பிரம்ம தத் நாற்பது ஆண்டுகளாக அரசுக்குச் சேவை செய்து கொண்டு இருந்தார். காசி அரச சபையில் மிகவும் நம்பகமான அமைச்சர் அவர். அரசர் எல்லா முக்கிய விஷயங்களிலும் அவரிடம் ஆலோசனை செய்வது மட்டுமல்லாமல், எந்த அளவிற்கு அவர் மேல் நம்பிக்கை வைந்திருந்தார் என்றால், பிரம்ம தத் அடிக்கடி அரச குடும்பத்துடன் உணவருந்தி வந்தார். அரசரின் தனிப்பட்ட அறைகளுக்குச் செல்ல அவருக்கு முழுமையான அனுமதி இருந்தது. அரச அவையினர் அவரது நேர்மைக்காக அவரை மதித்தார்கள், காசியின் குடிமக்கள் அவரது ஞானத்திற்காக அவரை மதித்தார்கள்.

ஒரு நாள், பத்திரத்தில் பதிவு செய்யாமல், பிரம்ம தத் ஒரு சில தங்க நாணயங்களை எடுத்துச் செல்வதைக் கருவூலப் பாதுகாப்பாளர் பார்த்தார். பாதுகாப்பு அதிகாரியிடம் அவர் புகார் தெரிவித்த போது, கௌரவத்திற்கு உரிய அமைச்சர் அவசரமாகச் செல்ல வேண்டி இருந்திருக்கும், அல்லது காவலாளி தவறாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று கூறி அந்த அதிகாரி உடனடியாக அவர் குறிப்பிட்டதைத் தள்ளுபடி செய்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, இதே விஷயம் மீண்டும் நடந்தது: பிரம்ம தத் இன்னும் அதிக நாணயங்களைத் திருடினார், மீண்டும் புகார் தள்ளுபடி செய்யப்பட்டது. காவலாளி மூன்றாம் முறையாக இந்த நிகழ்வைப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்தபோது, இரு புதிய காவலாளிகள் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டனர். அவர்களும் பிரம்ம தத் வழக்கமாக அரசுக் கிடங்கிலிருந்து சில நாணயங்களை எடுத்துக் கொண்டு செல்வதாக உறுதிப்படுத்தினர்.

அவர்கள் இந்த விஷயத்தை அரசரின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்கள், பிரம்ம தத் போன்ற நற்பண்புகள் உள்ள ஒருவரைச் சந்தேகித்ததற்காக அரசர் அவர்களைத் தண்டித்தார். பாதுகாப்புப் படையினர் தங்கள் வேலையைச் செய்வதை இது தடுக்கவில்லை, இறுதியில் அவர்கள் ஒரு நாள் அவரைக் கையும் களவுமாகப் பிடித்தனர். மீண்டும் ஒருமுறை அவர் தங்க நாணயங்களை ஆவணப்படுத்தாமல் ஒரு சிறிய பையில் கொண்டு சென்ற போது பிடித்தனர்.

“என்னைத் தொட உங்களுக்கு என்ன தைரியம்? நான் யார் என்று உங்களுக்குத் தெரியாதா?” என்று காவலாளிகள் அவரைப் பிடித்ததும் பிரம்ம தத் கத்தினார்.
“நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், இப்போது நீங்கள் ஒரு திருடன்,” என்று பாதுகாப்புத் தலைவர் கூறினார். “சிறந்த ஒத்துழைப்புக் கொடுங்கள் அல்லது நீங்கள் வருந்த வேண்டி இருக்கும்.”

பிரம்ம தத் அந்த நிலைமையிலிருந்து பிடிபடாமல் வெளியே வர முயன்றார். ஆனால் காவலர்கள் மனம் இரங்காமல் நடந்து கொண்டனர் மற்றும் வலுக் கட்டாயமாகக் கைது செய்து, அவரை ஒரு அற்பமான குற்றவாளியாக அரசரின் முன் நிறுத்தினர்.

“நீங்கள் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள என்ன சொல்லப் போகிறீர்கள்?” என்று அரசர் பிரம்ம தத்தைக் கேட்டார்.
“எதுவும் இல்லை, அரசே.”
“இந்த ஏமாற்றுக்காரனை சிறைச்சாலையில் அடையுங்கள்” என்று அரசர் கட்டளையிட்டார். “நான் ஒரு வாரத்திற்குள் முழு தண்டனையை அறிவிப்பேன்.”
வாழ்நாள் முழுவதும் அவர் நம்பியிருந்த அந்த மனிதர் ஊழல் நிறைந்த அதிகாரியாக இருந்திருக்கிறார் என்று அறிந்த மன்னர் கலக்கம் அடைந்தார். அவர் பிரம்ம தத்தின் சட்டையில் இருந்த அரச முத்திரையை உருவி விட்டு, அரசவையை ஒத்தி வைத்தார். இந்தச் செய்தி காட்டுத்தீ போல் பரவியது, மக்கள் பிரம்ம தத்தை ஒரு திருடன், முரடன், மோசடிக்காரன் மற்றும் பலவாறு அழைத்தனர்.

“எல்லாம் சரியாக உள்ளதா?” என்று அரசி, நடு நிசியில் அறையில் நடந்து கொண்டிருந்த அரசரிடம் கேட்டாள். “நீங்கள் கவலையாக உள்ளது போல் தெரிகிறது.”
“பிரம்ம தத் போன்ற ஒருவர் இவ்வளவு தரம் தாழ்ந்து என்னை ஏமாற்றுவார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை,” என்றார் அரசர்.
“அவர் தனது பாதுகாப்புக்கு எதுவும் சொல்லவில்லை? உண்மையாகவா?”
“ஒரு வார்த்தையும் இல்லை.”
“அவரது செயலுக்கு கண்ணுக்குத் தெரியாத வேறு காரணம் இருக்க வேண்டும். நீங்கள் பிரம்ம தத்திடம் தனிப்பட்ட முறையில் பேச வேண்டும். அவரைப் போன்ற ஒருவர் சிறு தொகையினைத் திருடத் தேவையில்லை, நீங்கள் அவ்வாறு நினைக்கவில்லையா?” என்று அரசி கூறினாள்.

தீர்ப்பை அறிவிக்கும் முன்னர், மன்னர் பிரம்ம தத்தைத் தனியாகக் கூப்பிட்டு, “உன்னைப் போன்ற புத்திசாலித்தனமான, பேர்பெற்ற மனிதர் எப்படி இதைச் செய்ய முடியும்? நீங்கள் என் தந்தையிடம் பணியாற்றி உள்ளீர், நான் உங்கள் மடியில் விளையாடி இருக்கிறேன். உங்களுக்குப் பணம் வேண்டும் என்றால் என்னிடம் கேட்டிருக்கலாம் அல்லது கடனாகவாவது கேட்டிருக்கலாம்,” என்றார்.

“மாட்சிமை மிக்கவரே, ஒரு பைசா கூடத் தவறாக எடுக்கப்படவில்லை. ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக எடுத்துக் கொள்வதற்கு முன், நான் ஏற்கனவே என் பையிலிருந்து அந்தப் பணத்தைப் போட்டுவிட்டேன். நீங்கள் அதை சரிபார்க்கச் சொல்லலாம். இது ஒரு எளியப் பரிசோதனையாகும்.”
“பெரியவரே, இது புதிர் போடுவதற்கான நேரம் இல்லை, தெளிவாகப் பேசுங்கள்,” என்று மன்னர் பொறுமையற்ற முறையில் சொன்னார்.
“என்னைப் பற்றிய எது உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது? அது என் ஞானமா, நீண்ட ஆண்டுகள் நான் செய்த சேவையா, என் நடுநிலை தவறாத ஆலோசனையா, என் நற்பெயரா அல்லது வேறு என்ன?,” என்று சமீபத்தில் நான் யோசிக்கத் தொடங்கினேன். “காசியின் அதிகாரிகள் மற்றும் மக்கள் எதற்காக என்னிடம் மரியாதை காட்டினார்கள் என்று அறிந்து கொள்ள ஆசைப்பட்டேன்.”
“ஒருவேளை அது அனைத்துமே இருக்கலாம்.”
“நான் ஒப்புக்கொள்கிறேன்’’ என்று பிரம்ம தத் தொடர்ந்தார், “அரசே ஆனால், எதாலுமே என்னைக் காப்பாற்ற முடியவில்லை. ஒரு சிறிய தவறான நடத்தையால் நான் உடனடியாக ஒரு ஏமாற்றுக்காரன், துஷ்டன் மற்றும் பலவாறு பெயரிடப்பட்டேன். என் நடத்தை மட்டுமே எனக்கு மரியாதையைத் தேடித் தந்தது என்ற முடிவிற்கு நான் வந்திருக்கிறேன். என்னுடைய நடத்தை, கேள்விக்குரியதாக ஆனவுடன் முக்கியமாகத் தோன்றிய அனைத்துமே மறைந்து போயின.”

இந்தக் கதையில் வாழ்நாள் முழுமைக்கும் மதிப்புள்ள ஞானத்தை நான் காண்கிறேன். நமது நடத்தையே நமது கல்வி, வளர்ப்புமுறை மற்றும் குணம் ஆகியவற்றிற்கான முதல் அறிமுகம் ஆகும். நம்மை விடத் திறமையான, திறன்வாய்ந்த, அறிவார்ந்த மற்றும் புத்திசாலித்தனம் உடையவர்கள் எப்போதும் இருக்கிறார்கள். தோற்றம், செல்வம், சாதனைகள் ஆகியவற்றில் நம்மைக் காட்டிலும் மேலானவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இருப்பினும், ஒரு பெரிய அளவில் பார்த்தால் எதுவுமே ஓர் பொருட்டில்லை. நீங்கள் எவ்வளவு காலம் அவர்களுக்காக உழைத்தீர்கள், உங்கள் எண்ணங்கள் எவ்வளவு உண்மையானவை அல்லது உங்கள் அறிவின் திறன் எவ்வளவு உயர்வானது என்பது மற்றவர்களுக்குச் சிறிதளவோ அல்லது அது ஒரு பொருட்டே இல்லாமலோ இருக்கலாம். இறுதியில் எது முக்கியமானது என்றால் எவ்வளவு உயர்வானது உன்னுடைய நடத்தை என்பதே ஆகும்.

நிச்சயமாக நமக்கு, என்ன அல்லது எவ்வளவு தெரியும் மற்றும் நம்மிடம் என்ன அல்லது எவ்வளவு உள்ளது என்பதைப் பொறுத்தே நாம் மதிப்பைப் பெறுகிறோம். அதுவும் அடித்தளத்தில் நம்மிடம் நல்ல நடத்தையே உள்ளது என்ற நம்பிக்கையில் தான், நாம் கௌரவங்களைப் பெறுகிறோம். யாரும் ஒரு துறவியை மதிப்பதைப் போல் குண்டர்களை (ஒருவேளை அச்சத்தினால் ஆனால் ஆத்மார்த்தமாக இல்லாமல்) மதிக்க மாட்டார்கள். ராமர், புத்தர், மகாவீரர், கிறிஸ்து அல்லது முகம்மதுவின் வாழ்க்கையை நீங்கள் ஆய்வு செய்தால், அவர்களுக்கு முன் தோன்றிய ரிஷிகளோ அல்லது துறவிகளோ உலகிற்குச் சொல்லத் தவறிய எந்த உண்மையையும் அவர்கள் கூறவில்லை என்பதைக் கண்டு கொண்டிருப்பீர்கள். அவர்கள் பகிர்ந்து கொண்ட எல்லாவற்றையும் உலகத்தினர் முன்பே அறிந்திருந்தனர். அதற்கு மாறாக, மனித சரித்திரத்தில் அவர்களுக்கு ஒரு அழியாத நிலையைப் பெற்றுத்தந்தது அவர்களது நன்னடத்தையே ஆகும்.

yad yad acarati sresthas tat tad evetaro janah,
sa yat pramanam kurute lokas tad anuvartate. (Bhagavad Gita, 3.21)

யத் யத் அசரதி ஶ்ரேடஸ் தத் ததேவேதரோ ஜந:
ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் ததநுவர்த்த்தே (பகவத் கீதை, 3.21)

ஒரு உயர்ந்த மனிதனின் (அல்லது பெண்ணின்) நடத்தை எப்படி இருந்தாலும், பொது ஜனம் அதைப் பின்பற்றுகிறார்கள். சிறந்த மக்கள் தங்களுடைய நன்னடத்தையைக் கொண்டு அமைத்துக் கொடுத்ததை, இந்த உலகம் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு அதை அடைய முயற்சிக்கிறது.

IAST: yad yad ācharati śhreṣhṭhas tat tad evetaro janaḥ
sa yat pramāṇaṁ kurute lokas tad anuvartate.

என் பார்வையில் நடத்தைக்கு மூன்று அம்சங்கள் உள்ளன. ஒன்று, நாம் எப்படி நம்மைக் காட்டிக் கொள்கிறோம், மற்றும் அதன் விளைவாக மற்றவர்களுடன் நாம் எப்படி நடந்து கொள்கிறோம். இரண்டு, நமது வார்த்தைகள் அல்லது வாக்குறுதிகளை நமது செயல்கள் எவ்வளவு உண்மையானதாய்க் காட்டுகின்றன. மூன்று, எல்லாச் சூழ்நிலைகளிலும் நாம் எவ்வாறு செயல்படுகிறோம். துன்பங்களை எதிர்கொள்ளுதல், ஆசைகளுடன் போராடுதல் அல்லது செல்வத்தில் புரளுதல் எதுவாக இருந்தாலும், நமது நடத்தை மட்டுமே உள்ளுக்குள் நாம் யார், நாம் எப்படிப்பட்டவர் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

ஒரு நல்ல நடத்துநர், நமது ஆன்மாவை நெகிழ வைக்கும் இசையை உற்பத்தி செய்யும் கலைஞர்களின் ஒரு குழுவினரை எந்தச் சிரமமும் இன்றி வழிநடத்துவதைப் போலவே, நமது எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்கள் ஆகியவற்றின் குழுமத்தை நமது மனமே வழிநடத்துகிறது. அவை இசைவாக இருக்கும்போது, வாழ்க்கை என்னும் இசைக்குழு, அழகான இசை மூலம் உயிர் பெற்று வருகிறது. ஆனால், ஒவ்வொருவரும் வெவ்வேறு ஸ்ருதியில், வெவ்வேறு துரித நடையில், நடத்துநரின் அறிவுரையைப் பொருட்படுத்தாமல், மற்றவர்களின் இசையைப் பொருட்படுத்தாமல், அலட்சியமாக வாசிக்கும் போது வெளியே வரும் அனைத்தும் வெறுப்புக்குரிய சத்தமே ஆகும்.

“நான் ஒரு அடிமை என்றால் என் மதிப்பு என்னவாக இருக்கும்?” என்று மன்னர் முல்லா நஸ்ருதினிடம் கேட்டார்.
“நினைத்துப் பார்க்கவே முடியாது, அரசே.”
“ஆனாலும், நான் வலியுறுத்துகிறேன். யூகித்து ஒரு மதிப்பைக் கூறு.”
“உங்கள் அரச அங்கிகளுடனும், அலங்காரத்துடனுமா அல்லது அது இல்லாமலா?” என்று முல்லா கேட்டார்.
“இப்போது இருப்பதைப் போல், என் மேல் உள்ள அனைத்துடனும்.”
“சுமார் தொள்ளாயிரம் தினார்.”
“அது அபத்தமானது, முல்லா, என் துணிகள் மட்டுமே அவ்வளவு விலையுள்ளவை.”
“அரசே! ஏற்கனவே நான் எல்லாவற்றையும் சேர்த்துவிட்டேன்,” என்று முல்லா கூறினார்.

மென்மையான சொற்கள், உன்னத நோக்கங்கள் மற்றும் உண்மையான செயல்கள் இல்லாமல், நமது உடைமைகளின் மொத்தத் தொகைக்கு மேல் நாம் மதிப்புக்குரியவர்கள் அல்ல. மனிதக்குலத்திலிருந்து, தெய்வீகத்திற்கான பயணம் நல்ல நடத்தையால் வேயப்பட்டிருக்கிறது. மக்கள், நாம் அவர்களுக்கு என்ன செய்கிறோம் என்பதைக் கொண்டு நம்மை விரும்பலாம், நம்மிடம் என்ன உள்ளது என்பதைக் கொண்டு நமக்கு மரியாதை அளிக்கலாம், ஆனால் இறுதியில் நாம் அவர்களை எவ்வாறு உணர வைக்கிறோம் என்பதைக் கொண்டு தான் நம்மை நேசிக்கிறார்கள். மேலும், மற்றவர்களை நாம் எவ்வாறு உணர வைக்கிறோம் என்பது பெரும்பாலும் நம் நடத்தையையே முற்றிலும் சார்ந்திருக்கிறது. இது அவ்வளவு எளிமையானது!

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email