இந்த ஒரு நபர் மட்டும் தொந்தரவு தரவில்லை என்றால், எனது வாழ்க்கை மிகவும் சரியானதாக இருக்கும். நான் கலக்கமடைவதற்கு எந்தவொரு காரணமும் இருக்காது. எதுவும் அல்லது யாரும் என்னைக் கோபமூட்ட முடியாது.

இது போல் எவ்வளவு முறை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்கள்?

இது நாம் விரும்பும் ஒரு எண்ணமாகும். உண்மையில், இது சாத்தியமற்றது. ஏனெனில் இந்தப் பிரச்சனை முற்றிலும் மற்ற நபரினால் ஏற்படுவது இல்லை.

நீங்கள் உங்களது வாழ்க்கையைப் பின் நோக்கிப் பார்த்தால், நீங்கள் செலவழித்த பல வருடங்களில் அல்லது தசாப்தங்களில் நீங்கள் கோபம் கொண்ட, எரிச்சல் அடைந்த அல்லது விரக்தி அடைந்த நேரங்களில் எல்லாம் யாரோ ஒருவரோ அல்லது ஒரு காரணமோ இருந்திருப்பது புரியும். இன்று நீங்கள் இந்த நபரால் கலக்கம் அடைகிறீர்கள் என்றால், நேற்று இதே போன்ற உணர்வுகளை வேறு யாரோ ஒருவரால் அனுபவித்து இருப்பீர்கள் மற்றும் உங்களது நாளை, மற்றொரு நபரை உங்களுக்கு அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது. மீண்டும் ஒரு முறை இந்தப் புதிய நபர் உங்களுடன் இசைந்து நடக்காத, உங்களை மதிக்காத, மரியாதை அளிக்காத, புரிந்து கொள்ளாத, இதைப் போன்று பல்வேறு விதங்களில் இருக்கக் கூடும். எத்தனை பேர் நிபந்தனையின்றி உங்களை விரும்பினார்கள் அல்லது முற்றிலும் புரிந்து கொண்டார்கள் என்று உங்களால் கூற முடியுமா?

கடினமான மக்கள் எப்போதும் உங்களது வாழ்க்கையில் இருப்பார்கள் என்று அனுமானம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்று நான் கூற மாட்டேன், எப்போதும் கடினமான மக்கள் உங்களுடன் இருந்து கொண்டே இருப்பார்கள் என்று என்னால் அறுதியிட்டுக் கூற முடியும். சூரியன் தொடர்ந்து கிழக்கில் உதிக்கும் வரை உங்களது வாழ்க்கையில் குறைந்தது ஒரு கடினமான நபராவது இருப்பார்கள். இது ஒரு உண்மையாகும், ஒரு அனுமானம் இல்லை. நம் அனைவருக்கும் இது போன்ற மனிதர்கள் நமது வாழ்க்கையில் இருக்கிறார்கள் மற்றும் சில நேரங்களில், நான் முழு உண்மையும் அளிக்க வேண்டும் என்றால், மற்றவர்களுக்கு நாம் தான் இது போன்றவர்களாக இருக்கிறோம். நம் வாழ்வில் சிலர் இருக்க வேண்டாம் என்று நாம் விரும்புவது போல், தங்களது வாழ்வில் இருந்து நாம் மறைந்து விட வேண்டும் என்று விரும்பும் சிலர் நிச்சயமாக இருப்பார்கள். எனினும் இயற்கை, குறிப்பாக அனைத்து நேரமும் நாம் பல விஷயங்களை விரும்புகிறோம் என்பதைக் கருத்தில் கொண்டு, நாம் என்ன ஆசைப்படுகிறோம் என்பதில் கவனம் செலுத்துவதில்லை.

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது இது (உங்களைக் காயப்படுத்தக் கூடியவர்கள், உங்களுடன் உடன்படாதவர்கள் அல்லது உங்களைப் பிடிக்காதவர்களைச் சந்திப்பீர்கள்) என்பதால், உங்களது தெளிந்த புத்தியைத் தக்கவைத்து கொள்ள என்ன செய்ய முடியும் என்று நீங்கள் வியக்கலாம். நீங்கள் உங்களது அமைதியை, சாந்தத்தை இழக்காமலிருக்க ஏதாவது வழி இருக்கிறதா? ஒரு குறுகிய நேரத்திற்கு, நமக்கு உகந்தபடி விஷயங்கள் நடக்காத போது, மக்கள் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அவ்வாறு நடந்து கொள்ளாத போது, ஒவ்வொருவரும் ஒரு குறுகிய காலத்திற்குக் கோபத்தின் எழுச்சியை அனுபவிக்கிறோம். அது மின்னல் போன்று விரைவானது. அந்த நேரத்தில் உங்கள் கவனத்தைத் தவறவிட்டால், நீங்கள் உணரும் முன்னரே அது மின்னல் போல் தாக்கி, வார்த்தைகள் வாய் வழியாக வெளியேறி சேதத்தை ஏற்படுத்திவிடும்.

இந்தக் கோபத்தின் எழுச்சியானது ஆழமாகப் புரையோடிய எரிச்சலால் வருவதாகும். அனைத்து உணர்வுகளுக்கும் ஒரு விதை இருக்கிறது அப்படியானால் நீங்கள் அதன் மூலத்திற்கே சென்று அவற்றை நிரந்தரமாக நீக்க முடியும். சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு புத்தரின் ஒரு அழகான சொற்பொழிவைப் படித்திருக்கிறேன், இன்று வலைத்தளத்தில் அதன் மொழிபெயர்ப்பைக் காண முடிந்தது.

பிட்சுக்களே, எரிச்சலை விலக்குவதற்கான ஐந்து வழிகள் உள்ளன. இதன் மூலம் கோபம் எழும் போதே ஒரு பிட்சுவால் அதை முற்றிலும் நீக்க முடியும். அந்த ஐந்து வழிகள் யாவை?

யார் மேல் நீங்கள் கோபப்படுகிறீர்களோ அவர்களிடம் அன்புடனான நல்லெண்ணத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்: இப்படியாகத் தான் அவர்கள் மேல் உள்ள எரிச்சலை நீக்க முடியும்.

யார் மேல் நீங்கள் எரிச்சல் கொள்கிறீர்களோ அவர்களிடம் கருணையுடன் இருக்க வேண்டும்: இந்த மாதிரியும் அவர்கள் மேல் உள்ள எரிச்சலை நீக்க முடியும்.

யார் மேல் நீங்கள் எரிச்சல் கொள்கிறீர்களோ அவர்களிடம் வேறுபாடில்லாத மனஉணர்வைக் கடைப்பிடிக்கலாம்; இப்படியாகவும் அவர்கள் மேல் உள்ள எரிச்சலைக் களைய முடியும்.

யார் மேல் நீங்கள் எரிச்சல் கொள்கிறீர்களோ அவர்களை மறப்பதற்கும், புறக்கணிப்பதற்கும் பயிற்சி செய்ய வேண்டும்: இப்படியும் அவர்கள் மேல் உள்ள எரிச்சலை நீக்க முடியும்.

யார் மேல் நீங்கள் எரிச்சல் கொள்கிறீர்களோ அவர்களே அந்தச் செயல்களின் உரிமையாளர்கள், “இந்த நல்ல மனிதரே அவரது செயல்களுக்கான உரிமையாளர், அதன் விளைவுகளுக்கான வாரிசு, அவரது செயல்களுக்கு அவர் பிறந்த கர்ப்பமே காரணம், அவரது செயல்கள் யாவும் அவரது பொறுப்பில் உள்ள உறவினர்கள், அவரது செயல்களுக்கு அவரே அடைக்கலம் கொடுத்தாக வேண்டும். நல்லதோ, கெட்டதோ – அதன் விளைவுகளுக்கு அவரே வாரிசு”, என்று உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்.

இப்படியாகக் கூட அவர்கள் மேல் உள்ள எரிச்சலைக் களைய முடியும். இந்த ஐந்துமே எரிச்சலை நீக்கும் வழிகளாகும். இதன் மூலம் பிட்சுக்கள் எரிச்சல் எழுகின்ற போதே எரிச்சலை முற்றிலும் நீக்க முடியும்.

(அநுகுட்டாரா நிக்காய, 5.161. நாநமோலி தேரா மொழிபெயர்ப்பு.)
(Anuguttara Nikaya, 5.161. Ñanamoli Thera translation.)

பயனுள்ளதாக இருக்க, எந்தச் சூழ்நிலையில் எதைப் பொருத்தமாக உபயோகிக்கலாம் என்று, மேலே உள்ள ஐந்து முறைகளையும் மாற்றி மாற்றிச் செய்து பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக – சில நேரங்களில் மற்ற நபரின் செயல்களுக்கு அவரே பொறுப்பு என்றும், உங்களது செயல்களுக்கு நீங்களே பொறுப்பு என்றும் வலியுறுத்திக் கொள்வதைக் கடைப்பிடிக்கலாம், மற்ற நேரங்களில் உங்களுடைய கோபத்தைக் கடப்பதற்குக் கருணை, அன்புடனான பரிவு உணர்வுகளை வளர்த்துக் கொள்ளலாம்.

மன அழுத்தத்தில் இருக்கும் போது வேறுபாடில்லாத மன-உணர்வைப் பயிற்சிப்பது – அதாவது சமநிலையுடன் நடந்து கொள்வது மற்றும் பேசுவது – பின்னால் வருத்தப்படக் கூடிய சூழ்நிலைகளைத் தவிர்க்க உதவுகின்றது. நீங்கள் சொல்லாத வார்த்தைகள் மூலம் காயப்பட முடியாது.

எனது தனிப்பட்ட முறை என்னவென்றால், எந்த ஒரு குறிப்பிட்ட சூழலிலும் எவருக்கும் பதில் அளிக்கும் முன்னே என்னை நானே பின்வரும் கேள்விகளைக் கேட்டுக் கொள்வேன். (அ).பதிலளிக்கத்தான் வேண்டுமா?, (ஆ).நான் கருணையுடன் பேசுகிறேனா? ஆம் என்றால், (இ).அவர்களுடைய நடவடிக்கைகளை அறியாமையின் தவறுகள் என்று புறக்கணிக்க என்னால் முடியுமா? (அவைகள் தெரிந்தே செய்யப்பட்ட செயல்களாக இருந்தாலும் கூட, ஒருவேளை அவர்களுக்கு இதைவிட நல்ல விதமாகச் செய்யத் தெரியாது என்று தான் எனக்கு எண்ணத் தோன்றுகின்றது.), (ஈ).அவர்களுடைய செயல்களுக்கு அவர்களே பொறுப்பாளிகள் என்பது எனக்குத் தெரியாதா? இறுதியாக, (உ).என்ன மாதிரியான நடத்தை எனக்கு உகந்தது? இந்த ஐந்து அம்சங்களும் ஒரு சில வினாடிகளிலேயே என் மனதில் வந்து செல்லும். இதுவே கவனத்தின் பரிசாகும். மேலே உள்ள புத்தரின் சொற்பொழிவில், நீங்கள் கவனத்துடன் இருந்தால் மட்டுமே அவர் என்ன பரிந்துரைத்துள்ளாரோ அதைப் பயிற்சி செய்யலாம் அல்லது குறைந்தபட்சம் உங்களது அப்போதைய உணர்வுகளை அறிந்து கொண்டு, நீங்கள் கவனமாக உங்களது பதிலைத் தேர்வு செய்யலாம். கவனமாக இருத்தல் நீங்கள் தற்போதைய நொடியில் இருக்க உதவுகிறது.

நண்பர்களுக்கு மத்தியில் ஒருவன் மிகச் சுருக்கமாகவும், மிகத் துல்லியமாகவும் பேசுபவனாக அறியப்பட்டவன் – அவன் உண்மையாகவே அதிகமாகப் பேசமாட்டான். ஒரு நாள் ஒரு குறிப்பிட்ட பெயரை உடையத் தூரிகைகளை விற்கும் பெண் அவரது வீட்டுக் கதவைத் தட்டி, அவரது மனைவியைப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள்.

“அவள் வீட்டில் இல்லை,” என்று அவர் அமைதியாகக் கூறினார்.
“நான் அவளுக்காகக் காத்திருக்கலாமா? கடந்த வாரம் நான் அவர்களிடம் பேசிய போது அவர்கள் ஆர்வம் காட்டியதைப் போல் அவர்களது தொனி இருந்தது,” என்று அந்தப் பெண் எப்போதும் தான் பயன்படுத்தப்படும் வரியைக் கூறினாள்.

அந்த மனிதர் வரவேற்பு அறையைக் காட்டிவிட்டு, அந்தப் பெண்ணை அங்கேயே விட்டுச் சென்றார். இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாகக் கடந்து விட்டதால், அவரை அழைத்து அந்தப் பெண், “உங்கள் மனைவி எங்கே இருக்கிறார்கள் என்று நான் அறிந்து கொள்ளலாமா?” என்று கேட்டாள்.
“அவர் கல்லறைக்குச் சென்றுள்ளாள்,” என்று அவர் பதிலளித்தார்.
“ஓ… அவர்கள் எப்போது வருவார்கள்?” என்று கேட்டாள்.
“எனக்கு உண்மையில் தெரியாது, பதினொரு ஆண்டுகளாக அங்கு தான் இருக்கிறாள்,” என்று அவர் கூறினார்.

கோபம் என்பது இதைப் போன்ற ஒன்றாகும். வெகு நாட்களுக்கு முன்பே இறந்து போன ஒருவரை எதிர்பார்த்து நீங்கள் காத்துக்கொண்டிருப்பீர்கள் (உடலால் என்ற அவசியம் இல்லை, கர்மவினையால்). அவர்களது கடந்த கால நடவடிக்கைகள், உங்கள் உணர்வில் இருந்து அகற்றப்படாமல் இருந்தால், உங்களுக்குள் கோபத்தையும், எதிர்மறையான எண்ணங்களையும் தொடர்ந்து அளித்து, உங்களை இன்னும் அதிகமாக வருத்தமும், கோபமும் அடையச் செய்யும் அல்லது உங்களுடைய சொந்த அழகான வாழ்க்கையைச் சலிப்படையச் செய்து விடும்.

உங்கள் சொந்த நலனிற்காகக் கோபம், கசப்பு அல்லது காழ்ப்பு உணர்வுகளை வளர்த்துக் கொள்வதன் மூலம், உங்களை நீங்களே அவமரியாதை செய்து கொள்ளவோ, மதிப்பைக் குறைத்துக் கொள்ளவோ வேண்டாம். அட்டைப் பூச்சிகளைப் போன்ற இந்த உங்களது உணர்வுகளைச் சுத்திகரித்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல, ஆனால் ஆன்மீகப் பாதையில் முன்னேற வேண்டும் என்றால் இதுவே தேவையானதாகும். உண்மையில், இந்த சுத்திகரிப்பே மிகவும் தேவையானதாக இருக்கிறது. சடங்குகள், மரபுகள், மதங்கள் மற்றும் பிரார்த்தனைகள் தேவை இல்லை, மன்னிக்க முடிகின்ற ஒரு இதயம், மறக்க முடிகின்ற ஒரு மனம், கோபத்திலிருந்து விடுபட்ட ஒரு உணர்வு தான் தேவை. நீங்கள் உறுதியாக இருக்கக் கூடாது என்றோ அல்லது உங்களை பாதுகாத்துக் கொள்ளக் கூடாது என்றோ நான் சொல்லவில்லை, ஆனால் ஒருவரிடம் உறுதியாக இருத்தல், அல்லது கண்டிப்பாக இருத்தல் என்பது அவர்கள் மேல் கோபம் மற்றும் சீற்றத்தைக் காண்பிப்பதற்கு ஈடானதல்ல.

நீங்கள் உங்களுடைய வார்த்தைகளை மற்றும் செயல்களை வெளிப்படுத்துவதற்கு முன்னால் யோசித்துத் தேர்வு செய்தால், கருணையுடனும், அன்புடனும் மற்றும் மன்னிக்கும் மனப்பான்மையுடனும் இருப்பதை முழுவதும் எளிதானதாக உணர்வீர்கள். ஒவ்வொரு உன்னத செயலாலும் நீங்கள் ஆன்மீகத்தில் உங்களை உயர்த்திக் கொள்கிறீர்கள். இது தோல்வியே இல்லாமல் செயல்படுகிறது.

மணம் வீசும் உணர்வுகளைக் கொண்ட ஒரு பூச்செண்டை வைத்துக் கொள்ள முடியும் போது, குப்பை போன்று நாற்றமெடுக்கும் உணர்வுகளை ஏன் வைத்துக் கொள்ள வேண்டும்? ஒன்று பட்டாம்பூச்சிகளையும் மற்றொன்று ஈக்களையும் ஈர்க்கும். கவனமாகத் தேர்வு செய்யுங்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook0Tweet about this on TwitterShare on LinkedIn0Google+0Email to someone