இன்று நான் கோபத்தை எப்படிக் கடப்பது என்பதைப் பற்றிய ஒரு முக்கியமான இடுகையை உங்களுக்குத் தருகிறேன். ஒரு முதன்மையான முறை மற்றும் சில துணைச் செயல்களின் உதவியால் நீங்கள் கோபத்தை வெல்ல முடியும். நான் அவற்றைக் கூறு முன் ஒரு சிறிய கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு சீடர் ஒரு முறைத் தன்னையறிந்த ஒரு குருவை அணுகினார். அவர் பற்றுதலற்ற ஆழ்நிலை, அமைதி நிலை, வேறுவிதமாகச் சொல்ல வேண்டுமானால் சமாதி நிலையை எவ்வாறு அடைய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினார்.

“நீங்கள் சோர்வாக இருக்கும் போது தூங்குங்கள் மற்றும் பசியாக இருக்கும் போது சாப்பிடுங்கள். பெரும்பாலும் இதுவே தேவையானது,” என்று குரு கூறினார்.
“எப்படியானாலும் எல்லோரும் இதைத்தான் செய்கிறார்கள் அல்லவா?” என்று சீடர் கேட்டார்.
“அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டும் என்றே விரும்புகிறேன். தூங்க முயற்சிக்கும் போது மக்கள் ஒரு மில்லியன் விஷயங்களுக்கான திட்டங்களையும், சாப்பிடும் போது ஒரு மில்லியன் வழிவகைகளையும் திட்டமிடுகிறார்கள். அவர்களது மனம் எல்லாப் பக்கங்களிலும் சிதறி இருக்கிறது,” என்றார்.

எப்படி இந்தக் கதை நமது விஷயத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது? உங்களது கோபத்தைக் கடக்க உதவும் மிக முக்கியமான முறை, கீழே கூறப்பட்டுள்ள முதலில் பயிற்சி செய்ய வேண்டிய முறையானது, மேலே உள்ள நிகழ்ச்சியின் வார்த்தைகளில் ஒளிந்திருக்கிறது. உங்கள் கோபத்தைப் புரிந்துகொள்ள, கட்டுப்படுத்த மற்றும் கடக்க உதவும் மூன்று நடைமுறைகளை நான் தெளிவுபடுத்துகிறேன்.

1. மிக்க கவனத்தைக் கடைப்பிடித்தல்

கோபத்தின் போது அம்புகளைப் போல் வெளிப்படும் வலியைத்தரும் வார்த்தைகள், ஆத்திரத்தின் போது செய்து பின்னர் வருந்தக் கூடிய பொறுப்பற்ற செயல்கள், கட்டுப்படுத்த முடியாத கோபத்தின் போது செய்த அவமதிக்கும் சைகைகள் ஆகியவை மிக்க கவனத்துடன் இருக்க வேண்டிய நிலையை இழப்பதினாலும், கவனமின்மையினாலும் ஏற்படும் விளைவுகள் ஆகும். கோபம் வெடிக்கும் முன் உள்ளது மயக்க நிலை, இத்தகைய நிலை ஒருவரை அனைத்தையும் மறக்கச் செய்கிறது, அவர்கள் சரியான எதிர்ச் செயலைத் தேர்வு செய்யத் தவறுகிறார்கள்.

மிக்க கவனத்துடன் இருத்தல் ஒன்றே, கோபத்தைக் கடக்க மட்டுமல்ல, அனைத்து விரும்பத்தகாத மற்ற பழக்கங்களில் இருந்தும் மீள மிக முக்கியமான வழிமுறை ஆகும். நீங்கள் எச்சரிக்கையாக இருந்தால், உங்களது எண்ண ஓட்டங்களைக் கண்காணிக்கலாம், கோபமாக இருக்க விரும்பவில்லை என்று உங்களுக்கு நீங்களே ஞாபகப்படுத்திக் கொள்ள முடியும். சிறிது நாட்களுக்கு முன்பு, “கவனச்சிதைவுகளைக் கடப்பது எப்படி?” என்ற என் இடுகையில், உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளும் ஒரு பயனுள்ள கேள்வியைப் பற்றி எழுதியுள்ளேன், “இது என் சிறந்த செயலா?” என்ற கேள்வி உங்களை உடனடியாக தற்போதைய தருணத்திற்கு மீண்டும் ஈர்க்கிறது.

நீங்கள் கவனத்துடன் இருக்கும் பயிற்சியின் போது சரியாக இதையே தான் செய்ய வேண்டும். வார்த்தைகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் வெடிக்கக் காத்திருக்கும் சக்தியின் ஒரு எழுச்சியை அனுபவிக்கும் முன், நீங்கள் உங்கள் விருப்பப்படிச் செய்ய வேண்டியதைத் தேர்ந்தெடுக்க உங்களுக்கு ஒரு கணம் தான் உள்ளது. கோபத்தில் உங்கள் இரத்தம் கொதிக்கவோ, மற்றவர் மேல் துஷ்பிரயோகம் செய்யவோ விருப்பமில்லை என்ற ஒரு நினைவூட்டல், உங்கள் கோபம் உங்களது சிறந்த திறமையை ஆட்கொள்ள அனுமதிப்பது இல்லை, என்ற நினைவூட்டல் ஒரு மாயத்தைச் செய்ய முடியும்.

நீங்கள் முழு கவனத்துடன் இருக்கும் நிலையை நடைமுறையில் கொண்டு வரப் பயிலும் போது, எந்தச் சூழ்நிலையிலும் ஒரு விரும்பத்தக்க பதிலை, நீங்கள் விரும்பும் ஒன்றைத் தேர்வு செய்வது மிகவும் சுலபமாவதைக் காண்பீர்கள். எனினும், உங்களுடைய கோப உணர்ச்சியை வழிக்குக் கொண்டு வர முடியும் வரை, அதை முற்றிலும் மாற்ற முடியும் வரை, நீங்கள் மேற்கொள்ள மேலும் இரண்டு வழிகள் உள்ளன. அவை பின்னால் வருகின்றன.

2. ஒரு குறிப்பினை எழுதுங்கள்

ஒவ்வொரு முறையும் நீங்கள் கோபம் அடையும் போதும், அதன் பின் அது தணிந்த பிறகும், பின்வரும் கேள்விகளுக்கு நான்கு சிறு பத்திகளால் பதில் எழுதவும்:
அ. அந்த நிகழ்ச்சி: உண்மையில் நடந்தது என்ன?
ஆ. காரணம்: உங்கள் கோபத்தைத் தூண்டியது என்ன?
இ. அளவு: உங்கள் கோபத்தின் அளவு நியாயமானதாக இருந்ததா?
ஈ. எதிர்காலம்: இதே சூழ்நிலை மீண்டும் வந்தால், இதே முறையில் மீண்டும் நடந்து கொள்வீர்களா அல்லது வேறு விதமாகவா?

உங்களது பயிற்சியை இன்னும் வலுப்படுத்த விரும்பினால், உங்களால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடிந்த ஒவ்வொரு முறையும், நீங்கள் ஒரு குறிப்பினை எழுதலாம். குறிப்பு எழுதுதல் மற்றும் பின்னர் அதை ஆய்வு செய்தல், உங்களைப் பற்றி பகுத்து ஆய்வு செய்ய மற்றும் புரிந்து கொள்ள உதவுகிறது.

3. உங்கள் குரலைப் பதிவு செய்யவும்

இது ஒரு பயனுள்ளதும், செயல்படுத்த எளிதானதும் ஆன பயிற்சியாகும். அடுத்த முறை நீங்கள் கோபமடையும் போது, உங்களது குரலைப் பதிவு செய்து பின்னர் அதைத் திருப்பிக் கேட்டுப் பாருங்கள். உங்களுடைய செயல் உங்களுக்கே வேடிக்கையாக இருப்பதைக் கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது. உங்களது செயலைத் திரும்பக் கேட்கும் போது, நீங்கள் ஒரு விழிப்புணர்வைப் பெறுகிறீர்கள். விழிப்புணர்வு, முழுகவனத்துடன் இருப்பதற்கு இன்னொரு பெயராகும்.

அலை மேல் ஊர்பவரைப் போலக் கூட இல்லாமல், எப்போதும் அமைதியாகவே இருக்க முடியுமா என்று கேட்டு ஒரு சிலர் எனக்கு எழுதியுள்ளனர். அதன் பதில் ஆம் என்பதாகும். அதற்குப் பயிற்சியும், விழிப்புணர்ச்சியும் தேவைப்படுகின்றன. நீங்கள் நடுநிலைப் பார்வையாளராக இருக்க முடியும். நீங்கள் தற்போதைய தருணத்தின் உணர்வை இழக்காமல் இருந்தால், உங்களது உள்ளத்து அமைதியில் உறுதியாக இருந்தால், எதாலும் உங்களைத் தூண்ட முடியாது. எனினும், மிகவும் நெருக்கமாக நிற்கும் ஒரு பார்வையாளராக நீங்கள் இருந்தால், அலைகள் உங்கள் கால்களையும் நனைக்கலாம். அலைகள் உயரும் போது நகர்ந்து பின் செல்வதும், கடல் அமைதியாக உள்ள போது நெருங்கி வருவதும் ஆக, சரியான தூரத்தில் இருப்பதுவே முக்கிய உபாயமாகும். கோபம் என்பது ஒரு சாதாரண உணர்வு அல்ல, அது உணர்ச்சிவயப்படுதலின் வெளிப்பாடாகும். வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் நாம் எடுக்கும் நடவடிக்கைகளைப் போல், இதுவும் தேர்ந்தெடுக்கும் ஒரு விஷயம் ஆகும்.

“என் மனைவி என்னை எரிச்சலூட்டுகிறாள்,” என்றார் முல்லா நஸூருதீன். “ஒவ்வொரு முறை குளிக்கச் செல்லும் போதும், அவள் ரப்பர் வாத்து மற்றும் பிளாஸ்டிக் நீர்மூழ்கிக் கப்பல்களுடன் விளையாடி இரண்டு மணி நேரம் செலவழிக்கிறாள்,” என்றார்.
“அது அவளுக்குச் சந்தோஷம் அளிக்கிறது என்றால், நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும், முல்லா? அது ஏன் உங்களைக் கோபப் படுத்துகிறது என்று எனக்குப் புரியவில்லை,” என்று மனநல மருத்துவர் சொன்னார்.
“அவை உங்களுடையதாக இருந்தால், உங்களுக்குப் புரியும்,” என்று முல்லா சாதாரணமாகக் கூறினார்.

உங்களுக்குப் பற்றுதல் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு அதிகமாகக் கோபம் வருகிறது. உங்களுக்கு எந்த விகித அளவிற்குப் பற்றுதல் இருக்கிறதோ அந்த விகிதத்திற்கு வலியை அனுபவிக்கிறீர்கள். உதாரணமாக, நீங்கள் உங்கள் உடைமைகளின் மீது உண்மையிலேயே அதிகப் பற்றுடன் இருந்தால், எப்போதாவது அதில் ஏதாவது தவறு நேர்ந்தால், நீங்கள் வருத்தத்தை அனுபவிக்க வாய்ப்பு உள்ளது. அதிகமான பற்றுதல் நிறையத் துக்கத்தையும், அதிக துக்கம் நிறைய வலியையும் தருகின்றது, அதனைத் தொடர்ந்து கோபமும் வருகின்றது. நீங்கள் உண்மையில், போலியாக, உங்கள் மேல் பற்றுதலுடன் இருக்கும் போது என்ன நடக்கிறது? அது ஒரு பெரிய ஆணவத்தை உருவாக்குகிறது. இத்தகைய ஆணவத்தை ஒரு ஊதிய பலூனுடன் ஒப்பிடலாம். இதில் ஒரு சிறிய முள் குத்தினாலும் இது வெடித்து விடும்.

பற்றுதல் இல்லை என்றால் எந்த வலியும் இல்லை.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email