மிக்கப் புகழ் பெற்ற மராட்டிய மாமுனிவர், சந்த் ஏக்நாத் எந்த ஒரு சாதாரணத் துறவியும் இல்லை. ஒரு முழுமையான அவதாரமாகும். அவருடைய செயல்களும் அவரது வார்த்தைகளும் எந்த விதமான முரண்பாடுகளும் இல்லாமல் சரியாக ஒத்துப் போயின. உண்மையில் இந்த வழி —அதாவது போதிப்பதையே நடைமுறைப்படுத்துவது தான், சாதாரணப் போதகரிலிருந்து உண்மையான துறவியைத் தனிப்படுத்துகிறது. ஏக்நாத் அவர்களின் வாழ்க்கை நன்னடத்தை, குருபக்தி குறிப்பாக அவரது சகிப்புத்தன்மை ஆகியவற்றால் மிகப் புகழ் வாய்ந்ததாக இருந்தது. யாரும் அவருக்குக் கோபம் வந்து பார்த்ததில்லை. என்ன வந்த போதிலும் அவர் தனது மன அமைதியை இழந்ததில்லை.

ஒவ்வொரு நாள் காலையிலும் அந்த முனிவர் தன் காலைக் கடன்களை முடிக்கக் கோதாவரி நதிக்குச் செல்வார். நதிக்குச் செல்லும் வழியில் வாழ்ந்த, அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு மனிதன், ஒருவரும் கோபப்படாமல் இருக்க முடியாது என்று நிரூபிக்க முடிவு செய்தான். அதாவது, ஒருவராலும் நித்தியமாக அல்லது எண்ணற்ற சகிப்புத்தன்மையுடன் இருக்க முடியாது என்பதாகும். அவன், ஏக்நாத் அவர்களைக் கட்டாயப்படுத்தி அமைதி இழக்கச் செய்து, தன் மேல் கோபப்பட்டுக் கூச்சலிட வைக்க முடியும் என்று கூறினான். இந்த உலகின் பெரும்பாலான மக்களைப் போல், இதனால் அவன் எந்தப் பலனையும் அடையப் போவதில்லை என்றாலும் தனது ஆணவம் மற்றும் அறியாமை இரண்டையும் மகிமைப்படுத்த, தன் நிலையை நிரூபிக்க வேண்டும் என்று எண்ணினான்.

ஒரு நாள் ஏக்நாத் அவனது வீட்டைக் கடந்து சென்ற போது, அவரைத் தகாத சொற்களைக் கொண்டு திட்டினான். ஏக்நாத் எந்தவிதமான எதிர்வினையும் காட்டாமல் போய்க் கொண்டிருந்தார். தான் கூறுவதை நின்று, கேட்டுவிட்டுச் செல்லுமாறு அறைகூவினான். அந்த முனிவர் அக்கணமே செல்வதை விடுத்து, அந்த மனிதனை நோக்கித் திரும்பி, ஒரு மென்மையான புன்னகையுடன் நின்றார். அவனுக்குத் தெரிந்த அனைத்து விதமான தகாத சொற்களைக் கொண்டு வசைமாறிப் பொழிந்தான். அவரிடம் எந்த எதிர்வினையையும் உருவாக்க முடியாத தன் இயலாமையால் விரக்தி அடைந்து சினத்துடன் மீண்டும் தன் வீட்டிற்குள் அடிபட்ட உணர்வுடன் சென்றான். ஏக்நாத் நதியை நோக்கிப் புறப்பட்டார்.

அடுத்த நாள் காலையும் அவன் இதே முயற்சியில் ஈடுபட்டும் வெற்றி பெறவில்லை. அவன் இந்த முறை இன்னும் உறுதியாக மற்றும் சிறப்பாகத் தயார் செய்து கொண்டு வந்திருந்தான். ஏக்நாத் வழக்கம் போல் எதிர்வினையாகச் செயல்பட வில்லை. அவர் ஆற்றில் இருந்து திரும்பி வந்த போது அவன் ஒரு வாளி நிறைய அழுக்கு நீர் மற்றும் சமையலறைக் கழிவுகளுடன் காத்திருந்தான். அவன் அந்த துறவியைப் பார்த்தவுடன் அந்த வாளியில் இருந்த அழுக்கு நீர் முழுவதையும் அவர் மேல் விசிறி அடித்தான். சேற்று நீர் அவரது வெள்ளை அங்கியை நனைத்தது. மீதமான உணவில் இருந்த திட கழிவுகள், ஒரு பிடிப்பைத் தேடி அலைவது போல் அவரது வஸ்திரத்தில் சிக்கிக் கொண்டன. அந்த முனிவர் அங்கியின் உலர்ந்த மூலையால் தனது கண்களைத் துடைத்துக் கொண்டு ஒரு வார்த்தையும் பேசாது மீண்டும் ஆற்றை நோக்கி நடந்தார். அந்த மனிதனும் அத்துடன் விடுவதாக இல்லை.

ஏக்நாத் திரும்பி வந்த போது முன்பு நடந்ததைப் போல் இன்னொரு முறையும் நடந்தது. மீண்டும் எந்த எதிர்வினையும் காட்டாமல் அவர் மனதார மற்றொருமுறை குளிக்க ஆற்றிற்குச் சென்றார். அடுத்த ஆறு மணி நேரம் இதேபோல் திரும்பத்திரும்ப நடந்தது. பதினெட்டு முறை அந்த மனிதன் அழுக்கு நீரால் முனிவரின் வெள்ளை அங்கியை நனைத்தான். பதினெட்டு முறை இந்தச் சவால் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற முயற்சித்தான். அந்த முனிவரை அவரது நடுநிலையிலிருந்து தடுமாறச்செய்ய எண்ணினான். ஆனால் ஒவ்வொரு முறையும் முன்பை விட மிக மோசமாகவே அவன் தோல்வியடைந்தான்.

பத்தொன்பதாம் முறை அவன் வேறு ஒரு திட்டம் வைத்திருந்தான். அவனுள் இருந்த பலவீனமான, இழிவான நபர் ஏற்கனவே அவனை விட்டு விலகி விட்டான். இந்த முறை வாளியை மலர்களால் நிரப்பி அதைத் துறவியின் மேல் கொட்டினான். ஏக்நாத் லேசான புன்னகை மட்டுமே செய்தார். அந்த மனிதன் அவர் பாதங்களில் விழுந்தான். அவன் கண்ணீர் துளித்துளியாக இல்லாமல் வாளிவாளியாக உருண்டோடியது. அவன் தன்னை மன்னிக்குமாறு கெஞ்சினான். அவனுள் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டது. அந்த முனிவர் அவருடைய மிக உயர்ந்த நடத்தை, சிறந்த குணம், சகிப்புத்தன்மையின் வலிமை ஆகியவற்றால் அந்தச் சவால் செய்த மனிதனை வென்று, அவனை என்றென்றும் நல்லவனாக மாற்றினார்.

அவர் எப்படி எந்த எதிர்வினையும் காட்டாமல் இருந்தார்? எப்படி அவனது தகாத செயலைத் தாங்கிக் கொண்டார்? எப்படி இந்த அளவு சகிப்புத்தன்மையுடன் இருக்க முடிந்தது? என்று அந்த மனிதன் வினவினான்.

‘சகிப்புத்தன்மையா?’ நீ விரும்பியதை நீ செய்தாய். நான் விரும்பியதை நான் செய்தேன். நீ தேர்ந்தெடுத்ததை நீ பயிற்சி செய்தாய். நான் தேர்ந்தெடுத்ததை நான் பயிற்சி செய்தேன். தவிர, நான் உனக்கு நன்றி சொல்ல வேண்டும். பதினெட்டு முறை நான் இன்று என் காரியங்களைச் செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இன்று என் வாழ்க்கையில் மிகப் புனிதமான நாள் ஆகும் என்றார்.

சகிப்புத்தன்மை என்பது பிடித்து வைத்துக் கொள்வதில் இல்லை. அது பிடித்து வைத்துக் கொள்ளாமல் இருப்பதாகும். அது திரும்பப் பெறுவதைப் பற்றி அல்ல. மேலும் மேலும் விடாமல் முயற்சி செய்து கொண்டிருப்பதைப் பற்றியதாகும். சகிப்புத்தன்மை என்பது அன்பின் மற்றொரு வெளிப்பாடு ஆகும். அன்பு என்பது எப்போதும் நீங்கள் மற்றவர்களுக்கு செய்வதைப் பற்றி மட்டுமில்லை, மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்கிறார்களோ அதைச் செய்ய அனுமதிப்பதைப் பற்றிய ஒரு பெரிய ஒப்பந்தமும் ஆகும். சகிப்புத்தன்மையும், அமைதியும் ஒன்றுக்கொன்று நேரடி விகிதாசாரத்தில் இருக்கும். நீங்கள் பதில் கொடுக்காமல் தவிர்ப்பது மட்டம் சகிப்புத்தன்மை அல்ல. அதை விட இன்னும் மேலானது. அடுத்த கட்டுரையில் நான் உங்களுக்கு சகிப்புத்தன்மையை நடைமுறையில் கொண்டு வருவது பற்றி விளக்குகிறேன். நன்றியைப் போல் சகிப்புத்தன்மையும் நீங்கள் நித்திய அமைதியை அனுபவிக்க உதவ முடியும்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email