளன. அவை நேர்மறை மற்றும் எதிர்மறை ஆகும். நேர்மறை உங்களை வலுவாகவும், உயர்வாகவும், சந்தோஷமாகவும், எதிர்மறை உங்களை அதற்கு எதிர்மாறாகவும் உணர வைக்கிறது. உணர்ச்சிகள் உங்களின் முகமூடி இல்லாத இயற்கையான நிலையை, மற்றவர்களுக்கு மட்டுமில்லை, உங்களுக்குமே எடுத்துக்காட்டுகிறது. ஒருவருக்கு எண்ணங்கள் உள்ளவரை, உணர்ச்சிகளும் இருந்து கொண்டே இருக்கும். உங்களின் உணர்ச்சிப்பூர்வமான பக்கத்தை இழப்பது உங்களின் இலக்கு அல்ல, பதிலாக, உங்களுக்குத் தேவையான நேர்மறையான உணர்ச்சியை உங்களின் விருப்பப்படித் தேர்வு செய்ய முடிவதாகும். நீங்கள் மன வலிமையைத் தொடர்ந்து பெறும் பொழுது, இறுதியாக அன்பு மற்றும் பேரின்பத்தில் நிலையாக நின்று உங்களின் உணர்ச்சிகளை மேம்படுத்த கற்றுக் கொள்கிறீர்கள்.

கவனமான நடைமுறையினால், உங்களின் உணர்வுகளைக் கவனிக்கவும், சிறந்த முறையில் அவற்றைப் புரிந்து கொள்ளவும், நெறிப்படுத்தவும், மாற்றவும், எதிர்மறைகளை நிராகரிக்கவும் முடியும். அதற்காக, நீங்கள் மீண்டும் மோசமாக உணர மாட்டீர்கள் என்றோ அல்லது எப்போதும் கஷ்டப்பட மாட்டீர்கள் என்றோ அர்த்தம் இல்லை. இது போன்ற உணர்வுகள் அதிக நேரம் நீடிக்காமல் சிறிது நேரம் தான் இருக்கும் என்று பொருள். நேர்மறை மற்றும் எதிர்மறை உணர்வுகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆழமான ஒன்று உள்ளது. அதிக நேரம் அதைப் பற்றிக் கொண்டிருந்தால், அதன் தாக்கமும் பெரியதாக இருக்கும். சூடான ஒரு தட்டினைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு கணம் அதைத் தொட்டால், ஒரு கூச்ச உணர்வு இருக்கலாம். ஆனால் அதை எடுத்துப் பிடித்துக் கொண்டால், அது சுட்டுவிடும். மேலும் அழிக்க முடியாத தழும்பு கூட ஏற்படலாம். இதேபோல் விரும்பத்தகாத உணர்வுகளை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தால் அவை சரி செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். நீங்கள் நேர்மறையான உணர்வுகளைப் பிடித்துக் கொண்டிருந்தால், அவை நிச்சயமாக உங்களை வெல்ல முடியாதவராக ஆக்கிவிடும்.

சகிப்புத்தன்மையை நடைமுறைப் படுத்துவது அற்புதமான ஒரு பயிற்சியாகும். நீங்கள் நன்றியுடையவராகவும், நேர்மறையானவராகவும் இருக்கப் பழகினால் சகிப்புத்தன்மையுடையவராக இருப்பது எளிதாகிறது. அதைப் பழக இங்கே சில குறிப்புகள்:

1. இதைத் தொடங்க ஒரு கால நிர்ணயம் எடுத்துக் கொள்ளுங்கள். நாற்பது நாட்கள், அல்லது நீங்கள் விரும்பினால் குறுகிய ஒரு காலம்.
2. சகிப்புத்தன்மையின் பயிற்சி பற்றி நீங்களே ஒரு நினைவூட்டல் எழுதிக் கொண்டு அதை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது படியுங்கள்.
3. ஒரு எதிர்மறை உணர்வு துளிர்க்கிறது என்று உணர்ந்தவுடனேயே, என்ன நேர்ந்தாலும், அதைக் கைவிட எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்ற உறுதிமொழி ஒன்றை எடுங்கள். அடிப்படையில், உணர்வுகள், ஆசைகளைப் போன்றவை யாவும், விலக்கிக் கொள்ளாத எண்ணங்களே என்று நினைவில் கொள்ளுங்கள்.
4. முறைகேடுகளை முறைகேடுகளாலும், வன்முறையை வன்முறையாலும், வெறுப்பை வெறுப்பினாலும், எதிர்மறை உணர்வுகளை வேறு எந்த எதிர்மறை உணர்வுகளாலும் முறியடிக்கச் செய்ய மாட்டேன் என்று நீங்களே சத்தியம் செய்து கொள்ளுங்கள்.
5. உங்கள் உணர்ச்சிகளின் மாற்றத்தின் ஒரு பகுதியாக, சகிப்புத்தன்மையின் பயிற்சியைச் செய்யும் போது, எந்த எதிர்வினையும் காட்டாமல் உங்களால் முடிந்தவரை நடுநிலையில் இருக்க முயற்சி செய்யுங்கள்.

உங்களுக்கு அது பழக்கமாகும் வரை திரும்பத்திரும்பப் பயிற்சி செய்யுங்கள்.

எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி சகிப்புத்தன்மையுடன் இருக்க உங்களை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அது கடினமானதாக இருக்கும் ஆனால் செய்யக்கூடியதாகும். உங்களிடம் சகிப்புத்தன்மை இருப்பதால், நீங்கள் அனுதாபத்தையும், நல்ல முறையில் நடத்தப்படுவதையும் எதிர் பார்த்தால், உங்களின் பயிற்சியை அது இன்னும் கடினமானதாக ஆக்கிவிடும். முக்கியமாக மற்றவர்கள் அதை கவனித்திருக்கக் கூட மாட்டார்கள். உண்மையில், உங்களின் சகிப்புத்தன்மையை, உங்களின் திறமையின்மை, இயலாமை, கோழைத்தனம் அல்லது வேறு ஏதாவது என்று தவறாகக் கணித்திருக்கலாம். அந்த நேரத்தில், நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது, அவர்களின் கருத்துக்கள் அவர்களின் சொந்த பிரதிபலிப்பே தான் என்பதாகும்.

இது சமீபத்தில் எனக்கு நடந்தது. யாரோ ஒருவர் ஒரு கேள்வியைக் கேட்டார். எனக்கு அதற்குப் பதில் சொல்ல விருப்பமில்லை. ஏனெனில் அது வெறும் அறிவுப் பூர்வமானக் கேள்வியாகும். எனக்கு நடைமுறைக்கு ஒவ்வாத தலைப்புகளில் நீண்ட உரையாடல்களை நிகழ்த்துவதில் பெரிய ஈடுபாடு இல்லை. நான் நடைமுறையை நம்புகிறவன். மற்றொருவர் அதிலிருந்து வேறு எதையோ முடிவு செய்து கொண்டு தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அவரது கருத்துக்களுக்கு அவருக்கு உரிமை உள்ளது என்று நான் பதில் எழுதினேன். என் பதில் அவருக்குத் திருப்தி அளிக்காததால் அவர் மீண்டும் எழுதினார். நான் பதிலளிக்க விரும்பாததால் ஒரு கதையை விளக்கினேன். அவருக்கு அந்தக் கதையைப் பிரயோஜனமற்றதாகத் தோன்றியதால் மேலும் எழுதினார். நான் ஆழ்மனத்தின் தேர்வினைக் கையாண்டதாகப் பதில் எழுதினேன். இதில் ஒரு முக்கியமான விஷயம்; ‘அவரவரின் தேர்வினைப் பொறுத்தது’ என்பது தான். அதனால் அவர் கெட்டவர் என்று பொருளல்ல, உண்மையில் அவர் அறிவுள்ளவர் மற்றும் உன்னதமானவர். அவரது கேள்விகளைப் போலவே நோக்கங்களும் சரியாகவே இருந்தன. அவர் அடைந்த முடிவுகளும், அவரது சொந்த அனுபவங்கள் மற்றும் அறிவார்ந்த கட்டமைப்பின் விளைவுகள் ஆகும். எனினும், நான் தேர்வு செய்தபடியே இருக்க முடிவு செய்தேன்.

தொடக்கத்தில் மற்றவர்களின் பதில்கள் உங்களைப் பாதிக்கும். ஆனால் நீங்கள் உறுதியுடனும், நேர்மறையான அணுகுமுறையுடனும், உறுதியான விழிப்புணர்வுடனும் தொடரும் போது, அது மிகவும் சிறிய பிரச்சனையாக ஆகி விடுகிறது. சிலர் உங்களைத் தனிமையில் சும்மா இருக்க விடுவதில்லை. அந்த நேரத்தில், நீங்கள் தேர்ந்தெடுத்ததைப் பயிற்சி செய்யுங்கள். நமது அழகான சூபி கதாப்பாத்திரத்தின் வாழ்க்கையிலிருந்து ஒரு சிறிய சம்பவம்:

முல்லாவின் மனைவி அவர் மேல் மிகக் கோபம் கொண்டு, உரத்தக் குரலில் கத்திக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் கணவன் எந்த எதிர்வினையும் காட்டவில்லை. அவர் ஒரு மூலையில் அமைதியாக உட்கார்ந்து இருந்தார். அவளுக்குக் கோபம் இன்னும் அதிகமாகி அவனிடமிருந்து மறுமொழியை ஊக்குவிக்க அனைத்து வகையான மொழிகளையும் உதிர்த்தாள். முல்லா ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை.
ஆதரவற்ற உணர்வுடனும், விரக்தியுடனும், நான் மிகுந்த கோபத்துடன் இருக்கும் போது என்னுடன் விவாதிக்க வேண்டாம் என்று பல ஆயிரம் முறைக் கூறிவிட்டேன் என்றாள்.
நான் ஒரு வார்த்தை கூட உச்சரிக்கவில்லையே என்று முல்லா கூறினார்.
ஆமாம், ஆனால் வெகுவாக எதிர்க்கும் தோரணையில் கவனித்துக் கொண்டிருந்தீர்கள்.

உண்மையான சோதனை மற்றவர் உங்களைப் பேச வைக்க முடிவு எடுக்கும் போது தான். அந்தத் தருணம் தான் உங்களின் அமைதியைக் காக்கும் நேரமாகும். நீங்கள் உங்களின் நிலையிலேயே இருந்து கொண்டு, மற்றவர்கள் அவர்களின் உணர்வுகளைத் தேர்ந்தெடுக்கச் சுதந்திரம் அளியுங்கள். தொடர்ந்து இதை உறுதியாகப் பயிற்சி செய்யுங்கள், உங்களின் இந்தப் புதிய மாறுதலை விரும்ப ஆரம்பித்து விடுவீர்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email